வீரத்தமிழர்களின் அடையாளம் இது

வீரத்தமிழர்களின் அடையாளம் இது
Published on

– ஆதித்யா

ண்மையில்  ஹெலிகாப்டர்  விபத்தில் மரணமடைந்த  முப்படையின் தளபதி பிபின் ராவுத் மற்றும் 12 ராணுவ அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட எம்.ஆர்.சி.வெலிங்கடன் ராணுவ கல்லூரிக்கு ஒரு நீண்ட பராம்பரிய மிக்க வரலாறு இருக்கிறது.

இந்த ராணுவக் கல்லூரி முதலில்  1905 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் தேவ்லாலியில் நிறுவப்பட்டது. 1907இல் அது இப்போது பாகிஸ்தானில் உள்ள குவெட்டாவுக்கு மாறியது. கல்லூரி 1947 இல் மீண்டும் இந்தியாவிற்கு வந்தது.

இப்போது ஒரே கூரையின் கீழ்  தரை, வான், கடற்படைகளின் மூன்று சேவைகளுக்குமான  ஒரே கல்லூரியாக இயங்குகிறது. ஒரு போரில் மூன்று படைகளும் எப்படி ஒருங்கிணைந்து இயங்க வேண்டும். திட்டமிடும்போது கவனிக்க வேண்டியது போன்ற நுணுக்கமான் விஷயங்களை உயர் அதிகாரிகளுக்கு கற்றுத்தரும் கல்லூரி இது. இதில் பயிற்சி பெற ராணுவ அதிகாரிகள் போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்தக் கல்லூரியில் பயிற்சி பெற நட்பு நாடுகளிலிருந்தும் அதிகாரிகள் வருகின்றார்கள். அவர்களில் சிலர் நாட்டின் தலைமைப்பதவியையே அடைந்திருக்கிறார்கள்.  இங்கு பயிற்சி பெற்று உயர் பதவியை அடைந்தவர்களின் பட்டியலில் சிறந்த இராணுவத் தலைவர்களைத் தவிர, தங்கள் மாநிலங்களின் தலைவர்கள், மூத்த அமைச்சரவை அமைச்சர்கள், தலைமைப் பணியாளர்கள், மூத்த தளபதிகள், இராஜ தந்திரிகள் மற்றும் சிவில் நிர்வாகிகளும் இருக்கின்றனர்.

DSSCயின்  முன்னாள் மாணவர்கள் பட்டியலில் இருக்கும் சில பெயர்கள் நைஜிரிய நாட்டு அதிபர்  முஹம்மது புஹாரி,  பிஜி தலைவர் சிட்டிவேனி ரபுகா.

இந்தக் கல்லூரியின் இலச்சினை ஒரு ஆந்தை. இந்த சின்னம் ஒரு சர்ச்சைக்குப்பின் பிறந்திருக்கிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு, புதிய பணியாளர் கல்லூரிக்கு அதன் சொந்த இலச்சினை  மற்றும் குறிக்கோள் இருக்க வேண்டும். பிரிக் எஸ்டி வர்மா, தேர்ந்தெடுத்த சின்னம் இது.

ஆந்தை, லத்தீன் பொன்மொழியான 'டாம் மார்டே குவாம் மினெர்வா'. இந்தச் சின்னம் இராணுவத் தலைமையகத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டபோது, அது பொருத்தமற்ற மற்றும் நல்ல சகுனம் இல்லாத சின்னமாக நிராகரிக்கப்பட்டது. மேலும் இந்தி பொன்மொழியுடன் கூடிய புதிய இலச்சினை  கேட்கப்பட்டது.

தலைமையகத்திலிருந்து இறக்கைகளை விரித்துப் பறக்கும் பருந்து  சின்னம்  சிபாரிசு செய்யபட்டது.  ஆனால்   பிரிக் வர்மா ஆந்தையை தக்கவைக்க மிகவும் வற்புறுத்தினார்.  இந்தியில் இரண்டு அல்லது மூன்று பொன்மொழிகளை பரிந்துரைத்தார். நீண்ட கடிதப் போருக்குப்பின் ஆந்தை பருந்தை வென்றுவிட்ட்து. இன்றுவரை அதுதான் இந்தக் கல்லூரியின் சின்னம்.

முப்படை  உயர் அதிகாரிகளுக்கும் சிறப்பு பயிற்சிகளுக்கு என்றிருக்கும் இந்தக் கல்லூரி இருக்கும் வளாகத்தில்தான்  எம்.ஆர்.சி. வெல்லிங்டன் என்ற இந்திய ராணுவ முகாமும்  இருக்கிறது. இது  அமைந்தற்கு பின்னால்  தமிழர்களின்  வீரம் நிரைந்த வரலாறு இருக்கிறது.

