0,00 INR

No products in the cart.

புண்ணியம் தேடி…

சிறுகதை

– தனுஜா ஜெயராமன்

ஓவியம்: தமிழ்
 

 

“சார், இங்க இறந்தவங்களுக்கு ஈமச்சடங்கு செய்வாரே கணபதி ஐயர், அவர் வீட்டிற்கு எந்த பக்கம் போகணும்?”

கேட்டவனை ஏற இறங்கப் பார்த்தவர்…”நேரா போங்கோ… வலது பக்கம் ஒரு பிள்ளையார் கோயில் வரும், இடது புறம் திரும்பினா கணபதி ஐயர் வீடு தான்”

“ரொம்ப நன்றிங்க சார்!”…

“ஆமா!…நீங்க ஏன் அவரை தேடுறேள்?”

“ஈமக்காரியம் பண்ணணும்” என்றவனை ஏற இறங்கப் பார்த்தபடி,  “இவனுக்கும் கணபதி ஐயருக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்” என முணுமுணுத்துக் கொண்டே செல்வது காதில் கேட்டது.

“இங்க கணபதி ஐயர்ங்குறது?”

“நானேதான்!…என்ன வேணும், உங்களுக்கு?”

“ஈமக்காரியம் செய்யணும்!”…என்றான் தயங்கியபடி…

யாருக்கு?

“ஒரு தம்பதிக்கு?” என்றவனைச் சந்தேகத்துடன் பார்த்தார்.

“அவங்களும் உங்க ஆளுங்கதான் சார்!..அவங்களுக்கு இப்போதைக்கு யாருமில்லை, அதான் நான் செய்யறேன்”…

“சரி” எனத் தலையாட்டினார்.

“எவ்வளவு பணம் கொடுக்கணும்”… என பேக்கெட்டில் அவசரமாய் கைவிட்டவனை…

“தம்பி!… வையுங்க!… அப்புறம் தந்தா போறும்”…

சற்று தயங்கியவன்…

“சார்! நீங்கத் தடுப்பூசியெல்லாம் போட்ருக்கீங்களா? உங்களுக்கு இதில ஏதும் பிரச்னை இல்லையே… இறந்தவங்க கொரோனா பேஷண்ட், அதான் கேட்கறேன் “… எனத் தயங்கியவனிடம்…

“அதெல்லாம் போட்டிருக்கேன்… ஏதும் பிரச்னையில்லை”

” ஆனாலுமே ..டபுள் மாஸ்க் போட்டுக்கிட்டு வாங்க..என்றான் பணிவுடன்”

“சரி வாங்க”… என அவன் அழைத்துச் சென்ற இடம் மாநகராட்சி சுடுகாடு…

ஏற்கெனவே ப்ளாஸ்டிக்கால் சுற்றப்பட்டிருந்த உடல்களைக் காட்டி…”இவங்களுக்குத்தான் ஈமக்காரியம் செய்யணும்… எனக்கு இந்த சம்பிரதாயம் சடங்கு பத்தி எதும் தெரியாது. நீங்களா பார்த்துச் செய்யுங்க” என தயங்கியவாறு….

“எதுக்கும் கொஞ்சம் தூரமா தள்ளியே நின்னு செய்யுங்க”… என்று அக்கறையாய் சொன்னவனை… திரும்பி உற்றுப் பார்த்தவாறு ஈமக்காரியத்திற்கான மந்திரங்களைச் சொல்லத் தொடங்கினார்.

மந்திரங்களை உச்சரித்து முடித்ததும் பார்த்தால் அவனைக் காணவில்லை… சுற்றிலும் தேடியவரின் கண்களில்…தூரமாய் நின்றுக்கொண்டு அவன் மொழியில் ஏதோ வேண்டிக்கொண்டிருந்தான்.

“ஆச்சா சாமி!.. நேரமாச்சு!” என்ற வெட்டியானின் குரலில் கலைந்தவன்…

“இதோ வரேன்!”… என்று அவசரமாக ஓடி வந்தான்..

அந்தம்மாவை மொதல்ல புதைக்கறீங்களா?….சுமங்கலியா போகணும்ங்குறது அவங்களோட கடைசி ஆசையாம்…என்றான் தயங்கிக் கொண்டே.

அவனைத் திரும்பித் திரும்பி பார்த்தவாறு சென்றான் வெட்டியான்..

