“அபூர்வமாய் ஒருவர்”  

“அபூர்வமாய் ஒருவர்”  
Published on

ருமுறை கூட ஏதேனும் சொல்லாமல் அவர் தபால் கொடுத்ததில்லை. போஸ்டல் தபால் அல்ல. அவர் கூரியர் சர்வீஸாயிற்றே…! கொண்டு வரும் புக் பார்சல், கவர்கள், அட்டைப் பெட்டிப் பொருட்கள் என்று எதுவானாலும் ஓரிரு வார்த்தைகளேனும் அவருக்குச் சொல்ல இருக்கும். எந்தச் சொல்லும் சலிப்போடுதான்….அலுத்துக் கொள்ளாமல் என்றும், எதையும் கொடுத்ததேயில்லை.

அது அவர் சுபாவம் என்று உறவினர்கள் பொறுப்பார்கள். அல்லாதவர்கள்? ஆனால் நான் பொறுத்துக் கொண்டேன். சில மனிதர்கள் நமக்குப் பிடித்தமானவர்கள் ஆகி விடுகிறார்கள்தானே?

எங்க ஆபீஸ் கிண்டில இருக்கு. இந்த ஒத்த தபாலுக்காக இம்மாம் தூரம் வர வேண்டிருக்கு. இந்த ஏரியாவுல நீங்க ஒருத்தர்தான் சார். தெனமும் உங்களுக்காகத்தான் அலையுறேன்.

அவர் முகம் பார்த்து இதைக் கேட்டுக்கொண்டே வாங்கிக் கொள்ள வேணும்.  ஒரு சங்கடச் சிரிப்பை உதட்டோரம் தவழவிடணும். அது சற்று அதிகமாகிவிடக் கூடாது. கேலி பண்ணுவதுபோல் புரிந்தால். ஆபத்து. சண்டை மூளுவதற்கான சாத்தியக்கூறுகள் அங்கே அதிகம்.

முழுமையான நட்புணர்வோடு அவரைப் பார்த்து என்றும் சிரித்ததாய் ஞாபகமில்லை. காரணம் சதா வருத்தத்தோடேயே இருக்கும் ஒரு மனிதனிடம் எப்படி மகிழ்ச்சியைக் காண்பிப்பது? ஒரு வேலை செய்து சம்பாதித்துப் பிழைக்கும் அவர் மதிப்பிற்குரியவர். அவரது உணர்ச்சிகளுக்கும் மதிப்பளிப்பதுதானே நியாயம்? மனிதனுக்கு மனிதன் எத்தனையோ மனக் கிலேசங்கள். யார் என்ன சங்கடத்தில் இருக்கிறார்கள் என்று யாருக்குத் தெரியும்?

கையெழுத்து வேணாம் சார். பேரை மட்டும் எழுதுங்க…ஃபோன் நம்பர் போடுங்க….என்பார். ஓரிரு முறை என்னை மறந்து பழக்க தோஷத்தில் கையொப்பமிட்டிருக்கிறேன். அய்யய்யோ…போட்டுட்டனே…! என்று பதறுவேன். சொல்லப்போனால் அவருக்கு நான் பயப்பட ஆரம்பித்திருந்தேன். அடிக்கடி தபால் கொடுக்க வரும் அவரை மதிப்பதுதானே முறை…? மதிப்பில் கொஞ்சம் பயமும் கலந்திருக்கும்தானே?

நான்தான் பேரை மட்டும் எழுதுங்கன்னு சொல்றேன்ல சார்….எதுக்கு கையெழுத்து போடுறீங்க… அதைக் கண்டுபிடிக்க முடியுமா இன்னார்ன்னு?  கீழே ப்ராக்கெட்ல உங்க பெயரை எழுதுங்க….என்று சலித்துக் கொள்வார். இது கூடத் தெரிலையே…! என்பது போலிருக்கும் அது.

