மகிழ்ச்சியைத் தருகிறது

மகிழ்ச்சியைத் தருகிறது
Published on

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

? "சென்னை புத்தகக் கண்காட்சியில்  12 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை" என்று பதிப்பாளார் சங்கம் அறிவித்திருக்கிறார்களே?
– வெங்கட் கிருஷ்ணன், சென்னை

! மகிழ்ச்சியான செய்தி. அதை விட  "இந்த ஆண்டு தமிழ் எழுத்தாளார்கள் 1 கோடியே 20 லட்சம் ராயல்ட்டி பெறப்போகிறார்கள்" என்ற எண்ணமே மிக மகிழ்ச்சியைத் தருகிறது.

? 'நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக ' தலைமை தேர்தல்  அதிகாரி கூறியுள்ளாரே?
– மாலினி சேகர், திருச்சி

! சில மாதங்களுக்கு முன் 'முடியாத காரியம்' என்று சொன்னவர் 5 மாநில தேர்தல்களின் கடைசி முடிவு வெளியாகும் முன்னரே இதைச் சொல்லியிருக்கிறார் என்பதை கவனிக்கும்போது, 'முடிவு யாருடையது' என்பதை ஊகிக்க முடிகிறது.  ஆனால்,  இதற்கான  மாநிலங்களின் ஒப்புதல், தேர்தல் சட்டவிதிகளில் திருத்தம் செய்யாமல்  இதை செய்யமுடியாது.

? 'சைக்கிளை நொறுக்கியது யோகியின் புல்டோசர்' என்று ஹேமமாலினி குதூகலித்துள்ளாரே?
-மாடக்கண்ணு பாப்பான்குளம்

! 'சின்ன  சைக்கிளை  நொறுக்க  ஒரு புல்டோசர் தேவைப் பட்டிருக்கிறது' என்று புரிகிறது.

?காங்கிரஸை காப்பாற்றும் சக்தி இப்போது யாரிடத்தில் இருக்கிறது?
– நெல்லை குரலோன

! நிச்சியமாக காந்தியிடம் தான், மூத்த காந்தி  தானும் தன் வாரிசு காந்திகளும்  கட்சியை மற்றவர்களிடம் கொடுக்கும் முடிவை எடுத்து ஒதுங்கினால்  கட்சி காப்பாற்றப்படும் வாய்ப்பு ஒரளவு  உண்டு.

? ஒரே தேர்தல் –
ஒரே நாடு திட்டத்தை  எடப்பாடி வரவேற்கிறாரே?
– கிருஷ்ணகுமார், சேலம்

! ஜெயலிலிதா எதிர்த்த விஷயங்களில் இவர் ஆதரிக்காமல் விட்டுவைத்தது இது ஒன்றுதான். 'அப்படி ஒரு தேர்தல் நடந்து பி.ஜே.பி. அலை ஒன்று எழுந்து  அதோடு தாங்களும் கரைசேர்ந்துவிடலாமே'  என்ற எண்ணமாகயிருக்கலாம்.

? மாநில தேர்தல்கள் நிலை  2024 நாடாளுமன்ற தேர்தல்களில் எதிரொலிக்குமா?
– கிருஷ்ணகுமாரி, திண்டுக்கல்

!அப்படித்தான் பெரும்பாலான ஊடகங்கள் தேர்தலுக்கு முன்னர் சொல்லிவந்தன. ஆனால் இந்திய தேர்தல்களின் வியூக எக்ஸ்பர்ட் பிரசாந்த் கிஷோர், இந்தியாவுக்கான யுத்தம் 2024ல் நடத்தப்பட்டு முடிவு எட்டப்படுமே தவிர மாநில தேர்தல்களை வைத்து அல்ல. இது மோடி அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். இருப்பினும், இந்த தேர்தல் முடிவுகளை வைத்து உளவியல் ரீதியிலான ஆதாயத்தை பெற மேற்கொள்ளப்பட்ட புத்திசாலித்தனமான முயற்சியாக பிரதமர் பேசும் பேச்சு இது.   'இந்த தவறான கருத்துக்கு உடன்பட்டு விடாதீர்கள்' என்று சொல்லிருப்பதையும் கவனியுங்கள்!

