0,00 INR

No products in the cart.

தேவ மனோகரி – 12

தொடர்கதை                                                                 ஓவியம் : தமிழ்

கே.பாரதி

மாலையில் காரை ஓட்டிக் கொண்டு போகையில் பிரிட்டோவின் கேள்வி நினைவுக்கு வந்தது.

வேலையில் சேர்ந்த அந்த ஆண்டு நடந்த மாணவர் தேர்தல் இவளுக்கு மிகப் புதிய அனுபவமாக இருந்தது.

பட்டாசு சரம்சரமாய் வெடிக்க, பாண்டு வாத்தியம் முழங்க பவனி வந்தார்கள் மாணவ வேட்பாளர்கள். அவர்களுக்கு முன்னும் பின்னுமாக நண்பர்களின் நடனம் வேறு.

பட்டு வேட்டி, பட்டு சட்டையில் வேட்பாளர்கள் பளபளத்தார்கள்.

மனோகரிக்கு எதிர்சாரியிலிருந்த பழைய கட்டிடத்தில் தேர்தலை நடத்த வேண்டியிருந்தது.

மாணவர்கள் இங்கும் அங்கும் ஓடுவதும்,  மெல்லிய சாராய நெடியுமாக சூழ்நிலையே அச்சமூட்டுவதாக இருந்தது.

அந்த வகுப்பு மாணவர்கள் ஓட்டு போட்டதும் ஓட்டுப் பெட்டியை பத்திரமாக எடுத்துக் கொண்டு புதிய கட்டிடம் வரை போவதற்கு அவளுக்கு பதற்றமாக இருந்தது.

’எவராவது அந்தப் பெட்டியை அபகரித்துக் கொள்வார்களோ’ என்ற கற்பனையில் எழுந்த பதற்றம். அவளுடைய இளம் வயது தோற்றமும் ஒரு பிரச்னைதான். அந்த தோற்றத்திற்கு மாணவர்கள் மத்தியில் மரியாதை கிடையாது.

தேர்தல் முடிவை பிரின்சிபால் அறிவித்தவுடன் பூமி அதிரும் அளவுக்கு பட்டாசு வெடித்தார்கள்.

மறுநாள் பிரிட்டோ வந்தபோது அவன் கேட்ட கேள்விக்கு நேரடியாகவே பதில் சொன்னாள் மனோகரி.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு இல்லையா? மாணவன் என்பதை தாண்டி தன் அரசியல் செல்வாக்கை பெரிதாக நம்பிக்கொண்டு கல்லூரி முதல்வரை மிரட்டும் அளவுக்கு நிலைமை மோசமானது. முதல்வர் முகத்தில் ஆசிட் வீசும் அளவுக்கு விபரீதம் நடந்தது”

“புரிகிறது மேடம்.  யூனியன் தடை செய்யப்பட்டதோடு மாணவர்களின் அரசியல் ஆர்வமும் முடிந்துபோனதாக நீங்க நினைக்கிறீங்களா?”

“கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனால் அந்த ஆர்வத்தை முற்றிலுமாக அழிக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன்”

“எப்படிச் சொல்கிறீர்கள்?”

“பஸ் டே கொண்டாட்டம் என்று புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. ஒவ்வொரு பஸ் ரூட்டிலும் அவர்களுக்கென்று ஒரு தலைவன் உருவாகியிருக்கிறான். அவன் அவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்”

“யூ மீன் ‘ரூட் தல?’ “

அவன் ஸீரியசாகத்தான் கேட்டான். ஆனால் மனோகரிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“இதில் ஜாதி அரசியல் வலிமையாக இருப்பதாக சொல்கிறார்களே?”

ஒரு கணம் ஆழ்ந்து சிந்தித்தாள் மனோகரி.

“இரண்டு மாணவக் குழுக்கள் தங்களுடன் மோதிக்கொள்ளும்போது அதற்குப் பின்னால் ’வெறும் பஸ் ரூட்தான் இருக்கிறதா இல்லை ஜாதி அரசியல் இருக்கிறதா’ என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியவில்லை. நீங்கதான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கணும்”

“கடைசியாக ஒரு கேள்வி மேடம். இதை நீங்கள் வளர்ச்சி என்று நினைக்கிறீர்களா அல்லது வீழ்ச்சி என்று நினைக்கிறீர்களா?”

