0,00 INR

No products in the cart.

அப்பா ரொம்பக் கோபக்காரர்

சிறுகதை                                                                      

ஜி.ஏ.பிரபா

 

செய்தி சேனல்கள், பத்திரிக்கைகளை தவிர எல்லாப் பகுதிகளிலும் பிரசித்தம் இந்த  வாக்கியம்.

“உங்க அப்பா ரொம்ப முன்கோபி”- சித்தப்பா.

“கோவக்காரன். அவனைக் கண்டா எல்லோருக்கும் பயம்தான்.”- பெரியப்பா.

எல்லோரிடமும் “முன்கோபி, கோபக்காரர்” என்ற பட்டப்பெயர் வாங்கியிருந்தார் அப்பா. அதைவிட அவரிடம் அம்மா படும் அவஸ்தைகளை நேருக்கு நேராகப் பார்த்த யாருக்குமே அப்பாவின் மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் வந்ததில்லை. சிடுமூஞ்சி. எந்நேரமும் ஏதோ ஒன்று ’நறுக், நறுக்’ என்று சொல்லிக் கொண்டிருப்பார். “ஏன் அதைச் செஞ்சே? எதுக்கு இங்க போனே”? என்று தேள் கொடுக்கு போல் கொட்டிக் கொண்டிருப்பார். அவர் பேச்சுக்குப் பயந்து அம்மா அங்கிருந்து நகரவும்  கூடாது.

மாதவன் சிலசமயம் அப்பாவுக்காகப் பரிதாபப்படுவான். வாசலில் சேரில் அமர்ந்து ஏதோ யோசனையுடன் அவர் இருக்கும்போது பார்க்க பரிதாபமாக இருக்கும். அம்மா தன் பசங்கள், உறவுகள் என்று அனைவரிடமும் புலம்பி, புலம்பி, யாருமே அவரிடம் நெருங்கியதில்லை. வீட்டுக்கு வந்தாலும் அவரிடம் பேசியதில்லை. அனைவரும் அவரை விட்டு ஒதுங்கி இருந்தனர். பிள்ளைகள் கூட அவரிடம் பிரியமாய், அன்பாய் நின்று பேசியதில்லை.

எல்லா பரிதாபங்களும் அம்மா மேல்தான். வீட்டுக்கு வரும் உறவுகள் கூட அம்மாவிடம் பேசிவிட்டுப் போய் விடுவார்கள். “உன் தலையெழுத்து… பொறுத்துப் போ”- அறிவுரை வரும்.

“அப்பா செத்தாக்கூட அம்மா நிம்மதியாய் இருப்பார்” என்று அண்ணா சொல்வான்.

“நீ என்கிட்ட வந்து  ஒரு மாசம் நிம்மதியா இருந்துட்டு போம்மா” – இது அக்கா.

“எனக்கும் ஆசைதான். எங்க வரது? பூனை மாதிரி நான் சுத்திக்கிட்டே இருக்கணும். கல்யாணம் ஆன நாளிலிருந்து எனக்கு நிம்மதி இல்லை” என்று அம்மா புலம்புவார்.

அவளுக்கும் ஆசைகள் இருக்கும். “கோயிலுக்கு போகணும். நாலு கல்யாணத்துக்குப் போயி சொந்தக்காரங்களைப் பார்த்துப் பேசிட்டு சந்தோஷமாக வரணும்” என்பாள்.

ஆனால் எங்கு போனாலும் அப்பா கூடவே போய், தன்னுடனே அழைத்து வந்து விடுவார். சாப்பிடும்போதும் அப்பா பக்கத்துலதான் அமர வேண்டும். வீட்டில் இருந்தாலும் அப்பா, ஈசிசேர் என்றால் அம்மா அவர் காலடியில், அல்லது அந்த ஹாலில் எதோ ஒரு மூலையில் இருப்பார்.

எந்த கல்யாணம் விசேஷங்களுக்கு போனாலும் “உன் புருஷனை கூட்டிட்டு வந்திருக்கியா”  என்றுதான் கேட்பார்கள். நான் என்னைக்கு தனியாக வந்திருக்கேன்? அம்மா அலுப்போடு பேசுவார். அப்பாவின் குணத்தாலேயே அம்மாவின் மீதான அனுதாபம் எல்லோருக்கும் அதிகரித்தது.

அம்மாவுமே  பிறர் அனுதாபத்தை பெறுவதற்கு அப்பாவின் கோபத்தை சாக்காக வைத்துக்கொண்டாளோ என்று தோன்றும் மாதவனுக்கு.

