0,00 INR

No products in the cart.

ஃபரீதிக்கா – வாழ்வின் நிறைவு

 

மம்முட்டி

தமிழில் கே.வி.ஷைலஜா

டப்பிடிப்புத் தளங்களில் இப்போதும் நான் ஃபரீதிக்காவைப்  பார்க்கிறேன். ஒரு மாதம் நீளும் படப்பிடிப்பில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டும் வந்து சிறியதொரு காட்சியில் நடித்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் போய்விடுவார். என்னைப் பார்க்கும்போது கண்களில் சிரிப்புடன்,

“எனக்கு இந்தப் படத்தில் ஒரு சீன் இருக்கு” என்று சொல்வார்.

பெரும்பாலும் ஃபரீதிக்கா என்னிடம் பேசும் டயலாக் இது மட்டும்தான். நான் முதல்முதலாக ஃபரீதிக்காவைப் பார்த்தபோது எனக்குப் பதினேழு வயதிருக்கும். மிகுந்த பயத்தோடும் பிரியத் தோடும்தான் நான் அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.

என்னோடு படித்த சம்சுவின் மைத்துனர்தான் எஸ்.ஏ.ஃபரீத். சம்சு இன்று இந்த உலகத்திலேயே இல்லை. என்னுடைய சினிமா மோகத்தை நன்றாய்த் தெரிந்து வைத்திருந்த சம்சு, ஃபரீதிக்காவின் மூலமாகச் சினிமாவுக்குப் போக முடியுமென்று எப்போதும் சொல்வான். பற்றிக்கொள்ள ஒரு பசுங்கொடித் தேடி அலைந்து கொண்டிருந்த என் முன்னால் தாங்கிக் கொள்ளவே அடிதிம்மை கிடைத்ததாய் உணர்ந்தேன். அன்றே ஃபரீதிக்கா நடிகராக இருந்தார். பல புரொடெக்‌ஷன் மேனேஜர்களையும் அவருக்குத் தெரிந்திருந்தது.

‘சுபைதா’ என்ற படத்தில் அம்பிகாவுக்குப் பிறந்த குழந்தையை வளர்க்கும் ஃபிலோமினாவின் கணவராய் இவர் நடித்திருந்தார். அது சிறிய வேடமானாலும் மிகவும் கௌவரமாகப் பேசப்பட்ட வேடம். எனக்கு எப்படியாவது ஒரு சான்ஸ் வாங்கித் தரவேண்டும் என்று அவரிடம்தான் சம்சு சொல்லியிருந்தான். நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். ஃபரீதிக்கா அன்று மெர்சண்ட் நேவியிலிருந்தார். ஆறுமாதம் கடலிலும் மீதி நாட்களில் ஊருக்கு வரும்பொழுது நடிப்புமாக வாழ்க்கையைச் சந்தோஷமாக வைத்திருந்தார்.  ஃபரீதிக்கா சினிமாவைத் தொழிலாய்ப் பார்க்கவில்லை. உயிராய் நேசித்திருந்தார்.

ஒரு நாள் சம்சுவிற்கு ஃபரீதிக்காவிடமிருந்து கடிதம் வந்தது. இயக்குனர் விஜயனும், எடிட்டர் நாராயணனும் சேர்ந்து “விஜயநாராயணன்” என்ற பெயரில் இயக்கப்போகும் ‘காலச்சக்கரம்’ என்ற படத்திற்கு லொகேஷன் பார்க்க ‘கொடுங்கல்லூர்’ போகிறோம். உன் நண்பனைக் கூட்டிக்கொண்டு அங்கே வா’ என்று கடிதத்தில் எழுதியிருந்தது. என்னோடு சேர்த்து இன்னும் ஒரு ஆளும் நடிக்க வேண்டுமென்றும் எழுதியிருந்தார். சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் அறையில் குட்டிக்கரணம் போட்டுக் கொண்டாடினோம். நடிக்க வேண்டுமென்ற கனவில் என்னுடனே சுற்றிக்கொண்டிருக்கும் பஷீரையும் கூட்டிக்கொண்டு கொடுங்கல்லூருக்குப் போனோம்.

படப்பிடிப்பு, டாக்டர். சகீரின் வீட்டில் நடந்துகொண்டிருந்தது. அங்கே போய் ஃபரீதிக்காவைப் பார்த்தோம். அவர் எங்களை அன்போடு வரவேற்று புரொடெக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொன்னார்.