எல்லாம் முடிந்தது…

வெட்டியானிடம் – ’எவ்வளவு தரணும் உங்களுக்கு?’

“நீ குடுக்கறத குடுபா” என்றவனிடம் பணத்தைத் திணித்து… நினைவு வந்தவனாகச் சாரி சார்!… உங்களை வீட்லையே விட்டுடறேன் என வண்டியைக் கிளப்பினான்.

“என்னப்பா!… இந்த பக்கம் போற”…

சார்!….”ஒரு சின்ன பொண்ணு… அதுக்கு என் உதவி தேவை… காத்துக்கிட்டிருக்கும்… அதுக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிடலாமா”…

ம்…ம்

வண்டியைக் கண்டதும் அழுது கொண்டே வாசலில் அமர்ந்திருந்த இளம்பெண் ஓடி வந்தாள்.

“எல்லாம் நல்லபடியா முடிச்சுட்டோம். நான் சாரை வீட்ல விட்டுட்டு வந்துடுறேன்.  மாநகராட்சியில் சர்டிபிகேட் எல்லாம் வாங்கிட்டேன்.
டெத் சர்டிபிகேட் என்கிட்டதான் இருக்கு… நீ சாப்டியா?”…

“இல்லை” … எனத் தலையாட்டியவளிடம்

”தெரியுமே!…” என சில உணவுப் பொட்டலங்களை நீட்டினான்.

தயங்கியவளிடம்… “வெறும் தயிர்ச்சாதம்தான் பயப்படாம சாப்பிடு. இவரை விட்டுட்டு வந்திடுறேன்”…என்றான் ஆதரவாய்…

வாயைப் பொத்திக் கொண்டு அழுதவளை…அழாத! . .இனிமே தான் நீ தைரியமாய் இருக்கணும்!…கையில காசு ஏதும் வைச்சிருக்கியா?

திருதிருவென விழித்தவளிடம்… கையில் காசை திணித்துவிட்டு…வண்டியைக் கிளப்பினான்..

“பாவம் சார்! ஒரே நேரத்தில் அப்பா அம்மாவை இழக்குறதெல்லாம் ரொம்பக் கொடுமை…அதுவும் இந்த சின்ன வயசுல”

“பகவானே!…அந்தக் கொழந்தைக்கு நீ தான் துணையிருக்கணும்…” என்று கடவுளை வேண்டியவர்..ஆமா அந்த பொண்ணு யாருப்பா?..

“இப்ப ஈமச்சடங்கு பண்ணீங்களே அவங்க பொண்ணுதான் சார்”…

“ஓஓஓ!… இது நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணா?”

“சேசே!”….என்றான் அவசரமாக. “தங்கச்சி மாதிரி சார்!”

“ஓஓஓ!… தெரிஞ்ச பொண்ணா?”

“தெரியாத பொண்ணு சார்!”… என்றவனை அதிர்ச்சியுடன் நோக்கினார்.

“அந்த பொண்ணு யார்னே எனக்குத் தெரியாது. காலையில் ஜி.எச். வாசலில் கதறிக்கிட்டு கெடந்தது. நானும் என் ஃபிரண்ட் பீட்டரும் இங்க வாலண்டியர்ஸ் சார். தெனமும் ஆஸ்பத்திரிக்கு வருவோம்”.

தொடர்ந்தவனை அமைதியாகப் பார்த்தார்.

“ஏதோ ஒரு ஊர் பேர் சொல்லிச்சு சார், மறந்துட்டன்… அடுத்தடுத்து அப்பா அம்மா இறந்து போக அதுக்கு என்ன செய்யறதுன்னே புரியலை…. அது சின்ன பொண்ணு இல்லையா? யாரையும் தெரியலை இங்க..ஒண்ணும் புரியாம நின்னுக்கிட்டிருந்தது”.

“நாங்கதான் அந்த பொண்ணுக்கிட்ட கையெழுத்து வாங்கி, பாடியை க்ளெயிம் பண்ணி அடக்கம் பண்ணி தர்றோம்னோம்… இந்த பொண்ணோட தங்கை வேற உள்ளே அட்மிட் ஆகி கெடக்கா!… பாவம்…”

“அச்சச்சோ பகவானே! இப்ப அவ எங்க போவா?”

