0,00 INR

No products in the cart.

“நீ பெரிய  நடிகனா வரலாம்”

அண்ணாத்தே வந்த பாதை – 10

 

எஸ்.பி.முத்துராமன்                எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி

னக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தன் மனைவியையும், தன் சின்ன பையனையும் ரஜினி நடித்த படம் ஒன்றைப் பார்க்க அழைத்துக் கொண்டுப் போனார். தியேட்டருக்குப் போனால் ஹவுஸ் ஃபுல். சினிமா பார்க்க வந்துவிட்டு, படம் பார்க்காமல் போக அவருக்கு மனசில்லை. எனவே, வேறு படத்துக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்று உட்கார்ந்தார்கள். படம் ஆரம்பித்தது. பத்து நிமிடம் வரை பையன் பொறுமையாக உட்கார்ந்திருந்தான். அதன் பிறகும் ரஜினி வரவில்லை என்றதும்,
“ரஜினி ஏன் இன்னும் வரலை?” என்று கேட்க, “ரஜினி படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இது வேறு படம். இதில் ரஜினி வரமாட்டார்” என்றதும் அந்தச் சிறுவன், “அப்படியானால் எனக்கு சினிமாவே வேண்டாம். வாங்க வீட்டுக்கே போகலாம்” என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டான். நண்பரும் அவரது மனைவியும் வேறு வழி இல்லாமல் அந்தப் படத்தைப் பார்க்காமலேயே வீடு திரும்ப நேர்ந்தது. இந்த அனுபவம் பல பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

ரஜினி வெளிப்புறப் படப்பிடிப்புக்குச் சென்றால் வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அத்தனைபேரும் ரஜினியைப் பார்க்க வருவார்கள். நான் என்னுடய நண்பர்கள் யார் வீட்டுக்கு சென்றாலும், அந்த வீட்டில் இருக்கும் சிறு பிள்ளைகளை ரஜினி மாதிரி என் முன்னால் நடித்துக் காட்டச் சொல்லுவார்கள். “என் பையனுக்கு ரஜினியோடு ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு ரொம்ப ஆசை! அதற்கு எப்படியாவது ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று என்னிடம் கேட்கும் பெற்றோர்கள் பலர் உண்டு.  நானும் சமயம் கிடைக்கிறபோதெல்லாம் அதற்கு ஏற்பாடு செய்வேன். இப்படி சிறு குழந்தைகள் ரஜினி மீது காட்டும் பாசம் என்னை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

இப்படி குழந்தைகளுக்கு ரஜினி மேல் இருக்கும் அளவற்ற பாசத்தை பல சமயங்களில் பார்த்த சரவணன் சார், “ரஜினியையும், குழந்தைகளையும் வைத்து ஒரு படம் எடுத்தால் குழந்தைகளுக்கெல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்குமில்லையா?” என்று என்னிடம் கேட்டார். அதன்படி பல்வேறு வயதில் உள்ள ஐந்து குழந்தைகளை வைத்து உருவாக்கப்பட்ட கதைதான் “ராஜா சின்ன ரோஜா”. தாயில்லாத ஐந்து குழந்தைகள். அவர்களின் அப்பா ரவிச்சந்திரன் குழந்தைகளை கவனிக்க நேரமில்லாத பிசியான பிஸ்னஸ்மேன். பிஸ்னஸ் விஷயமாக எல்லா நாடுகளிலேயும் இருப்பார். ஆனால் குழந்தைகளுடன் மட்டும் வீட்டில் இருக்கமாட்டார். வீட்டில் நிறைய வேலைக்காரர்கள் இருந்தாலும், அவர்கள் குழந்தைகளை கவனிக்காமல், கிடைத்தவரை சுருட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். ரவிச்சந்திரனைப் பார்க்க கிராமத்திலிருந்து வருகிற அவரது சித்தப்பா அந்த வீட்டில் நடப்பவைகளைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். குழந்தைகளையும், வீட்டையும் பொறுப்புடன் கவனித்துக்கொள்ள ஒருவரை  வைத்துக்கொள்ளுமாறு கூறுகிறார்.