“நான் சொன்ன பசங்க வந்திருக்காங்க”

இரண்டு பேரையும் மேனேஜர் பார்த்தபடி “நாளைக்கு காலைல ஏழு மணிக்கு இங்க வாங்க” என்றார். அன்றிரவு தூங்கவில்லை. ஃபரீதிக்காவின் மேல் அளவிடமுடியாத அன்பும், மரியாதையும் ஏற்பட்டது.

காலை ஆறரை மணிக்கெல்லாம் நாங்கள் டாக்டர் சகீரின் வீட்டிலிருந்தோம். படப்பிடிப்பு, பக்கத்தில் கடற்கரையில்தான் நடந்து கொண்டிருந்தது. அங்கே போகத் தயாராக இருந்த காரின் பின்சீட்டில் உட்காரும்படி எங்களுக்குச்  சொல்லப்பட்டது. கூடவே ஒரு மேக்கப்மேனும் ஏறிக்கொண்டார். சந்தோஷச்சுடர்கள் என் முகத்திலும் பஷீரின் முகத்திலும் சூரியனாய்ப் பிரகாசித்தது. ஜெயபாரதியும், அடூர்பாசியும் இதோ எங்கள் காரின் முன்னால் போகிறார்கள். இதைவிட என்ன பாக்கியம் வேண்டும்?

ஆனால் அன்றைய என் பாக்கியம்……

அன்று மாலையே என் கதாபாத்திரத்தை முடித்துக்கொண்டு நான் திரும்பினேன். வாழ்க்கையில் முதல்முதலாக கேமராவின் முன்னால் நிற்க சிபாரிசு செய்த ஃபரீதிக்காவைப் பார்த்து ‘போய் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன். சினிமாவுக்காக ஒப்பனையேற்க காரணமான அவரை வணங்கியபடி மனதெல்லாம் பூப்பூக்கத் திரும்பி வந்தேன். காலச்சக்கரத்தின் சுழற்சியில் நடிப்பு என் தொழிலானது. கடவுள் கிருபையில் பல நல்ல கதாபாத்திரங்களை ஏற்று பிரச்னை இல்லாமல் வேலை பார்ப்பவன் என்று பேரெடுக்கவும் என்னால் முடிந்தது. இன்றும் ஃபரீதிக்கா ஒரு அற்புத ஆன்மாவைப் போல லொக்கேஷனுக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறார்.

எனக்கு முதல் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் என்ற முறையில் ஃபரீதிக்கா என்னிடம் எதையும் கேட்க முடியும். நான் சிபாரிசு செய்தால் கொஞ்சம் பெரிய பாத்திரத்தை அவருக்குக் கொடுக்கவும் இயக்குனர்கள் தயாராய் இருக்கிறார்கள். ஆனால் ஃபரீதிக்கா ஒருபோதும் அப்படியான கேள்வியோடு என்முன் வந்ததில்லை. அவருடைய சினிமா மோகம் என்பது எப்போதாவது ஊருக்கு வரும் நாட்களில் ஒன்றிரண்டு காட்சிகளில் சிறிய வேடங்களில் நடிப்பதோடு நிறைவடைவதாக இருந்தது. ஒரு டயலாக், ஒரு குளோசப், ஒன்றிரண்டு சீன் அவருடைய தேவை இவ்வளவுதான். மிகுந்த திருப்தியோடு அவருடைய பேராவல் முழுமையடைகிறது.

பழைய கணக்குகளுக்கு விடை கேட்காத மனசு சிறியதல்ல. சின்னச் சின்னக் கனவுகளை மட்டுமே வைத்திருந்த ஃபரீதிக்காவிற்கு அதற்குள் அடங்க மறுக்கும் என் மனதை, அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அது அவருக்கு அவசியமுமில்லை. இப்போது நான் நடிக்கும், “க்ரோனிக் பாச்சுலர்” என்ற படத்திலும் அவருக்கு ஒரு காட்சியிருந்தது. அது என் மூலமாகக் கிடைத்ததல்ல. அவருடைய அறிமுகத்தாலும், பழக்கத்தாலும்தான் கிடைத்தது. நான் படப்பிடிப்புத் தளத்திற்கு வருவதற்கு முன்பே அவருடைய காட்சியை முடித்துக்கொண்டு  புறப்பட்டுப் போய்விட்டார்.

