0,00 INR

No products in the cart.

சிங்கிள் மதர்

சிறுகதை

தெலுங்கில்: டாக்டர் கே. கீதா
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

 

லிபோர்னியாவில் நாங்கள் இந்த அபார்ட்மென்ட்டுக்கு மாறி ஓராண்டு ஆகப் போகிறது. அலீசியாவோடு அவ்வப்போது போனில் பேசுவேன். அவள் அந்தப் பக்கத்திலிருந்து ஸ்பானிஷ் மொழியிலும் நான் இந்தப் பக்கத்திலிருந்து ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டிருப்போம். அவளுக்கு நான் பேசுவது புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவள் குரலில் வெளிப்படும் மகிழ்ச்சிக்காகவாவது நான் பேசிக்கொண்டே இருப்பேன்.

“இன்று வால்மார்ட்டுக்குச் சென்றபோது வழியில் அலீசியாவை அவள் வீட்டில் சந்தித்தேன். எங்கள் இருவரின் தோழி அன்டோனியாவை நினைவுள்ளதா? அலீசியாவோடு கூட நம் வீட்டுக்கு வருவாளே… அவளுடைய இளைய மகள் நம் அபார்ட்மென்டில்தான் குடியிருக்கிறாளாம்” என்றேன் என் கணவன் சூர்யாவிடம்.

அலுவலகத்திற்கு நடந்து செல்லும் தொலைவில் எங்கள் அபார்ட்மென்ட் இருப்பதால் மதிய உணவிற்கு வந்து செல்வான் சூர்யா.

“அதுதானா? நேற்று கார் பார்கிங் அருகில் நம் மகள் நிதி வயது சிறுவன் ஒருவனைப் பார்த்தேன். எனக்கு அப்போது சரியாக நினைவு வரவில்லை. இப்போது புரிகிறது. அன்டோனியாவின் பேரன் அவன்” என்றான் சூரியா.

நிதி சந்தோஷமாக ஓடி வந்தாள். “மம்மீ…! யார் வந்திருக்கா பாரு…” என்றாள்.

அவளருகில் அவள் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த இரண்டு வயது சிறுமி அழகிய பதுமை போலிருந்தாள்.

“ஹல்லோ தங்கக் குட்டி…” என்றேன்.

“இவள் பேரு தங்கக் குட்டி இல்லம்மா. இசபெல்லா“ என்றாள் நிதி சிரித்துக் கொண்டே.

அதற்குள் அந்த சிறுமியின் தாய் வந்தாள். என்னைப் பார்த்தவுடனே அருகில் வந்து அணைத்துக் கொண்டாள்.

“ஹௌ ஆர் யு ப்ரியா? என் அம்மா எப்போதும் உன்னைப் பற்றி சொல்லிக் கொண்டே இருப்பாள்” என்றாள் சிரித்தபடி.

“சமீபத்தில்தான் உன் அம்மாவைச் சந்தித்தேன் அலீசியாவின் வீட்டில். நீங்கள் இந்த அபார்மென்டுக்கு எப்போது குடி வந்தீங்க?”

“ஒரு மாதமாகிறது. அப்புறம் பார்க்கலாம்… ப்ரியா! நான் இவளை எங்க அம்மாவிடம் விட்டுவிட்டு ஜாபுக்கு போகணும்”

“உன் மகன்?”

“அவன் ஸ்கூல்லேர்ந்து தினமும் அம்மா வீட்டுக்கு நடந்து போயிடுவான். நான் மீண்டும் பிக்கப் பண்ணிக்குவேன் அவனை. வீகெண்ட்ல  அங்கேயே இருந்திடுவான்” என்றாள்.

“சனி, ஞாயிறு கூட வொர்க் பண்றியா?” என்று கேட்டேன்.

“வேறே வழி?” என்றாள் புன்னகை மாறாமல்.

ன்டோனியாவின் மகள் பெயர் மெரால்டா. ரொம்ப சுறுசுறுப்பானவள். அழகானவள். மெரால்டாவைப் பற்றி ஒருமுறை அன்டோனியா கவலையோடு குறிப்பிட்டாள்.

“தன் காலில்தான் நிற்கவேண்டும் என்பதற்காக எத்தனை கஷ்டமென்றாலும் வெளியில் இருந்து தாங்கிக்கொள்வாளே தவிர, என்னோடு நான்கு நாட்கள் இரு என்றால் கேட்கமாட்டாள்”

“நல்லதுதானே. இருக்கட்டும் விடு அன்டோனியா…! பிள்ளைகள் தம் வாழ்க்கையை தாமே பார்த்துக்கொண்டு உனக்கு பாரமாக இல்லாமல் இருப்பதற்கு நீ மகிழ்ச்சி அடைய வேண்டும்.”