இந்திய ராணுவத்தில் தமிழர் பங்கு

இன்று இந்திய ராணுவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5.14 சதவீதம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பலர் அதிகாரிகளாகவும், வீரர்களாகவும் உலகின் மிக உயரத்திலிருக்கும் கடினமான போர் முனையாக வர்ணிக்கப்படும் சியாச்சின் பனிப் பள்ளத்தாக்கு, லடாக் போன்ற இமயமலை சிகரப் பகுதிகளில் பணியாற்றுகிறார்கள்.

தமிழ் இலக்கியங்களும் பாடல்களும் போர்க்களங்களில் தமிழர்களின் வீரம், பற்றி அவர்களின் வீர மரணம் பற்றிப் பேசுகின்றன. போர்க்கலையும், அதில் நுணுக்கங்களும் கற்று அறிந்தவர்கள் பண்டைய தமிழர்கள். மறவர்கள் என அழைக்கப்பட்ட இவர்களது பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. இன்றும் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் இணைய ஆர்வத்துடன் போட்டியிடுகிறார்கள். கடந்த ஆண்டு தென் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு தேர்வு முகாமில் பங்கேற்றவர்கள் 10000க்கும் மேல். அதில் தேர்வு பெற்றவர்கள் 1700 பேர்.

ராணுவப் பணியை நேசிக்கும் இந்த வீரத்தமிழர்களின் பராம்பரியம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முறையான இந்திய ராணுவப்படை உருவான காலங்களில் வளர்ந்து வலுப்பெற்று இன்றும் தொடர்கிறது.

வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி ஆங்கிலேயர்கள் இந்தியப் பகுதிகளை மன்னர்களிடமிருந்து கைப்பற்றி ஆட்சி அமைக்க முன்னெடுத்த திட்டங்களில் ஒன்று வலிமையான ராணுவத்தை அமைப்பது. அதன் விளைவாக 1639ல் 'மெட்ராஸ்' என்ற நகரம் உருவான பின் 'மெட்ராஸ் ஐரோப்பியன் ரெஜிமென்ட்' என்ற பெயரில் கிழக்கிந்திய கம்பெனியால் ஒரு ராணுவப்படை உருவாக்கப்படுகிறது. 1644ல் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை அதன் தலைமையகமாக அறிவிக்கப்பட்டு முறையாக ஆங்கிலேயப்பாணியில் இந்திய ராணுவம் ஒன்று உருவாகியது. 100 வீரர்கள் கொண்ட குழு (கம்பெனி) அதில் சார்ஜென்ட், கார்போரல் போன்ற துணை அதிகாரிகள் நிலையில் தமிழர்களும் கம்பெனித் தலைமையாக இங்கிலாந்திலிருந்து வந்த கேப்டன்களும் இருந்தனர். அதாவது இந்தியாவின் முதல் ராணுவப்படை தமிழர்களால் மட்டுமே உருவாகியிருக்கிறது.

பின்னாளில் இந்தச் சின்னக் கம்பெனிகள் பெருமளவில் வளர்ந்து விரிகிறது. தமிழர்களுடன் அன்றைய ஒருங்கிணைந்த சென்னை ராஜ்தானியாகயிருந்த பிறமொழி பேசும் வீரர்களும் நிறைய ஆங்கிலேய அதிகாரிகளும் இணைகின்றனர். கடலூர் போன்ற இடங்களில் நடந்த போர்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

1748ல் மேஜர் ஸ்டிரிங்கர் லாரன்ஸ் படைக்குத் தலைமை பதவியேற்றவுடன் பல அதிரடி மாற்றங்களைச் செய்கிறார். பிரஞ்சு படைகளுடன் மோதுவதற்காக ராணுவப் படையை  'பட்டாலியன்' என்று அழைக்குமளவுக்கு, வீரர்களைச் சேர்த்து விரிவாக்குகிறார். போதுமான வீரர்கள் இல்லை என்ற எண்ணம் எழுந்தபோது இங்கிலாந்திலிருந்து அதிகாரிகளைத் தவிரச் 'சோல்ஜர்கள்' என்று அழைக்கப்பட்ட ராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டு மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் இணைக்கப்படுகின்றனர். படை இரு பட்டாலியன்களாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று ஐரோப்பியன், மற்றொன்று இந்தியன். தொடங்கிய காலத்தில் இந்தப் பிரிவு நிர்வாகத்திற்கு உதவினாலும் பின்னாளில் பல பிரச்னைகளுக்கு இந்தப் பிரிவுதான் காரணமாகியிருந்திருக்கிறது.

