0,00 INR

No products in the cart.

ஈடு!

சிறுகதை
– தஞ்சை ப்ரணா

ஓவியம்: தமிழ்

 

“பாராசிட்டமால் சிரப்பு இருக்கா?” என்ற நிதினை நிமிர்ந்து பார்த்த மருந்து கடைக்காரர்,

“குழந்தைக்கா… ஜுரமா?” என்றார்.

“ஆமாம் குழந்தைக்குத் தான்…எட்டு மாச குழந்தைக்கு” என்று மருந்துச் சீட்டை எடுத்து நீட்டினான் நிதின்.

பணம் கொடுத்து மருந்தை வாங்கிக் கொண்டு, கடை வாசலுக்கு வந்து பைக்கை ஸ்டார்ட் செய்ய, நந்தினி போன் செய்தாள். போனை எடுத்த நிதின் அவள் பேசுவதற்கு முன் –

“நந்தினி! மருந்து வாங்கிட்டேன்; இதோ வந்துகிட்டே இருக்கே…” இவன் முடிப்பதற்குள்-

“ஒன்னும் அவசரம் இல்லை, முன்ன வாங்கின மருந்தை கண்டுபுடிச்சு கொடுத்துட்டேன்; குழந்தை தூங்கிட்டான்; இவ்வளவு நேரம் அழுது இப்பத்தான் ஓஞ்சிருக்கான், பாவம்!”

“ஓ! அப்படியா சரி, நான் வந்துக்கிட்டே இருக்கேன்”

“ஒரு நிமிஷம் அதுக்குத்தான் போன் பண்ணினேன்; எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று கொஞ்சலாய் கேட்டாள்.

“என்ன எதையாவது வாங்க நினைச்சு மறந்துட்டியா?” என்றான் நிதின் நகைத்தபடி.

“ஆமாங்க! குழந்தைக்கு ரெண்டு நாளா உடம்பு முடியலையா அந்த டென்ஷன்ல முக்கியமான ஒரு விஷயத்தை மறந்துட்டேன்.., ப்ளீஸ் முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க”

“சொல்லு என்ன வேணும்…?”

“நீங்க என்.ஆர்.ஐ. லே-அவுட்-ல தான இருக்கீங்க?”

“ஆமாம்!”

“அங்க ரெண்டு மூணு சின்னச் சின்ன துணிக்கடை இருக்கு, ஏதாவது ஒன்னுல ஒரு புடைவை  வாங்கணும், ஒரு 500-600 ரேஞ்சுல காட்டன் புடைவை வேணும்.”

“புடைவையா…நானா…?” என்று இழுத்தான் நிதின்.

“எவ்வளவு தடவை என்கூட புடைவை கடைக்கு வந்திருக்கீங்க… ஒரு புடைவை  கூடவா வாங்கத் தெரியாது? இன்னிக்கு ஆடி வெள்ளி. உங்களுக்கே தெரியும், ஒவ்வொரு வருஷமும் நான் யாருக்காவது புடைவை வாங்கித் தருவேன்னு; நம்ம வீட்டுக்கு வாரா வாரம் வந்து முருங்கைக் கீரை கொடுப்பாங்களே, அவங்களுக்கு இந்த வருஷம் புடைவை தரலாம்னு அவங்களை வரச்சொல்லியிருக்கேன்; போன வாரமே அவங்ககிட்ட சொல்லிட்டேன்; இன்னும் அரைமணி நேரத்துல வந்திடுவாங்க; அதான் நீங்க ஒரு புடைவை வாங்கிட்டு…”

“அப்படியா…..” என்று இழுத்த நிதின் “சரி வாங்கிட்டு வரேன்!” என்றான்.

“ஏதாவது சந்தேகம் வந்தா போன் பண்ணுங்க… சரி குழந்தை சிணுங்கறான், நான் போன்ல பேசுறது டிஸ்டர்ப் பண்ணுது போல… வெச்சிடறேன்..” போனை கட் செய்தாள் நந்தினி.

