பேசும் சித்திரங்கள்

பேசும் சித்திரங்கள்
Published on

தனுஜா ஜெயராமன்

அண்மையில்  புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, பாரதியார் நினைவு இல்லத்திற்கு சென்றார். அங்கு மாலதி செல்வம் அவர்களின் பாரதியார் ஓவியத்தை கண்டு வெகுவாக ரசித்து பாராட்டினார்.

தனது ஓவியக்கலை பணிகளுக்காக கலைமாமணி உட்பட பல்வேறு விருதுகளைப்பெற்ற இவர், தான் காணும் அனைத்தையும் எழில் கொஞ்சும் தத்ரூப ஓவியங்களாக வண்ணப்பொடிகளுடன் தன் விரல்களால் சட்டென வரைந்து தள்ளுகிறார். கருணை பொங்கும் கடவுள் முகங்கள், கலர் கலராய் சிரிக்கும் பிரபலங்கள், தத்ரூபமாய் நிற்கும் திருமண ஜோடிகள் என அனைத்தும் கோலங்களில் உயிர்த்தெழுகின்றன.
இவருடன் பேசியதிலிருந்து  சில துளிகள்…

எப்படி எழுந்தது இந்த ஆர்வம்?

"நான் சேலம் சாரதா வித்யாவில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது  ஆசிரியர் ஒருவர் பள்ளி விழா நாட்களில் அளவில் மிகப் பெரிய ரங்கோலிகளை வரைந்து வந்தார். அதுவரை ஓவியங்கள் வரைவதில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த நான் இந்த ரங்கோலிகளால் ஈர்க்கப்பட்டு அன்றுமுதல் கோலங்களில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினேன். வருடா வருடம் பள்ளி விழாக்களில்  சில வழிமுறைகளை கற்று நானும் சில ரங்கோலிகளை வரைந்து கொண்டிருந்தேன். 11ம் வகுப்பு படிக்கும்போது எனது உறவினர் ஒருவரது வீட்டில் 'கிருஷ்ண ஜெயந்தி விழா' நடைபெற்றது. நான் அதில் அழகான கிருஷ்ணரை கோலத்தில்  வரைய, பார்ப்பவர்கள் அனைவரும் வியந்து பாராட்டினர். அக்கம் பக்கம் இருப்பவர்கள் பலரும் அவர்கள் வீடுகளில் வரைய அழைத்தனர்.  அப்படியே அதற்கு சன்மான தொகைகளையும் அவர்களாகவே தரத்தொடங்கினார்கள். பின்னர் பலரும் திருமண வீடுகளில் ரங்கோலிகள் வரைய அழைக்க அதுவே எனது தொழிலாகவும் மாற்றம் பெற்றது."

ரங்கோலி கோலங்களில்  நீங்கள் புதுமையாகச் செய்தது என்ன?

'காமராஜர் முதல் கலைஞர் வரை அப்துல்கலாம் முதல் ஸ்டாலின் வரை அரசியல்  தலைவர்கள். இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திரசிங் தோனி போன்ற பிரபலங்களை கோலத்தில் கொண்டுவந்திருக்கிறேன்.

திருப்பதி கோசாலை மற்றும்  யுகாதி விழாக்களுக்காக தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயில்  வரைந்த கோலங்கள் தெய்வீகத்தன்மை நிறைந்தவை.  சென்னை  தக்ஷன் சித்ராவில் வரைந்த தெருகூத்து கலைஞர் ஓவியம் அதன்  உயிரோட்டத்துக்காக  மிகவும் பாராட்டப்பட்டது.

2018 ஆம் ஆண்டில் பாரத நிவாஸ் ஆரோவில் பாண்டிச்சேரியில் 25×25அடியில்  நான் எழுதிய கோலம் தனிநபர் ரங்கோலி உலக சாதனை.

ஒரு தீம்மை கோலங்களில் அமைக்கிறேன்.  அண்மையில்  "லைப் ஆப் புத்தா "  என்று புத்தரின் வாழ்க்கையை பலவகை கோலங்களில்  கண்காட்சியாக புதுச்சேரியில் நடத்தியிருக்கிறேன்."

"கோலக்கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்" என்ற எண்ணம் உங்களுக்கு எப்போது உதித்தது?

" 'நான் இங்கு வரையும் கோலங்களை ஆராய்ச்சி செய்ய வெளிநாடுகளிலிருந்து பலரும் வந்து போகிறார்கள். ஆனால் இங்கிருக்கும் பலருக்கு கோலக்கலை குறித்த ஆர்வங்கள் அதிகமில்லை' என்ற ஆதங்கம் தோன்றியது. அதனாலேயே எனக்கு கோலக்கலை மீது தீராத ஆர்வம் தோன்றியது. எனக்கு கோலம் தவிர ஆயில் பெயிண்டிங் , தஞ்சாவூர் பெயிண்டிங் முரல் பெயிண்டிங் என்ற பல்வேறு கலைகள் தெரியும். எனது லலிதா ஆர்ட் அண்ட் கிராஃப்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட விஷயங்களை கற்றுத் தந்தாலும் கோலங்களுக்கே முன்னுரிமை தருகிறேன். தற்போது பலர் என்னிடம் கோலங்களை கற்க ஆர்வமுடன் வருகின்றனர்.  என் கோலக் கலைகளுக்காகவே  பல்வேறு நாடுகளுக்கும் பயணித்திருக்கிறேன். நான் வரைந்த ரங்கோலி கோலங்களை  வெளிநாட்டினர் வந்து பார்த்து வியந்து பாராட்டியது மறக்க இயலாத அனுபவங்களை தந்தது. தற்போது உலகெங்கும் பலரும் என்னிடம் ஆன்லைனில் கோலங்களைக் கற்று வருகிறார்கள் என்கிறார் மாலதி."

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com