0,00 INR

No products in the cart.

“கண்ணான கண்ணே!”

“அப்பா! இந்த வயசுல உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாதுப்பா! கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கேள். இதனால ஒங்களுக்கு மட்டும் கஷ்டமில்லப்பா! உங்க ஒருத்தரால, வீட்டுல இருக்கிற எல்லாரும் அவதிப்படணுமா? இதையெல்லாம் நீங்க புரிஞ்சுக்கவே மாட்டேளா?” கேசவனின் கேள்விக்கணைகள் அப்பா நாராயணனை கிஞ்சித்தும் அசைக்கவில்லை .

“ கேசவா! எனக்கு வயசாயிட்டுதுன்னு நீதான் அடிக்கடி ஞாபகப் படுத்திக்கிட்டு இருக்கே! ஆனா, நான் அப்படி நினைக்கலே. மனுசாளுக்கு முழு ஆயுள்ங்கிறது நூத்தியிருவது வருசம். அதனால, இன்னும் மிச்சமிருக்கிற வாழ்க்கையை நல்லபடியா வாழணும்னு ஆசைப்படுறேன். அதுக்கு நான் எடுத்திருக்கிற இந்த முடிவு சரிதான்னு, என் மனசுக்கு படுறது. அதுல நீங்கள்ளாம் ஏன் குறுக்கே நிக்கறேள்?”

“ ஏம்ப்பா! என்ன பேசறேள்?    நாங்க நிக்காம வேற யாரு  நிப்பா? ஒங்களுக்கு ஒன்னுன்னா, நாங்கத்தானே செய்யணும்? அதனாலத்தான் சொல்றோம். ஒங்க முடிவை மாத்திக்கங்க. ஒங்களுக்கு நீங்க ஒட்கார்ந்திருக்கிற எடத்துக்கே எல்லாம் வருது. காலைல  சுடச்சுட காப்பி, எட்டு மணிக்கு டிபன்,பதினோரு மணிக்கு தேநீர், மதியம் ஒன்றரை மணிக்குள்ள வாய்க்கு ருசியா சாப்பாடு, மாலை நாலு மணிக்கு ஒரு சுண்டல், காப்பி, ராத்திரி எட்டு மணிக்குள்ள இரவு உணவுன்னு எல்லாமே நேரத்துக்கு கெடைச்சிக்கிட்டுத்தானே இருக்கு?. நீங்க ரிட்டையராயிட்டிங்கன்னு உங்கள அலட்சியமா நடத்துறோமா, இல்ல உங்கள ஒரு பாரமா நினைக்கிறோமா? இல்லியே! உங்களுக்கு நாங்க செய்யுற பணிவிடையில ஏதாவது  குறை இருந்தா சொல்லுங்கப்பா. அதை ஒடனே சரிபண்ணிடுறேன். தயவு செய்து ஒங்க முடிவை மாத்திக்கிங்கப்பா!” கெஞ்சிக் கேட்டார் கேசவன்.

“அம்மாவும், நீயும், உன் மனைவியும் எனக்கு என்ன செய்யணுமோ அதை செஞ்சிக்கிட்டுதான் இருக்கேள்.  ஆனால், நான் எல்லாத்துக்கும் உங்களையே சார்ந்து இருக்கிறதுதான், எனக்கு சிரமமா இருக்கு.”