போனை வைத்த நிதின், பைக்கை ஸ்டாண்ட் போட்டுவிட்டு மருந்துக் கடைக்கு கொஞ்சம் தள்ளி பக்கத்திலிருந்த ஒரு சிறிய துணிக்கடைக்குள் நுழைந்தான்.

சிறிய கடைதான். உள்ளே இருப்பவர் வெளியே வந்தால்தான் அடுத்தவர் உள்ளே போக முடியும். ஆதலால் கொஞ்சம் கடை வாசலில் காத்திருந்தான். உள்ளே ஒரு கிராமத்துப் பெண்மணியும் அவளது மகள் வயது கொண்ட இளைஞியும் ஒரு புடைவையைக் காட்டி கடைக்காரரிடம் கன்னடத்தில் பேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

(அதன் தமிழாக்கம்…)

“சொன்னா கேளுங்கம்மா… இது 900/- ரூபாய் குறைஞ்சு வராது.  10% தள்ளுபடி போகத்தான் ரூ900/-“

“என்னப்பா நீ இதே புடைவையை ஒரு மாசத்துக்கு முன்ன 700 ரூபாய்க்கு வாங்கினேன்; அதே விலைக்குக் கொடு”

“வராது…” என்றார் கடைக்காரர் கறாறாக.

“எல்லாம் வரும் வரும்… நாளை பின்ன உன் கடைக்கு நாங்க வந்து வியாபாரம் பண்ண வேண்டாமா? பில்லை போடு” என்று பேசிக்கொண்டே அந்த புடைவையை மடித்து தன் கையிலிருந்த கட்டைப் பையில் திணித்துக்கொண்டார் அந்தப் பெண்மணி.

கடைக்காரர் அழாத குறையாக “ஒரேடியா 1000 ரூபா புடைவையை 700 ரூபாய்க்கு குறைச்சு கேட்டா எப்படி?” என்று முணுமுணுத்தார். இந்த வாக்குவாதம் முடியும்பாடாய் தெரியவில்லை.

நிதின் வேறு கடையைப் பார்க்க நினைத்து கடை வாயிலை விட்டு இறங்கிய போது, “சார் .. சார்…!” என்று அவனை நிறுத்திய கடைக்காரர்,

“700 ரூபா பணத்தைக் கொடுத்துட்டு இடத்தைக் காலி பண்ணு… மத்த வியாபாரத்தைக் கெடுக்காத” என்று வேண்டா வெறுப்பாய் பில்லைப் போட்டு அந்த பெண்மணி தந்த பணத்தைக் கல்லாப் பெட்டியில் போட்டுவிட்டு நிதினைப் பார்த்து,

“கியா ச்சாஹியே?” என்றார்…

“மேரே கோ…சாரி கோ…” என்று இழுத்தான்.

“சார் தமிழா சார்! எனக்கும் தமிழ் தெரியும்” என்று சிரித்தார். மேஜை மீது சிதறிக் கிடந்த புடைவை குவியலை நகர்த்தி வைத்துக் கொண்டே, “பாருங்க சார்! அந்த அம்மாவுக்குப் புடைவை வித்ததில எனக்குக் கிட்டத்தட்ட முந்நூறு ரூபா நஷ்டம்; என்ன பண்றது வாடிக்கைக்காரங்களா போயிட்டாங்க… சரி சார் உங்களுக்கு என்ன வேணும்?” கடைக்காரரின் குரலிலும் கண்ணிலும், ‘தான் அந்த கிராமத்து பெண்மணியிடம் ஏமாந்துவிட்டோமோ’ என்ற வலி தெரிந்தது.

“ஒரு காட்டன் புடைவை வேணும்” என்றான் நிதின்.

“ப்யூர் காட்டனா, போச்சம்பள்ளியா, எது சார் வேணும்…?”

“போச்சம்பள்ளின்னா?”