“உண்மைதான். ஆனால், சுதந்திரமாக வாழ நினைப்பது ஒன்று மட்டுமே இல்லை அல்லவா வாழ்க்கை என்றால்…! அவர்கள் வாழ்க்கையை அவர்கள் சரி செய்துகொள்ள வேண்டுமல்லவா?” என்று கூறி பெருமூச்செறிந்த அன்டோனியா…. “திருமணம் புரிந்துகொள் என்று சொன்னால்… என்னை அந்த தொல்லைக்குள் தள்ளாதே… என்கிறாள்” என்றாள்.

“ஏற்கெனவே இரு குழந்தைகளுக்கு தாயாகி உள்ளாள். முதல் மகனின் தந்தை அவனுக்கு மூன்று வயதாகும் போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு சென்று விட்டான். மீண்டும் வேறொருவனோடு சேர்ந்து வாழ்ந்து ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். இப்போது அவனும் பிரிந்து விட்டான்.  இப்போதாவது திருமணம் செய்துகொள் என்று கூறுகிறோம். கேட்க மாட்டேன் என்கிறாள்” என்று வருந்தினாள் அன்டோனியா.

“எனக்கு இன்னும் இந்த அமெரிக்க தேசத்தின் சூழல், வழக்கங்கள் புரியவில்லைதான். ஆனால் உன் மகள் இங்குள்ள சமுதாயத்தில் வளர்ந்த பெண். அவளுடைய இஷ்டப்படி  வாழும்  உரிமை அவளுக்கு உள்ளது.
நீ இன்னும் உன்னுடைய ஸ்பெயின் தேசத்தைப் போலவே ஆலோசித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே” என்று அவளை சமாதானப்படுத்த முயன்றேன்.

சூர்யாவின் அலுவலகத்தில் ஃபேமிலி பார்ட்டி நடந்தது. திரும்பி வந்தபோது இரவு எட்டானது. கார் பார்க் செய்துவிட்டு வரும்போது மெரால்டாவின் கார் கண்ணில்பட்டது. என் மகள் நிதி என் கையைப் பிடித்து இழுத்தாள்.

“என்ன ஆச்சுடீ?” என்று கேட்டேன்.

மெரால்டாவின் மகன் கிறிஸ்டோபர்  காரில் அமர்ந்து மொபைல் போனில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அருகில் சென்று, “என்னடா இன்னும் காரிலேயே உட்கார்ந்திருக்கே…! உங்க அம்மா எங்கே?” என்று கேட்டேன். அவனருகில் கார் சீட்டில் அவன் தங்கை உறங்கிக் கொண்டிருந்தாள்.

“பாட்டி வீட்டு சாவி எடுத்து வருவதற்காக அம்மா போயிருக்கிறாங்க” என்றான் சிறுவன்.

நாங்கள் எங்கள் வீட்டைத்  திறந்து கொண்டு உள்ளே வந்த பின், “ஐயோ…! செல் போனை காரிலேயே மறந்து விட்டேனே” என்றான் சூர்யா.

“நான் போய் எடுத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கார் அருகில் சென்றேன்.

இந்த முறை மெரால்டா கூட காரிலே அமர்ந்திருந்தாள்.

“எல்லாம் ஓகே தானே?” என்று அவளிடம் கேட்டேன்.

அவள் காரை விட்டு இறங்கி என் அருகில் வந்தாள். பலவீனமான குரலில், “ப்ரியா! சிறிது நேரம் என் குழந்தைகள் உன் வீட்டில் இருக்கலாமா?” என்று கேட்டாள்.

“இதைக்கூட கேட்கவேண்டுமா என்ன? தாராளமாக இருக்கலாம். நீ எங்காவது போக வேண்டுமா?” என்று கேட்டேன்.

“இல்லை. எனக்குப் பரவாயில்லை. நான் காரிலேயே இருந்துவிடுவேன்” என்றாள்.

“நீ சொல்வது எனக்குப் புரியவில்லை. சரி… சரி…! எல்லாம் என் வீட்டில் போய் பேசிக் கொள்ளலாம் வா… இங்கு மிகவும் குளிராகக் கூட உள்ளது” என்றேன்.

சின்ன பாப்பாவை சோபாவில் படுக்க வைத்து போர்வையால் போர்த்திவிட்டேன்.