? தேசத்தையே ஆண்ட காங்கிரஸ் இப்போது இரண்டு மாநிலங்களில்தான் ஆட்சியிலிருக்கிறது?
– இக்பால், ஈரோடு

!  இந்தியாவையே ஆண்ட காங்கிரஸ் இன்று ராஜஸ்தான், சத்தீஷ்கர் தவிர வேறெங்குமே  ஆட்சியில் இல்லை என்பது உண்மைதான். இன்று இந்தியாவையே ஆளுகின்ற பா.ஜ.க., "ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஷ்கர், ஒடிஷா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியில் இல்லை" என்பதும் உண்மை.

? நடிகர் சங்க தேர்தல்?
– சம்பத்குமாரி சென்னை

! உலகில் எந்த நாட்டிலும் ஒரு தனியார் சங்கத் தேர்தலுக்காக இப்படி நாட்டின் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடிக்கொண்டிருக்க மாட்டார்கள். நேரம், பணம், உழைப்பு அனைத்தும் வீண்.

? 'பொன்னியன் செல்வன்' ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டார்களே?
– வளவன், சத்திய மங்கலம்

! படத் தயாரிப்பாளர்கள் எதுவும் சொல்லாத போதே பாகுபலி போல பிரம்மாண்டமான படம், சூப்பராகயிருக்கும், இல்லையில்லை…  சொதப்பலாகப்போகிறது, நடிகர்கள் தேர்வே  சரியில்லை… என்றெல்லாம்  ரசிகர்களால் பேசப்பட்டுக் கொண்டிருந்த, தயாரிப்பிலிருந்த ஒரு படம் இது. இப்போது  தயாரிப்பாளார்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் தேதியை அறிவித்திருக்கிறார்கள். படம் எப்படியிருந்தாலும்  தமிழ் வாசகர்கள் மனதில் நிலைத்து  நிற்கும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் புதினம் திரைப்படமாகிறது என்பது தமிழ் வாசகர்கள் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.

? 'இனிதான் பொற்கால ஆட்சி' –  என்கிறாரே மோடி?
– முத்துப் பாண்டி, சோழவந்தான்.

ஓ! "அப்படியானல் கடந்த 7  ஆண்டுகள் அவர் கட்சி தந்தது கற்கால ஆட்சியா" என்ன?

? "2024ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியப் பிடிக்கும்" என்கிறாரே அண்ணாமலை?
– கணேசன், திருவண்ணாமலை

! கனவு காண்பவருக்கு… அதை அனைவருக்கும் சொல்லும் உரிமையும் அவருக்கு உண்டு.  விதை முளைத்து… நிமிர்ந்து… இன்னும் செடியாக நிற்காத நிலையில்… "அது இரண்டாண்டில் விருட்சமாகிவிடும்,  கனிகள் கொடுக்கும்" என்று அவர் நம்புகிறார். உங்களையும் நம்பவைக்க முயற்சி செய்கிறார்.

? நீங்கள் அடிக்கடி ஆச்சரியப்படும் விஷயம்?
– ஜெயந்தி, திருவள்ளூர்

! பாடகி ஸ்ரேயா கோஷலின்  குரல்,  இந்த பின்னணிப் பாடகி ஹிந்தி தவிர வேறு  மொழியே தெரியாத நிலையில் பல மொழிப் பாடல்களை உணர்வு பூர்வமாகப் பாடுவதுதான்!

ஒரு தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெற்ற வெற்றியினால்  முதலில்  ஹிந்தியிலும், பின்னர்  தென்னிந்திய மொழிகளிலும் கடந்த 20 ஆண்டுகளாகப் பாடும் இவரின் குரல் வளமும் மிகச்சரியான உச்சரிப்பும் பிரமிக்க வைக்கிறது.   மொழி, உச்சரிப்பு, இவைகளைத் தாண்டி எந்த மொழியில் பாடினாலும் அந்நியம் இல்லாதது ஸ்ரேயாவினுடைய குரல். "இந்த அந்நியமற்ற மொழி கடந்த குரல் மொழியை லதா மங்கேஷ்கர் கூடப் பெற்றிருக்கவில்லை" என்பதுதான் உண்மை.

"ஒன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை… ஒண்ணுமில்லை…" என்ற பாடலில் உருகிக்கொண்டிருக்கும்  தமிழ்நாட்டின் எங்கோ ஒரு கிராமத்தின் வெள்ளந்திக் குரலுக்குப் பின்னிருப்பது  ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து வந்த வடநாட்டுக் குரல் என்பதை  நம்ம முடிகிறதா?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com