“இரண்டும் சொல்ல முடியாது. வேண்டுமென்றால் இதை ஒரு மாற்றம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.”

“எச்சரிக்கையாக பதில் சொல்றீங்க மேடம். நான் ஒரு தேர்ந்த ஆராய்ச்சியாளரிடம் பேசிக்கிட்டிருக்கேன்னு தோணுது.” மென்சிரிப்பு சிரித்தான் பிரிட்டோ.

“முன்பு யூனியன் தேர்தல் நடந்தபோது அவர்களது கவனம் அரசியல் பிரச்னைகளில் இருந்தது. அப்போது அரசியல் கட்சிதான் பொது அடையாளம். ஆனால் தேர்தல் தடை செய்யப்பட்ட பிறகு ஜாதி அடையாளம் மேலெழும்பி வந்துவிட்டது போல் எனக்குத் தோன்றுகிறது. மறுபடியும் தேர்தல் வைத்தால் கூட இது மாறும் என்று தோன்றவில்லை.”

ஒரு நீண்ட பதிலை சொல்லி முடித்ததில் ஆயாசமாக உணர்ந்தாள் மனோகரி.

“வெரி வெல் ஸெட் மேடம். தேங்க் யூ ஸோ மச்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான் பிரிட்டோ.

இனியா வந்தாள். இளஞ்சிவப்பு நிறப் புடவை ஒன்றை கச்சிதமாகக் கட்டியிருந்தாள்.

“கேன்டீன் போறேன் மேடம். நீங்க வர்றீங்களா?”

சற்று காலார நடக்க வேண்டும்போல் தோன்றியது மனோகரிக்கு. கேன்டீன் ஒரு சாக்குதான்.

போகிற வழியில் பிரிட்டோவின் ஆராய்ச்சியைப் பற்றி இனியாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் மனோகரி.

வேறு ஒரு நாட்டில் ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் அந்த மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும். தவிர, ’களஆய்வு செய்ய வேண்டும்’ என்று எப்படியெல்லாம் தரம் வகுத்திருக்கிறார்கள்! வெளிநாட்டுப் படிப்புக்கும் நம் நாட்டுப் படிப்புக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி! என்று வியந்தாள் இனியா.

“பிரிட்டோவுக்கு பதில் சொல்லும்போதுதான் எந்த அளவுக்கு இந்தக் கல்லூரி சூழ்நிலையை நான் உள்வாங்கியிருக்கிறேன் என்று எனக்கே புரிந்தது.” என்றாள் மனோகரி.

“என்ன மேடம், குருகுல கல்வி நடத்துகிறீங்க  போலிருக்கே?” என்று பக்கத்து டேபிளில் போண்டா சாப்பிட்டவாறு இவளைப் பார்த்து கேட்டார் சூரியமூர்த்தி.

“அப்படின்னா என்ன மேடம்?” என்று கேட்டாள் இனியா.

“அந்த காலத்தில் குருகுல வாசத்தில் குருவும் மாணவர்களும் சேர்ந்தே ஆற்றங்கரைக்கு குளிக்கப் போவார்கள். போகிற வழியில் பல விஷயங்களை குரு மாணவர்களுக்கு சொல்லித்தருவார்.”

அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் விழித்தாள் இனியா.

“நீயும் நானும் கேன்டீன் வரை வந்து ஸீரியசாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா? அதைத்தான் அவர் கிண்டல் செய்கிறார்” என்று சொல்லி புன்னகைத்தாள் மனோகரி.

** ** **

மாலை ஏழு மணிக்கு டெலிபோன் ஒலித்துக் கொண்டிருந்தது. மனோகரி தன் அறையில் இருந்தாள்.

இனியாதான் போனை எடுத்தாள். எதிர்ப்புறத்தில் நவீன்.

“மேடம் யோகா பண்ணிக்கிட்டிருக்காங்க” என்றாள்.

“நீங்க இனியாதானே?”