“நீங்க ஆசைப்படுறதை செய்யுறதுக்கு ஒங்க மனசு வேணா இடம் தரலாம். ஆனா ஒடம்பு ஒத்துழைக்கணுமே! வயசு கூடக்கூட நம்ம ஒடம்புல இருக்கிற  ஒவ்வொரு உறுப்பும் தன்னோட செயல்பாடுகளை குறைச்சிக்கிறதில்லியோ? வயசானால் காது கேட்க மாட்டேங்குது, கண்ணு புரியமாட்டேங்குது. வாலிப வயசுல நடந்தது மாதிரியோ, ஓடினது மாதிரியோ இப்ப முடியுதா? வயசாயிட்டுதுன்னா மெதுவாத்தானே நடக்கிறோம். இதெல்லாம் இயற்கை தானே! அந்தந்த வயசுக்கு நம்மால என்ன செய்ய முடியுதோ, அதைத்தான் நாம் செய்யணும். இதையெல்லாம் நான் உங்களுக்கு சொல்லணுமா?  எனக்கு ரொம்ப சங்கடமா இருக்குப்பா. பள்ளிக்கூடத்துல ஆசிரியரா இருந்து  ஆயிரமாயிரம் மாணவர்களுக்கு பாடங்களை போதிச்சவர் நீங்க. உங்களுக்கு போயி நான் அறிவுரை கூறுவதா? என்னை மன்னிச்சுடுங்கப்பா! எனக்கும் அறுவது வயசாயிட்டுது. ரிட்டையர் ஆயிட்டேன். என்னால ஒங்களை தூக்கி எடுத்து எல்லாம் செய்ய முடியுமா? நல்லா யோசியுங்க. இல்ல அம்மாவாலத்தான் செய்ய முடியுமா?”

“கேசவா! நீங்க எல்லாருமே ஒரு பக்கமாவே யோசிக்கிறிங்க. ஒரு நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கிற மாதிரி, நான் எடுத்திருக்கிற முடிவினுடைய மறுபக்கத்தை யோசிக்கவே மறுக்கிறீங்க. தொண்ணூறு வயசுல எனக்கு இருக்கிற நேர்மறை எண்ணம், அறுவது வயசுல இருக்கிற ஒனக்கு ஏன் இல்லைன்னு எனக்குத் தெரியலை. ஒன்ன நான் சரியா வளர்க்கலையோன்னு எனக்கு இப்ப அச்சமா இருக்கு.”

“ஆமாம், இனிமேல்தான் என்னை சரியா வளர்க்கப் போறீங்களாக்கும்” எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டார் கேசவன்.

“நான் என்னோட பதின்ம வயசுல மகாத்மா காந்தியைப் பார்த்து வளர்ந்தவன். தள்ளாத வயதிலும் பொக்கை வாய்ச் சிரிப்போடு நாட்டு விடுதலைக்காக பாடுபட்டார் அவர். விடுதலை பெற்றே தீருவேன்னு பிடிவாதமா இருந்தார். அதனாலத்தான் நம் நாட்டின் விடுதலை சாத்தியமாச்சு. நாட்டு விடுதலைக்குப் பிறகும் கூட, மதக்கலவரங்கள் இல்லாம மக்கள் அனைவரும் ஒற்றுமையா வாழணும்னு நவகாளிக்கு யாத்திரை போனார். விடுதலை கிடைச்சாச்சு, தனக்கும் வயசாயிட்டுதுன்னு அவர் ஓய்ந்து போய் உக்கார்ந்துடலை. ஆனால் நானெல்லாம் வாழ்க்கையில எதுவுமே சாதிக்கலையேன்னு வருத்தமா இருக்கு.”

“அப்பா! நீங்க எத்தனையெத்தனை அறிவாளிகளை உருவாக்கி இருக்கீங்க. அவங்க எல்லாரும் இன்னமும் உங்களைக் கொண்டாடிக்கிட்டுத் தானே இருக்காங்க! அது போதாதா? இத்தனை வயசுக்கப்புறம் அறுவை சிகிச்சை செய்துக்கிட்டு அவதிப்படணுமா?”

“என்னோட வேலைகளை நானே பார்த்துக்கிடறது நல்லதுதானே? இப்ப, பாத்ரூம் போகணும்னா அம்மாவையோ, உன்னையோ கூப்பிட வேண்டியிருக்கு? அதையெல்லாம் தவிர்க்கலாம்தானே!  நீங்களும் மனுசாத்தானே? உங்களுக்கும் வயசாகிறதுதானே!”