இப்பத் தபால் கொடுக்கும்போது சொல்லலியே…போன வாட்டிதானே சொன்னீங்க…என்று கேட்க முடியுமா? – மறந்து போச்சுங்க…என்று  மட்டும் ஒரு முறை சொன்னேன்.

படிச்சவங்க…நீங்கள்லாம் இப்படிச் சொல்லலாமா? என்றார். ஸாரி…ஸாரி…என்று வருந்தினேன். ஏற்றுக்கொண்ட மாதிரியே தெரியவில்லை. அலட்சியப்படுத்தியதுபோல் படியிறங்கிப் போய்விட்டார்.

அதென்னய்யா….தபால் வாங்கினதுக்கு ஒரு ஒப்பம்…அவ்வளவுதானே? எல்லாரும் கையெழுத்துதான் போடுவாங்க….நீ என்னவோ புதுசா பேரை எழுதுன்றே….அதை நீயே எழுதிக்கலாமே…பேர் சொல்லுங்கன்னு கேட்டு….! – கேட்க நினைத்துக் கொள்வேன். வாய் வராது. மனசு கேட்காது. அவர் உருவம் என் வாயைக் கட்டிப் போட்டிருந்தது.

வயதில் பெரியவர். எப்படி ஒருமையில் அழைப்பது? ஆனால் கோபம் வரும்போது மனதில் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் அது தவறு என்று தோன்றி அடக்கிக் கொள்ள முடிகிறதே…! அந்த முதிர்ச்சி போதாதா? மனிதனுக்கு மனிதன் பட்டுப் பட்டென்று முகத்திலடித்தாற்போல் பேசி எதைக் கொண்டு போகப் போகிறோம்?

குறைந்த சம்பளத்திற்கு அலைந்து வேலை பார்ப்பவர்கள். வெயிலிலும், மழையிலும், தூர தூரமாய்ச் செல்பவர்கள். போகட்டும்…என்கிற எண்ணம்தான் மேலிடும். ஏதோ…சொல்கிறார்…சொல்லிவிட்டுப் போகட்டும்… அதில் ஒரு சமாதானம் அவருக்கு….அதைக் கெடுப்பானேன்….!.

எங்கள் பகுதிக்கு அவர் ஒருவர்தான் வருகிறார். அந்தக் குறிப்பிட்ட கூரியர் சர்வீசிலிருந்துதான் எனக்குத் தபால்கள் வருகின்றன. அதனால் அடிக்கடி தபால் தரும் சங்கடம் அவருக்கு நேர்கிறது. அதற்கு நான் என்ன செய்ய? 'அது தன் பணி' என்ற நினைப்பு மட்டும் அவருக்கு இருக்க வேண்டும். குறிப்பிட்ட தபால், குறிப்பிட்ட முகவரி, அதை குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய வேண்டும். 'இதற்கு மேல் அதில் வேறு எதுவும் இல்லை' என்கிற விலகி நின்று பார்க்கும் மனப் பக்குவம் அவருக்கு வாய்க்கணும்.

ஒரு சாதாரணத் தொழிலாளிக்கு இப்படியான தத்துவார்த்தச் சிந்தனைகளுக்கெல்லாம் இடமேது? மாதச் சம்பளத்திற்காக அன்றாடம் உழைத்துக் களைப்பதே பிழைப்பாக, ஜீவனோபாயமாக இருக்கையில் இதையெல்லாம் அவர் நினைத்துக் கொண்டிருக்க முடியுமா? ஒரு எளிய மனிதனின் அலுப்பும், சலிப்பும், சங்கடங்களும், அவஸ்தைகளும், கோபங்களும்தான் இருக்க முடியும். நாமென்ன இப்படி எல்லாவற்றிலும் தேறிய நிலையில்  இருக்கிறோமா? நாமும் சராசரிகள்தானே…! எல்லா மனுஷனும் அப்படித்தானேய்யா…!

