0,00 INR

No products in the cart.

தேவ மனோகரி – 21

தொடர்கதை                                                                 ஓவியம் : தமிழ்

கே.பாரதி

 

னியாவின் வைவா.  ஹால் முழுவதும் நிறைந்திருந்தது. அந்தக் கூட்டத்தில் மணிகண்டன் இல்லை என்பதை கவனித்தாள் மனோகரி.

கிராமத்திலிருந்து இனியாவின் பெற்றோர் வந்திருந்தார்கள். இன்னதுதான் நடக்கிறது என்று புரியாவிட்டாலும்கூட அவர்கள் முகத்தில் ஒரு பெருமிதம்.

ஆரம்பத்தில் சற்றே பதற்றமாக இருந்தாள் இனியா. ஆனால் சமாளித்துக் கொண்டாள். பவர் பாயின்ட்டில் நன்றாகவே விளக்கிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று டாக்டர் சிவநேசன் உள்ளே நுழைந்தார். பின் வரிசையில் போய் உட்கார்ந்தார். எவரோ கவனித்துவிட்டு முன்வரிசைக்கு அவரை அழைத்தார்கள். கையை அமர்த்திவிட்டு அங்கேயே உட்கார்ந்தார் அவர்.

மனோகரி அவரை இங்கே எதிர்பார்க்கவில்லை. ‘இவரை யார் அழைத்தது? ஒருவேளை இனியா அழைத்திருப்பாளோ? தன்னைக் கேட்காமல் இப்படி செய்யமாட்டாளே.’

விளக்கவுரை முடிந்ததும் கேள்வி நேரம் தொடங்கியது.

சில கேள்விகளுக்கு தடுமாறினாலும்,  பிறகு தன்னை நிதானப்படுத்திக்கொண்டு பதில் சொன்னாள் இனியா.

அவளுக்கு டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்ட போது மனோகரிக்கு மகிழ்ச்சியில் மனசு நிரம்பியது. இனியாவின் கண்கள் உணர்ச்சி வெள்ளத்தில் கலங்கியது.

திரும்பிப் பார்த்தபோது விருட்டென்று வெளியேறிக் கொண்டிருந்தார் சிவநேசன்.

மாரிமுத்து அவர் பின்னாலேயே போய் காபி சாப்பிட அழைத்தபோதும் வர மறுத்துவிட்டு காரில் ஏறிக் கிளம்பிப் போனார்.

“நான் நினைக்கவேயில்லை மனோகரி,  சாதாரணமா இவரு நம்ப காலேஜ் வைவாவுக்கெல்லாம் எங்கே வரப்போறாருன்னு தோணுச்சு. எதுக்கும் இருக்கட்டும்னு நான்தான் வாட்ஸ்அப்பில் இன்விடேஷன் அனுப்பி வெச்சேன்” என்றாள் லீலாவதி.

டாக்டர் சிவநேசன் வந்ததைப் பற்றி பிரின்ஸிபாலும் மற்றவர்களும்கூட பெருமையாகப் பேசிக்கொண்டார்கள்.

எதற்காக வந்தார்? இனியாவைத் தெரியும் என்பதால் வந்திருப்பாரோ? அப்படி வந்தவர் அவள் மேடையிலிருந்து இறங்கும் வரை காத்திருந்து வாழ்த்திவிட்டுப் போயிருக்கலாமே. இப்படி விருட்டென்று போவானேன்?

அன்று இரவு மனோகரியை சிவநேசன் ஃபோனில் அழைத்தார்.

“வாழ்த்துகள்! உங்களுக்கும் உங்கள் ஸ்டூடன்டுக்கும்.”

“எனக்கு ஒண்ணும் புரியலை. நேர்ல வந்தீங்களே அப்பவே வாழ்த்தியிருக்கலாமே.”

“நான் கொஞ்ச நேரம் நின்னிருந்தா எல்லோர் கவனமும் என்மேல திரும்பியிருக்கும். இன்னிக்கு ஹீரோயின் உங்க ஸ்டூடன்ட் தான். அவங்களுக்குக் கிடைக்கிற கவனத்தை நான் தட்டிப் பறிக்க வேணாம்னுதான் அவசரமா புறப்பட்டேன்.”

“ஏதோ எங்க கல்லூரி வைவாவையும் மதிச்சு நீங்க வந்தீங்களே. எல்லோரும் சந்தோஷப்பட்டாங்க.”

“நீங்க சந்தோஷப்பட்டீங்களா?”