சிலர் செய்யும் சிறிய உதவி நம் வாழ்க்கையைப் புரட்டிப்போடும். உதவினவரே நினைத்துப் பார்த்திராத உயரத்தில் நம்மை அந்த உதவி தூக்கி வைத்து அழகு பார்க்கும்.

ஃபரீதிக்கா என்னை நடிகனாக்கினார் என்று சொல்ல முடியாவிட்டாலும் அவர் செய்த உதவிக்கு என்னால் எதையும் திருப்பிச் செலுத்த முடிந்ததில்லை. திருப்பிச் செலுத்த வாய்ப்பு வந்தபோது அவர் எதையும் கேட்கவில்லை. வாழ்வில் நானடைந்த பெரிய உதவிக்கு பிரதியுபகாரம் செய்ய வேண்டிய வாய்ப்பு வழங்கப்படவேயில்லை. எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி எத்தனை பேருக்கு என்னால் உதவ முடிந்திருக்கிறது? வெளியேயிருந்து பார்த்தால் மிகச் சாதாரணமாய்த் தோன்றும் விஷயங்களில்கூட உள்ளின் உள்ளே ஆழ்ந்து பார்க்கும்போது  ‘இதைச் செய்து கொடுத்தால்’ என்ன கிடைக்கும் என்பதின் விஷநெடி அடிப்பதில்லையா?

தம் கனவுகளின் எல்லையைத் தீர்மானிப்பதும் அதற்குள்ளே நிறைவோடு வாழ்தல் என்பதும் சாதாரணக் காரியமல்ல. உதவ ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பில் எவ்வளவு உயரத்திற்குப் போக முடியுமோ அவ்வளவு உயரம் போய்விடுவதென்பது தவறுதானே? நம்முடைய அவசியத்திற்காக யாரையும் துன்புறுத்தவும் நாம் யோசிப்பதில்லை. ‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு’ என்று பெரியவர்கள் சொல்வது இதைத்தானே.

பெரியதொரு தங்கச்சுரங்கத்திலிருந்து தேவைக்கு மட்டும் வெட்டி எடுத்துக்கொள்ளும் மனது தங்கத்தைவிட வசீகரமானது. முப்பத்தாண்டுகளுக்குப் பிறகும் வழக்கம்போல இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பிற்கு வந்து முழுத்திருப்தியோடு போகும்
எஸ்.ஏ. ஃபரீதிக்கும் அந்த வசீகரமுண்டு. என் முன்னால் விரியும் தங்கச்சுரங்கத்தைப் பார்க்கும்போதெல்லாம் நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

“எனக்குன்டானதை மட்டும் இதிலிருந்து எடுத்துக் கொள்ளும் மனதிடத்தை ஃபரீதிக்காவைப் போல எனக்கும் கொடு” *இக்கா – அண்ணன். கேரள முஸ்லீம்கள் அண்ணனை இக்கா என்று அழைப்பார்கள். ஃபரீதிக்கா – ஃபரீத் அண்ணன்.

(தொடரும்)

1 COMMENT

  1. கட்டுரையின் கடைசியில் ‘இக்கா’ என்ற சொல்லுக்கான அர்த்தத்தை கொடுத்து விளக்கிய ஷைலஜாவுக்கு பாராட்டுக்கள். மனநிறைவு மனிதருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஃபரீதிக்கா மூலம் உணர்த்திய மம்முட்டி சாருக்கு வாழ்த்துக்கள்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

குருடர்களின் யானை

0
ஒரு நிருபரின் டைரி - 21 - எஸ். சந்திரமெளலி லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம், “லுக் அவுட்” என்ற லயோலா கல்லூரியின் மாணவர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். நாங்கள் அதன் தமிழ்ப்...

தேவ மனோகரி – 21

1
தொடர்கதை                                               ...

இது கடவுளின் ருசியுள்ள நாடு

0
ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 21 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா   கொச்சியிலிருந்து அதிரப்பள்ளிக்குப் போகும் வழியில்தான் அந்த டீக்கடை இருக்கிறது. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகுமாரன் தம்பியின் ‘விளிச்சு விளி கேட்டு’ (அழைத்தாய் கேட்டேன்) என்ற...