“வாதத்துக்கு மருந்து உண்டு. பிடிவாதத்துக்கு மருந்தில்லை என்பார்கள். உங்க பிடிவாதத்துக்கு முன்னால நான் தோத்துப் போயிட்டேம்ப்பா. எங்க போகணும் எப்ப போகணும்கிறதை சொல்லுங்க. அழைச்சிக்கிட்டுப் போறேன். அது என்னோட கடமை. அதை நான் செய்யுறேன். ஆனா, எனக்கு அதில் துளிக்கூட  இஷ்டமில்லை. அதையும் உங்கக்கிட்ட சொல்லிடறேன்.”

ஒரு நல்ல நாள் பார்த்தார் நாராயணன். அன்றைய தேதிக்கு தன் பெயரை பிரபலமான அந்த மருத்துவமனையின் வரவேற்பறையில் பதிவு செய்யச் சொன்னார். மறுபேச்சு ஏதுமின்றி அப்பா சொன்னபடியே கேசவன் செய்தார்.

அந்த நாளும் வந்தது. காலை ஏழுமணிக்கே தயாராகிவிட்டார் நாராயணன். “எட்டுமணிக்கு வரச்சொல்லியிருக்கா”. கேசவனை துரிதப்படுத்தினார். நேரந்தவறாமையை இன்றளவும் கடைபிடிப்பவர் அவர்.

“இதோ வந்துட்டேம்ப்பா! சித்தே இருங்கோ! கார்லதானே போறோம். சரியான நேரத்துக்கு போயிடலாம்ப்பா”

சரியாக எட்டு மணிக்கு   மருத்துவமனையில் நுழைந்தார் நாராயணன். அவரைக் கைப்பிடித்து அழைத்துவந்தார் கேசவன்.

படிவங்களை பூர்த்தி செய்து தந்தையின் கையெழுத்தைப் பெற்று பணியாளரிடம் கொடுத்தார்.  பரிசோதனைக் கட்டணத்தை செலுத்திவிட்டு, இருவரும் காத்திருந்தனர்.

இரண்டு மணி நேர பரிசோதனைகளுக்குப் பின், தந்தையை மருத்துவரின் அறைக்கு அழைத்துச் சென்றார் கேசவன்.

நாராயணனைக் கண்டதும், மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் மருத்துவர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, தன்னுடைய தலைமை ஆசிரியரை சந்திப்போம் என்றோ, அவருக்கு  சிகிச்சை செய்வோமென்றோ  அவர் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

தன் ஆசிரியரின் கைகளைப் பற்றிக்கொண்ட மருத்துவர், “சார்! என்னை தெரிகிறதா?” என்று நெகிழ்ந்தார்.

“ கண்களில் சொட்டு மருந்து போட்டிருக்காளோன்னோ, அதனால எதுவும் தெளிவா தெரியல. எல்லாமே மங்கலாத் தெரியுது”

“சார்! நான் மாதவன். உங்களிடம் பதினோராம் வகுப்பில் ஆங்கிலம் படிச்சவன். செல்வநாயகம் சார் ஆங்கில உரைநடைப் பாடங்களை எடுத்தார். நீங்கள் இலக்கணமும், கவிதையும்  எடுத்தீர்கள். “ஜான் மில்டனின் பேரடைஸ் லாஸ்ட்”  கவிதையை ஒரு வகுப்பில் எடுத்தீர்கள். அதில் வரக்கூடிய “ஸ்பான்டேனியஸ்” என்ற வார்த்தைக்கு ஒரு வகுப்பு முழுமைக்கும் நீங்கள் விளக்கம் சொன்னீர்கள். அதை என் வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது. அன்றைய வகுப்பு இன்னமும் என் மனக்கண்ணில் ஓடிக்கொண்டிருக்கிறது.

“ஓ… அப்படியா! ரொம்ப சந்தோஷம். நீதானே அந்த வருசம் பள்ளியில் முதல் ரேங்க் வாங்கினே? இப்போது எனக்கு ஞாபகம் வந்துட்டுது.  நன்னாயிருக்கியா?”