“உண்மையை சொல்லப்போனா இல்லை. உங்களை மாதிரி பெரிய ஸ்காலர் எங்களை மாதிரி சாதாரண காலேஜுக்கு வந்து நக்கீரர் மாதிரி கேள்வி கேட்பீங்களோன்னு கொஞ்சம் பயமா இருந்துச்சு.”

“உங்கக் காலேஜை தாழ்வா நினைக்கக்கூடாதுன்னு நான் எப்பவோ முடிவு செஞ்சிட்டேன். அதை நீங்களும் புரிஞ்சுக்கிட்டா நல்லது தேவா” என்று மென்மையாகச் சொன்னார் சிவநேசன்.

“ஓ! அந்த முடிவை தெரியப்படுத்ததான் இன்னிக்கு வந்தீங்களோ?  இப்பப் புரியுது.”

“உங்களுக்கு இன்னும் கூட நிறைய சர்பிரைஸ் காத்திருக்கு. அடுத்தவாரம் நேரில் சந்திக்கிறேன். குட் நைட்.”

என்னவாக இருக்கும்? சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அவர் வார்த்தைக்கு வீண் முக்கியத்துவம் தரவேண்டாம்’ என்று முடிவு செய்தாள் மனோகரி.

ஒரு வாரம் கழித்து கல்லூரியில்  மனோகரியைத் தேடிக்கொண்டு வந்தாள் லீலாவதி.

“டாக்டர் சிவநேசன் ஃபோன் செய்தார் என்றாள் மனோகரியிடம். நம்ப ஸ்டூடன்ட்ஸுக்காக ஸ்போக்கன் இங்கிலீஷும், சிலபஸும் சேர்த்து ஏதோ சி.டி.தயார் செஞ்சிருக்காராம். பிரின்ஸிபாலை சந்திச்சு பேசணுமாம். அதுக்கு ஏற்பாடு செய்யுங்கன்னு சொல்றாரு.”

“ஓ! அப்படியா. நல்ல விஷயம்தானே லீலா. ஏற்பாடு செய்யேன்.”

மறுநாளே பிரின்ஸிபால் அறையில் எல்லோரும் குழுமினார்கள். தனது லேப்டாப்புடன் உள்ளே நுழைந்தார் சிவநேசன். தான் தயார் செய்திருந்த வீடியோக்களை போட்டுக் காட்டினார்.

மனோகரிக்கு வியப்பில் கண்கள் விரிந்தது. மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருந்த வீடியோக்கள். எளிய உரையாடல்கள், அதற்கு விளக்கங்கள்.  அனிமேஷன் உருவங்கள் பாவனைகளுடன் பேசின.

“ரொம்ப நல்லா வந்திருக்கு ஸார். பார்க்கிற யாருக்குமே ஆங்கில மொழியின் அடிப்படை புரிந்துவிடும்” என்று பாராட்டினார் பிரின்ஸிபால்.

“உங்க ஸ்டூடண்ட்ஸ் நிறைய பேர் இங்கிலீஷ்ல பாஸ் பண்ண முடியாததால டிகிரி வாங்க முடியாமப் போகுதுன்னு கேள்விப்பட்டேன். என்னால் ஆன சின்ன உதவி.”

இதைச் சொல்லும்போது மனோகரியைப் பார்த்துக்கொண்டே சொன்னார் சிவநேசன்.

சற்றே சங்கடமாக உணர்ந்தாலும் சிவநேசன் செய்திருக்கும் இந்த காரியம் அவளை பிரமிக்க வைத்தது.

கண்களில் நன்றியுடன் அவரைப் பார்த்தார் மனோகரி.  இதை எப்படி எல்லா மாணவர்களுக்கும் கொண்டுபோய் சேர்ப்பது?

மனோகரி எதிர்பார்த்தபடியே ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

“அப்ப, எங்களுக்கு இங்கே என்ன வேலை? இதெல்லாம் நாங்க சொல்லித்தரமாட்டோமா? லாங்குவேஜ் லாப்ல இதை வெச்சுக்கிட்டு பயிற்சி தரணுமாம். யாருக்கு நேரமிருக்கு? சிலபஸை முடிக்கவே நேரம் போதமாட்டேங்குது.”

