0,00 INR

No products in the cart.

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்

 

சுஜாதா தேசிகன்

சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன்.

சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள் போன்றவற்றைச் சொல்லி இந்தக் கடைசிப் பக்கத்தை நிரப்பப் போவதில்லை. அங்குக் கண்ட ஓர் அதிசயத்தைக் கூறுகிறேன்.

பெங்களூருவிலிருந்து மேற்கு வங்கத்தில் இருக்கும் பக்தோராவிற்கு (Bagdogra) விமானத்தில் சென்று அங்கிருந்து சிலிகுரி(Siliguri) வழியாக வாடகை வாகனத்தில் சிக்கிமிற்குள் நுழைந்தோம்.

அன்று மாலை ஒரு கடையில்  “தண்ணீர் பாட்டில்” என்றவுடன் திருமணத்தில் எக்ஸ்டரா வடை கேட்ட பையன் வீட்டாரைப் போலப் பார்த்துவிட்டு “இல்லை” என்றார். அடுத்தடுத்த  கடைகளை விசாரித்து கடைசியில் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே வந்து,  வரவேற்பறையில் விசாரித்தேன்.

அவர்கள் கூறிய விஷயம் வியப்பில் ஆழ்த்தியது.

”சிக்கிமில் தண்ணீர் பாட்டில் கிடைக்காது!”

“பாட்டில் தண்ணீர் இல்லாமல் எப்படி ஜீவிப்பது” என்ற கவலை உடல் முழுக்க பரவியது.

“ஏன் கிடைக்காது?”  என்ற கேள்விக்கு ஹிந்தியில் கிடைத்த பதிலைத் தமிழில் கீழே கொடுத்திருக்கிறேன்.

“சிக்கிம் அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்” என்ற ஒரே குறிக்கோளுடன் இந்த வருடம் ஜனவரி முதல் ஒட்டுமொத்தமாக தண்ணீர் பாட்டிலுக்குத் தடை விதித்து,  அதை ஒழுங்காக கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.

பாண்டியராஜன் போல முழிப்பதைப் பார்த்து ரிசப்ஷன் பெண்  “காலி பாட்டில்களைக் கொடுங்கள் தண்ணீர் பிடித்துத் தருகிறோம். குழாயில் வரும் தண்ணீரைப் பயப்படாமல் குடியுங்கள்” என்றார்.

மறுநாள் ‘லாச்சென்’(Lachen) என்ற இடத்துக்குப் புறப்பட்டோம். எங்கும் தண்ணீர் பாட்டில்கள் கிடைக்காது என்பதால் பாட்டில்களில் தண்ணீரைக் கழுத்துவரை  பிடித்துக்கொண்டு காரில் ஏறிய பொழுது, இன்னொரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

“சார், லாச்சென்னுக்குள் தண்ணீர் பாட்டில்களுக்கு அனுமதி இல்லை. அதனால் போகும் போது குடித்துவிடுங்கள், உச்சா வந்தால் காரை நிறுத்துகிறேன்” என்றார் அந்த நல்ல ஓட்டுனர்.

“இவ்வளவு தண்ணீ குடித்தால் அப்டாமினல் அல்ட்ரா சவுண்டைக் ஸ்கேன் சென்டருக்குத்தான் போக வேண்டும்” என்று என் மனைவி சொன்னது ஓட்டுனருக்குப் புரியவில்லை.

“தண்ணீர் பாட்டில்களுக்கு அனுமதி இல்லையா ? எப்படித் தண்ணீர் குடிப்பது ?” என்று கேட்க, அதற்கு ஓட்டுனர் “இது போல ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று அவரிடம் உள்ள ஸ்டீல் வாட்டர் பாட்டிலைக் காட்டினார். போகும் வழியில்  அதே மாதிரி வாங்கிக்கொண்டோம்.

‘லச்சென்’ நுழைவாயிலில் பெரிய சிங்கக் கூண்டு ஒன்றில் ‘பிஸ்லேரி’ வஸ்துக்களைத் துறந்து உள்ளே நெகிழி இல்லாத அந்தத் தூய்மையான ஊருக்குள் நுழைந்தோம். வழியில் ஓர் இடத்தில் எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டது. பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கிறதா என்று சோதனைப் போட்டு அனுப்பினார்கள்.