“ஏம்மா, அப்பாவைப் பத்திச் சொல்ல ஒரு நல்ல விஷயம் கூட இல்லையா?”- மாதவன் கேட்பான்.

“இருந்தா சொல்ல மாட்டேனா?” என்பாள். அம்மாவுக்கு ஒரு தப்பிக்கும் கவசம் ’அப்பா’ என்று நினைத்தான் மாதவன். தனக்கு ஏதானும் பிடிக்கவில்லை என்றால், “அப்பாவுக்குப் பிடிக்காது” என்று கூறிவிடுவாள். “அவருக்குப் பிடிக்காது, அவர் சம்மதிக்க மாட்டார்” என்றுதான் கூறுவாள். அப்பாவும் அம்மாவையே சார்ந்திருந்தார் என்றுதான் தோன்றியது. அம்மாதான் காபி கலந்து கொடுக்கணும். சாப்பாடு போட அம்மாதான் வரணும்.

மாதவன் கூட கேட்டான், “ஏன்பா அதான் ராதா இருக்காளே. அவளை சாப்பாடு போடச் சொல்றேன்…”

“எனக்கு சோறு போட என் பொண்டாட்டி இருக்கா. உன் பொண்டாட்டி எதுக்கு?” நறுக் என்று வந்தது அப்பாவிடமிருந்து பதில். ராதா அதன்பின் அவர் எதிரில் கூட வந்ததில்லை. யாருமே அவரிடம் அதிகம் நெருங்க மாட்டார்கள். எல்லோருக்கும் அவர்மேல் வெறுப்பு, விலகி விட்டார்கள்.  “துர்வாசர்” என்பாள் அம்மா. அம்மாவிடம் கூட அதிகம் பேசுவதில்லை. அம்மா கலகல. இரு துருவங்கள்.

“அப்பா கூட வாழறதுக்கு அம்மாவுக்கு பத்மபூஷன், பாரத ரத்னா விருது கொடுக்கலாம்” என்பாள்  பெரிய மன்னி. எல்லோருக்குமே அம்மாவிடம் பிரியம் ஜாஸ்தி. மனதில் இத்தனை வேதனையை போட்டுண்டு அம்மா புன்னகையோடு வளைய வரா பார்” என்பார் அண்ணா.

அண்ணா, அக்கா எல்லோரும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வந்து விடுவார்கள்… அம்மா, அம்மா என்று அவளையே சுற்றிக் கொண்டிருப்பார்கள்… அம்மாவுக்கு ஒரு உற்சாகம் பிறந்துவிடும். அந்த சமயத்தில் அப்பாவும் அவளை அதட்ட மாட்டார்.

அது என்ன அப்படி ஒரு கோபம் என்று தெரியவில்லை. கோபமா, இயலாமையா? எதற்காக என்று தெரியவில்லை. உங்கப்பா ஒருத்தியை லவ் செஞ்சான். உங்க பாட்டி ஒத்துக்கலை. அந்த கோபம்தான் அவனுக்கு என்பாள் அத்தை. அப்பாவின் சிடுமூஞ்சித்தனத்திற்கு அவர் காதலித்திருப்பார் என்று தெரியவில்லை.

“மந்திரம் போட்ட மாதிரிதான் மூன்று குழந்தைகள் பொறந்தது. மனைவிகிட்ட ஆசையா உட்கார்ந்து நாலு வார்த்தை பேசியிருக்காரா மனுஷன். எப்பப் பாரு, அடி, உதை, திட்டு, கையில் கிடைத்ததை தூக்கி எறியறது—— வெறுத்துப் போச்சுடா எனக்கு” என்று அம்மா அழுவாள்.

பலமுறை அம்மா அழுவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் மாதவன் அம்மாவுடனேயே இருக்க முடிவு செய்து விட்டான்.

பெரிய அண்ணா டில்லியில், அக்கா பெங்களூர்.

“ஏண்டா நீ அமெரிக்கா போலாமே?” என்பாள் அம்மா.

“இல்லம்மா… உன்னை விட்டுப் போறதா நான் இல்லை. அப்பாவிடமிருந்து உன்னைக் காக்கும் கவசம் நான்”- என்று சொல்லிவிட்டான். அதில் அம்மாவுக்கு நெஞ்சு கொள்ளாத பெருமை. ஆனாலும் அதுவும் உண்மை. அப்பா கொஞ்சம் அடங்கி இருந்தார்.