“பொண்ணுக்கிட்ட நம்பர் வாங்கி சொந்தக்காரங்ககிட்ட பேசிட்டேன் சார்! நாளைக்கு அவங்க வந்து பாத்துக்குவாங்க… இன்னைக்கு பொழுதுக்கு நாங்க இருக்கோம்… என் கூட வாலண்டியர் பண்ற இன்னொரு பொண்ணை அறிமுகப்படுத்தி வைச்சிருக்கேன். உதவின்னா உடனே போன் பண்ண சொல்லிட்டேன் சார்…. எனப் பேசிக்கொண்டே போனவனை அதிசயமாகப் பார்த்தார்.

“பின்ன!… உன் தங்கச்சி மாதிரின்னு சொன்னியேப்பா”…

“அவங்க அப்பா, அம்மாக்கு மகன் ஸ்தானத்தில் இருந்து ஈமகாரியம் பண்ணியிருக்கோம்…  அப்ப நாங்க அந்த பொண்ணுக்கு அண்ணன் தானேங்க சார்!”… என்றான் வெள்ளந்தியாக…

பேசிக்கொண்டே வந்ததில் வீடு வந்து விட்டது… இறங்கியதும்…

“சார்!… எவ்வளவு தரணும்” என்றான் ஞாபகமாய்.

அவனை உற்று நோக்கியவர், “நான் ஏழைதான்! கஷ்ட ஜீவனம் தான்!… ஏதோ உன்னளவுக்கு முடியாவிட்டாலும் என்னால முடிஞ்சது இதாவது செய்யறேனே… உன் புண்ணியத்தில் கொஞ்சம் கொடு அது போதும்”…

“ரொம்ப நன்றிங்க சார் “… என நெகிழ்ந்தவனிடம்,

“நான்தான்ப்பா உனக்கு நன்றி சொல்லணும்”…என்று அவன் தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார்.

“வரேன் சார்!”… என்று கிளம்பியவனிடம்…

“ஆமா!… கேட்க மறந்துட்டேன்… உன் பேர் என்னப்பா”…என்றார் வாஞ்சையுடன்..

“ரியாஸ் அகமதுங்க சார்” … என்றபடி விர்ரென வண்டியைக் கிளப்பிப் பறந்து போனான்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ரெய்டு

3
  “சரிங்க அண்ணா வெச்சுடறேன்...” போனை டேபிள் மேல் வீசி விட்டு “அம்மா அம்மா...” என அலறினபடி கிச்சனுக்கு ஓடினான் செந்தில். குக்கரின் மூன்றாவது விசிலுக்காகக் காத்திருந்த பார்வதி எரிச்சலுடன் திரும்பினாள். ‘என்னடா’ என்றது பார்வை. “அப்பாவோட ஆபிஸ்ல...

விசிட்டிங் கார்ட்

1
அந்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றபோது மணி நாலரை இருக்கும். வண்டி ஒரு குலுக்கலுடன் நின்றதால் மேல் பர்த்தில் படுத்திருந்த வேதமூர்த்தி திடுக்கிட்டு எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்தார். விழுப்புரம் போல இருந்தது....

மங்களூர்.மாதுவும் மங்குஷ் பேட்டும்

0
  மன்னார்குடி குண்டப்பா விஸ்வநாத்ன்னு பெயர் வாங்கிய கோச். கட்ட கோபால் இப்படி கவலையா, அதுவும் அவன்வீட்டு, இடிஞ்ச சுவரில் உக்கார்ந்து, யாரும் பார்த்தது இல்லை. மங்களூர் மாதுவும் கேப்ஸ்ம் சீனுவும். "கவலைப்படாதே சகோதரா நம்ம...

மஞ்சரி சுடப்பட்டாள்

 31.10.1984- புதன் கிழமை : காலை 9.45 மணி ‘இந்திய பொருளாதாரப் பிரச்னைகள்’. தீபக் ஷிண்டே எழுதியது. அதைப் படித்தாலே போதும்.  பாஸ் செய்துவிடலாமென்று சொல்லி  சுந்தர் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தான். அதை வாங்கிய நேரம், சந்திரன்...

வியாபார மொழி

3
சிறுகதை ஆர்.நடராஜன்   பொது கூட்டத்தில் பேசிய மொழி வளர்ச்சி மந்திரி “வடவர் மொழியும் வேண்டாம், வடவர் வழியும் வேண்டாம்... நாம் நாமே நமக்கு நாமே” என்று உரக்க முழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார். நல்ல பசி... “சாப்பிட...