அது நியாயம்தான். ஆனாலும் அதை மற்றவர்கள் பொறுத்துப் போக வேண்டும் என்பது என்ன விதி? உன் பொண்டாட்டி, புள்ளைங்க…உன்னைப் பொறுத்துக்கணும்…பட்டுக்கணும்…எனக்கென்னய்யா வந்தது? என்ற கேள்விதானே வரும்.

ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. சக மனிதனின் சங்கடங்கள் ஒரு பொது வெளியில் முன் வைக்கப்படும்போது குறைந்தபட்சம் அது மதிக்கப்படவாவது வேண்டாமா? அது கவனிக்கப் பட வேண்டாமா? நாளின் பெரும் பகுதி நேரத்தை அவன் இந்த மக்களுடன்தானே கழிக்கிறான்? தன் குடும்பத்தோடு சாப்பிட்டு உறங்க மட்டுமான குறைந்த பட்ச நேரத்திற்குத்தானே வீடு  செல்கிறான். பல மணி நேரங்கள் பொது வெளி மனிதர்களோடுதானே கழிகிறது அவனுக்கு. அப்படியிருக்கையில் அவர்கள் முன் அவன் சலித்துக் கொள்ளாமல், கோபம் கொள்ளாமல், நாலு வார்த்தை அலுத்துப் பேசாமல், கூடக் குறையத் தெரிந்தே சில வார்த்தைகளை விடாமல் எப்படி அடக்கிக் கொண்டிருப்பான்? அது இயற்கை….ஒரு சராசரி மனிதனின் அன்றாட வாழ்க்கையில் இது ஒர் அங்கம்…! எளிய மனிதனின் கோபம் விலையற்றதுதான். ஆனாலும் பொருட்படுத்தத்தக்கது.

எத்தனவாட்டி சார் பெல் அடிக்கிறது? ஆள் இருக்கீங்களா…இல்லையா…எதுவும் தெரிய மாட்டேங்குது? கையெழுத்தில்லாம, பார்சலை கதவுக்கடில வச்சிட்டுப் போக முடியுமா? கொடுத்ததுக்கு என்ன ஆதாரம்? அட…எவனாவது தூக்கிட்டுப் போயிட்டான்னா? நாளைக்கு டெலிவரி ஆகலைன்னு புகார் பண்ணுவீங்களே? சட்டுன்னு வந்து கதவைத் திறக்க மாட்டீங்களா?  – ரொம்பவும் அதிகமாகத்தான், நீளமாகத்தான்  பேசுவார். டிரிங்…டிரிங்….டிரிங்ங்ங்ங்….என்று நீளமாய் பெல் அடிப்பார். அதில் அவர் கோபமும் பொறுமையின்மையும் கடூரமாய் வெளிப்படும்.

காட்டானா இந்த ஆளு…! இந்த அடி அடிக்கிறான்? என்றான் என் பையன் ஒரு நாள். அது வெளியிலிருக்கும் அவர் காதில் விழுந்திருக்காது. தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.

அடிக்கடி புக்ஸ் வாங்குறீங்களே சார்….! இவ்வளவும் படிக்கிறீங்களா? இல்ல அடுக்கி வைக்கிறதோட சரியா? என்றார் ஒரு நாள். எப்படிக் கேள்வி பாருங்கள்? இது தேவையா இவருக்கு?

யப்பாடீ…! தூக்கிட்டு ரெண்டு மாடி ஏறி வர முடியல்ல சார்…லிஃப்ட் வேலை செய்யல…போன வாட்டி வந்தப்பவும்…இப்படித்தான் இருந்திச்சு…..உங்க அபார்ட்மென்ட்ல யாருமே பார்க்க மாட்டீங்களா இதை? எனக்கென்னன்னுதான் எல்லாரும் இருப்பீங்களா? பார்சலக் கக்கத்துல இடுக்கிட்டு ரெண்டு மாடி ஏறி இறங்கிப் பாருங்க தெரியும்….! எனக்குத் தெரிய இந்த ஏரியாவுல அடிக்கடி தபால் வர்றது உங்களுக்குத்தான்….ஒரு நா விட்டு ஒரு நாள்…தவறாம வந்திருது…! கொஞ்சம் பொறுத்திருந்து மொத்தமா ஆர்டர் பண்ணி வாங்க வேண்டியதுதான சார்….ஏன் சார் இப்டி உயிரை எடுக்கிறீங்க….!