அவர் இஷ்டத்துக்கு நூலகம் போவார். வருவார். அம்மா வந்து சாப்பாடு போட்டால் சாப்பிடுவார். இல்லை என்றால் அமைதியாக வாசலில் போய் உட்கார்ந்து விடுவார். எந்நேரமும் ஏதோ ஒரு புத்தகம் கையில் இருக்கும்.

“உங்கப்பா நாளைக்கு ஐ.ஏ.எஸ். பரீட்சை எழுதப் போறார்”- அம்மா.

ஆனாலும் மூன்று குழந்தைகள். யாருக்கும் எந்த குறையும் வைக்கவில்லை. தன் கடமையைச் சரியாகத்தான் செய்தார் அப்பா. நன்றாகப் படிக்க வைத்து, அக்காவிற்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து, சொந்தமாக வீடும் கட்டி இருக்கிறார். சர்வே டிபார்ட்மெண்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். “எனக்கு எவன் தயவும் தேவையில்லை. என்னை மிரட்டற வேலையெல்லாம் வெச்சுகாதே” என்றார் அப்பா பெரிய அண்ணாவிடம்.

“நாளைக்கு நான் செத்தா கூட உங்க அம்மாவுக்கு பென்ஷன் இருக்கு என்பார். காசுக்காகத்தான் உறவுகள் என்று நினைத்தாரோ, இல்லை அவருடைய இயல்பான குணமே அதுவா என்று எதுவுமே தெரியாது. அம்மா மட்டும் அடிக்கடி புலம்புவார்.

“எங்க அப்பாகிட்ட தலையா அடிச்சிக்கிட்டேன். எனக்கு இவர் வேண்டாம்பா. பார்க்கும்போதே மனசெல்லாம் பயமா இருக்கு என்று. ஆனால் கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சு இன்று ஒரு சந்தோஷம் என்பதே இல்லாமல் போய்விட்டது” அம்மா புலம்பினாலும் அப்பாவுக்கு வேண்டிய எதையும் செய்யாமல் விட்டதில்லை.

நேரா நேரத்துக்கு சாப்பாடு, காபி, டிபன் என்று போய்விடும். அவர்  எங்கு அமர்ந்திருந்தாலும் அவர் கண் பார்வையில் படும்படி அம்மா தூரத்தில் அமர்ந்து ஏதோ வேலை செய்து கொண்டிருப்பார். அம்மா தன் கண் எதிரில் இருக்க வேண்டும். அது மட்டும்தான் அப்பாவின் ஒரே குறிக்கோள்

அம்மாவுக்கு என்று தனியான சந்தோஷங்களும், ஆசைகளோ கிடையாது. படித்தவர், அரசு வேலையில் இருப்பவர். எல்லா மனிதர்களையும் மதிக்க தெரியவில்லையா? மாதவனுக்கு இது ஒரு மிகப்பெரிய கவலை. கணவன்- மனைவி அந்தரங்கம் என்பது தெய்வீகமானது. அதை அன்பாலும் பிரியத்தாலும் நிரப்பப்பட வேண்டும். ஆனால் இங்கு அதிகாரமும் ஆணவமும்தான் இருக்கிறது.

ஒரு புடைவை எடுக்கக்கூட அம்மாவைக்  கேட்டதில்லை.

“உங்க அப்பா எடுத்துக் கொடுக்கற கலர்தான்” என்பாள் அம்மா.

அதைத்தான் கட்டினாள் அம்மா. பெரிய பெரிய ஜரிகை பார்டர் போட்ட புடைவை, அவளுடைய கலருக்கும் உயரத்திற்கும் அழகாக இருக்கும். அப்பா புடைவைகள் வாங்கி அதற்கு மேட்சிங்காக ஜாக்கெட் தைத்தும் கொடுத்து விடுவார். நகை, நெற்றியில் இட்டுக்கொள்ளும் பொட்டு என்று அப்பா வாங்கிக் கொடுப்பதுதான்.

“அம்மா நீ வாய் திறந்து உன் ஆசையைக் கேளேன்”- என்பார்கள்

“எதுக்கு? கேட்டா எதுவும் கிடைக்கப் போவதில்லை.” அம்மா ஒரு ஆதங்கத்துடன் பதில் சொல்வாள்.

“உங்க அம்மா என்ன அடிமையா? அவளுக்கு என்று ஒரு ரசனைகள், ஆசைகள் கிடையாதா”- என்ற ராதா அம்மாவை ஒருநாள் அழைத்துப் போய் புடைவை வாங்கித் தந்தாள்.

