0,00 INR

No products in the cart.

தூக்கு மேடையின்  அமைப்பு எப்படி இருக்கும்?

நூல்  அறிமுகம்

பொன் விஜி 

(வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு)

 

னது சொந்தத் தொழிலான விவசாயி ஒருவனுக்கு, இன்னொரு பரம்பரை பரம்பரையாகச் செய்துவந்த ஒரு தொழிலை, வறுமையின் நிமித்தம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு, அதனைத் தனது இளைய மகனுக்கு எங்கள் தலைமுறையில் இது தொடரவேண்டும் என்று இவர் தலையில் கட்டிவிட்டவர் ஜனார்த்தனன் பிள்ளைஎன்பவரது தந்தையார். இந்த ஜனார்த்தனன் பிள்ளையின் வாழ்க்கைக் குறிப்பே தூக்கிலிடுபவரின் குறிப்புகள் ஆக எங்கள் கண்முன் கொண்டுவருகிறார், ஆசிரியர் சசி வாரியார் அவர்கள். இதனை நல்ல தமிழில் வடித்துள்ளார், மொழிபெயர்ப்பாளர் இரா. முருகவேள் அவர்கள். இருவருக்கும் எனது வாழ்த்துகள்.

வாசிக்கும் போது எமக்குத் தொய்வு ஏற்படாத வகையில் ஆசிரியர் தன் எழுத்து வடிவத்தை நகர்த்துவது மிகவும் பாராட்டத்தக்கது. ஒரு படைப்பாளி என்பவன் தனது படைப்பை கட்டியெழுப்பி அதனை முடிக்கும் வரை படும் கஷ்டத்தையும், அதிலும் பொறுமையையும் சுடு சொற்களையும் எவ்வளவுக்கு அவன் தாங்கிக் கொள்கிறான் என்பதனை இந்த நாட்குறிப்புகள் வெளிப்படுத்துவதைக் காணலாம்.

ஒருமாதிரியாகத் தேடித் திரிந்து பல விசாரிப்புகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட ஜனார்த்தனை தனது ஓய்வு பெற்ற காலத்தில் அவரது தூக்கிலிடும் அனுபவத்தை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்ட ஒரு படைப்பாளிக்கும் அவருக்கும் இடையிலான, கடந்தகால நிகழ்ச்சியை மையமாக வைத்து எழுதப்பட்டது தான் இந்நத் தூக்கிலிடுபவரின் குறிப்புகள்.

ஒருவன்தான் பட்ட அவமானத்தையும், மன உளைச்சலையும், சொல்ல முடியாத உணர்வுகளையும் 30/40 வருடங்கள் கழித்துத் தான் கொட்டித் தீர்க்கிறான். அவை குடும்பத்தாலும், நண்பனாலும், பிள்ளைகளாலும், வேலைசெய்யுமிடத்தினாலும், இறுதியாக சமூகத்தாலும் புறக்கணிக்கப் படுகிறான். அப்படிச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு அடிப்படை விவசாயின்  கதைதான் இக் குறிப்புகள்.

ஆயிரம் கொலைகளைச் செய்பவன் சர்வாதிகாரி ஆகிறான். சட்டத்திலிருந்து தப்பிக்கிறான். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், நேரில் பார்த்த தனது மனைவியையோ, உடன் பிறப்பினையோ, பெற்றோரையோ, உற்ற நண்பனையோ, கொலை செய்யும்போது, அவன் பழிக்குப்பழி வாங்குகிறான். கடைசியில் சட்டமும் கூட அவனை தனது இரக்கக் கண்களால் பாசாங்கு செய்து அவனைத் தூக்குத்தண்டனைக்கு அனுப்புகிறது. மேலே கூறிய கொலைகளை விட, இன்னுமொரு வித்தியாசமான கொலை இருப்பதைச் சமூகம் தங்களது ஆந்தைக் கண்களால் பார்க்கின்றன என்றே கூறலாம் . தனது வேலை நிமிர்த்தமாய், மன்னராட்சி தொடக்கம், இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், ஓய்வு காலம் வரைக்கும், 117 மரணதண்டனைக் கைதிகளின் தூக்கு மேடையின் லிவரை இழுத்து, சாகடித்த ஒரு சாதாரண மனிதனையே சமூகம், “கிட்ட வராதே
நீ ஒரு கொலைகாரன்” என்ற முத்திரையை அவன் நெஞ்சில் குத்துகிறது நண்பர்களே.

தூக்கு மேடையின் அமைப்பு எப்படி இருக்கும்? அதில் தொங்கும் கயிறு எதனால் உருவாக்கப்பட்டது? அந்தப் பாதாள அறையின் உருவம் எப்படிக் காட்சியளிக்கும், தூக்குக்குப் பின் அங்கிருந்து வரும் துர்நாற்றம் எப்படி? தூக்குப் போடப்பட்டபின் அங்கே நின்றிருந்த அதிகாரிகளின் பார்வை, மனநிலை, தங்களுக்குள் ஏற்படும் முணுமுணுப்புகள், “உன்வேலை முடிந்தது நீ போகலாம்” என்ற முறைப்பு, இது போன்ற பல விடயங்களை அறிய கண்டிப்பாக வாசியுங்கள்.