அதுவரை சொன்னது கூடப் பரவாயில்லை. பொறுத்துக் கொள்ளலாம். போகட்டும் என்று கூட விட்டுவிடலாம். இது நான் என்னைப் பொறுத்தவரை சொல்லிக் கொள்வது. இன்னொருவர் கேட்டால் சும்மா இருப்பாரா சொல்ல முடியாது. ஆனாலும் அந்தக் கடைசி வாக்கியம்? ஏதாச்சும் புரிந்துதான் பேசுகிறாரா?

"ஏன் சார் இப்டி உயிரை எடுக்கிறீங்க…?" – அனுபவம் செறிந்த ஒரு ஆள் பேசும் பேச்சா அது?

சிரிப்பதா, அழுவதா? என்னவென்று நினைப்பது இந்தப் பெரிய மனுஷனை? நான் இவரை அப்பாய்ன்ட் பண்ணி வேலை வாங்குவது போலல்லவா பேசுகிறார்? இவர் உயிரை நான் எடுக்கிறேனாம்…! அப்படியானால் அது தன் வேலை என்றே இவர் நினைக்கவில்லையோ? கூரியர் சர்வீசில் வரும் தபால்களை அன்றாடம் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்று டெலிவரி செய்வதுதான் தன் பணி என்பதை இவர் உணரவில்லையா?

என்றுதான் இவர் சரியாகப் பேசியிருக்கிறார்? என்றுதான் எதுவும் பேசாமல் மௌனியாய் தபால் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்? என்னவெல்லாம் சொல்லக் கூடாதோ அப்படியானவற்றையெல்லாம் தயங்காமல், தாராளமாய்த் தெறிக்க விட்டவராகத்தானே இன்றுவரை விளங்குகிறார்?

வாய் மூடி நின்று தபாலைக் கொடுக்க, கையொப்பம் பெற…இதற்கு மேல் அவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? என்ற புரிதல் ஏன் இவருக்கு இல்லை?

ஒரு வேளை அந்தந்த வீடுகளில் அவரவரின் ஓரளவு வசதி வாய்ப்பான இருப்புகளை நோக்கி, நோக்கி இப்படியான ஒரு அசூயை மனதில்  படிந்து விட்டதோ? அந்த எரிச்சலில்தான் பேசுகிறாரோ?

தீபாவளி வேறே வந்திடுச்சு…ஆனா நீங்க புக்ஸ் வாங்குறது குறையல….! என்றார் ஒரு நாள். நினைத்துப் பாருங்கள்.  இப்படியொரு மனுஷன் இருப்பானா? தீபாவளிக்கும், புஸ்தகத்துக்கும் என்ன சம்பந்தம்? இன்னும் எதனாலெல்லாம்தான்  இவருக்கு நான் சங்கடங்களை ஏற்படுத்துகிறேன்? இவருக்காகவே நான் புத்தகம் வாங்குவதை நிறுத்திவிடணும் போலிருக்கிறதே…! புத்தக அங்காடிகளில், இந்தக் கூரியர் மூலம் அனுப்பாதீர்கள் என்று நான் சொல்ல முடியுமா?

