இதை இன்னமும்கூட உரக்கச் சொல்லி இருக்க வேண்டும்.

இதை இன்னமும்கூட உரக்கச் சொல்லி இருக்க வேண்டும்.
Published on

'கிளாப்' படத்தின் இயக்குநர் ப்ரித்வி ஆதித்யா

நேர்காணல்

– ராகவ்குமார்

தமிழ் மொழியில் பெண்களின் தன்னம்பிக்கை சார்ந்த படங்கள்
வெளிவருவது மிகக் குறைவு. அதிலும் விளையாட்டுத்துறை சார்ந்த படங்கள் வருவது மிக அரிது. தமிழில் அதிகம் சொல்லப்படாத ஓட்டப்பந்தய விளையாட்டை மையப்படுத்தி 'கிளாப்' என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றுள்ளார் டைரக்டர் ப்ரித்வி ஆதித்யா.

சிவில் என்ஜினீயரிங் படித்த இவர் இளன் மற்றும் வம்சி போன்றவர்களிடம் உதவி இயக்குனராக  இருந்துள்ளார். ஆதி, பிரகாஷ் ராஜ், நாசர் நடித்துள்ள கிளாப்பிற்கு  இளையராஜா இசை அமைத்துள்ளார். சோனி லைவ் தளத்தில் இப்படம் வெளியாகி உள்ளது. இனி டைரக்டரிடம்  நேர்காணல் :

எத்தனையோ விளையாட்டுகள் இருக்க ஓட்டப்பந்தயத்தை பின்புலமாக வைக்க என்ன காரணம்.

இசையை பற்றி நமக்கு பெரிய அளவில் பயிற்சி இல்லை என்றாலும் நாம் பல சமயங்களில் வீட்டிலும் வெளியிலும் நமக்கு பிடித்த பாடலை பாடியிருப்போம். இதேபோல்தான் ஓட்டமும். நாம் பல சந்தர்ப்பங்களில் பல காரணங்களுக்காக ஓடி இருப்போம். மேலும் 400 மீட்டர் ஓடப்பந்தயம் என்பது பெரிய அளவிலும் இல்லாத சிறிய அளவிலும் இல்லாத மத்திம ஓட்ட பந்தயம். இதில் முதலில் கொஞ்சம் மெதுவாகவும், அடுத்து கொஞ்சம் வேகமாகவும் ஓட வேண்டும். இது நம் வாழ்க்கையோடு தொடர்புள்ளதாக நினைக்கிறேன்.எனவே ஓட்டப்பந்தய களத்தை பின்புலமாக வைத்தேன்.

காலை இழந்த ஒட்டபந்தய வீரரின் கதை கரு இன்ஸ்பிரேஷனா? கற்பனையா?

நான் கேள்விப்பட்ட விஷயம். என் நண்பனின் நண்பன் ஒருவர் சொல்லி கேள்விப்பட்ட விஷயம். நீச்சல் வீரர் ஒருவருக்கு சைக்கிளில் செல்லும் போது தலையில் அடிபட்டது. குணமடைந்தாலும் முழுமையாக அவரால் நீச்சல் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. 'இதுதான் வாழ்க்கை' என்று நம்பிக் கொண்டிருந்த ஒரு விஷயம் திடீரென்று இல்லாமல் போனால் எப்படி இருக்கும்? என்று யோசித்ததன் விளைவுதான் படத்தில் ஓட்டப் பந்தய வீரருக்கு கால் இல்லாமல் செய்தது. மேலும் இந்த நீச்சல் வீரருக்கு நடந்த  விபத்து 'போட்டியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட விபத்தாக கூட இருக்கலாம்' என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றையும் சொன்னார்கள். இதுதான் என் படத்திலும் நான் காட்டிய விபத்திற்கும் முக்கிய காரணம்.

விளையாட்டு துறையில் இருக்கும்  அரசியலை பற்றி இப்படி உரக்க சொல்லிருக்கிறீர்களே…?

ஆம்… பெரும் பணக்காரர்கள், வாரிசு தலையிடுகள், இன்னமும் 'தனக்கு மட்டுமே விளையாட்டு' என்று நினைக்கும் நபர்கள் நிரம்பியது இத்துறை. கடைகோடி இளம் விளையாட்டு வீரர்களின் கனவை இவர்கள் சுலபமாக தகர்த்து விடுகிறார்கள். நாம் ஒலிம்பிக் மெடல்களை பெறுவதற்கு பெரும் தடையாக உள்ளது இவர்கள் செய்யும் அரசியல். இதை இன்னமும் கூட உரக்க சொல்லி இருக்கவேண்டும்.

கிளாப்பில் வரும் துர்காக்களை சந்தித்தது உண்டா?

நிறைய பார்த்து இருக்கிறேன். அவர்களின் கனவுகள் திருமணம் போன்ற சமூக அழுத்தங்களால் கருகுவதையும் பார்த்து இருக்கிறேன். நமது நாட்டு இளம் பெண்கள் திறமை பெற்றவர்கள். அவர்களை நாம் களத்தில் கொண்டு போய் விட்டால் போதும்… கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள். இங்கே கொண்டுவிடதான் பல தடைகள். வாய்ப்பு தந்தால் இங்கே பல
பி.டி. உஷாக்கள் கிடைப்பார்கள். எனக்கு தெரிந்த 'ஆர்த்தி' என்ற பெண் தடை ஓட்டத்தில் (hurdles) திறமை பெற்றவர். மைதானத்தில் பயிற்சி செய்யும்போது அங்கே குண்டு எறிதல் போட்டியில் பயிற்சி செய்து கொண்டு இருந்தவர்களின் குண்டு காலில் பட்டு தீவிர பாதிப்பு ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு இவர் சாதனை செய்தார். இவர் என்னை பாதித்த வீராங்கனை.

இளைஞரான நீங்கள் இளையராஜாவை தேர்ந்தெடுத்தது ஏன்?

இளையராஜாவின் இசை என்றுமே உயிர்ப்பும், இளமையும் கொண்டது. 'எமோஷனல் கதையை சொல்லவேண்டும்' என்று சொன்னவுடன் ராஜா சாரை தவிர வேறு யாரும் என் நினைவுக்கு வரவில்லை. ஒரு பாடலுக்கு இசை வேண்டும் என்று கேட்டால் உடனே இப்போதே வர முடியுமா? ரெடியா? என்று கேட்பார். ராஜா சாரிடம் மட்டும்தான் இந்த புதையல் இருக்கிறது என்பேன். 'ஆயிரம் டியூன் நான் உனக்கு தரலாம். ஆனால்  ஒன்றே ஒன்றை மட்டும் தான் உன்னால் பயன்படுத்த முடியும்' என்று சிரித்து கொண்டே சொல்வார்.

நமது தமிழ் இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்க என்னதான் செய்யலாம்?

முதலில் பள்ளியில் விளையாட்டு வகுப்பை கணித வகுப்பாக மாற்றக் கூடாது. மத்திய / மாநில அரசுகள் சத்தான உணவு, மைதானம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மைதானம் உள்ள பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று உறுதியோடு இருக்கு வேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com