ஆனால் தலைமை அதிகாரி லாரன்ஸ் "இந்தியப் பட்டாலியன்" என்று அழைக்கப்பட்ட தமிழர்கள் நிறைந்த படையைப் பற்றி எழுதிய குறிப்பில்,
"ராணுவ விசுவாசம் என்பதை நன்கு உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். பயிற்சிகளையும், ஆயுதங்களைக் கையாளுவதையும் எளிதாகக் கற்றுக் கொள்ளுகின்றனர். பல ஆண்டுகள் பயிற்சி பெற்ற ஐரோப்பியன் பட்டாலியன்களுக்கு இணையாகப் போரிடுகிறார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

1704ல் "நாயர் பட்டாளம்" என்று அழைக்கப்பட்ட திருவாங்கூர் மஹாராஜவின் மெய்க்காப்பாளர் படை ஒன்று ஒரு போரில் பிரஞ்சு ராணுவத்துடன் போரிட்டு அவர்களை வென்றிருக்கிறது.

இந்தப்படையின் தலைவராகியிருந்தவர் மேஜர் வி.என் பரமேசுவரன் பிள்ளை. இவர் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானமாகயிருந்த நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இவரும் இவருக்கு உதவியாக இருந்த
ஜி.எஸ் சுப்பையாவும் பின்னாளில் நாயர் படை மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் இணைந்தபோது உயர் பதவிகளைப் பெறுகிறார்கள்.

இந்தியாவில் பயிற்சி பெற்ற முறையான ராணுவம் அமைய அடித்தளமிட்டவர் மேஜர் ஸ்டிரிங்கர் லாரன்ஸ்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்களுக்கு முறையான ராணுவக்கல்வி போர் முறைகள், ஆயுதப்பயிற்சி போன்றவற்றைக் கற்றுக்கொடுக்க ஒரு பயிற்சி மையம் தமிழ் நாட்டில் தஞ்சாவூரில் 1794ல் நிறுவப்படுகிறது. இதுதான் இந்தியாவின் முதல் ராணுவப்பயிற்சி மையம். முதலில் "36 மெட்ராஸ் பட்டாலியன்" என்றழைக்கப்பட்ட இது 1824ல் "மெட்ராஸ் நேட்டிவ் இன்பென்ட்ரி" என அழைக்கப்பட்டது. பெயர்க் காரணமே இது தமிழர்கள் படை என்பதைச்சொல்லுகிறது. 1903ல் "கார்நாடிக் இன்பென்டிரி" என நாமகரணம் செய்யப்பட்ட இந்தப் படைப்பிரிவு 1922ல் மீண்டும் மெட்ராஸ் ரெஜிமென்ட் ஆகிறது. பல ஆங்கிலேய அதிகாரிகளால் திறம்பட வளர்க்கப்பட்ட இந்தப் படை 1947ல் குன்னூரில் இருக்கும் வெலிங்டன் நகருக்கு(குன்னூர்) இடம் பெயர்ந்தது.

அங்கு இங்கிலாந்தின் புகழ்பெற்ற ராணுவக் கல்லூரிகளின் வடிவங்களில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள், பயிற்சி வசதிகள் அமைக்கப்பட்டன. இந்த ராணுவப்பிரிவு இன்று இந்திய ராணுவத்தின் பெருமை மிக்க சின்னம். இங்கு வீரர்கள், இளநிலை அதிகாரிகள் மட்டுமில்லாமல் மிக உயர்ந்த ரேங்க்கில் இருக்கும் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளும் பயிற்சி பெறுகின்றனர்.

இந்திய ராணுவத்தில் ஒவ்வொரு ரெஜிமென்ட்டுக்கும் போர்க்களத்தில் உத்வேகத்தை அதிகரிக்க, உணர்ச்சிகளை அதிகரிக்க ஒரு கோஷம் உண்டு. இதை ஆங்கிலத்தில் WAR CRY என்பார்கள். எதிரிகளைத் தாக்கும்போது அந்த வார்த்தைகளைச் சொல்லித்தான் பாய்வார்கள் இந்த மெட்ராஸ் ரெஜிமென்ட்டில். ஆண்டுகள் பல ஆனாலும் இப்போது இங்குப் பயிற்சி பெறுபவர்கள் தமிழர்கள் அல்லாத பல மாநிலத்தவர்களாயிருந்தாலும் எழுப்ப வேண்டிய கோஷங்களாகப் பயிற்சியில் சொல்லித்தரப்படுவது
"வீர மதராசி -அடிகொல்லு அடிகொல்லு" தான். அதற்குப் பின்தான் ஜெய்ஹிந்த் எல்லாம்.