தீபாவளி வருதுன்னா அவனவன் துணி மணி வாங்குவான்…டிரஸ் தைப்பான்…வெளில பர்சேசுக்குன்னு குடும்பத்தோட போவான்னு கண்டிருக்கு…நீங்க என்னடான்னா வீட்டுல கல்லுரல் மாதிரிக்

குந்திக்கிட்டு இப்டி பொஸ்தகங்களா வாங்கிக் குவிச்சிட்டிருக்கீகளே…சுத்த பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு….என்று சொல்லாமல் சொல்கிறாரோ? ஆனாலும் வாய் ஜாஸ்திதான் இந்தாளுக்கு….!

இதைச் சரி செய்வது எப்படி? எதற்காகச் சரி செய்ய வேண்டும்? பதிலுக்கு ரெண்டு இழுப்பு இழுத்து வாயை அடக்கிப்புடுவமா? பொத்திட்டுப் போய்யான்னு…! – நினைத்தேன். அவ்வளவே…! அப்படியெல்லாம் என்னால் செய்ய முடியாது…! அவர் அப்படியென்றால் நான் இப்படி…! மனிதரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை…! யாரை எதற்கென்று குற்றம் சொல்ல…கோபிக்க? வயதானவரை எதற்கு அப்படி நோகச் செய்ய வேண்டும்? அறிந்தும் அறியாமல் தரம் குறைகிறார் அவர். பதிலியாக நானும் கீழ் இறங்க வேணுமா? தந்தை ஸ்தானத்தில் இருக்கும் ஒரு பெரியவரை அப்படி ஏன் புண்படுத்த வேண்டும்?

ஒரு வழி தோன்றிற்று….இதுநாள் வரை நான் அதைச் செய்ததேயில்லை. ஏன் தோன்றவில்லை என்று எனக்கே அதிசயமாய் இருக்கிறது. வாங்கிப் பழக்கப்படாத நான் கொடுத்துப் பழகியவன்தான். கொடுத்து என்றால் "ல" கொடுத்தல்ல. விழாக்காலங்களில் அன்பு செய்தல் எனும் நோக்கில் தாராளமாய்ச் செய்திருப்பவன்தான். போஸ்ட் மேன், கூரியர் சர்வீஸ், சிலிண்டர் போடுபவர், பேப்பர் போடும் பையன் தெரு கூட்டுபவர்கள் என்று. ஆனால் இவரிடம் ஏனோ இதுநாள் வரை அது மனதில் தோன்றவேயில்லை. தன்னை அப்படி முன்னிறுத்தியிருப்பவர் அவர். பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். அல்லது வலியக் கொடுத்து ஏன் வாங்கிக் கட்டிக்கணும் என்றும் தோன்றியிருக்கலாம்.

ஒரு வேளை அவரின் பேச்சும் தன்மையும் மனதுக்குள் பிடிக்காமல் போய் எனக்கும் அடியொட்டி வெறுப்புப் படிந்து விட்டதோ என்னவோ? தனக்குத் தானே உண்டாக்கிக் கொள்வதைத் தவிர, மனிதனுக்கு வேறு பிரச்னைகளே இல்லை. இப்போது சட்டென்று ஞாபகம் வந்தது. ச்சே….! மரமண்டை….!!

அன்று வந்த அவரிடம்….இந்தாங்க பிடிங்க…. – என்றேன்.

ஏன் சார்….? என்னாது….? என்றவாறே தன்னை மறந்து, அல்லது தன்னை மீறிக் கையை நீட்டினார்.

மடித்துத் திணித்து விட்டுக் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு கம்பிக் கதவையும் சாத்திவிட்டு உள்ளே நகர்ந்தேன்.

சார்….சார்…..என்னாதிது….? பணமெல்லாம் குடுத்திட்டிருக்கீங்க….? என்றார். குரல் சட்டென உயர்ந்திருந்தது.. துச்சமென மதித்த பார்வை. நெற்றிக் கண் திறந்த நோக்கு. மாட்டிக்கிட்டனோ?

தீபாவளிக் காசுங்க…..வச்சிக்குங்க….! என்றேன் புன்னகையுடன்.

