இதோ ஒரு புத்தக மனிதர்

இதோ ஒரு புத்தக மனிதர்
Published on

– கா.சு.வேலாயுதன்

கோவை என்றாலே நியாபகத்திற்கு வருவது பஞ்சாலைகளும், 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்ற புகழும்தான். உலகந்தழுவிய தமிழர்களுக்கு -புத்தகக் காதலர்களுக்கு நினைவில் ஆடுவது விஜயா பதிப்பகமும், அதை உருவாக்கி நிர்வகிக்கும் அண்ணாச்சியும்தான்.

இந்த ஆண்ட்ராய்டு செல்ஃபோன் உலகிலும் வாசிப்புக்கு ஒரு நம்பிக்கை. சென்னைக்கு அடுத்தபடியாக எழுத்தாளர்களும், வாசகர்களும் அதிகம் இருக்கிறார்கள் என்று கோவை பெருமையடைய மூல காரணிகளில் இவரும் ஒருவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அப்துல் கலாமின் 'அக்னி சிறகுகள்' வெளியீட்டு விழா. அதில் கலந்து கொண்ட கலாம், அண்ணாச்சியைப் பார்க்கிறார். 'என்ன ஒரு ஆயிரம் பிரதிகள் விற்பீர்களா?' என்று  கேட்கிறார். அண்ணாச்சி முறுவல் பூக்க தலையை ஆட்டுகிறார். அது ஆமோதிப்பா, மறுப்பா? தெரியவில்லை. அடுத்து ஒரு விழா. அண்ணாச்சியும் கலாமும் சந்தித்துக் கொள்கிறார்கள். கலாம், 'உங்களை ரொம்ப அண்டர் எஸ்டிமேட் பண்ணீட்டேன் இல்லே? ஒரு லட்சம் பிரதிகள் வித்துட்டீங்களே!' என்கிறார். அதற்கும் தலையை ஆட்டுகிறார். இதுதான் அண்ணாச்சி.

இந்தத் தகவலை அண்ணாச்சியே பல மேடைகளிலும், நண்பர்களிடமும் சொல்லியிருக்கிறார். கலாம் நூல்கள் மட்டுமல்ல, இப்போது முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள 'உங்களில் ஒருவன்' நூல் இவரின் விஜயா பதிப்பகத்தில் ஆயுதபூஜைக்கு கடலை பொரி விற்பது போல் விற்கிறது. அது எவ்வளவு லட்சம் பிரதிகள் விற்பனை தாண்டும் என்று சொல்ல முடியாது. எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் புத்தகக்குளத்து வேடந்தாங்கலாக இருக்கும் மனிதருக்கு பின்னால்தான் இப்படி எத்தனை கதைகள்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உலகநாதபுரம் என்ற கிராமத்தில் முத்தையா, செளந்திர ஆச்சி தம்பதிக்கு 1941-ல் பிறந்தவர் அண்ணாச்சி. மேலூரில் சுந்தரேஸ்வர வித்யாசாலாவில் படிப்பு. 3 மைல் நடக்க வேண்டும். ஊரில் பல சிறுவர்கள் சேர்ந்துதான் பள்ளிக்கு செல்வார்கள். அப்படி செல்லும் போது மாட்டு வண்டிகள் மேலூரை நோக்கி செல்லும். அதன் பின்பக்கத்தில் கைகளைப் போட்டு தொங்கியபடி செல்வதில் சிறுவர்களுக்கு அலாதி மகிழ்ச்சி. அப்படி வண்டிகள் இல்லாத வேளைகளில் இன்பம் களைப்பு தெரியாமல் இருக்க ஒரு சிறுவன் புத்தகம் வாசித்துக் கொண்டே வருவது. மற்றவர்கள் கேட்டுக் கொண்டே செல்வது. அந்த சிறுவர்களில் ஒருவராக இருந்தவர்தான் வேலாயுதம்.

டமாரம், அம்புலி மாமா, மிட்டாய், கரும்பு, கல்கண்டு ஆகிய சிறுவர் பத்திரிகைகள் அரை அணா, ஒரு அணாவுக்கு கிடைத்த காலம் அது. அதை வாங்கவே சிறுவர்களுக்கு காசு இருக்காது. ஆளாளுக்கு காசு போட்டு ஒரு இதழ் வாங்கி விட்டால் போதும். அத்தனை பேரும் படித்து விட முடியும். அப்படிப் புறப்பட்ட வாசிப்பை இன்று வரை நிறுத்தவில்லை அண்ணாச்சி. அதன் நீட்சிதான் சமீபத்தில் டைரக்டர் கஸ்தூரி ராஜா வெளியிட்டுள்ள 934 பக்கங்கள் கொண்ட 'பாமர இலக்கியம்' நூலை ஒரே மூச்சில் இவர் படித்தது.