மனோகரி அவர்களிடம் பேசிப் பார்த்தாள். “முதல்ல எங்க ஃபிலாஸபி டிபார்ட்மென்டுல ஆர்வம் இருக்கிற ஒரு ஐம்பது மாணவர்களுக்கு ட்ரை பண்ணலாம். அது எப்படி சக்ஸஸ் ஆகுதுன்னு பார்த்துட்டு பிறகு முடிவு செய்யலாம். ”

“லாங்குவேஜ் லாப் ஃப்ரீ இல்லை. கல்லூரி நேரம் முடிந்த பிறகுதான் அதை ஒதுக்கித் தரமுடியும்” என்று கராறாகப் பேசினார்கள்.

மனோகரி விடுவதாக இல்லை. “கல்லூரி நேரம் முடிந்த பிறகானாலும் பரவாயில்லை. எங்க ஸ்டூடண்ட்ஸ் காத்திருப்பாங்க.” என்றாள்.

“அதெப்படி மேடம்? ஸ்டூடண்ட்ஸை ரீட்டெயின் பண்ணுவது? ” என்று தயங்கினார் டேவிட்.

“முடியும் டேவிட். கேன்டீன்ல எல்லோருக்கும் காபியும், ஸ்நாக்ஸும் ஆர்டர் செய்யலாம். செலவு என்னுடையது.”

கல்லூரி நேரம் முடிந்தும் லாங்குவேஜ் லாபை இயக்குவதற்கு லீலாவதி ஒத்துழைத்தாள்.

மறுநாளே வெற்றிகரமாக ஆங்கில போதனை வகுப்பு தொடங்கியது.

கண்கள் விரிய ஆர்வம் காட்டிய மாணவர்களைப் பார்த்து மனோகரிக்குப் புதிய நம்பிக்கை வந்தது.

திவ்யா ஃபோன் செய்தாள். “உங்க காலேஜுல ஸ்போக்கன் இங்கிலீஷ் க்ளாஸ் எப்படி போயிட்டிருக்கு ஆன்ட்டி?”

உனக்கு எப்படித் தெரியும் திவ்யா?“

“ஐடியா, டாக்டர் சிவநேசனுடையது. ஆனா, செயல்படுத்தியது எங்க டீம் ஆன்ட்டி. ”

“ஓ! உலகம் ரொம்ப சின்னதுதான் திவ்யா. உங்க டீமை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.”

“யூ டியூப்ல எத்தனையோ ஸ்போக்கன் இங்கிலீஷ் வீடியோக்களைப் பார்த்திருக்கேன். ஆனா, எங்க ஸ்டூடண்ட்ஸை உங்க வீடியோ பேசத்தூண்டியிருக்கு. கிரேட் ஜாப்!” மனோகரியின் மனதில் டாக்டர் சிவநேசனைப் பற்றிய மதிப்பு சற்றே உயர்ந்தது.

அவரை அழைத்து நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அழைத்தாள்.

“நேரில் சந்திக்க வேண்டும் தேவா! வரட்டுமா?” என்று அவர் கேட்டபோது தட்டமுடியவில்லை.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதிய உணவுக்கு அவரை அழைத்திருந்தாள் மனோகரி.

திவ்யா, சரத், இனியா என்று நான்கைந்து பேர் உணவருந்த வசதியாக டேபிளில் உணவு வகைகளை தயாரித்து வைத்தாள்.

கலகலப்பான பேச்சுடன் விருந்து களைகட்டியது. இனியாவுக்கு நவீனிடமிருந்து ஃபோன் வந்தது.

“என்ன நடக்குது அங்கே? அம்மா ஏன் ஃபோன் எடுக்கமாட்டேங்கிறாங்க?”

“டாக்டர் சிவநேசன் ஸார் லன்ச்சுக்கு வந்திருக்காரு. திவ்யாக்காவும் வந்திருக்காங்க.”

“ஓ! நான் அப்புறம் பேசறேன்.”

எல்லோரும் புறப்பட்டுப் போன பிறகும்கூட டாக்டர் சிவநேசன் கிளம்பாமல் உட்கார்ந்திருந்தார். அவர் ஏதோ பேச நினைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டாள் மனோகரி.

“உங்க மகன் எங்கே இருக்காரு?” என்று நவீனின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டார் சிவநேசன்.

“என் வாழ்க்கையைப் பத்தி நீங்க எதுவும் கேட்கலையே தேவா? நீங்க கேட்காவிட்டாலும் கூட எனக்கு உங்ககிட்டே ஷேர் பண்ணிக்கணும்னு தோணுது.”