“நன்னாயிருக்கேன்.  என்னோட மனைவி, மகன், மகள் எல்லாருமே டாக்டர்கள் தான். இது எங்கள் குடும்ப மருத்துவமனை. எல்லாரும் ஒங்க  ஆசீர்வாதத்துல நன்னாயிருக்கோம்”

டாக்டர் மாதவனின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார் நாராயணன்.

பிறகு, மாதவனும், கேசவனும் சேர்ந்து நாராயணனின் கைகளை இருபக்கமும் பிடித்து பரிசோதனை நாற்காலியில் அமரவைத்தனர்.

கண்களைப் பரிசோதித்த மாதவன், “இரண்டு கண்களிலும் கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் . முதல்ல, ஒரு கண்ணில் செய்துவிட்டு, அடுத்த ஒரு வாரத்தில் அடுத்த கண்ணில் செய்துவிடலாம். ஒன்னும் பயப்படவேணாம்” என்றார்.

மூன்று நாட்களுக்கு வலது கண்ணில் சொட்டுமருந்து போடச்சொல்லி அறிவுறுத்தினார். நாலாவது நாள் காலை எட்டு மணிக்கு வரச்சொன்னார்.

தந்தையும் மகனும் மாதவனுக்கு நன்றி கூறி விடைபெற்றனர். வாசல்வரை வந்து காரில் ஏற உதவினார் மாதவன்.

நாலுநாள் கழித்து சென்றபோது வி.ஐ.பி.ஆனார் நாராயணன். செவிலியர்களும், ஊழியர்களும் ஓடி ஓடி கவனித்தனர்.

அறுவை சிகிச்சை அரங்கத்திற்குச் செல்ல, சக்கர நாற்காலியில் அமரச் சொன்னார் ஊழியர்.

“இல்லப்பா! என்னால நடக்க முடியும். நான் நடந்தே வர்றேன்” என்றார் நாராயணன்.

“ஐயா!  உங்களோட ஆரோக்கியத்தையோ, மன தைரியத்தையோ  யாரும் குறைத்து மதிப்பிடவில்லை.  இந்த வயதில் நீங்கள் அறுவை சிகிச்சைக்கு வந்திருக்கும்போதே, நீங்கள் எவ்வளவு  மன தைரியமுள்ளவர் என்று தெரிகிறது. ஆனால், மருத்துவமனை விதிகளின்படி, நீங்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்துதான் செல்லவேண்டும். தயவுசெய்து அமருங்கள்” என்றபடி கைப்பிடித்து அமரவைத்தார் ஊழியர்.

வலது கண்ணில் அறுவை சிகிச்சை முடிந்தபின், மீண்டும் சக்கர நாற்காலியில் அமரவைத்து தள்ளிக்கொண்டு வந்தார் அந்த ஊழியர். பிறகு பெட்டில் படுக்கவைத்தார். ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின் ரத்த அழுத்தம் பரிசோதித்துவிட்டு, வீட்டுக்கு அனுப்பினர். மறுநாள் கண்ணை மறைத்து போட்டிருந்த கட்டினை அவிழ்த்துவிட்டு கறுப்புக்கண்ணாடி போட்டுவிட்டார் மாதவன்.

ஒருவார இடைவெளியில் இடது கண்ணிலும் அறுவைசிகிச்சையை முடித்து லென்ஸ் பொருத்தி தெளிவான பார்வை கிடைக்கச் செய்தார் மாதவன்.

“இருபத்தோறு நாட்களுக்கு கறுப்புக்கண்ணாடி போட்டிருக்க வேண்டும். தொலைக்காட்சி, செல்போன் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. பட்டியலில் கொடுத்துள்ளபடி நேரம் தவறாமல் சொட்டு மருந்து போடவேண்டும். தலை, முகத்தில் தண்ணீர் படாமல் கழுத்துக்குக் கீழே மட்டும் குளிக்கலாம்” அறிவுறுத்தி அனுப்பி வைத்தார் மாதவன்.