அதைப் பார்த்த இவரின் பேரப்பிள்ளைகள், 'தாத்தா நீங்க படிச்சது பெரிய சினிமா டைரக்டர் கஸ்தூரிராஜா புஸ்தகம். அவர் ரஜினியின் சம்பந்தி, தனுஷின் அப்பா' என்று சொல்ல, 'அப்படியா? நான் சினிமா பார்த்தாத்தானே அதெல்லாம் தெரியும்!' என்றிருக்கிறார், குழந்தையாக. இவரின் இந்த பாராட்டுதலை போனில் கேட்ட கஸ்தூரி ராஜா முத்துவிழா மலர் வெளியீட்டு விழாவுக்கு முதல் ஆளாக வந்திருந்தார். 'நான்தான் கஸ்தூரி ராஜா' என்று சொல்லி முதன் முதலாக அறிமுகமானார். இப்படி இவர் வாழ்வில் புத்தகத்தால் அறிமுகமாகாத மனிதர்களே இல்லை.

''சின்ன வயசில ரொம்ப நான் விரும்பிப் படிச்ச புத்தகம் அம்புலிமாமாதான். அதுலதான் மாயாவி, வேதாளம், மாயக்கம்பளம் எல்லாம் வரும். அம்புலிமாமா கதைகள் போலவே என் வாழ்வில் இந்த அற்புதங்கள், நிறைய மனிதர்கள் சந்திப்பு, புத்தகக்கடலுக்குள்ளேயே மூழ்கி முத்தெடுக்கிறேன் என்றால் வாசிப்புதான்!'' என்கிறார்.

மேலூர் பள்ளிப் படிப்புக்கு மேல் படிப்பதற்கு வசதியில்லை. அந்தக் காலத்து ஈஎஸ்எல்சியுடன் நிறுத்தி விட்டு மணப்பாறையில் ஒரு ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். மாதத்தில் ஒரு நாள் மட்டும் மணப்பாறைக்கு லிப்கோ வேன் வரும். அது தாலுக்கா அலுவலகத்திற்கு எதிரே நிற்கும். அதில் தமிழ்வாணனின் ஒரு ரூபாய் விலையுள்ள துப்பறியும் கதைகள், சிறுவர் கதைகள் போன்றவை இருக்கும். அதை வாங்கும் கூட்டத்தில் இவரும் ஒருவராக இருந்து அடுத்தது வேன் எப்போ வரும் என்று ஆர்வமுடன் கேட்டுக் கொள்வார். 'அப்போது அடுத்த புத்தகம் வாங்க வேண்டுமே. அதற்கு காசு சேர்க்கணுமே!' என்பதால் எழுந்த கேள்விதான் அது.

முதன் முதலாக இவரை ஈர்த்த சமூக நாவல் கிராமத்திலிருந்து வந்த சித்தப்பா மூலம் நிகழ்ந்தது. மு.வ.,வின் 'பெற்ற மனம்' என்ற நூலை அவர் அறிமுகம் செய்து வைத்தார். அதில் தாயும் மகனும் பிரிந்திருக்கும் நெகிழ்ச்சியான கதை. இவரும் தன் தாயை விட்டு பிரிந்து மணப்பாறையில் தங்கி இருக்க, அந்தக் கதையில் வரும் முனியம்மா தன் குடும்பத்து வறுமை காரணமாக தன் பிள்ளையை செல்வந்தர் ஒருவருக்கு விற்க, அது இவரின் மனதை உருக்க தன்னையறியாமல் தேம்பித் தேம்பி அழலானார். அது பின்னாளில், 'கள்ளோ காவியமே?', 'அந்த நாள் மலர்விழி', 'கரித்துண்டு', 'கயமை', 'நெஞ்சில் ஒரு முள்', 'மண்குடிசை', 'வாடாமலர்', 'குறட்டை ஒலி', 'விடுதலையா?' போன்ற மு.வ. நூல்களாகப் பார்த்துப் பார்த்து படிக்க காரணியானது.