“அது ஒரு வகை சில்க் காட்டன் சார்…!”

“அப்படியா அப்ப சில்க் காட்டனே கொடுங்க!”

“சரி சார்! என்ன கலர் வேணும்?”

அடடே அதை நந்தினிகிட்ட கேட்க மறந்துட்டோமே…என்று நினைத்தான், அது மட்டுமல்ல, பியூர் காட்டன், சில்க் காட்டன் இதற்கான வித்தியாசமும் அவனுக்குத் தெரியாது. எத்தனை புடைவை நந்தினி உபயோகப்படுத்துகிறாள்; இதுநாள் வரை இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் போயிட்டேனே என்று எண்ணிக்கொண்டே, நந்தினிக்கு போன் செய்தான்… போனை எடுத்த நந்தினி,

“என்னங்க குழந்தை முழிசிட்டான்; பால் கொடுக்கணும்… நீங்களே பார்த்து நல்லதா வாங்கிடுங்க”

“சரி!” என்று போனை வைத்த நிதின், கடைக்காரரைப் பார்த்து, “பச்சை கலர் இருக்கா?”

“இந்தக் காலத்துல யாரும் பச்சை விரும்பறதில்லை சார்” கடையில் ஸ்டாக் இல்லை என ஒப்புக்கொள்வதற்கு மனமில்லாத கடைக்காரர் இவனது ரசனையைக் கேள்விக்குள்ளாக்கினார்.

“அப்படியா? இப்ப என்ன மாதிரி நிறப் புடைவை அதிகம் போகுது?” என்றான் நிதின் அப்பாவியாய்.

“மெருண், சிவப்பு, மஞ்சள், நீலம்…. இதுதான் சார் எல்லாரும் விரும்பி வாங்குறாங்க” என தன் கடையில் இருக்கும் நிறங்களை மட்டும் சொன்னார் கடைக்காரர்.

“சரி, காட்டுங்க பார்ப்போம்”

“ஒரு நிமிஷம் சார்!” என்று கூறிவிட்டு

கடைக்கு உள்ளே இருந்த ஒரு சிறிய அறைக்குள் சென்று சில புடைவைகளை எடுத்து வந்தார்; மொத்தமே நான்கு புடைவைகளைத்தான் எடுத்துப் பிரித்துக் காண்பித்தார் கடைக்காரர்.

“சார் உங்களுக்காக ஸ்பெஷல்….இந்த மாம்பழ மஞ்சளை எடுத்துக்கோங்க சார்! அட்டகாசமான புடைவை. பல பேர் விரும்பி எடுக்குற புடைவை. நல்லா உழைக்கும்” என்றார் கடைக்காரர்.

“இதுதான் சில்க் காட்டனா?”

“ஆமாம் சார்.”

“எப்படி இது சில்க் காட்டன்னு நம்புறது?” புத்திசாலித்தனமாய் கேட்பதாய் நினைத்து கேள்வி தொடுத்தான் நிதின்.

“சார் உண்மையிலேயே இது சில்க் காட்டன்தான் சார்!” என்று அதில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை காட்டினார் கடைக்காரர். ரூ 1,100என்று போட்டிருந்த ஸ்டிக்கர் பிய்ந்துவிடும் போல் இருந்தது.

“ரொம்ப அதிகமா இருக்கு… என் பட்ஜெட் 600 ரூபாதான்” என்றான்.

“இல்ல சார்… இதுக்கு 10% கழிவு போக ரூ. 990 தான்”

“அப்படியிருந்தாலும் என்னோட பட்ஜெட்டைவிட அதிகமா இருக்கே?”

“சரி சார், 900 ரூபா… கடைசி…ஓகேவா?”

பார்க்கப் புடைவை நன்றாகத்தான் இருந்தது. பாதி மனதோடு

“இதுக்கு மேல குறையாதா?” என்றான்.

“சார் இதுவே கம்மிதான் சார்!”