இருவருக்குமாக க்ரீன் டீ தயாரித்துக் கொண்டுவந்தாள் மனோகரி. அதை பருகிக்கொண்டே யோசனையில் ஆழந்திருந்தார் சிவநேசன். பிறகு மெல்ல பேசத் தொடங்கினார்.

“எங்கம்மாதான் சின்ன வயசுல எனக்குத் தெரிஞ்ச ஒரே உலகம். அவங்க உட்காருன்னா உட்காருவேன். நில்லுன்னா நிப்பேன். ஒரு நல்ல மகனா இருக்கணும்னு நினைச்சேன்.”

க்ரீன் டீயைக் குடித்தவாறு கேட்டுக் கொண்டிருந்தாள் மனோகரி.

“ஆனா தேவா,  நாம்ப யாரை ரொம்ப நேசிக்கிறோமோ, அவங்க மேலயே வெறுப்பும் வந்திடுது. எனக்கும் எங்கம்மா மேல கடுமையான வெறுப்பு வந்தது. அவங்க முகத்திலேயே விழிக்கக்கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு வெறுப்பு. ”

மனோகரிக்குப் புரியவில்லை. இப்படித் தலைகீழாக ஏன் மாற வேண்டும்?

“எனக்கு எங்கம்மா இருபத்திமூணு வயசிலேயே கல்யாணம் செஞ்சு வெச்சிட்டாங்க. அப்பதான் எம்.ஏ. முடிச்சிருந்தேன்.”

“எனக்கு ஞாபகம் இருக்கு. எங்கப்பா கூட உங்க கல்யாணத்துக்கு வந்திருந்தார்.”

“ஓ! ஞாபகம் இருக்கா? ஆச்சரியம்தான். ஆனா அந்தக் கல்யாணம் ரொம்ப வருஷம் நிலைக்கலை.”

சங்கடமான அமைதியொன்று நிலவியது.

“நாலு வருஷம்தான் அவள் என்னோடு வாழ்ந்தாள்.  ரொம்ப நல்லவளாகத்தான் இருந்திருக்கணும். எனக்குத்தான் அப்ப எதுவும் புரியாமப் போயிடுச்சு.”

தொண்டையை செருமிக் கொண்டார் சிவநேசன்.

“என்னுடைய அம்மா என் மேல வெச்சது ஒரு கண்மூடித்தனமான பாசம்னு நான் நினைச்சுகிட்டிருந்தேன். அதனால கொஞ்சம் அதிகமா உரிமை எடுத்துக்கிறாங்கன்னு அதை ரொம்ப சாதாரணமா நினைச்சிட்டேன். அந்த குணம் என்னை நம்பி வாழ வந்தவளை கடுமையா பாதிக்கும்னு அப்போ எனக்குத் தெரியலை.”

“நீங்க சொல்றது சரிதான். அந்த வயசுல நாம் எல்லோருமே சில உளவியல் சூட்சுமங்கள் புரியாமதான் இருந்திருக்கோம்.”

“அப்படிப் புரிஞ்சுக்காம போன என் முட்டாள்தனத்தை நினைச்சு நினைச்சு இப்பவும் வருந்திகிட்டிருக்கேன்.”

குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் மனோகரி.

“என்ன இலக்கியம் படிச்சு என்ன பிரயோஜனம்? என்னைப் போய் பெரிய ஸ்காலர்னு சொல்றாங்க. நான் எவ்வளவு பெரிய முட்டாள்னு எனக்குத்தானே தெரியும்? ஒரு பெண்ணுடைய மனசு புரியாத முட்டாள் நான்!”

(தொடரும்)

 

1 COMMENT

  1. கே.பாரதியை எவ்வளவு பாராட்டினாலும் போதாதுது. அவரது ஏழுத்தின் வலிமை தொடரை ஆர்வமுடன் படிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்
    திருவரங்க வெங்கடேசன் பெங்களுரு

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ஸ்ரீரங்கம் கதைகள், ஓவியங்கள், சன்மானம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதா ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம். அவ்வப்போது சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன் ஒரு பத்து, பன்னிரண்டு கதை தேறும்...

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.

2
யார் வேண்டுமானாலும் யூடியூப் சானல் துவங்கலாம் என்ற நிலையில் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் யூடியூபில் பதிவு செய்யப்படுவது பல பிரச்னைகள், மோதல்களை உருவாக்கும். யூடியூபில் பதிவு செய்யப்படுகின்ற ஆபாச வீடியோக்கள்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...