அத்துடன் பல அரிய தகவல்களையும் அறியத் தருகிறார் ஜனார்த்தனன். சூரியன் உதயமாவதற்கு முன்பே தண்டனை நிறைவடைய வேண்டும். மனிதனின் எடைக்கேற்றபடி கயிறு வித்தியாசப்படும். தூக்குத்தண்டனை எப்போ என்று, மன்னர் காலத்தில் தனிப்பட்ட ஒரு குமாஸ்தா மூலமாக அறிவித்தல் வரும், பின் நாட்களில் பதிவுத் தபால் மூலம் நாள் குறித்து அவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

கருணை மனு பற்றி விசித்திரமாக ஜனார்த்தனன் விவரிக்கிறார். கைதி தூக்கில் தொங்கிய பிறகுதான் கருணைமனு மன்னரின் பார்வைக்குப் போகுமாம். மன்னரின் பணியாள் தண்டணையை நிறுத்துவதற்கு அந்த இடத்திற்கு வரும் போது, தொங்கிய உடலையிட்டு  முதலைக்கண்ணீர் வடித்து, அங்குள்ள அதிகாரிகளைத் திட்டுவாராம்.

1940 களில் தொடங்கி 30 ஆண்டுகாலமாக பணியாற்றிய ஜனார்த்தனன், மூன்றாம் வகுப்பு வரையே தான் படித்துள்ளார். 9 பிள்ளைகளுக்குத் தந்தையான இவர், தனது நினைவுக் குறிப்புக்களை எழுதும் போது, தான் தூக்கில் தொங்க றெடியாகவுள்ள கனவுகளையும், கயிறு, பாதாள அறை, இரத்தம், துர்நாற்றம் போன்ற பல உடலை உலுக்கும் கனவுகளே தன் வாழ்நாளில் கண்டதாகப் பதிவு செய்கிறார். இக் குறிப்பை எழுதத் தொடங்கியபோது, தான் மிக மோசமான மனவுளைச்சலுக்கு ஆளானதையும், எழுத்தாளர் வாரியாருடன் பல தடவைகள் கோபப்பட்டதாகவும் கூறுகிறார். இருந்தும் எழுத்தாளரின் பொறுமையை வியந்து பாராட்டத் தவறவில்லை. ஒரு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன், தனது குலதெய்வமான காளிக்கு ஒரு கோழி அறுத்து தனது மன்னிப்பை கூறிவிட்டு, மறுநாளே அதனை நிறைவேற்றுவதாக குறிப்பிடுகிறார்.

ஜனார்த்தனன் பிள்ளையின் உள்ளம் எவ்வளவு மென்மையானது என்பதனை நமக்கு உணர்த்தும் ஒரு குறிப்பினை  நான்  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒருமுறை ஜனார்த்தனன் பிள்ளை மூன்று நாளில் 3 பேரைத் தூக்கிலிட வேண்டியதாயிற்று. தூக்குகளை முடித்துவிட்டு திருவனந்தபுரத்திலிருந்து திரும்பியபோது, அவர் மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தது. அந்தக் குழந்தையை அவரால் தொடமுடியவில்லை. ஏனென்றால், “அவரால் தூக்கிலிடப்பட்டவர்களில் ஒருவர் அந்தக் குழந்தையாக வந்து பிறந்திருக்கலாமோ” என்று அவர் அச்சமும் கவலையும் கொண்டார்.

ஜனார்த்தனன் பிள்ளைக்கு மாஷ் என்று அழைக்கப்படும் பள்ளி ஆசிரியரும், கோயில் பிராமணர் ராமையாவும், டீக்கடை ராமனும் தான், தன்னை சிந்திக்க வைத்த நபர்கள் என்றும், அவர்களால் ஏற்பட்ட சிறப்புகளை பதிவு செய்கிறார்.

தூக்கில் இடப்பட்டவரின் கயிறு உதறும் போதெல்லாம், “கடவுளே ஏன் இந்த வேலைக்கு என்னை நியமித்தாய் என்றும், என்னை மன்னித்துவிடு எனது குழந்தைகளுக்கு உணவளிக்கவே நான் இதை ஏற்றுக் கொண்டேன்” என்று, பல ஆயிரம் தடவைகள் என் மனதோடு உரையாடியிருப்பேன் என்று எழுதுகிறார்.

இன்னுமொரு விசித்திரமான தகவலை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜனார்த்தனன் ஒரு தமிழன், இதனை படைத்தவர் சசி வாரியார்  ஒரு மலையாளி, நேரடியாகவே தமிழ் எழுத்தாளர்களின் கைக்கு வராமல், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இரா. முருகவேள்  மொழி பெயர்த்திருந்தாலும், உரைநடை சிறப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. பாராட்டத்தக்கது… வாழ்த்துகள்…

கண்டிப்பாக எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புஎன்றே என் எண்ணங்கள் சொல்கின்றன… வாசியுங்கள்…

‘தூக்கிலிடுபவரின்குறிப்புகள்’
ஆசிரியர் – சசிவாரியார்
தமிழில் –  இரா. முருகவேள்
வெளியீடு –  எதிர் வெளியீடு
தொலைபேசி : 091 7550174762

 

1 COMMENT

  1. “தாய் எட்டடி பாய்ந்தால் ,குட்டி பதினாறு அடி பாயும்”என்பது போல நூல்அறிமுகமே (தாய்) .அழுத்தமாகவும் ,அபாரமாகவும் இருக்கிறதென்றால் , புத்தகம்(பிள்ளை) கேட்கவா வேண்டும்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ஸ்ரீரங்கம் கதைகள், ஓவியங்கள், சன்மானம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதா ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம். அவ்வப்போது சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன் ஒரு பத்து, பன்னிரண்டு கதை தேறும்...

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.

2
யார் வேண்டுமானாலும் யூடியூப் சானல் துவங்கலாம் என்ற நிலையில் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் யூடியூபில் பதிவு செய்யப்படுவது பல பிரச்னைகள், மோதல்களை உருவாக்கும். யூடியூபில் பதிவு செய்யப்படுகின்ற ஆபாச வீடியோக்கள்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...