 எதுக்கும் ஒரு தடவை நந்தினியைக் கேட்டுவிடுவோம் என முடிவு செய்து போன் போட்டான். அவள் எடுக்கவில்லை. ‘குழந்தையோடு இருப்பாள் போலிருக்கு’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

“சார் நல்ல புடைவை….. கடைசிப் பீஸ், யோசிக்காம எடுத்துக்கோங்க!” என்றார் கடைக்காரர்.

ஒரு நிமிடம் யோசித்தவன், ‘சரி, ஒருத்தங்களுக்கு வெச்சு கொடுக்கற புடைவை இது; அதுல ஏன் கஞ்சத்தனம் பண்ணிக்கிட்டு. நல்லாவே பணம் கொடுத்து வாங்குவோம்’ என முடிவு செய்தான். அதுமட்டுமல்ல, குழந்தை பிறந்து நந்தினி தாய்ப்பால் சுரக்காமல் கஷ்டப்பட்ட நாட்களில் பக்கத்து வீட்டுப் பாட்டி “தினமும் கொஞ்சம் முருங்கக்கீரை சேர்த்தா பால் வரும்” என்று சொல்லி, இந்தக் கீரைக்கார அம்மாவை ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார்கள். மழையோ குளிரோ எதையும் பொருட்படுத்தாமல் கடந்த ஆறு மாதங்களாய் வாரம் தவறாமல் இரண்டு கட்டு முருங்கக்கீரையை வீட்டுக்கே கொண்டு கொடுக்கும் அந்த அம்மாவுக்கு வாங்கும் புடைவையில் கணக்குப் பார்க்க விரும்பவில்லை நிதின்.

“சரி, பில் போடுங்க; ஒருமுறை நல்லா பிரிச்சு காட்டுங்க, டேமேஜ் எதுவும் இல்லையான்னு பார்த்துக்கறேன்”

பிரித்துக் காட்டி, அதை நன்றாக மடித்துப் பேக் செய்தார்.

“ஒரு கவர் எஸ்ட்ராவா கொடுங்க” என்று கேட்டு வாங்கிவிட்டு, மறக்காமல் கவர் கேட்டு வாங்கியதை எண்ணிப் பெருமிதப்பட்டான்.

பில் பணம் ரூ900/- வாங்கிக்கொண்ட கடைக்காரர், “அடிக்கடி வாங்க சார்!” என்றார் புன்னகைத்தபடி.

புடைவையை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் நிதின்.

“வாங்க… வாங்க… சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க… இப்பத்தான் நம்ம கீரைக்கார அம்மாவும் வந்தாங்க… கொண்டாங்க புடைவையை” என்று சொல்லி அவள் கையிலிருந்த குழந்தையை அவனிடம் கொடுத்துவிட்டு புடைவையை வாங்கிக் கொண்டாள் நந்தினி.

பார்த்த மாத்திரத்தில் அவளுக்குப் பிடித்திருந்தது.

ஒரு தட்டில் வெற்றிலை, பழம், பூ, நிதின் வாங்கி வந்த புடைவை எல்லாவற்றையும் வைத்து, 101 ரூபாய் பணமும் வைத்து அந்த அம்மாவுக்குக் கொடுத்தாள். கீரைக்காரம்மா மன நிறைவோடு அதை வாங்கிக்கொண்டு புறப்பட்டுப் போனாள்.

“பரவாயில்லையே நான் கூட என்னமோ நெனச்சேன்… உங்களுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு… ஆனா சூப்பரா புடைவை வாங்கிக்கிட்டு வந்து அசத்திட்டீங்க…!” என்று பாராட்டிய நந்தினி, குழந்தையை அவனிடமிருந்து வாங்கியபடியே,

“ஆமாம்! புடைவை எவ்வளவு ஆச்சு?”

“எவ்வளவு இருக்கும்னு நீயே சொல்லேன்?”