கிராமத்தில் தெருக் கூத்தில் ரஜினியின் ரசிக்கத்தக்க நடிப்பைப் பார்த்து, “நீ மெட்ராசுக்குப் போனால் சினிமா சான்ஸ் கிடைக்கும்; நீ பெரிய  நடிகனா வரலாம்” என்று அவருக்கு ஊர்க்காரர்கள் ஆசை ஊட்ட, அதில் மயங்கி ரஜினியும் பட்டணத்துக்கு வந்து  சினிமா வாய்ப்புத் தேடி அலைந்துகொண்டிருப்பார்.

இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இன்று பொதுவாகவே பள்ளிக்கூட நாடகத்திலோ, டான்சிலோ வாய்ப்பு கிடைத்து, தன் திறமையை வெளிப்படுத்துகிறவர்களை, உடனே அந்த ஊர்க்காரர்களும், நண்பர்களும், “உனக்கு அபாரமான திறமை இருக்கிறது; சென்னைக்குப் போனால் சுலபத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்; நீ பெரிய நடிகராக வரலாம்” என்று ஆசை காட்டி விடுகிறார்கள். ஆனால், அது நிஜத்தில் அவ்வளவு சுலபமில்லை.  உள்ளூரில் ஒரு நாடகத்தில் நடிப்பதாலோ, டான்ஸ் ஆடுவதாலோ பெரிய திறமைசாலி என்று சொல்லிவிட முடியாது. அவர்களுக்குள் இருக்கும் “திறமை” என்கிற சிறு விதையை அவர்கள் பயிற்சியின் மூலமாக நன்றாக வளர்த்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு சினிமா வாய்ப்புகளுக்கு முயற்சி செய்ய வேண்டும். இல்லையெனில் ஏமாற்றமே மிஞ்சும். எனவே, உள்ளூர் திறமைகளை ஊக்குவியுங்கள்; தட்டிக்கொடுங்கள்; தவறில்லை; ஆனால், அவரது மனதில் வீணான சினிமா ஆசைகளைத் தூண்டி விடாதீர்கள். அவரது திறமைகளை வளர்த்துக்கொள்ள வழிகாட்டுங்கள்; அதுதான் முக்கியம்.

மீண்டும் ரஜினி கதைக்கு வருகிறேன். சென்னைக்கு வரும் ரஜினி  சினிமா வாய்ப்புத் தேடி வருகிறவர்கள், முதலில் தங்கும் வீடு ஒன்றில் தங்கி, சினிமா வாய்ப்புக்கு முயற்சி செய்வார். அந்த சமயத்தில்தான் ரஜினிக்கு பணக்காரர் ரவிசந்திரனின் குழந்தைகளை வீட்டோடு இருந்து கவனித்துக்கொள்ளும் வேலை கிடைக்கும். அந்த வீட்டில் இருந்துகொண்டு, குழந்தைகளை அன்போடும், அக்கறையோடும் கவனித்துக்கொண்டே, அங்கே நடக்கும் தவறுகளை எப்படிக் கண்டுபிடிக்கிறார், அதில் அவர் சந்திக்கும் சவால்கள் என்னென்ன? இறுதியில் எப்படி வெற்றிகரமாக முடிக்கிறார் என்பதுதான் கதை.