“ஆமாம்”

“நான் உங்ககிட்டத்தான் பேசணும். எனக்குத் தெரியும் எங்க அம்மா இப்ப யோகா பண்ணிக்கிட்டிருப்பாங்கன்னு.”

இனியாவுக்குத் திகைப்பாக இருந்தது. ஏதோ நீண்ட நாள் பழகியது போலில்லையா இவன் பேசுகிறான்?

“நீங்க சீக்கிரமே பெட்டி படுக்கையைக் கட்டிக்கிட்டு ஹாஸ்டலுக்குக் கிளம்புங்க. அடுத்த மாசம் நான் அங்கே வருவதாக இருக்கிறேன்”

“சரி, நீங்க வர்றதுக்குள்ள நான் கிளம்பிடறேன்” பதில் சொல்லும்போதே அவமான உணர்வு முகம் சிவக்க வைத்தது.

“நான் வர்றதுக்கும் நீங்க கிளம்பறதுக்கும் சம்பந்தமில்லை. அதுக்கு முன்னாடியே நீங்க கிளம்பறதுதான் நல்லது. முடிஞ்சா நாளைக்கே கிளம்பிடுங்க”

இனியாவுக்கு ரோஷம் பொங்கியது.

“ஏன்? இப்பவே கூட கிளம்பறேன். உங்களுக்கு என்னால கஷ்டம் வேண்டாம்”

“உடனே கிளம்பி அம்மாகிட்ட என்னை மாட்டிவிடலாம்னு பாக்கறீங்களா? நான் ஃபோன் பண்ணேன்னு அம்மாவுக்குத் தெரியக்கூடாது. நீங்களா கிளம்பறா மாதிரி பாத்துக்கோங்க.”

இனியா பதில் சொல்லத் தெரியாமல் திகைத்தாள்.

“மிஸ் இனியா, நான் சொல்றது கேக்குது இல்லையா?”

அவள் பதில் சொல்லாமல் தொடர்பை துண்டித்தாள்.

மேடத்துக்கு இப்படி ஒரு மகனா? இங்கிதமே தெரியாதவனாக இருக்கிறானே? உள்ளுக்குள் ஏதோ ஒன்று உலை பொங்க வைத்தது.

சாப்பிடும்போது இனியாவின் முகம் வாடியிருந்ததைக் கவனித்தாள் மனோகரி.

என்னவாக இருக்கும்? கேட்க நினைத்தவள் சற்றே தயங்கினாள்.

ஏதாவது முக்கியமாக இருந்தால் அவளாகவே சொல்ல மாட்டாளா என்ன?  தூங்கி எழுந்தால் சரியாகிவிடுவாள்.

மறுநாள் காரில் கல்லூரிக்குப் புறப்பட்ட போதுகூட இனியா கலகலப்பாக பேசவில்லை என்பதை கவனித்தாள் மனோகரி. என்னவாக இருக்கும்?

கல்லூரி வராந்தாவில் ஏதோ பரபரப்பு. அங்கும் இங்கும் நின்றவாறு பேராசிரியர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“மேடம், உங்களுக்கு விஷயம் தெரியுமா? நம்ம சூரியமூர்த்தி சார் இறந்துட்டாராம்”

மனோகரி திகைத்து நின்றாள். “நேற்று கூட அவரை கேன்டீனில் பார்த்தேனே? எப்போது? எப்படி?”

“இன்னிக்குக் காலைல காபி சாப்பிட்டுவிட்டு வாக்கிங் போய்வந்தாராம். திரும்பி வந்து சோபாவில் உட்கார்ந்தவர் அப்படியே சாய்ந்துட்டாராம்.”

அஞ்சலிக் கூட்டம் முடிந்ததும் எல்லோருமாக புறப்பட்டு சேத்துப்பட்டிலிருக்கும் அவர் வீட்டுக்குப் போனார்கள்.

மனோகரிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. இனியா கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டிருந்தாள்.

’இந்த மனநிலையில் இன்றைக்கு ஹாஸ்டலுக்குப் புறப்படுவது நடக்காத காரியம்’ என்று அவளுக்குத் தோன்றியது.

வீட்டுக்கு வந்த பிறகும் வெகுநேரம் கண்கள் கரைந்து கொண்டிருந்தது.