மணப்பாறை இந்திரா தியேட்டருக்கு எதிரே ஒரு புத்தகக்கடை. அங்கே மு.வ.,வின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.  திராவிட இயக்கம் வளர்ந்து கொண்டிருந்த காலம். திருமணங்களுக்கு புத்தகங்கள் பரிசளிப்பது அப்போதுதான் ஆரம்பித்தது. அப்படி இந்தக் கடைக்குச் சென்று புத்தகங்கள் திருமண பரிசளிக்க வாங்குவார்கள். மணப்பெண்-மணமகனின் பெயரைச் சொன்னால், அந்த திருமணத்திற்கு எந்த புத்தகங்கள் பரிசளிக்க வாங்கிச் சென்றுள்ளார்கள் என்ற விவரங்களை கடைக்காரர் தெரிவிப்பார். அதன் மூலம் மற்றவர் வாங்காத புத்தகத்தை அம்மணமக்களுக்கு பரிசளிக்க வாங்கிச் செல்வார்கள். ஒரே புத்தகத்தை அனைவரும் வாங்கிச் சென்று பரிசளிக்காதிருக்க, அனைத்து நல்ல புத்தகங்களும் மணமக்களை சென்றடைய அந்தக் கடைக்காரர் செய்த அந்த உத்தி இவருக்குப் பிடித்திருந்தது. அதையே பின்னாளில் தன் வியாபார உத்திக்கும் மூலதனமாக்கினார்.

மணப்பாறையில் ஜவுளிக்கடையில் இவர் இருக்க, இவரின் மூத்த சகோதரர் கோவை ஜவுளிக்கடையில் வேலையில் இருக்க, இருவரும் ஒன்றாக இருக்கலாமே எனத் தோன்றியது. அதற்காக 16 வயதில் கோவைக்கு வந்தார். ஒரு ஜவுளிக் கடையில் வேலைக்கு சேர்ந்தார். பணி முடிந்தால் போதும் நூலகத்திற்கு சென்று விடுவார். அங்கே சரஸ்வதி என்ற நூலகர் இவரின் வாசிப்பு ஆர்வத்தைப் பார்த்து தேர்ந்தெடுத்த நூல்களாய் எடுத்து வாசிக்க கொடுப்பார். அதில் இவர் வாசிப்பு மேலும் தீவிரப்பட்டது.

புதுமைப் பித்தன், குபரா, ஜெயகாந்தன், கல்கி, நா.பார்த்தசாரதி இப்படி கலந்துகட்டி படித்துப் படித்து அந்தப் புத்தகமாகவே மாறிப்போனார்.
3 வருடம் ஜவுளிக் கடையில். அதிலிருந்து பிறகு விடுபட்டு பக்கத்திலிருந்த செலக்ட் எம்போரியம் என்ற பல்பொருள் அங்காடிக்கு வேலைக்கு சென்றிருக்கிறார். இவர் அனுபவசாலி என்பதால் அக்கடைக்காரர் முழுப் பொறுப்புக்கும் இவரையே விட்டிருக்கிறார்.

பலரும் அக்கடைக்கு 'இவரே முதலாளி' என்று சொல்லும் அளவு செல்வாக்கு இருந்திருக்கிறது. அங்கேயே இவருக்கு இருந்த புத்தக ஆர்வத்தால் ஒரு பகுதி அலமாரியில் தான் வாசித்ததில் பிடித்த நூல்களை வாங்கி விற்பனைக்கு வைத்துள்ளார். அதை மட்டும் தன் சொந்த வியாபாரமாகவே பார்த்திருக்கிறார். ஜெயகாந்தன், மீரா, மேத்தா, புவியரசு, சி.ஆர்.ரவீந்திரன், சிற்பி, பிரதிபா ராஜகோபாலன், ராஜேஷ்குமார். இவர்கள் பலரும் இங்கே வந்து போவது வாடிக்கையானது.

பத்து வருடம் அந்தக் கடையில். பிறகு இவரே சொந்தமாக ஒரு பல்பொருள் கடை ஆரம்பித்துள்ளார். அதிலும் புத்தகங்கள். இதற்கிடையில் நா.பாவின் தீபம் இதழுக்கு கோவை பகுதி முகவராகவும் ஆனார். அதில் புறப்பட்ட புத்தக விற்பனை வேகம் அதுவே 'விஜயா பதிப்பகம்' ஆனது. இன்று மூன்று தளங்களில் கோடிக்கணக்கான நூல்கள். லட்சக்கணக்கான டைட்டில்கள். இவரின் விஜயா பதிப்பகம் மட்டும் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை பதிப்பிக்கும் தன்மைக்கு மாறியிருக்கிறது.