அதைக் கட்டி அப்பா அருகில் வந்து எப்படி இருக்கு ? என்று அம்மா கேட்ட கையோடு “தெருக்கூத்து பொம்பள மாதிரி இருக்கு” என்றதில் வீடு நொந்து போனது.

மனதில் பட்டதை படாரென்று போட்டு உடைத்து விடுவார். உன் சொந்தம் என் சொந்தம் என்ற பாகுபாடு கிடையாது. அதனாலேயே அவருக்கு நிறைய சொந்தங்கள் கிடையாது. அவரைப் புரிந்து கொண்டு பொறுத்துக் கொள்பவர்கள்தான் வீட்டுக்கு வருவார்கள்.

“இவர்  தொந்தரவில்லாமல் எங்கேயானும் ஒருநாள் இருந்துட்டு வரணும்டா” என்றாள் அம்மா. எந்த நேரத்தில் சொன்னாளோ, ஒருநாள் பாத்ரூமில் விழுந்து கால் உடைந்து போனது.

அப்பா நூலகம் போயிருந்தார். மாதவன் அலுவலகத்தில். ராதா மட்டுமே வீட்டில். திடீரென்று அலறல் கேட்டு ஓடிப்போய் பார்த்து, அம்மாவை ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன பிறகுதான் எல்லோருக்குமே தகவல் வந்தது.

அப்பா அமைதியாக தலைகுனிந்தபடி ஓரமாக அமர்ந்திருந்தார். பெரியண்ணா, அக்கா, மாமாவும் ஓடி வந்துவிட்டார்கள். ஆளாளுக்கு பரிதவித்து அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஓரமாக நின்று அழுதார்கள்.

“இப்ப என்னாச்சு? கால் தானே உடைஞ்சிருக்கு. ஆபரேஷன் செஞ்சா  சரியாப் போகும்”- அப்பா.

“மனுஷனா இவர்?  பொண்டாட்டி கால் உடைந்து கிடக்கிரா. ஆறுதலா நாலு வார்த்தை பேசாம என்ன ஆளு இவர்?” – அக்கா.

“உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். இடுப்பு எலும்பு பாதித்திருக்கிறது’ என்று கூறிவிட்டார் டாக்டர்.

ஆபரேஷன் முடிந்து அம்மா ஐசியுவிலிருந்து  ஒரு தனி ரூமுக்கு  வந்ததும் யாராவது ஒருத்தர் கூட இருங்க என்றார் டாக்டர்.

ஆபரேஷன் முடியும் வரை அக்கா, அண்ணா இருந்தார்கள். அனைவரும் அம்மாவைச் சுற்றி இருக்க, அப்பா மட்டும் தனியாக ஓரமாக ஒதுங்கி நின்றார். ஒருமுறை கீழே உள்ள பிள்ளையார் கோயிலில் அமர்ந்திருப்பதைப் பார்த்தான் மாதவன்.

ஐசியுவிலிருந்து அம்மாவைத் தனி ரூமுக்கு மாற்றினார்கள்.

எப்பவுமே அம்மாவுக்கு யாரையும் தொந்தரவு செய்யப் பிடிக்காது. அமைதியாக புன்சிரிப்போடு யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு நடப்பாள், தனக்காக இப்போது எல்லோரும் ஓடி ஓடி பதறுவது சந்தோஷமாக இருந்தாலும், ஒரு பக்கம் சங்கடமாக இருந்தது.

“நீங்க கிளம்புங்க. ஆபீசுக்கு லீவ் போட்டுட்டு வந்து எதுக்கு சிரமம். அதான் நான் இருக்கேன்ல. எதுக்கு நீங்க எல்லாம் கஷ்டப்படணும்?” – அப்பா சொன்னதும்  அம்மாவின் முகம் சுருங்கியது.

அவரவர்கள் கிளம்பினார்கள்.

“மாதவன்  அம்மா உடம்பு ரொம்ப நொந்து போயிருக்கும். இந்த சமயத்தில் அப்பா எதையும் பேசாமல் பார்த்துக்கோ” என்று கூறிவிட்டு அண்ணா கிளம்பி போனான். அக்கா எதுவும் பேசவில்லை. கண்ணீர் மல்க அவனைப் பார்த்து விட்டு கிளம்பிப் போனாள். குழந்தைகளை பார்த்துக்கொள்ள ராதாவை வீட்டுக்கு அனுப்பி விட்டான் மாதவன்.

