இந்த அரசுக்கு தங்க முட்டைகள் இடும்  வாத்தை வளர்க்கத் தெரியவில்லை

இந்த அரசுக்கு தங்க முட்டைகள் இடும்  வாத்தை வளர்க்கத் தெரியவில்லை
Published on

? 'பச்சைப்  பொய் பழனிசாமி' என்று முதல்வர் ஸ்டாலினும், 'ஸ்டாலினுக்கு பொய் சொல்வதில் நோபல்  பரிசு'க்கு பரிந்துரைக்கும் எடப்பாடியாரும்  –  பேசுவது எதைக்காட்டுகிறது ?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான் குளம்.

! 'இருவரிடமும் அரசியல் நாகரீகம் குறைந்து கொண்டே வருகிறது' என்ற உண்மையை.

? ஆக்கிரமிப்பு, கொள்ளை என்ன வித்தியாசம்?
– நெல்லை குரலோன்

! முன்னது கண்களுக்குத் தெரிந்தே நடப்பது; பின்னது நடந்தபின் மட்டுமே தெரிவது.

? நாடாளுமன்றத்தில் பிற கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தால் அதைக் கண்டிப்பு செய்யும் பிரதமர், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தால் அதை கண்டிப்பு செய்வது இல்லையே?
– சி. கார்த்திகேயன், சாத்தூர்

! மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் ***** பழமொழி உங்களுக்கு தெரியுமில்லையா?

? மத்திய அரசுக்கு எதிரான கட்சி மாநிலத்திலும், மாநில அரசுக்கு எதிரான கட்சி உள்ளாட்சியிலும் அமைந்தால் மக்கள் நிலைமை எப்படியிருக்கும்?
– மதுரை குழந்தைவேலு,   சென்னை

! இப்போது பல மாநிலங்களில் ஒன்றியத்தில் ஆட்சியில் இல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றனவே. எதிர்ப்பு குரல்களும் போராட்டங்களும் ஓங்கி ஒலிக்கும்.  இதை தவிர்க்கத்தான்   மோடி 'ஒரே நாடு ஒரே  அரசு' என்ற  சித்தாந்தத்தை முன் வைக்கிறார்.

? சட்டமன்றத்தில் இரண்டாவதாக இயற்றிய நீட் விலக்கு மசோதா ஆளுநர் பரிந்துரை செய்வாரா?
– சிவகாமி பாண்டியன், சிவகாசி

! என்ன மாதிரியான பரிந்துரை என்று – ஏற்கலாம் என்றா? வேண்டாம் என்றா? என்பதை நீங்கள் கேட்கவில்லையே!

? அண்மையில்  இந்தியா மத சார்பற்ற நாடு தானா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறதே ?
– செந்தூர பாண்டி, ஶ்ரீவில்லிபுத்தூர்.

! பலருக்கு  சில ஆண்டுகளுக்கு முன்னரே  எழுந்த சந்தேகம் இப்போதுதான் நீதிமன்றத்துக்கு எழுந்திருக்கிறது.

? தமிழ் நாட்டில் வடகிழக்கு மாநில மக்கள் வந்து வேலை செய்வது போல அங்கு தமிழர்கள் வேலைக்குப் போயிருக்கிறார்களா?
– பாலா, மதுரை

! பல ஆண்டுகளுக்கு முன்னரே சென்றிருக்கிறார்கள்.  வடகிழக்கு மாநிலங்கள்  பகுதியில் இருப்பது 10 லட்சம் தமிழர்கள் என்று ஒரு சர்வே சொல்லுகிறது.  நாகலாந்து அருகே நாட்டின் எல்லையில்  ஒரு தமிழ் கிராமமே இருக்கிறது.