அந்தப் படத்தில் “சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்” என்று ஒரு பாட்டு வரும்.  ரஜினி-கௌதமி நடித்த அந்தப் பாடலின்போது, பின்னணியில்  வரிக்கு வரி தரையிலிருந்து ஒவ்வொரு வண்ணத்தில் புகை எழும்பும்.  அது மிகவும் புதுமையாக அமைந்ததால், பாடல் வரிகள் மட்டுமின்றி,   ஏக்நாத் என்ற ஸ்பெஷல் எஃப்ஃபெக்ட் கலைஞரின் திறமையில் உருவான பாடல் காட்சியும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

படத்தில் அந்த வீட்டின் குழந்தைகளுள் ஒரு பெண்  போதை மருந்துப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பார். அவரை ஒரு பாடல் பாடி திருத்துவார் ரஜினி. பாரத நாட்டின் பண்பாடு மற்றும் பெருமைகளை எடுத்துச் சொல்லும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகள் அர்த்தம் பொதிந்தவை. அற்புதமான  ஜேசுதாஸின் குரலில் அந்தப் பாடல் பாடப்பட்டது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய காட்சி!

குழந்தைகளை மையமாகக் கொண்ட படம் என்பதால், “அனிமேஷன் தொழில் நுட்பத்தைக் கொண்டு ஒரு பாடலை உருவாக்கினால் குழந்தைகள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெறும்” என்று ஐடியா கொடுத்தார் சரவணன் சார். இன்றைக்கு உள்ளது போல அப்போது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் கிடையாதே! எனவே, ரஜினி குழந்தைகளுடன் ஒரு காட்டுக்குள்ளே போய் பல மிருகங்களுடன் கலந்து பாடுவதுபோல அந்தப் பாடலை எடுக்கத் திட்டமிட்டோம்.  அது எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. பாடலைப் படம் பிடிக்கிற சமயத்தில் அனிமேஷன் கேரக்டர்கள் எதுவும் இருக்காது. ஆனால், அவை இருப்பதுபோல கற்பனை செய்துகொண்டு அதற்கேற்ப ரஜினியையும், குழந்தைகளையும் நடிக்கச் செய்து படம் பிடித்தோம்.  உதாரணமாக நீங்கள் திரையில் ரஜினியும் குழந்தைகளும் ஒரு யானையை சுற்றி வந்து பாடுவதாக காட்சியைக் காண்பீர்கள். ஆனால், படப்பிடிப்பின்போது, யானை அந்த இடத்தில் இருக்காது; அங்கே யானை இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, அதைச் சுற்றி வருவதுபோல  ஆடிப்பாடுவார்கள்.  குழந்தைகளை வைத்து இப்படி ஒரு பாடலை எடுப்பது மிகவும் சவாலாக இருந்தது. அந்தப் பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அந்தப் பாடல் வரிகளையும் சும்மா பொழுதுபோக்காக இல்லாமல் குழந்தைகளுக்கு கதை மூலமாக ஒரு நல்ல மெசேஜ் சொல்லும்படி அமைத்தோம்.