எதுக்கு? இல்ல எதுக்குங்கிறேன்? நா கேட்டனா? கேட்டனா சார்….? நீங்களா எதுக்குத் தர்றீங்க?

ஏன் இப்படிக் கோவிக்கிறீங்க….? எல்லாரும் தர்றது வழக்கங்தானே! இதுவரைக்கும் நா உங்களுக்கு எதுவுமே   கொடுத்ததில்ல… அதனாலதான்…. இருக்கட்டும்….வச்சிக்குங்க…சந்தோஷமாத்தான் தர்றேன்…

உங்களுக்கு சந்தோஷம் சார்….ஆனா எனக்குப் பழக்கமில்லையே….! எல்லாரும் தர்றது வழக்கமா இருக்கலாம். ஆனா நான் வாங்குறவனாங்கிறது தெரியணும்ல? எங்கயும் எதுக்கும் யார்ட்டயும் நா கை நீட்டுனதில்ல… சார்.. அது தெரியுமா உங்களுக்கு? என் உசிர அப்படித்தான் இன்னைவரைக்கும் ஓட்டியிருக்கேன்….!

தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால் உயிர் வாழாமையும் மானம் எனப்படும்…நா கவரிமான் ஜாதிடீ…கவரிமான் ஜாதீ……- மனதுக்குள் நடிகர்திலகத்தின் கம்பீரக் குரல்.

ஓ…! அப்டிங்களா…! அருமை…!  என்றேன் தயக்கமாக. அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்கிற பயம் எனக்குள்.

எதையாச்சும் தினசரி  புலம்பிட்டே டெலிவரி பண்றானேன்னு நினைச்சிட்டீங்க போல்ருக்கு…அது இதுக்குத்தான்னு முடிவு பண்ணிட்டீங்க…! இல்ல?  தப்பா முடிவு பண்றதுக்கு உங்களுக்கு இத்தனை நாள் ஆகியிருக்கு…! ம்ம்ம்….?

அதனாலென்ன….வாங்க மாட்டீங்கன்னா அது நல்ல பழக்கம்தானே…? என்றேன் விடாமல்.

மூணு வேள சோத்துக்கு தாளம்தான்…இல்லன்னு சொல்லலை…ஆனா என் காசுல சாப்பிடுற திருப்தி இதுல வருமா? கேட்காம நீங்களாக் கொடுக்கிறது தப்பு சார் தப்பு…! இனிமே அப்படிச் செய்யாதீங்க….!

பணம் கொடுக்கிறாராம் பணம்….! தீபாவளி பக் ஷீஸ்…..! அத வாங்குறதுக்கு ஊர்ல நிறையப் பேர் அலையறானுங்க சார்…. –  நிறுத்தாமல் சொன்னார்….! சுற்றிலும் தீப்பிடித்துக் கொண்டது போலிருந்தது.

கிரில் கதவின் இரு கம்பிகளுக்கான இடுக்கில் பணத்தைச் செருகினார். போய்விட்டார். போயே விட்டார். செமத்தியாய் வாங்கிக் கட்டிக் கொண்டதுதான் மிச்சம்….! யப்பா…என்னா மனுஷன்? இந்தக் காலத்துலயும் இப்படி ஒரு ஆளா?

ன்று போனவர்தான். இன்று வரை காணவில்லை. கொரோனா காலம் துவங்கி, தாண்டவம் ஆடி ஓய்ந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகப் போகிறது…..இப்பொழுதும் நான் புத்தகங்களும், பிற பொருட்களும்
ஆன் லைன் பதிவில், கூரியரில் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன். நான் மட்டுமென்ன, உலகமே அப்படித்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் முன்பு போல் இயல்பான வேகத்தில் இல்லை.. பணப் பரிவர்த்தனையும் மீதி இருப்பும்,  வங்கியில் எண் கணக்கு இறங்குவதிலேதானே காண முடிகிறது.