“கிறிஸ்டோபர்…! நீ நிதியோடு சேர்ந்து அவள் அறையில் போய் விளையாடு சற்று நேரம்” என்றேன்.

“ம்…ம். இப்போது சொல்” என்றேன் மெரால்டாவுக்கு கப்பில் காபி கொடுத்தபடி.

“பெரிதாக ஒன்றுமில்லை ப்ரியா! நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்காரி இரவு பத்து மணி முதல் காலை எட்டு மணி வரை மட்டும் தான் எங்களுக்கு வாடகைக்கு கொடுத்திருக்கிறாள்” என்று சொல்லி மெல்லச் சிரித்தாள்.

மெரால்டாவிடம் எனக்குப் பிடித்தது இதுதான். கஷ்டமான பிரச்னையைக் கூட சிதறாத புன்னகையோடு கூறிக் கடந்துவிடுவாள்.

“இது என்ன புதிதாக? எனக்கு சுத்தமாக விளங்கவில்லை” என்றேன்.

“என் மகளின் தந்தையும் நானும் பிரித்து ஆறு மாதமாகிறது. அவனுக்கும் எனக்கும் ஒத்துப் போகவில்லை. ரெசெஷன் காரணமாக என் வேலையும் போய்விட்டது. இப்போது ஏதோ இரண்டு சின்னச் சின்ன ஜாப்ஸ் செய்கிறேன் என் குழந்தைகளை வளர்ப்பதற்காக. உங்கள் வீட்டைப் போல இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு வீட்டில் சப் லீசுக்கு ஒரு அறை வாடகைக்கு எடுத்துள்ளேன்.  ஆனால் அவர்கள் சொல்லும் நேரத்திற்குத்தான் வந்து போக வேண்டும். நான் இருக்கும் சூழ்நிலையில் இதைவிட வேறு வழி இல்லை” என்றாள்.

அதோடு தொடர்ந்து எனக்கு விளக்கும் விதமாக, “தினமும் இவ்வாறு தொந்தரவு இருக்காது ப்ரியா! இன்று என் அம்மாவும் அப்பாவும் ஒரு வேலையாக சான்பிரான்சிஸ்கோ போயிருக்கிறார்கள். இல்லாவிட்டால் எப்போதும் இந்த நேரத்தில் அங்கே சென்றுவிடுவேன். என் அம்மாவின் வீட்டுச் சாவியை எங்கள் அறையில் வைத்துவிட்டேன். எடுத்துவர முடியவில்லை. அதுதான் பிராப்ளம்” என்றாள்.

“இட்ஸ் ஓகே. உனக்கு எப்போது வேண்டுமானாலும் இங்கே வந்து இருக்கலாம்” என்று கூறிய நான் அவளை சமாதானப்படுத்தும் விதமாக, “உன்னைப்  பாராட்டாமல் இருக்க முடியவில்லை மெரால்டா. எந்த பிரச்னை என்றாலும் சிரித்தபடியே கூறுகிறாய்.   நீயே சமாளித்துக் கொள்கிறாய்” என்றேன்.

“அதற்குத்தான் நானும் பாடுபடுகிறேன்….! இப்படி உன் வீட்டுக்கு வந்து உன்னைத் தொந்தரவு செய்வது எனக்கு சங்கோஜமாக இருக்கு” என்றாள்.

“ஹேய்…! ஃபீல் ஃப்ரீ” என்று அவள் தோளைத் தட்டினேன்.

“இந்த தேசத்தில் குழந்தைகளின் வளர்ப்பில் தந்தை சமமாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள் அல்லவா?” என்று கேட்டேன்.

“உண்மைதான்… ஆனால், திருமணம் செய்துகொண்டு டைவர்ஸ் செய்தால்  இங்குள்ள சட்டப்படி அவையெல்லாம் நடக்கும்” என்றவள் மீண்டும், “ஆனால் அதுபோன்ற பாதுகாப்புக்காக திருமணம் புரிந்து கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. மேலும் அவ்வாறு பிரிந்து போகும் போது கோர்ட், கேஸ் போன்ற தலைவலிகளும் உடன் வரும். இப்போது நான் பெற்ற பிள்ளைகள் எனக்கு முழுமையாக சொந்தம். இவர்களின் தந்தைகள் வேண்டுமென்றால் வந்து பார்த்துச் செல்வார்கள். இல்லாவிட்டால் இல்லை. எனக்கு அவர்கள் மீது எப்படிப்பட்ட எதிர்பார்ப்பும் இல்லை. இவர்கள் இருவரும் என் குழந்தைகள்” என்று கடைசி வரியைச் சற்று அழுத்திச சொன்னாள் மெரால்டா.