“நீயும் கிளம்பேன் மாதவா”- அப்பா. “நான் இருக்கேன். இங்க.”

“இல்லை வேண்டாம். நீங்க போங்க. நான் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கறேன்.”- அம்மா வாயிலிருந்து எப்படி அந்த வார்த்தை வந்ததோ? ஆனால் அப்பா எதுவும் பேசவில்லை. அம்மா கண் மூடி திரும்பிப் படுத்து விட்டாள்.

அம்மாவுக்கு தூக்க மாத்திரை கொடுத்திருந்தது. அவ விரும்பினது போல நிம்மதியா தூங்கட்டும் என்று மாதவன் நினைத்தான். அவளுக்கு எழுதிக் கொடுத்த மாத்திரை சீட்டை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான். அப்பா ஓரமாக,  நின்றிருந்தார்.

“நான் போய் வாங்கிட்டு வரேன்” அப்பா

பதில் சொல்லவில்லை அவன். கீழே இறங்கிப்  போய்  மெடிக்கலில் மருந்துகள் வாங்கிக் கொண்டு மேலே வரும் போது அப்பா அங்கு இல்லை. அறைக் கதவை  திறக்க முயன்ற பொழுது கண்ணாடி வழியே உள்ளே அப்பா அம்மா அருகில் அமர்ந்திருப்பது தெரிந்தது.

அவள்  முகத்தையே பார்த்தபடி இருந்தார் அப்பா. மெதுவாக கட்டுப் போட்டிருந்த காலை தடவிக் கொடுத்தார். திரும்பி நின்று கண்ணை துடைத்துக் கொள்வது தெரிந்தது.

மாதவன் சத்தம் போடாமல் வந்து வெளியில் உட்கார்ந்தான். மனதிற்குள் ஏதோ பிசைந்தது. மௌனமாக அமர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் வெளியில் வந்த அப்பா, “ நீ எப்படா வந்தே?” என்றார்.

“இப்பதான் வந்தேன்”

“சரி. நீ போ. நான் இருக்கேன் அம்மாவோட.”

“இல்லப்பா. நானும் இருக்கேன்” என்றான் மாதவன்.

“ஏண்டா”

“உன் கூட இருக்கேன்பா” என்றான் மாதவன்.

1 COMMENT

  1. கோபக்காரர் அப்பா, அம்மா மீதுள்ள பாசத்தை எதிர்பாரத மகன் மாதவன் ‘உன் கூட இருக்கேன்பா’ என்று கதையை நிறைவு செய்து இருப்பது அருமை.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

சிற்பங்களின் துகள்கள்

2
   தயவு தாட்சண்யம் இல்லாமல் சுளீரென்று சுட்டெரித்துக் கொண்டிருந்தான் சூரியன். தேனீயின் சுறுசுறுப்புடன் துள்ளித் திரிந்த மாணவர்களுக்கு அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அந்த அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் ஆரவாரங்களால் நிறைந்திருந்தது. திறந்திருந்த ஜன்னலின்...

காவல் தெய்வம் !

0
பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்   பிள்ளையார்குளம் கிராமத்தில் மிகப்பெரிய விநாயகர் கோயில். ‘அதிவீர விநாயகர்’ என்ற பெயரில் ஆறடி உயரத்தில் வீற்றியிருக்கிறார். கோயிலின் பின்புறத்தில் நீண்டு வளைந்து செல்லும்  தார்ச்சாலை.  அதையடுத்து பெரியகுளம் கண்மாய் இருந்தது. ...

மழை ராணி

0
  இடியும் மின்னலுமாய் பொழிந்து கொண்டிருந்தது பெருமழை. வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து பெய்யும் மழையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி. ரஞ்சனிக்கு அவளுடைய அப்பா சூட்டி இருக்கும் செல்லப் பெயர் மழை ராணி. அவள் பிறந்து பத்துப் பதினைந்து நாட்களுக்குள்...

சித்திரைப் பூக்கள்

2
  ராமன்                                            எட்டிப் பார்க்கும் லேசான...

பாதாளக் கரண்டி

  30 வருடத்துக்குப் பிறகு, சொந்த ஊர் செல்கிறேன். நான் வசித்த வீடு. எங்கள் முதலாளி முதலியார் வீடு  பார்க்க தயாரானேன். எங்கள் வீடு நாங்கள் விற்றவர் கையிலிருந்து இன்னொரு கை மாறியிருந்தது. என்னை...