0,00 INR

No products in the cart.

சூது கவ்வும்

திலிபனுக்கு அவசரமாக பணம் தேவையாயிருந்தது. அதிக பணம்… நைட் டூட்டி முடிந்து, கண்ணெரிச்சலுடன் ரூமுக்கு வந்து படுத்தவனை செல்போனில் கூப்பிட்டு எழுப்பியது தயாளன்தான். இந்த முறை வழக்கத்தைவிட பேச்சில் வந்து விழுந்த கெட்ட வார்த்தைகள் திலிபனின் ரோஷத்தை  தூண்டியது. பதிலுக்கு அவனும் ஏறி பேசி, இன்றே கடனை திருப்பிக் கொடுப்பதாக சவால் விட்டான். எப்படியேனும் பணத்தைப் புரட்டி தயாளன் முகத்தில் விட்டெறியவேண்டும் என்று கோபம் வந்தது.

ஊரில் பிழைப்புக்கு வழியில்லாமல் அல்லாடிக்கொண்டிருந்த திலிபனை அவன் நண்பன் மணி சில வருடங்கள் முன்பு சென்னை அழைத்து வந்து ஒரு தியேட்டரில் வேலைக்கு சேர்த்து விட்டான்.  அடுத்த இரண்டு மாதத்தில் சோதனையாக  பெருந்தொற்று வந்து அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருந்தது. வேலை இல்லாமல் முடங்கிக் கிடந்ததில், காய்ந்து போயிருந்தான் திலிபன். கைச்செலவுக்கு வழி தேடி இருந்த சொற்ப பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருந்தான்.  விட்டதை பிடிக்க மணியிடம் யோசனை கேட்க தயாளனிடம் அனுப்பி வைத்தான்.  சில நேரங்களில் லாபம், பல நேரங்களில் நஷ்டமென, சூதாட்ட வெறி அவனை புதைகுழி போல் உள்ளிழுக்க, கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிய கடன் மூன்று லட்சத்தை தாண்டியிருந்தது. இப்போது தயாளனின் நெருக்கடி திலிபனுக்கு டென்ஷனை ஏற்றிக்கொண்டிருந்தது. வாட்ச்மேன் வேலையில் கிடைக்கும் சொற்ப சம்பளம் செலவுக்கே போதவில்லை.

எரிச்சலுடன் மணியை செல்போனில் அழைத்து கொதித்தான் திலிபன்.  தயாளனைப் பத்தி உனக்கு தெரியாது. அவனை எதுக்குடா எக்கி பேசுன. இன்னேரம் உன் ஊர்ல ஆளை செட் பண்ணியிருப்பான். அம்மாவையும் தங்கச்சியும் பாதுகாப்பா இருக்கச் சொல்லு. அவனோட குறி உங்கம்மா பேர்ல இருக்குற நிலம். எப்படியாவது அவன்கிட்ட டயம் வாங்கு. நிலத்தை வித்து செட்டில் பண்ணிடு. ‘உன் கதைய முடிக்கிறதெல்லாம் அவனுக்கு விஷயமே கிடையாது’  என்று மணி சாதாரணமாகச் சொல்ல, மிரண்ட திலிபன் குரல் நடுங்க ‘ஐயோ, அந்த நிலம்.. கோர்ட் கேஸ்ல இருக்குடா. இப்ப என்னாடா பண்றது’ என்று கேட்டான். நீ போனை வை யோசனை பண்ணி சொல்றேன் என்று மணி பேச்சை முடித்தான்.

அடுத்த பத்து நிமிடத்தில் அழைத்த மணி பேசப் பேச திலிபனுக்கு படபடப்பு அதிகமானது.  உன் உயிரு, குடும்பம் முக்கியம்னா நான் சொல்ற மாதிரி செய். சரி தப்புன்னு யோசிக்காதே.   தயாளனை செட்டில் பண்ணிட்டு அதோட எல்லாதையும் மறந்துடு என்று மணி முடிக்க வியர்த்திருந்தான்.

குழம்பி ஒரு முடிவுக்கு வந்த திலிபன், செல்போனிலிருந்து சிம் கார்டை எடுத்து தனியே வைத்தான்.  தொப்பியும், மாஸ்கையும் அணிந்துக் கொண்டு, அறையை பூட்டி விட்டு கிளம்பினான்.

காலை பத்து மணிக்கு, காலியாக இருந்த அந்த ஏ.டி.எம். அருகே பசியோடு காத்திருந்தான் திலிபன். அந்த நேரம் வந்த பரந்தாமன் சுற்றும் முற்றும் பார்த்தபடி நிற்க கையில் கார்டுடன் ஏ.டி.எம். உள்ளே நுழைந்தான் திலிபன்.  வெளியே வந்தவனிடம் சார்,  பணம் எடுக்க ஹெல்ப் பண்றிங்களா, கண்ணாடி மறந்திட்டு வந்திட்டேன் என்று பரந்தாமன் கேட்க, தயங்கியது போல் பார்த்த திலிபன் அவருடன் உள்ளே நுழைந்து பணம் எடுத்தபின், கார்டையும் பணத்தையும் பரந்தாமன் கையில் கொடுத்து விட்டு, வேகமாக நகர்ந்தான்.