ஒரு வாரம் நதியில் ஓடிய தண்ணீர், குழாயில் வந்த தண்ணீரைக் குடித்து சிக்கிம் பயணத்தை இனிதே முடித்துக்கொண்டு மீண்டும் மேற்கு வங்கம் வந்தடைந்து ஹோட்டலில் நுழைந்தவுடன், ஆர்டர் செய்வதற்கு முன்பே அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டிலை மேசை மீது வைத்தார்கள்.

அடைக்கப்பட்ட குடிநீர் பெரிய தொழிலாக உருவெடுத்து ஒரு தலைமுறையே குழாயில் வரும் தண்ணீர் குடிக்க லாயக்கில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள். ‘டாப் வாட்டர்’ குடித்தால் கெடுதல், சுகாதாரமற்றது, பாட்டில் அடைக்கப்பட்ட தண்ணீர் பாற்கடலைக் கடைந்த போது வந்த அமிர்தம் அதுதான் ஆரோக்கியம் என்ற எண்ணத்தை நம் மனதில் விதைத்ததின் பலனாக இன்று குடிநீர் 40,000 கோடி வணிகமாக இந்தியாவில் வளர்ந்துள்ளது.

முதலமைச்சர்களின்  மந்திரிசபை கூட்டத்தில் மந்திரிகளுடன் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மேஜையை அலங்கரிக்கிறது. எல்லா திருமணங்களிலும் கையடக்கமாக ஒரு குட்டி பாட்டில் கொடுக்கிறார்கள். ரயில் நிலையங்களில் ‘ரயில் நீர்’ …ஏன் கங்கையில் படகில் செல்லும் போது நதிக்கு நடுவில் தண்ணீர் பாட்டில் விற்கிறார்கள். இந்தப் பாவத்தைக் கங்கையில் குளித்தாலும் கழுவ முடியாது. குழாயில் வரும் நீரை பயம் இல்லாமல் நம்மைக் குடிக்க வைப்பதுதான் குடிநீர் வாரியத்தின் கடமை.

சிக்கிம் அரசு இதை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அந்த ஊர் மக்கள். அரசு சொன்னதை ஏமாற்றாமல்  செயல்முறைப்படுத்துகிறார்கள். எதை வாங்கினாலும் பேப்பரில் சுற்றிக் கொடுக்கிறார்கள். விடுமுறையை முடித்துக்கொண்டு திரும்பிய பின் சென்ற வாரச் செய்திகளை நோட்டம் விட்டபோது  ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் குறித்த சர்ச்சை கண்ணில் பட்டது.

வாழ்த்துப் பாடல் தொடக்கத்தில் வரும் ‘நீரை’ பாட்டிலில் அடைத்துவிட்டு ‘தமிழணங்கே’ என்று கூவிக்கொண்டு இருக்கிறோம்.

 

1 COMMENT

  1. ஒரு பக்கம் இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்ற கூக்குரல் .இன்னொரு பக்கம் பிளாஸ்டிக் குவியல்கள் . . சொல்லுக்கும் ,செயலுக்கும் சம்பந்தமில்லை என்பதை படத்தோடு ,கடைசி பக்கத்தில் .சுஜாதா தேசிகன் ,வெளியிட்டிருந்தது அபாரம் .

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ஸ்ரீரங்கம் கதைகள், ஓவியங்கள், சன்மானம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதா ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம். அவ்வப்போது சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன் ஒரு பத்து, பன்னிரண்டு கதை தேறும்...

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.

2
யார் வேண்டுமானாலும் யூடியூப் சானல் துவங்கலாம் என்ற நிலையில் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் யூடியூபில் பதிவு செய்யப்படுவது பல பிரச்னைகள், மோதல்களை உருவாக்கும். யூடியூபில் பதிவு செய்யப்படுகின்ற ஆபாச வீடியோக்கள்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...