? இந்தியாவில் கிரிப்டோ கரன்சி அதிகாரபூர்வமானது என்று அறிவிக்கப்படாத நிலையில்,  'அதில் கிடைக்கும் வருமானத்துக்கு வரி' என்று நிதி அமைச்சார் அறிவித்திருக்கிறாரே?
– எஸ் மோகன், கோவில்பட்டி

! மெய் நிகர் உலகில் நிர்வகிக்கப்படும் டிஜிட்டல் சொத்துக்களை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு 1% வரி பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எத்தனை இந்தியர்கள் கிரிப்டோகரன்சியை வைத்திருக்கிறார்கள் அல்லது எத்தனை பேர் அதில் வர்த்தகம் செய்கிறார்கள் என்பதற்கான  அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் எதுவும் இல்லை,

ஆனால், கோடிக்கணக்கான மக்கள் டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்வதாகவும், தொற்றுநோய் காலகட்டத்தில் இது அதிகரித்துள்ளதாகவும் பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பல தொழில் நிறுவனங்கள் சர்வதேச பரிவர்த்தனைகள் செய்வதற்கு கிரிப்டோகரன்சிகளை பயன்படுத்துகின்றன. அவைகளை அடையாளம் காண ஒரு யுக்தியாக இதை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் செயல்படுத்துவது மிக மிகக் கடினம்.

? ஒரே நாடு கோஷத்தை ஒ.பி.எஸ்.ஸும்   எழுப்ப ஆரம்பித்திருக்கிறாரே?
– ரஞ்சினிப் பிரியன், கள்ளிப்பாளையம்

! அவர் மட்டுமில்லை. 'ஒரே நாடு ஒரே தேர்தல் 2024ல் வரும் அதில் தி.மு.க. ஆட்சியை இழக்கும்' என்று இபிஎஸ்ஸும் சொல்லியிருப்பதை கவனித்தீர்களா? மாநில பா.ஜ.க.  போட்டி கட்சியாகிவிட்டாலும் நாங்கள் உங்களோடுதான் என்று அந்த கட்சியின் தலைமைக்கு சிக்னல் கொடுக்கிறார்கள்.

? தச்சின்னங்களை  அந்த மதத்தினர் தவிர மற்றவர்கள் உடலில் அணிந்து கொள்ளலாமா?
– கே. ரமேஷ், ஈரோடு

! உடலில் மதச்சின்னங்களை இட்டுக்கொள்வது என்பது கடவுள்  வழிபாட்டில் ஓர் அங்கம். அதை அணிந்துகொள்ளக் கூட அந்தந்த மதப்பிரிவுகளில் நெறிமுறைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.  ஆனால் இன்றைய பிரதமர் அந்த மதப்பிரிவினர்களுடன் தானும் இணைந்திருப்பதாக  காட்ட, இடங்களுக்கு  ஏற்ப ஆடைகள் அணிவது போல  அந்தந்த சின்னங்களையும்  உடலில்  அணிந்து கொள்கிறார்.  இந்த வரிசையில் இப்போது தமிழக ஆளுநரும் இணைந்திருக்கிறார்.  தங்கள் மதப்  பாரம்பரிய நெறிமுறைகளை போற்றிப் பாதுகாக்க வேண்டிய மடாதிபதிகள் மற்றும் மதத்தலைவர்கள் இதை  அனுமதிப்பது மட்டுமில்லாமல் அந்த தலைவர்களின் அருகிலிருந்து தங்களைக்  காட்சிப்படுத்திக் கொள்வதுதான் இன்றைய அரசியல் டிரெண்ட்.

? நகராட்சி தேர்தல் களத்தில் வாக்குகள் சேகரிக்க வேட்பாளர்கள் பல பணிகளைச் செய்கிறார்களே?
– எஸ். ராமதாஸ், சேலம்

! சிரிப்பே வராத காமெடிக் காட்சிகளாகத்தான் இருக்கிறது. தேர்தலில் ஜெயித்த பிறகு அரசியல்வாதிகள் நாடகம் போடுவார்கள்  என்றால் போட்டியிடும் போதே  இவர்கள்  தெருவெல்லாம் நாடகம் போடுகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள்வாக்கு சேகரிக்கப்போகும் போது டீ கடையைப் பார்த்தால் அங்கே டீ போடுகிறார்கள். இஸ்திரி கடையைப் பார்த்தால் அங்கே  இஸ்திரி போடுகிறார்கள். ஒரு பெண் வேட்பாளர் தெருவிலிருந்து மது பாட்டில்களை அப்புறப்படுத்தியிருக்கிறார். நாட்டில் எத்தனையோ விதமான வேடிக்கைகள். அதில் இம்மாதிரி  தேர்தல்கால   நாடகங்களும் ஒன்று   வேடிக்கை பார்ப்பதுதான் விவேகம்.  இவர்களிடம் பொறுப்பான சமூகப்பணிகளை  எதிர்பார்ப்பது அறிவீனம்.