“நீ அவ்வாறு நினைத்து அவர்களின் பொறுப்பைக் குறைக்கிறாய் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றேன்.

“பொறுப்பானவர்கள் என்றால் விட்டுப் பிரிய மாட்டார்கள் அல்லவா? என்னிடமிருந்து பிரிவது என்றால் பிள்ளைகளிடமிருந்தும் பிரிவது என்று  அவர்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டவள், “ப்ரியா! கொஞ்சம் நல்ல வேலை கிடைத்து விட்டால் குழந்தைகளுக்கு ஒரு நல்ல பேபி சிட்டர் ஏற்பாடு செய்து விடுவேன். உன் முகத்தில் என் அம்மாவின் முகத்தில் தோன்றும் அதே கவலை தெரிகிறது. இது அமெரிக்கா. இங்கே என்னைப் போன்ற இளம் பெண்கள் பாதிக்கு மேல் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட பிரச்னைகள் இங்கு சர்வ சகஜம். கொஞ்சம் பர்சனல் வருத்தம் இருக்கும்தான். ஆனால் ’சமுதாயம்’ என்று பார்க்கும்போது இது ஒரு பிரச்னையே அல்ல. அதனால் எனக்கோ பிள்ளைகளுக்கோ பெரிய ப்ரஷர் எதுவும் இல்லை” என்று சிரித்தாள் மீண்டும்.

அவள் முகத்தில் தெரிந்த தன்னம்பிக்கை எனக்கு மகிழ்ச்சியளித்தது. “குட் லக்! உனக்கு என்ன தேவை என்றாலும் எனக்கு கால் பண்ணு!” என்றேன்.

நிதி விளையாடியபடியே தூங்கி விட்டாள். கிறிஸ்டோபர் தன் தாயின் கையைப் பிடித்துக் கொண்டு தூக்கக் கலக்கத்தோடு படி இறங்கினான். மெரால்டாவின் தோளில் சாய்ந்திருந்த சின்னப் பெண் உறக்கத்தில் ஹாய்யாக சிரித்தாள்.

[அமெரிக்காவைப் பற்றி கேள்விப்படுவதற்கும் நேராக அங்கு வாழ்வதற்கும் இடையில் இருக்கும் கோட்டினை தெளிவாகச் சுட்டும் முயற்சியே இந்தக் கதைகள் என்று கதாசிரியை முனைவர். கே. கீதா தெரிவிக்கிறார்]

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

சிற்பங்களின் துகள்கள்

2
   தயவு தாட்சண்யம் இல்லாமல் சுளீரென்று சுட்டெரித்துக் கொண்டிருந்தான் சூரியன். தேனீயின் சுறுசுறுப்புடன் துள்ளித் திரிந்த மாணவர்களுக்கு அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அந்த அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் ஆரவாரங்களால் நிறைந்திருந்தது. திறந்திருந்த ஜன்னலின்...

காவல் தெய்வம் !

0
பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்   பிள்ளையார்குளம் கிராமத்தில் மிகப்பெரிய விநாயகர் கோயில். ‘அதிவீர விநாயகர்’ என்ற பெயரில் ஆறடி உயரத்தில் வீற்றியிருக்கிறார். கோயிலின் பின்புறத்தில் நீண்டு வளைந்து செல்லும்  தார்ச்சாலை.  அதையடுத்து பெரியகுளம் கண்மாய் இருந்தது. ...

மழை ராணி

0
  இடியும் மின்னலுமாய் பொழிந்து கொண்டிருந்தது பெருமழை. வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து பெய்யும் மழையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி. ரஞ்சனிக்கு அவளுடைய அப்பா சூட்டி இருக்கும் செல்லப் பெயர் மழை ராணி. அவள் பிறந்து பத்துப் பதினைந்து நாட்களுக்குள்...

சித்திரைப் பூக்கள்

2
  ராமன்                                            எட்டிப் பார்க்கும் லேசான...

பாதாளக் கரண்டி

  30 வருடத்துக்குப் பிறகு, சொந்த ஊர் செல்கிறேன். நான் வசித்த வீடு. எங்கள் முதலாளி முதலியார் வீடு  பார்க்க தயாரானேன். எங்கள் வீடு நாங்கள் விற்றவர் கையிலிருந்து இன்னொரு கை மாறியிருந்தது. என்னை...