உலகளாவிய நாடுகளின் பங்களிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தால் முதலாம் உலகப்போர்  என்றழைக்கபட்ட போரிலும்  இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் பங்கு அதிகம். உலகப் போர்களில் அதிகம்.

உலகப்போர்  என்றழைக்கப்பட்டாலும் போரின் பெரும்பகுதி நடைபெற்றது ஐரோப்பாவில் தான். போரில் ஏறத்தாழ 2௦ மில்லியன் மக்கள் உயிரிழந்தனர். 2௦ மில்லியனிற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர். இதில் பங்கேற்ற 15 லட்சம் இந்திய வீரர்களில் தமிழர்கள் 3 லட்சம் என்கிறது ஒரு குறிப்பு.

மொழி, தெரியாத கிழக்கு ஆப்பிரிக்கா, மெசொப்பொத்தேமியா, எகிப்து போன்ற நாடுகளில் தமிழர்கள் போரிட்டிருக்கின்றனர். தன்னார்வத்துடன் வீரர்கள் பங்கேற்றதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்  நல்ல ஊதியம் மற்றும் போருக்குச் சென்று வந்தவர்களைச் சத்திரிய இனமாகக் கருதப்படும் வழக்கம் இருந்ததால் சமூக அந்தஸ்திற்காகவும் சென்றுள்ளனர் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தப் போரில் உயரிய விருதான விக்டோரியா விருது 12 வீரர்களுக்கும் சுமார் 13,0௦0 வீரப்பதக்கங்களும், பிரிட்டனில் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழர்கள் எத்தனைபேர் என்ற விபரம் காணக்கிடைக்கவில்லை.

1939ல் தொடங்கி 1945ல் முடிவுற்ற இரண்டாம் உலகப்போரில் பங்குகொண்ட இந்திய ராணுவத்தில் தமிழர்களின் பங்கு கணிசமானது. உலகம் ஒரு போதும் மன்னிக்காத பேரழிவை ஏற்படுத்திய அணுஆயுதம் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்ட இந்தப் போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களில் பல தமிழர்களும் அடக்கம். சென்னை கடற்கரைச் சாலையிலிருக்கும் போர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்களில் தமிழர்களின் பெயர்கள் இருப்பதைக் காணலாம்.

இரண்டாம் உலகப் போர் சூழலில் உருவான மற்றொரு இந்திய ராணுவம் ராஷ் பிஹாரி போஸால் தொடங்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்தியத் தேசிய ராணுவம். அந்த ராணுவத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சி, அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் சுபாஷ் சந்திரபோஸ். தனது சீரிய பேச்சால் ஒவ்வொரு இளைஞனையும் போரில் பங்கு பெறச் செய்தார். இந்தியா விடுதலை பெற்றால்தான், ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளும் விரைவில் விடுதலை அடைய முடியும் என்று அறைகூவல் விடுத்தார். இதனையடுத்து, தமிழ்நாட்டிலும், மலேசியாவிலும், பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் ஆயிரக்கணக்கில் இந்திய தேசிய ராணுவத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் இணைந்தனர். இவர்களில் பலர் இந்திய தேசிய ராணுவத்தின் உயர் பதவிகளையும் அடைந்தனர். நேதாஜியின் போராட்டத்திற்குத் தமிழர்கள் பல வழிகளில் உதவி புரிந்துள்ளனர்.

, தமிழ்நாட்டிலிருந்து பசும்பொன் தேவர் அனுப்பிய சுமார் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தனர். அவரது இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் படைப் பிரிவுக்கு ராணி ஜான்சி எனப் பெயரிட்டிருந்தார். அதன் தலைவியாக வீரத் தமிழ்ப் பெண்ணான கேப்டன் லட்சுமி இருந்தார். இந்தப் படையில் கேப்டன் ஜானகி தேவர் என்ற தமிழ்ப் பெண்மணியும் பெரும் பங்காற்றினார். நேதாஜியின் படைக்கு முதுகெலும்பாக இருந்தது தென் கிழக்கு ஆசியாவிலும், பர்மாவிலும் வாழ்ந்த தமிழர்கள்தான்..