சில நிமிட நடையில், அருகேயிருந்த பரபரப்பான ரோட்டை கடந்து ஸ்வஸ்திக் நகைக்கடைக்குள் நுழைந்தான் திலிபன்.  புன்னகைத்தபடி வரவேற்ற கடைக்காரரிடம் எங்க அம்மாவுக்கு எட்டு பவுன்ல செயின் பாக்கறேன் என்று அலசி ஆராய்ந்து திருப்தியாக வாங்கி நகைக்கடையை விட்டு வெளியே வந்தவன் முகத்தில் நிம்மதி.

அடுத்த அரைமணி நேரத்தில் இன்ஸ்பெக்டர் மதியழகன் முன்னால், படபடப்புடன் பேசிக்கொண்டிருந்தார் பரந்தாமன்.  அவன் யாருன்னே தெரியாது மதி. ஏ.டி.எம்.ல பணம் எடுக்க உதவி கேட்டேன்.  மூவாயிரம் பணத்தையும் போலியான ஏ.டி.எம். கார்டையும் திணிச்சிட்டு ஒடிட்டான். என்னோட கார்டு அவன் கையில மாட்டியிருக்கு.  போச்சே மதி.  ஸ்வஸ்திக் நகை கடையில மூணு லட்சத்துக்கு என் கார்டை தேய்ச்சிருக்கான்.

என்னோட ரிட்டயர்மென்ட் பணம்  போச்சே… “அடுத்த வாரம் பொண்ணு நிச்சயதார்த்தம் பணமில்லாம நின்னு போனா அதைவிட அவமானம் எனக்கு ஒண்ணுமில்ல” என்று தலையிலடித்தபடி கண்கலங்க புலம்பினார் பரந்தாமன்.  அவருக்கு தேறுதல் சொல்லிவிட்டு கிளம்பினார் மதியழகன்.

ஸ்வஸ்திக் நகைக்கடையில், ஏ.டி.எம். கேமரா பதிவிலும், மாஸ்க், தொப்பி அணிந்த திலிபனை  அடையாளம் காண முடியவில்லை, இன்ஸ்பெக்டர் மதியழகனால். “கடைக்குள்ள செல்போன் பயன்படுத்தாம வந்த வேலையை முடிச்சுட்டு வேகமா கிளம்பியிருக்கான்” என்று அருகிலிருந்த கான்ஸ்டெபிள் கந்தசாமி சொல்ல, “கைரேகையை நம்ம ரெக்கார்டோட பொருத்திப் பாருங்க” என்ற மதியழகன் கடையில்  கொடுத்த செல்நம்பர், மத்த விவரங்களை சரி பார்க்க எதிர்பார்த்தது போல எல்லாமே போலி.

முன் பகல் நேரம். தெருவில் தலை குனிந்தபடி நடந்த திலிபனுக்கு குற்ற உணர்வு கூனி குறுக வைத்தது. பசி வயிற்றைக் கிள்ள எதிரிலிருந்த டீக்கடைக்குள் நுழைந்தான். செல்போனில் சிம்கார்டை பொருத்தி, அம்மாவை அழைத்தான். “மனசு சரியில்ல. உன்னை பாக்கணும் போல இருக்கும்மா. இன்னிக்கு ராத்திரி திருச்சி வர்றேன்” என்று அம்மாவிடம் பேசிவிட்டு டீ சொல்லி காத்திருந்தான்.

திலிபன் வீட்டுக்குள் வந்த போது தயாளன், பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பெரிய சோபா நிறைக்க ஒற்றை ஆளாக அமர்ந்திருந்த அவரது ஆஜானுபாவமான தோற்றத்தை மிரட்சியுடன் பார்த்தவன், கையிலிருந்த நகைக் கடை பையுடன் நகையையும், பில்லையும் அருகே வைத்து விட்டு ஓரமாக நின்றான். ஒரு கையால் பையை துழாவிப் பார்த்த தயாளன், முகத்தில் சிரிப்புடன் நிமிர்ந்து பார்த்தார்.  உட்காருப்பா.. காலையில டென்சன்ல பேசிட்டேன். நீ ரோசக்காரன்தான் என்றபடி பிரியாணியை சுவைக்க ஆரம்பிக்க மெளனமாக வெளியே நடந்தான் திலிபன்.

