
? 'இந்தியா இந்துக்களின் நாடு; இந்துத்வவாதிகளின் நாடு அல்ல' என ராகுல் காந்தி கூறியுள்ளாரே?
– ஆ . மாடக்கண்ணு, பாப்பான்குளம்.
! தவறு. தேர்தல் காலபிதற்றல். இந்தியா இந்துக்களின் நாடும் அல்ல… இந்துத்வவாதிகளின் நாடும் அல்ல… இது இந்தியர்களின் நாடு. பெரும்பான்மை மதத்தினர் பிற மதத்தினருடன் நல்லிணக்கத்துடன் வாழும் நாடு.
? குடியரசு தின விழாவையும் பிரதமர் மோடி ஆகச்சிறந்த முறையில் கையாள்கிறார்?
– நெல்லை குரலோன் பொட்டல்புதூர்
! குடியரசு தினம் மட்டுமில்லை; அவர் கலந்து கொள்ளும் எந்த விழாவையும் ஒரு தனித்துவத்துடன் கையாளுவதில் வல்லவர். அவரது அனுபவம், பேச்சுத்திறன், நினைவாற்றல் கைகொடுக்கிறது.
? பிரதமருடைய டிவிட்டர் கணக்கே ஹேக் ஆனதான செயல்பாடு பற்றி?
– ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி
! நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. டிவிட்டர் நிறுவனம் அதை மறுத்திருக்கிறது. 7 கோடிபேருக்கு மேல் பின் தொடரும் இந்தக் கணக்கு மிகப்பலமான பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டது. கிரிப்டோ கரன்சி குறித்து வந்த ஒரு தகவலை நீக்கியிருக்கிறார்கள். ஹேக் பண்ணப்பட்ட கணக்கில் ஒரே ஒரு தகவல் மட்டும் தவறாக வர வாய்ப்பில்லை.
? 'கல்கி' புத்தக வடிவில் வருவதாக கனவு கண்டேனே, பலிக்குமா?
– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.
! எல்லா கனவுகளும் எல்லா நேரங்களிலும் பலிப்பதில்லை நண்பரே!
? பாரதியாரை ஒட்டு மொத்த தமிழகமும் கொண்டாடுவதில் தராசாருக்கு திருப்தி தானே?
– ஜோஷ், அயன்புரம்
! இந்த நூற்றான்டு விழா தமிழகத்தையும் தாண்டி பல இடங்களில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது. காலத்தை வென்ற அந்த கவிஞனின் புகழ் இந்தியா முழுவது மட்டுமில்லை, உலகளவில் கொண்டாடப்படவேண்டும். கண்ணதாசன் சொன்னது போல், "அவன் வங்களாத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு பெற்றிருப்பான்."
? காசி விஸ்வநாதர் கோயிலை பெரிய வளாகமாக்கியிருக்கிறார்களே?
– சம்பத்குமாரி, சென்னை.
! கங்கையில் நீராடியபின் இந்தக் கோயிலுக்கு வர பல குறுகிய அழுக்கான சந்துகளின் வழியே வர வேண்டும் என்ற நிலை மாறி, சுத்தமான தனிப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மிகப் பழைமையான கோயில்களில் ஒன்றான பாரம்பரியமிக்க இந்தக் கோயில் இன்று சீரமைக்கப்பட்டு சிறப்பான வளாகமாக வடிவமைக்கபட்டிருப்பதில்ஒவ்வொரு இந்தியனும் பெருமைகொள்ள வேண்டும்.
? ஏழு பேர் விடுதலை பிரச்னை எப்போதுதான் முடியும்?
– ஜாகீர் உசேன், திருச்சி
! அண்மையில் உச்ச நீதிமன்றமும் இதே கேள்வியைத்தான் கேட்டிருக்கிறது ஜாகீர். பந்து மீண்டும் மாநில கவர்னருக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அது கோலாக மாறுமா? இல்ல மறுபடியும் எதிர்முனைக்கு உதைக்கப்படுமா? என்பதைக் காண உங்களைப் போல நானும் காத்திருக்கிறேன்.
? மாரிதாஸ் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிறாரே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை?
– கண்ணகி, திண்டுக்கல்
! அவர் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வழக்குகளையும் சேர்த்துச் சொல்லுகிறாரா? என்பதை விளக்கட்டும். மேலும் மாரிதாஸ் எழுதியது அவலமான ஒரு பதிவு என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ராணுவத் தலைமைத் தளபதி மரணத்துக்குப் பின் சமூக ஊடகங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி பல்வேறு பதிவுகள் வந்து கொண்டுதான் இருந்தன. ஆனால், பல லட்சம் பேர் தொடரும் அவரின் பதிவில் இத்தகைய சந்தேகங்களை எழுப்பியிருப்பதை விட, அதற்கு தமிழக பா.ஜ.க. ஆதரவு தெரிவித்திருப்பது தான் மிகப்பெரிய அவலம். தமிழகத்தில் பா.ஜ.க. வளராமல் இருப்பதின் காரணங்களில் இம்மாதிரி செயல்களும் அடக்கம்.
டாக்டர் படம் எப்படி?
– மஹாதேவன், மதுரை
! எத்தனை சீரியஸான கதையையும் அவல நகைச்சுவை எனும் டெம்ப்ளேட்டுக்குள் பொருத்தினால், அதில் செய்தியும் சொல்லமுடியும் என முயற்சித்துள்ளார் இயக்குநர். ஆனால் லாஜிக் பற்றிய அக்கறையுடன் திரைக்கதையின் ட்ரீட்மென்ட்டை மாற்றியிருந்தால் இன்னும் ரசனைக்குரியவராக மாறியிருப்பார் இந்த'டாக்டர்'. ப்ரியங்கா அருள் மோகன் தனக்கு அமைந்த களத்தில் கலகலப்பும், காதலுமாக கவர்ந்துவிடுகிறார். அவர் மட்டும்தான் படத்தின் பிளஸ்.
? தமிழக சட்ட மன்றம் மீண்டும் கோட்டைக்கே வந்துவிட்டதே?
மீனாட்சி சுந்தரம், திருமங்கலம்
! நூற்றாண்டு விழாக் கொண்டாடிய தமிழக சட்ட மன்றம். மீண்டும் இந்திய அரசியலில் முக்கிய அடையாளாமாகிவிட்ட செயின்ட் ஜாரஜ் கோட்டைக்கு திரும்பியிருக்கிறது. சட்ட மன்றம் அமைச்சர்களின் அதிகாரிகளின் அலுவலகங்களுடன் ஒரே வளாகத்தில் இணைந்திருப்பது பல விஷயங்களுக்கு உதவும்.
? ரஜினி பிறந்தநாளன்று மாணவர்களுக்கு கல்வி உதவி அறிவிக்கப்பட்டிருக்கிறதே?
சந்திரமோகன், தூத்துக்குடி
! "100 ஏழை மாணவர்களுக்கு தமிழக அரசு, மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வை எழுத இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படும்" என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அறிவித்திருக்கிறார். மகிழ்ச்சியான செய்தி தான். இதுபோல் ஆண்டுதோறும் செய்து தன் கட்டவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்யும் இளைஞர்களுக்கு நல்வழி காட்டினால் நல்லது.
அ.தி.மு.க. கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்காததால்தான் தேர்தல்களில் பா.ம.க. அதிக இடத்தை இழந்தது என்கிறாரே ராம்தாஸ்?
கெளரி சங்கர், விழுப்புரம்
! அதைக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பின்னர் சொல்வது என்ன தர்மம் என்று புரியவில்லை.