ஜன்னல் வழியே அவள் வானத்தைப் பார்த்தாள்.

வானத்தின் வண்ணங்களை பகுத்துப் பார்க்கச் சொல்லிக் கொடுத்தவர் இப்போது இல்லை. ஆனால் வானம் இருக்கிறது. அது மட்டும்தான் நிலையானது.

** ** **

றுநாள் நூலகத்தில் உட்கார்ந்திருந்தபோது இனியாவின் செல்போன் ஒலித்தது.

“திஸ் இஸ் நவீன். ஐ ஆம் ஸாரி. உங்களை ரொம்ப அப்ஸெட் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்”

இனியா பதில் சொல்லவில்லை.

“அம்மாகிட்டேயிருந்துதான் உங்க நம்பரை வாங்கினேன். அவங்க சொன்னாங்க யாரோ ஒரு புரொபஸர் இறந்து போனதுல நீங்க ரொம்ப அழுதுகிட்டே இருக்கீங்கன்னு.”

“ஓ! அதுக்குதான் இந்த ஆறுதலா? தேங்க்ஸ்” என்றாள் இனியா. அவள் குரலில் ரோஷம் தொனித்தது.

“அதுக்கு மட்டுமில்லை. உங்களை வீட்டை விட்டுப் போங்கன்னு சொன்னதுக்கும்தான். நேத்திக்குதான் அம்மா சொன்னாங்க உங்களுக்கு ஹாஸ்டலில் படிக்க முடியாத சூழ்நிலைன்னு. எனக்கு உங்க பேக்ரௌண்டெல்லாம் தெரியாது. ஐ ஆம் ஸாரி”

“உங்க அனுதாபத்துக்கு ரொம்ப தேங்க்ஸ் நவீன். நீங்க அப்படி கடுமையா பேசுனதுக்கு அப்புறம் உங்க அறையில தங்கறதுக்கு எனக்கு விருப்பமில்லை. ஒரு வாரத்துக்குள் நான் கிளம்பிவிடுவேன்”

“ப்ளீஸ், நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. அதுக்கு பிறகு முடிவு எடுங்க.”

அவள் மௌனமாக கேட்டுக் கொண்டாள்.

“என் அம்மா இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கணும்னு நான் ஆசைப்படறேன். அவங்க என்னடான்னா எப்பவும் உங்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்காங்க. நீங்க என்ன அவங்க வாழ்க்கையில நிரந்தரமாவா இருக்கப்போறீங்க? நீங்க நகர்ந்தாதான் அவங்க தன் வாழ்க்கையைப் பத்தி யோசிப்பாங்கன்னு எனக்குத் தோணுச்சு. அதனாலதான் உங்களை அங்கிருந்து நகர்த்தணும்னு நினைச்சேன். இது தப்பா?”

இனியா திகைத்தாள். அவளுக்கு தலைசுற்றுவதுபோல் இருந்தது.

வெளிநாட்டுக்குப் போய்விட்டால் இப்படியெல்லாம்தான் யோசிப்பார்களோ?

(தொடரும்)

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

“அட! பேராண்டி! அவரோட மாப்பிள்ளையா நீ?

0
  ஒரு நிருபரின் டைரி - 20 - எஸ். சந்திரமெளலி   ஏ. நடராஜன்   என்னும்  அனுபவப் பொக்கிஷம்  திருச்சி வானொலி நிலையத்தில் திரு. ஏ. நடராஜன் (நண்பர்கள் வட்டாரத்தில் ஏ.என். சார் அல்லது தூர்தர்ஷன்  நடராஜன்)  பணிபுரிந்துகொண்டிருந்த...

தேவ மனோகரி – 20

0
தொடர்கதை                                               ...

அம்மாக்களின் எதிர்பார்ப்புகளைக் காப்பாற்ற வேண்டாமா?

0
  ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 20 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா கம்ப்யூட்டர்   படப்பிடிப்பிற்கு நடுவில் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது இயக்குநர் சத்யன்அந்திக்காடின் இரட்டைக் குழந்தைகளுக்கும் கம்ப்யூட்டரில் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொண்டேன். சத்யன் இதுவரை அவர்களுக்கு...