பாடலுக்குரிய அனிமேஷன் காட்சிகளை யாரை வைத்து எடுப்பது என்று யோசித்தபோது,  “மும்பையில் ராம்மோகன் என்பவர் ஒரு அனிமேஷன் எக்ஸ்பர்ட் என்றும், அவர்தான் இதற்குப் பொறுத்தமான மனிதர்” என்றும் கூறினார்கள். விசாரித்தபோது, ராம்மோகன் மிகவும் பிசியான மனிதர் என்று தெரிய வந்தது. சென்னையில் படத்துக்குப் பூஜை போட்ட அன்று மதியமே, மும்பைக்குப் புறப்பட்டுச் சென்று ராம்மோகனை சந்தித்தேன். “நான் ரொம்பவும் பிசி; ஒரு முழு பாடலுக்கும் அனிமேஷன் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது நாலு முதல் ஆறு  மாதம் ஆகும்” என்றார். உடனே நான், “பரவாயில்லை; இன்றைக்குதான் நான் படத்துக்கு பூஜை போட்டிருக்கிறேன்; முதல் ஷெட்யூலிலேயே இந்தப் பாடலை படம் பிடித்து உங்களிடம் கொடுத்துவிடுகிறேன்; நீங்கள்  நிதானமாக எனக்கு அனிமேஷன் பணியை முடித்துக் கொடுங்கள்” என்றேன்.  இதைக் கேட்ட ராம்மோகனுக்கு ஒரே ஆச்சரியம். “வழக்கமாக படம் அடுத்த மாசம் ரிலீஸ். எப்படியாவது ஒரே வாரத்தில் அனிமேஷன் பண்ணிக்கொடுங்கள்” என்றுதான் பலரும் எனக்கு பிரஷர் கொடுப்பார்கள்; ஆனால், நீங்கள் படத்துக்கு பூஜை போட்ட அதே நாளில் என்னை வந்து சந்தித்து இருக்கிறீர்கள். அதுவும் இது பாரம்பரியம் மிக்க ஏவி.எம். படம்.  கவலைப்பட வேண்டாம்; நீங்கள் பாடலைக் கொடுத்த நான்கு  மாதங்களில் நான் அனிமேஷனை முடித்துக் கொடுத்துவிடுகிறேன்; உங்களது திட்டமிட்டுப் பணியாற்றும் செயலைப் பாராட்டுகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். சொன்னபடியே குறித்த நேரத்தில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் படங்களை கையாலேயே வரைந்து அந்தப் பாடலுக்குரிய அனிமேஷன் பணியை சிறப்பாக செய்து முடித்தார் அனிமேஷன் நிபுணர் ராம்மோகன்.  இந்திய திரைப்பட வரலாற்றிலேயே, நடிகர்களும், அனிமேஷன் கேரக்டர்களும் ஒன்றிணைந்து இடம்பெற்ற முதல் பாடல் காட்சி அதுதான். அந்தப் பாடல் அந்த படத்தின் ஹைலைட்டாக அமைந்தது.

அந்தப் பாடலைப் படம் பிடித்தபோது,  ரஜினியும், கௌதமியும்  பொறுமையாக  குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து எங்களுடைய புதிய முயற்சிக்கு அளித்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது. ஆனால் ஊட்டியில் படப்பிடிப்பின்போது எங்களுடன் ஒத்துழைக்காமல் முரண்டு பிடித்தது யார் தெரியுமா?

(தொடரும்)

 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...

தமிழனுக்கு ஓர் இயல்பான வாழ்வியல் அமைதியைத் தருகிறது…

1
 உலகக் குடிமகன் - 32  நா.கண்ணன்   நான் கொரியா செல்வேன் எனக் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், என் ஜப்பானிய ஆய்வை அமெரிக்கர்களும், கனடாக்காரர்களும், ஜெர்மானியரும், ஆங்கிலேயரும் கவனித்தது போல் கொரியர்களும் கவனித்து வருகிறார்கள் என...

சலூன் கிரி மாமா

0
மகேஷ் குமார்   கிரி மாமாவின் நிஜப்பெயர் அதுதானா என்பது எனக்குத் தெரியாது. அவரை முதல் முதலாகப் பார்த்த சலூனின் பெயர் ‘கிரி சலூன்’. அதிலிருந்து அவர் பெயர் கிரி மாமா. நல்ல உயரமும் உடலுமாக,...

குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்   அன்று நள்ளிரவில் அவன் வீடு திரும்பியதும் அவனுக்கு சாப்பாடு போட டேபிளில் தட்டு வைத்தாள். “எனக்கு வேண்டாம்” “ஏன்?” “வெளிய சாப்பிட்டேன்” “ஹோட்டல் உணவு உடம்புக்கு நல்லதில்லை” “நாம தனியா போன பிறகு உன் கையால் சாப்பிடுகிறேன். அதுவரை...

அப்ரைசர் முத்துசாமி

0
மகேஷ் குமார்   திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் மெயின் ரோட்டில் இருக்கும் அந்த வங்கியின் வாசலில் காலை 9 மணிக்கே கூட்டம் நெரியும். அந்த இரண்டு தினங்களில்தான் நகைக்கடன் கொடுக்கப்படும். பெரும்பாலானோரின் கையில் ஒரு...