இனிய வாழ்வு பெறுவாய்
அய்யா வைகுண்டரின் அருளுரை
பொய் சொல்பவனுக்கு அந்த இறைவன் பொய்யாகவே தோன்றுகிறான். மெய் சொல்பவனுக்கு மெய்யாகவே – அவனுடனே இருக்கிறார். நீ முதலில் உன்னை அறிந்துகொள். அதன் பிறகுதான் தலைவனாகிய இறைவனை அறிந்துகொள்ள முடியும். நீ நல்ல கல்வி கற்றிருந்தால், அதைக் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு இன்றே கற்றுக் கொடு.
இறைவன் மேல் உள்ள பக்தியை மறக்காமல் வைத்திருங்கள். அதே நேரம், பயம் கொள்ளாமலும் இருங்கள். அப்போது நானே உங்களுக்குத் தேவையான அறைவைத் தர தேடி ஓடி வருவேன். உன்னிடம் பகட்டு மொழி வேண்டாம். அந்தப் பேச்சால் ஏற்படுவது, வெறும் பாவம் மட்டுமே! தவங்களில் சிறந்த தவம், மனம் ஒன்றிய இருவர் நடத்தும் இல்லறம்தான். அதைவிட, வேறு எந்தத் தவமும் இல்லை.
இறைவனுக்குப் பயந்து மக்களுக்கு உதவிகள் செய்து அறவழியில் வாழ்பவனே உயர்ந்த குடியைச் சேர்ந்தவன். அவனே நல்வாழ்வும் வாழ்வான். மற்றவர்கள் செய்த நல்ல உதவிகளை மறக்காமல் மனதில் இருத்தி வைத்திருப்பவர்கள், எவ்வளவு காலம் வாழ்கிறார்களோ அவ்வளவு காலமும் எந்தத் தீங்கும் வராமல் வாழ்ந்திருப்பார்கள்.
உன்னைவிட எளியோனைக் காணும்போது அவனை எள்ளி நகையாதே. அவன் மீது இரக்கம் கொள். முடிந்தால், அவனுக்கு உதவு. இந்த உலகத்தில் நிலைத்து இருக்கப் போவது பணம் அல்ல. நீ செய்த தருமம்தான்.
ஒருவரைக் குருவாக ஏற்றுக் கொண்டவர்கள், அந்த குரு கூறிய வார்த்தைகளை மனதில் நிலைநிறுத்திக் கொண்டால், அந்த வார்த்தைகளிலேயே குருவைக் காணலாம்.
பில்லி, சூனியம், தீவினை, பேய் என்றெல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம். அவை இல்லவே இல்லை. அவை உலகத்தை ஆள்வதும் இல்லை. இதை நீங்கள் நம்புங்கள். இறைவன் ஒருவனைப் பற்றிய நினைவோடு வாழுங்கள். கலி என்பது மாயை. மனிதன் பணிவோடு இருந்தால், அந்தப் பணிவுக்குள் கலி அகப்பட்டு அடங்கிப் போகும். தருமம்தான் கலியை கரைக்கு நீர். நீ தர்மம் செய்தும் கலியைக் கரைத்து விடலாம்.
உன்னை விடவும் உயர்ந்த மனம் கொண்ட ஒருவனை நீ காண நேரிட்டால், அவனைப் பார்த்து பொறாமை கொள்ளாதே.மாறாக, அவனைப் போற்று. இந்தப் பண்பு உனக்கு வந்தால் அவனைக் காட்டிலும் பெரியோனாகத் தழைப்பாய். இனிய வாழ்வும் பெறுவாய்.
தன் மீது அன்பு கொண்ட பக்தர்களின் பக்தியை சோதிக்க முயற்சிக்கிறான் இறைவன். பின் ஏற்றுக் கொள்கிறான். ஆனால், தன்னை நம்பாதவர்களுக்கு முதலில் நன்மை செய்வது போல் செய்கிறான். பின், அவர்களை முற்றிலும் அழித்து விடுகிறான். இந்த உலகத்தை, உலகில் உள்ள செல்வங்களை உருவாக்கி வைப்பதும் அவற்றை அழிப்பதும் இறைவனே.