ன்னாச்சு? அந்த மனுஷன ஆளையே காண முடில? கோவிச்சுட்டு வேறே பீட் வாங்கிட்டுப் போயிட்டாரா? இந்த ஏரியாப் பக்கமே கண்ணுல படல….? – மனசுக்குள் உறுத்திக்கொண்டேயிருந்ததை வாய்விட்டுக் கேட்டேன். ஒரு நல்ல மனிதனை  அபூர்வமாய் அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தோம்…அதற்கும் பங்கம் வந்ததா?

மனைவி சுகுணா சொன்னாள்…..

உங்களுக்குத் தெரியாதா விஷயம்? அந்தப் பெரியவர் காலமாயிட்டாராம்…!

என்னது…என்ன சொல்ற நீ…? – சற்றே பதறியவாறே கேட்டேன்.

அவருக்கு கேன்சர் இருந்ததாமே…..! அதோடதான் அலைஞ்சாராம்…! போயி ரெண்டு மாசம் ஆயிடுத்தாம்!….கொரோனா கிடையாது…இயல்பான மரணம்தான்…-இப்ப வராரே வேறொருத்தர்… அவர் பேரு கூட என்னவோ சொன்னார்…! ..ரொம்ப வித்தியாசமா இருந்தது. உறாங்…ஞாபகம் வந்துடுத்து….மேகதூதன்….! ஆமாம்….!! அதான் பேரு…! நா கேட்கக்கண்டு சேதி தெரிஞ்சிது….பாவம் அந்த மனுஷன்…! பரிசுத்தம்….!

பரிசுத்தம்ங்கிறதுதான் அவர் பேரா?

பேரெல்லாம் தெரில….மிஸ்டர் பரிசுத்தம்னு சொல்ல வந்தேன்…..-சிரித்துக் கொண்டாள்.

அந்த நோவில்தான்…சோகத்தில்தான்….அப்படி இஷ்டத்துக்கு வாய் ஓயாமல்  பேசித் தள்ளினாரோ? வீட்டில் ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள், உடல் நலமில்லாதவர்கள், திடீர் திடீர் என்று கோபப்படுவதில்லையா? பொருத்தமில்லாமல் பேசுவதில்லையா?  தொட்டதற்கெல்லாம் சலித்துக் கொள்வதில்லையா?  பொறுத்துக்கொள்ளத்தானே செய்கிறோம்? அடப் பாவமே…!! மனசுக்குள் சோகம் கப்பியது எனக்கு.  நல்லவேளை…அந்தப் பெரியவர் வந்து போன காலங்களில் அவர் மனம் புண்படும்படி நான் ஏதும் பேசியிருக்கவில்லை…! நினைத்துக் கொண்டேன்.

மேகமே தூது வந்து இந்தச் செய்தியைச் சொல்லிப் போனதோ?! காலமாயிட்டார்….சுகுணா சொன்ன அந்த வார்த்தைப் பிரயோகம் மிகப் பொருத்தமாய்த் தோன்றியது எனக்கு. காலத்தால் நினைக்கும்படியாக, நினைவுகூறும்படியாக வாழ்ந்து மறைந்த பெருந்தகைகளைத்தானே அப்படிச் சொல்வது வழக்கம்!

ஒருவகையில் அந்தப் பெரியவருக்கும் அது பொருந்தும்தானே? செம்மையான வாழ்வு! கௌரவமான இருப்பு…!   எளிய மனித உயிர்களுக்கு இந்த மாதிரி மதிப்புமிகு வார்த்தைகளெல்லாம்  பொருந்தி வராதா என்ன? யாரேனும் சிலரின் நெஞ்சகத்தில் அப்படிப்பட்டவர்களும் தங்களின் தெளிவான இருப்பின்பொருட்டு  காலமெல்லாம்  வாழ்வார்கள்தானே?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com