முதல் இரண்டாம் போர்களிலும் நேதாஜியின் இந்திய ராணுவத்திலும் இன்று எல்லையில் போரிடும் நம் படைகளிலும் இன்றளவும் தமிழர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில்  நமது எல்லையில்  சீனப்படைகளின்  ஆக்கிரமிப்பு, இந்திய வீரர்கள் அந்தச் சவால்களை எதிர்கொண்டவிதம் பற்றி நிறையப் பேசப்படுகிறது. ''கார்கில்' என்று இந்தியா முழுவதும் அறிந்த பெயர். இந்தப் பகுதியினர்  'கறுகில்' என்றுதான் உச்சரிக்கின்றனர். காஷ்மீரச் சமவெளியையும், லடாக் பகுதியையும் வெளி உலகுடன் இணைக்க ஒரு பாதை இருக்கிறது (இப்போது சண்டிகர்- மணலி பகுதிலிருந்து ஒரு சாலை நீண்ட குகையுடன் இருக்கிறது) குதிரைகள் மட்டும் செல்லக்கூடிய ஒற்றைத்தடமாக இருந்த இந்தப் பாதையைப் பாகிஸ்தானிய ராணுவம்
1951ல் இப்பாதையைக் கைப்பற்றியது.

கவனியுங்கள் இது 1999ல் கார்கில் போர் நடப்பதற்கு முன்னரே இந்தக் கார்கில் பகுதி யுத்த பூமியாக இருந்திருக்கிறது. மலைச் சிகரங்களில் தொலைதூரப் பீரங்கிகளை அமைத்தால் மலைச் சிகரங்களினூடாகச் செல்லும் இப்பாதையை முழுமையாகவே பிடித்துவிடலாம் என்று அன்றே பாகிஸ்தான் திட்டமிட்டு முயன்றிருக்கிறது. அப்போது இந்திய ராணுவத் தலைவராக இருந்த ஜெனரல் கரியப்பா உடனடியாக ஸ்ரீநகர் முதல் லடாக் வரை ஒரு ராணுவசாலை அமைக்க ஆணையிட்டார். நான்கே மாதங்களில் அந்தச் சாலை அமைக்கப்பட்டது. அதன்வழியாக ராணுவ டாங்குகள் சென்று பாகிஸ்தானிய ராணுவத்தை விரட்டியடித்தன. அதன் பின்னர் தான் லடாக் வெளியுலகுடன் ஒரு நல்ல சாலையின் மூலம் நிரந்தரத் தொடர்பு பெற்றது. அன்று இந்தச் சாலையை அமைக்கும் பணியைத் தலைமையேற்று நடத்தியவர் மேஜர் தங்கவேலு. தமிழகத்தைச் சேர்ந்தவர்.

அவருக்கும் அந்தப் பணியில் விபத்திலும் குளிரிலும் மாண்ட வீரர்களுக்கும் இந்திய அரசு அந்தச் சாலையில் ஒரு சிறிய நினைவுக் கல்லை எழுப்பியிருக்கிறது. இப்படி எத்தனையோ அதிக அறியப்படாத, பேசப்படாத ராணுவ சாதனைகளைத் தமிழர்கள் செய்திருக்கிறார்கள். இந்திய ராணுவத்தில் தமிழர்களின் பங்கு மிகப்பெரிது.

ஆனால் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைப்போல தமிழக அரசு அவர்களுக்கான கெளரவத்தைக் கொடுக்கிறதா? என்பது விவாதத்துக்குரிய ஒரு கேள்வியாகத்தான் இருக்கிறது.

வீட்டுக்கொருவர் தேசத்திற்குப் பணியாற்ற வேண்டும் என்பதை இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்தே செய்துவருகிறது தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமம். தூத்துக்குடியிலிருந்து 24 கி.மீ தூரத்தில், சுமார் 5000 குடும்பங்கள் வாழும் சிறிய கிராமம். வீட்டுக்கு ஒருவர் என 2000-க்கும் மேற்பட்டோர் ராணுவம், கடற்படை, சிஆர்பிஎப், தமிழ்நாடு காவல்துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர். இங்கிருப்பவர்களில்
3000-த்திற்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் படை வீரர்கள் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? அதோடு நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி இந்த கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் சுகாதாரக் கட்டமைப்புகளும் இன்னும் கனவாகத்தான் இருக்கிறது.

"உன்னுடைய சுயநலனை விட ராணுவ சேவையே முதன்மையானது" service before self இதை எந்தக்கணமும் மறக்கக்கூடாது என்பதைத்தான் பயிற்சிகளில் முதல் பாடமாக நமது வீரர்களுக்கும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

நாம் நம் குழந்தைகளுக்கும் வரும் தலைமுறைக்கும் இந்திய ராணுவம் நமக்குச் செய்து கொண்டிருக்கும் தன்னலமற்ற சேவையையும் அவர்களுக்கு நாம் தரவேண்டிய கெளரவத்தையும் முதல் பாடமாகச் சொல்லித்தருவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com