? கர்நாடகத்தில் மட்டும் ஹிஜாப் அணிவது பிரச்னையாயிருக்கிறதே?
– ரமேஷ் விஸ்வ நாதன்,  மேலூர்

!பிரச்னையாக இல்லை – பிரச்னையாக ஆக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கூட வளாகத்துக்குள் 'ஹிஜாப்' அணிவது, அணியாமல் இருப்பது இரண்டுமே அப்படி ஒன்றும் முக்கிய விஷயம் இல்லை, இரண்டு தரப்பிலும் அரைகுறை அரசியல்வாதிகள்  அடித்துக்கொள்ளும் ஒரு பைத்தியக்காரத்தனமான பிரச்னை இது. இந்த முட்டாள்களினால் வகுப்புகளை, படிப்பை இழக்கும், மத ரீதியாக மனதளவில் இப்பொழுதே பாதிக்கப்படும்  பெண் குழந்தைகளின் நிலையை பற்றி எவருக்கும் அக்கறை இல்லை. இது போன்ற இத்துப்போன மதத் தத்துவஙகளை  வைத்துப் பிரச்னை செய்வதை ஆரம்பித்து வைத்ததும், அதைத் தொடர்ந்து அரசியல் ஆக்குவதும்  சில அரசியல் கட்சிகளின் அஜண்டா. அல்லா  அவர்களைக் காப்பாற்றட்டும்.

? எல்.ஐ.சி.யின் பங்குகளை பொது மக்களுக்கு விற்கப்போகிறார்களே?
– சம்பத் குமாரி, பொன்மலை

! பொதுமக்கள் ஆதரவுடன் வளர்ந்த எல்.ஐ.சி. ஆண்டுதோறும் ஈட்டும் உபரிநிதியில் தொண்ணூற்றைந்து சதவீதத்தை பாலிசி எடுத்திருக்கும் பொதுமக்கள்தான் பெறுகிறார்கள்;இப்போது அரசு வசமிருக்கும் பங்குகளில் முதலில்  ஐந்து அல்லது பத்து சதவீதத்தைத்தான் விற்கப்போகிறார்கள்.  அதில் மட்டுமே 65 முதல் 70 ஆயிரம் கோடி அரசுக்கு கிடைக்கும், (ஆனால் இந்த எல்.ஐ.சி.யை உருவாக்கி வளர்த்தெடுத்த காங்கிரஸ் அரசு நாட்டின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை என்கிறார் நிதி  அமைச்சர்)  ஒவ்வொரு வருடமும் பத்து சதவீதத்தை விற்பார்கள்; எழுபத்துநான்கு சதவீதம் அந்நிய முதலீட்டை அனுமதித்திருக்கிறார்கள்;கூடிய வரையில் எல்.ஐ.சி. அந்நியநாட்டினரின் நிறுவனம் ஆகிவிடும் ஆபத்திருக்கிறது.

ஐந்தாண்டு திட்டங்கள், ரெயில்வேயின் வளர்ச்சிக்கு  என  ஏறக்குறைய இருபத்தைந்து லட்சம் கோடியை நாட்டின் உள்கட்டமைப்பு உருவாக்கத்துக்கு எல்.ஐ.சி. பங்களிப்பு செய்திருக்கிறது; நலிவடைந்த ஐடிபிஐ வங்கியை நஷ்டத்திலிருந்து மீட்டது;  பல நிறுவனங்களில் முதலீடு செய்து  தொழில்துறையை செழிக்கவைத்திருக்கிறது;  இந்த அரசுக்கு தங்க முட்டைகள் இடும்  வாத்தை வளர்க்கத் தெரியவில்லை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com