இருபத்தோறு நாட்கள் கழிந்தபின், கறுப்புக்கண்ணாடிக்குப் பதிலாக, வெள்ளை நிறக் கண்ணாடி பரிந்துரைத்தார் மாதவன்.

“கண்ணாடி இல்லாமலேயே எல்லாமே பளிச்சுன்னு பிரகாசமா தெரியுது. உன்னை இப்பத்தான் நல்லா பார்க்கிறேன். உன்னோட சின்னவயசு முகம்கூட இப்ப ஞாபகம் வருது. கண்ணாடி அவசியம் போடணுமா?” என்றார் நாராயணன்.

“அறுவை சிகிச்சை முடிந்தால் மட்டும் போதாது. கண்களை பத்திரமாக  பாதுகாக்கணும். அதுக்கு அவசியம் கண்ணாடி அணியணும். சொட்டுமருந்து ஒரு மாத காலம் தவறாமல் போடணும்”

“ரொம்ப நன்றிடா மாதவா! ‘இவாள்ளாம் ஒனக்கு இந்த வயசுல இது தேவையா’ன்னு கேட்டா. நீதான் என்னை புரிஞ்சுண்டு, தேவைதான்னு சொல்லி, அறுவை சிகிச்சை செய்து எனக்கு ஒளி கொடுத்திருக்கே! இனிமே என்னால ஊன்றுகோல் உதவியுடன் தனியா நடக்க முடியும், பாத்ரூம் போகமுடியும். பார்க் வரைக்கும்  வாக்கிங் போகமுடியும். அங்கே  நண்பர்களிடம் மனம் விட்டுப் பேச முடியும். இது எல்லாத்தையும் விட நான் விரும்புற புத்தகத்தைப் படிக்கமுடியும்.  என்னோட எழுத்துப் பணியைத் தொடர முடியும்.  என்னோட அனுபவங்களை சுயசரிதையா எழுதணும்னு நீண்ட நாளா ஓர் ஆசை இருக்கு. அதை இனிமே செய்வேன்” உற்சாகமாகப் பேசினார் எழுத்தாளருமான நாராயணன்.

அவருடைய பேச்சிலே தெரிந்த துள்ளல் கண்டு பிரமித்து நின்றார்கள் மாதவனும், கேசவனும்.

 

4 COMMENTS

  1. இந்தத் தள்ளாத வயதிலும் நாராயணனின் திடமான மனதை கோடிட்டுக் காட்டியது எழுத்தின் சிறப்பு.

  2. என் சிறுகதையைப் படித்து கருத்து பதிவிட்டதற்கு நன்றி ஐயா! மன உறுதியுடன் தள்ளாத வயதிலும் வாழ்க்கையை சொந்தமாக அமைத்துக்கொள்ளும் பெரியோர் நிறைய பேர் இருக்கிறார்கள். தங்கள் பாராட்டுக்கு நன்றி. அன்புடன் மயிலாடுதுறை ராஜசேகர்

  3. பெரியவர்கள் சொல்கின்ற ஒவ்வொன்றிலும் அர்த்தம் இருக்கும்,அவர்களைப் புரிந்துக் கொண்டால் நன்மை பயக்கும் என்பதை கதாசிரியர் அழகாக சொல்லியிருப்பது அருமை.

  4. யதார்த்தமான கதை.அப்பாவுக்கும் மகனுக்குமான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தியுள்ளது.மருத்துவ மனை ஊழியரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பது அருமையான பதிவு.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ஸ்ரீரங்கம் கதைகள், ஓவியங்கள், சன்மானம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதா ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம். அவ்வப்போது சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன் ஒரு பத்து, பன்னிரண்டு கதை தேறும்...

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.

2
யார் வேண்டுமானாலும் யூடியூப் சானல் துவங்கலாம் என்ற நிலையில் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் யூடியூபில் பதிவு செய்யப்படுவது பல பிரச்னைகள், மோதல்களை உருவாக்கும். யூடியூபில் பதிவு செய்யப்படுகின்ற ஆபாச வீடியோக்கள்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...