உச்சி வெயிலில் வியர்வையை துடைத்தபடி ஆட்டோ ஸ்டேண்டிலும் அருகிலிருந்த நகைக்கடைகளிலும் திலிபனின் மாஸ்க் அணிந்த போட்டோவை காட்டி விசாரித்தார் மதியழகன். யாருக்கும் அவனைத் தெரியவில்லை. எந்தவித தடயங்களும் இல்லாமல் திருட்டை எப்படி கண்டுபிடிப்பது, ரோட்டில் நின்றபடி குழம்பினார்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில், வேலைக்கு விடுப்பு சொல்லிவிட்டு திருச்சிக்கு பஸ் ஏறினான் திலிபன்.  தன்னை யாரோ கவனிப்பது போல பயஉணர்ச்சியில் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. உள்ளுக்குள் டென்ஷன் ஏறிக் கொண்டிருந்தது.  பஸ் வேகமெடுக்க, தலை நிமிராமல் உட்கார்ந்திருந்தான்.

அதே நேரத்தில் கான்ஸ்டெபிள் கந்தசாமி அழைத்து சார் கைரேகை நம்ம ரெக்கார்டுல ஒத்துப் போகலை என்று சொல்ல, “பரவாயில்ல, உடனே நான் சொல்ற இடத்துக்கு வந்திடுங்க, ஆளை ட்ரேஸ் பண்ணியாச்சு” என்று உற்சாகமாக பேசினார் மதியழகன்.

பரபரப்புடன் தயாளன் வீட்டுக்கு வந்த கந்தசாமி எப்படி சார் கேசை முடிச்சிங்க என்று ஆச்சரியத்துடன் கேட்க,  பேச ஆரம்பித்தார் மதியழகன்.  அவனோட பேரு திலிபன். நகைக்கடை ரோட்டில இருந்த சிசிடிவி கேமரா பதிவுல திலிபன், ஆட்டோ ஏறிப் போனது பதிவாகியிருந்தது. அந்த ஆட்டோ நம்பரை கண்டுபிடிச்சு இடத்தை தேடிப்போனா, நம்ம குழப்ப அவன் ஒரு பொட்டல்காட்டுல இறங்கியிருக்கான். ரொம்ப தூரத்தில இருந்த டீக்கடையில போட்டோவை காட்டி கேட்டப்ப அவனை அடையாளம் தெரியல. ஆனா கையில நகைக்கடை பை வெச்சிருந்தானான்னு கேட்டா ஆமாம்னு பதில் வந்தது. அவன் இந்த ஏரியா ஆளு இல்லன்னு தெரிஞ்சது.  அப்ப எதுக்கு இங்க வந்தான்னு எனக்கு புரியலை. டீக்கடையில செல்போன் உபயோகிச்சானான்னு நம்பிக்கையில்லாம கேட்டேன்.

சிங்கிள் டீயை வாங்கிட்டு, அரை மணி நேரம் ஆன்லைன் கேம் ஆடியிருக்கான். சூதாட்டாத்துல தோத்திட்டு யார்கிட்டயோ சத்தம் போட்டு திட்டிப் பேசியிருக்கான் என்று டீக்கடைக்காரர் சொல்ல, இப்படிபட்டவன் நிச்சயமா விட்டதை பிடிக்கணும்னு சூதாடி, கடன்ல சிக்கியிருப்பான்னு யூகிச்சேன். அந்த ஏரியாவில இருக்குற பைனான்சியர்களோட விவரத்தை விசாரிச்சு ரெண்டு மூணு பேர் வீட்டுக்கு நேர போயிட்டேன். தயாளன்னு ஒருத்தர் வீட்டுல ஸ்வஸ்திக் நகைக் கடை பையை சோபாவில பார்த்தேன். நகையை மீட்டு எடுத்தாச்சு. திலிபனோட செல்போன் சிக்னலை ட்ரேஸ் பண்ணியாச்சு. இனி அவனை பிடிக்க வேண்டியதுதான், கிளம்பலாம் வாங்க என்று புன்னகைத்தார் மதியழகன்.

                                        

2 COMMENTS

  1. அப்பா ! ஒரு வழியாக திலீபன் மாட்டினானா…வினை
    விதைத்தவன் வினையை த்தான் அறுக்கணும் என்
    பதை உணர்த்தியது சூது கவ்வும் சிறுகதை

  2. சூது கவ்வும் சிறுகதை மூலமாக பேராசை கொள்ள க்கூடாது என நிரூபிக்கப்பட்டுள்ளது

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ஸ்ரீரங்கம் கதைகள், ஓவியங்கள், சன்மானம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதா ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம். அவ்வப்போது சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன் ஒரு பத்து, பன்னிரண்டு கதை தேறும்...

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.

2
யார் வேண்டுமானாலும் யூடியூப் சானல் துவங்கலாம் என்ற நிலையில் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் யூடியூபில் பதிவு செய்யப்படுவது பல பிரச்னைகள், மோதல்களை உருவாக்கும். யூடியூபில் பதிவு செய்யப்படுகின்ற ஆபாச வீடியோக்கள்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...