ஒரு அணையின் வலிமை என்பது அதன் வயதில் இல்லை

ஒரு அணையின் வலிமை என்பது அதன் வயதில் இல்லை
Published on

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

? முல்லைப்பெரியார் அணை  உண்மையிலேயே  விரைவில் உடையும் நிலையில் இருக்கிறதா?
–  செல்வா, பெரம்பூர், சென்னை
! 'சமூக ஊடகங்களில் தவறாக ஒரு விஷயத்தைச் சொல்லி பயத்தை உருவாக்கவும், அதன் மூலம் அரசியலும் செய்ய முடியும்' என்பதின் எடுத்துக்காட்டு இது. இந்த அச்சமும் சர்ச்சைகளும் அவசியமற்றது. ஒரு அணையின் வலிமை என்பது அதன் வயதில் இல்லை பாராமரிப்பில்தான் இருக்கிறது. சரியான பாராமரிப்பும் பாதுகாப்பு நிலையும் பலமுறை உறுதி செய்யபட்டிருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் இம்மாதிரியான வயதான அணைகள் வலிமையாக  இருக்கின்றன.

? "துப்பறியும் சங்கர்லால் மாதிரி கோட் மாட்டிக்கொண்டு முதல்வர் செய்கிற ஆய்வால் எந்தப் பயனும் இல்லை" என்கிறாரே ஜெயக்குமார்?
– ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி
! அவர் தமிழ்வாணன்  நாவல்களைப் படித்ததில்லை எனத் தெரிகிறது. தமிழ்வாணனின் படைப்பான துப்பறிவாளார் சங்கர்லாலை அவர் ஒருபோதும் அம்மாதிரி கோட் அணிபவராக வர்ணித்ததில்லை.

? கீழ்ப்பாக்கம் தோட்டத்தில் மயங்கிக் கிடந்த இளைஞரை  தமது தோளில் சுமந்து ஆட்டோவில் ஏற்றிய இன்ஸ்பெக்டர்,  ஏன் அருகிலிருந்தவர்களின் உதவியை நாடவில்லை?
– சண்முகசுந்தரம், மதுரை
! முதலுதவி பற்றி அறிந்தவர்களுக்குத்தான் தெரியும் அவர் செய்தது சரி என்று.  விபத்தில் அடிபட்டவர்களை அவர் தூக்கிய மாதிரி  சரியான முறையில் தூக்கி வரவில்லை என்றால், அடிப்பட்ட இடங்களில் காயங்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் போய்விடக்கூடும். அந்தச் செயலின் மூலம் ராஜேஸ்வரி தனது துணிச்சலை,  புத்தி சாதுர்யத்தை மட்டுமில்லை; தான் பெற்ற பயிற்சிகளையும்  காட்டியிருக்கிறார். அவரைப் பாராட்டுவோம்.

? மழை – வெள்ளம்  நேரத்தில் தராசாருக்கு  எப்படி நேரம் போனது?
– உஷா, மதுரை
! எல்லா சானல்களிலும் கொட்டிய "செய்தி மழை"யில் நனைந்துதான்!

? 'சாலையில் நின்று செல்ஃபி எடுத்து போட்டோ போட்டுட்டு  போறதுதான் தமிழகத்தில் அரசியலாக மாறி வருவதாக' தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே?
– நெல்லை குரலோன்,  நெல்லை
! முழங்காலளவு தண்ணீரில் படகில் அமர்ந்து அதை இழுக்கச் செய்து, அவர் டைரக்ட் செய்த விளம்பரப் படத்தின் "மேக்கின் வீடியோ" வெளியாகும் முன் அவர் சொன்னது இது.

? 'ஜெய் பீம்' படம் திரையரங்குகளில் ரிலீஸாகியிருந்தால் இந்த அளவு வெற்றிப் பெற்றிருக்குமா?
– ராஜேஷ், சென்னை
! நிச்சயமாக. OTT யில் வெளியாகி சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தை சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பலர் பார்க்கவில்லை. அதனால், திரையரங்குகளில் வெளியாகும்போது வெற்றிபெறும்.

? தமிழக நிதி அமைச்சரின் குரலை கேட்க முடியவில்லையே?
– ரஞ்சனி ராகவன், திருச்சி
! அவர் மிகச்சிறந்த மாணவர். பள்ளியின் தலைமை  ஆசிரியர்,  'இனி நீ அனாவசியமாகப்  பேசக்கூடாது' என்று  சொல்லி யிருப்பதைக் கேட்டிருக்கிறார்.

? அண்மையில் கேட்ட சிறந்த ஜோக்?
– பார்த்தசாரதி,  தூத்துக்குடி
! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, சென்னை நகரின் ஒரு பகுதிக்கு வெள்ள நிவாரணம் வழங்கச் சென்றபோது, அங்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட தேங்கியிருக்காததைக் கண்டு, "நான் வருகிறேன் என்பதை அறிந்த அதிகாரிகள்  தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி விட்டார்கள்" என்று சொன்னதுதான்.

?  'வெல்லம் – வெள்ளம்' என்ன வித்தியாசம் தராசாரே?
ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.
! இரண்டும் விரைவில் கரையக்கூடியது.  மனித உழைப்பால் உருவாவது வெல்லம். மனித உழைப்பை அழிப்பது வெள்ளம்.  இனிப்பது வெல்லத்தின் ருசி. கசப்பது வெள்ளத்தின் பசி!

? 'தாய்மொழியில் பேசுவதை மக்கள் பெருமையாகக்
கருத வேண்டும்'  என்கிறாரே  அமித் ஷா…?
– சம்பத்குமாரி,  திருச்சி
! மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அவர் இதைச் சொல்லியிருப்பது அவருடைய தாய் மொழியில் இல்லை.

? முனைவர் சுதா சேஷயனுக்கு இங்கிலாந்து அரசு விருது அளித்திருக்கிறதே?
– ஜோஷ், அயன்புரம்
! அவரைக் கெளரவித்திருப்பது  இங்கிலாந்து அரசில்லை.  இங்கிலாந்தில் அரசியின்  சாசனத்தால் 500 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அமைப்பு  'ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்'.  உலகின் பல நாடுகளிலிருக்கும் தலைசிறந்த மருத்துவ அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களில் சிலருக்கு அந்த அமைப்பின் ஃபெலோஷிப்  வழங்கப்படும். நம்மில் பலருக்கு ஆன்மீகப் பேச்சாளராக, தமிழறிஞராகத் தெரியும்  சுதா சேஷயன், ஒரு மருத்துவப் பேராசிரியர். மருத்துவப் புத்தகங்கள் எழுதியிருப்பவர். மருத்துவ முதுகலை மேற்படிப்பு மாணவர்களும் முனைவர் பட்ட ஆய்வாளர்களும் சமர்ப்பிக்கும் கட்டுரைகளை ஆய்வு செய்யும் தேர்வாளர்.  அவர் இங்கிலாந்து எடின்பர்க்கிலிருக்கும் ராயல் காலேஜின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற அழைக்கப்பட்டு,  அங்கு இந்தக் கெளரவம் அளிக்கப்பட்டிருக்கிறது. "இதைப் பெறும் முதல் இந்தியப் பெண் இவர்"  என்பது தமிழர்களுக்குப் பெருமை  சேர்க்கும் விஷயம். அதைவிட பெருமையான விஷயம் அவர் கல்கி குழும இதழ்களில் எழுதும் எழுத்தாளர்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com