“என்ன பியூர் காட்டன், சில்க் காட்டன் இதையெல்லாம் கம்பேர் பண்ணினா நீங்க வாங்கின பெங்காலி காட்டன் கம்மி விலையாத்தான் இருக்கும்; ஒரு 500 இல்ல 600 ரூபா இருக்கும்… கரெக்ட்டா?”

“என்னது, இது பெங்காலி காட்டனா? அப்படி ஒரு வெரைட்டி இருக்கா?” தலை லேசாகச் சுற்றியது நிதினுக்கு.

“ஆமாங்க பார்த்தாலே தெரியுது, நீங்க வாங்கினது பெங்காலி காட்டன் புடைவைதான்; நல்ல மெலிசான புடைவை; விலையும் கம்மியா நம்ம நடுத்தரப் பட்ஜெட்டுக்கு ஏத்தா மாதிரிதான் இருக்கும்…சொல்லுங்க எவ்வளவு கொடுத்து வாங்கினீங்க, 600 ரூபாயா?” என்றாள் நந்தினி.

“பாருங்க சார்! அந்த அம்மாவுக்குப் புடைவை வித்ததுல எனக்குக் கிட்டத்தட்ட முந்நூறு ரூபா நஷ்டம்; என்ன பண்றது வாடிக்கைக்காரங்களா போயிட்டாங்க…”  கடைக்காரரின் இந்த வார்த்தைகள் நிதினை குடைய ஆரம்பித்தது.

‘அடப்பாவி அந்த முந்நூறு ரூபாவை ஈடுகட்ட நான்தான் கிடைச்சேனா’ என்று முணுமுணுத்தான் நிதின்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ரெய்டு

3
  “சரிங்க அண்ணா வெச்சுடறேன்...” போனை டேபிள் மேல் வீசி விட்டு “அம்மா அம்மா...” என அலறினபடி கிச்சனுக்கு ஓடினான் செந்தில். குக்கரின் மூன்றாவது விசிலுக்காகக் காத்திருந்த பார்வதி எரிச்சலுடன் திரும்பினாள். ‘என்னடா’ என்றது பார்வை. “அப்பாவோட ஆபிஸ்ல...

விசிட்டிங் கார்ட்

1
அந்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றபோது மணி நாலரை இருக்கும். வண்டி ஒரு குலுக்கலுடன் நின்றதால் மேல் பர்த்தில் படுத்திருந்த வேதமூர்த்தி திடுக்கிட்டு எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்தார். விழுப்புரம் போல இருந்தது....

மங்களூர்.மாதுவும் மங்குஷ் பேட்டும்

0
  மன்னார்குடி குண்டப்பா விஸ்வநாத்ன்னு பெயர் வாங்கிய கோச். கட்ட கோபால் இப்படி கவலையா, அதுவும் அவன்வீட்டு, இடிஞ்ச சுவரில் உக்கார்ந்து, யாரும் பார்த்தது இல்லை. மங்களூர் மாதுவும் கேப்ஸ்ம் சீனுவும். "கவலைப்படாதே சகோதரா நம்ம...

மஞ்சரி சுடப்பட்டாள்

 31.10.1984- புதன் கிழமை : காலை 9.45 மணி ‘இந்திய பொருளாதாரப் பிரச்னைகள்’. தீபக் ஷிண்டே எழுதியது. அதைப் படித்தாலே போதும்.  பாஸ் செய்துவிடலாமென்று சொல்லி  சுந்தர் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தான். அதை வாங்கிய நேரம், சந்திரன்...

வியாபார மொழி

3
சிறுகதை ஆர்.நடராஜன்   பொது கூட்டத்தில் பேசிய மொழி வளர்ச்சி மந்திரி “வடவர் மொழியும் வேண்டாம், வடவர் வழியும் வேண்டாம்... நாம் நாமே நமக்கு நாமே” என்று உரக்க முழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார். நல்ல பசி... “சாப்பிட...