மு.வ, கு.அழகிரிசாமி, கண்ணதாசன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, கவிஞர் மீரா. சுஜாதா, கவிக்கோ அப்துல்ரகுமான், வ.விஜயபாஸ்கரன், வானதி திருநாவுக்கரசு, நா.மகாலிங்கம், பழனியப்ப செட்டியார் போன்றோருடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அவர்களை எல்லாம் தம் கடைக்கு வரவழைப்பதும், அவர்களைக் கொண்டு இலக்கியக் கூட்டங்கள் நடத்துவதும் அன்றாட வாடிக்கையானது.

அதன் தொடர்ச்சி தமிழகத்திலேயே 'வாசகர் திருவிழா' என்ற பெயரில் கோவையில் புத்தகக் கண்காட்சியை 1970-களில் தொடங்கியிருக்கிறார். அதற்கு வராத எழுத்துலக ஆளுமைகளே இல்லை எனலாம்.

சுருக்கமாகச் சொன்னால் 'வாசகர் திருவிழா', 'புத்தகக்கண்காட்சி' என்று இன்றைக்கு சென்னை, மதுரை, ஈரோடு, கோவையில் நடக்கும் புத்தகத் திருவிழாக்களுக்கெல்லாம் முன்னோடி இவர் நடத்திய இந்த வாசகர் திருவிழாக்களே. தான் சந்தித்த ஆளுமைகளை, அவர்கள் தந்த ஆத்மார்த்தமான நட்பை பற்றி 'இதயம் தொட்ட இலக்கியவாதிகள்' என்ற நூலை அண்மையில் எழுதினார். அது 'அமுதசுரபி' மாத இதழில் தொடராக வெளிவந்து 'வானதி பதிப்பகம்' நூலாக்கம் செய்துள்ளது.

நா.பாவின் 'குறிஞ்சி மலர்' படித்து அதன் கதாநாயகன் அரவிந்தனின்பால் ஈர்க்கப்பட்டு, அந்தப் பெயரையே தன் மூத்த மகனுக்கு சூட்டியிருக்கிறார். அரவிந்தன் மருத்துவர், அடுத்த மகன் சிதம்பரம் பதிப்பகத்தை கவனித்துக் கொள்கிறார். மருமகள்கள் இருவர் தேவி, புனிதா. பேரன் பேத்திகள். இவர் மனைவி அன்னபூர்ணி ஆச்சி, பெயருக்கேற்றபடி தன் இல்லம் வந்த இலக்கியவாதிகளை விருந்தோம்பல் செய்வதில் கெட்டிக்காரர்.

கி.ரா உள்ளிட்ட பல்வேறுபட்ட எழுத்துலக மேதைகள் இவரின் கையால் சாப்பிடாமல் போயிருந்தால் ஆச்சர்யமே. ஏராளமான மூத்த எழுத்தாளர்களுக்கு தம் முன்னிலையில் மணிவிழா, முத்துவிழா நடத்தியிருக்கிறார்கள்.  ஆச்சி சில மாதங்கள் முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். வருடந்தோறும் சாகித்ய அகாடாமி விருது பெறும் எழுத்தாளருக்கு கோவையிலேயே முதல் விழா எடுப்பது அண்ணாச்சியின் மற்றுமொரு சிறப்பு.

'விஜயா வாசகர் வட்டம்' என்ற பெயரில் புதுமைப்பித்தன் விருது, மீரா விருது, வை.கோவிந்தன் விருது, ஜெயகாந்தன் விருது என புரவலர்களைக் கொண்டு மொத்தம் ஆறு விருதுகளை ஏற்படுத்தி ஆண்டுதோறும் வழங்கி வருகிறார். இதில் கி.ரா விருது மட்டும் ஆண்டுதோறும் எழுத்தாளர் ஒருவருக்கு ரூ. 5 லட்சம் விருதுத் தொகை வழங்கப்படுகிறது. அதை கடந்த இரண்டு ஆண்டுகளில் முறையே கண்மணி குணசேகரன், கோணங்கி ஆகியோர் பெற்றிருக்கின்றனர்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com