0,00 INR

No products in the cart.

தேவமனோகரி – 4

தொடர்கதை

ஓவியம் : தெய்வா

பாரதி            

 

தூக்கத்தின் நடுவில் மனோகரிக்கு விழிப்பு வந்தது. சூரியமூர்த்தியைப் பற்றிய யோசனை பாரமாய் அழுத்தியது.

பாவம்,  நல்ல மனிதர்தான்.

பத்து வருஷத்துக்கு முன்னால் அவர் தன் எண்ணத்தை வெளிப்படுத்திய விதம்கூட நாகரீகமாகத்தான் இருந்தது.

‘நீ ஓவர் ரியாக்ட் செய்துவிட்டாய் மனோகரி’ என்று அவ்வப்போது இவள் மனசாட்சி இடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

என்ன செய்வது? இவள் வளர்ப்பு அப்படி.

வளர்க்கும்போதே அப்பா இவளுக்கும் இவள் அண்ணன் தம்பிக்கும் சில விஷயங்களை அழுத்தமாக பதிய வைத்துவிட்டார். அதில் ஒன்று ஒழுக்கம்!

ஒரு சின்ன தவறு செய்தால்கூட ”இது என்ன ஒழுங்கீனம்!” என்று குரலை உயர்த்துவார். புருவங்கள் நெறியும்.

இப்போது யோசித்துப் பார்த்தால் அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது புரிகிறது. அம்மாவின் துணை இல்லாமல் இவர்களை வளர்க்க வேண்டியிருந்ததால் நேர்ந்த கூடுதல் எச்சரிக்கை!

ஆணி அடித்து இப்படி அப்படி நகரவிடாமல் செய்துவிடும் அழுத்தம் அப்பாவின் குரலுக்கு உண்டு.

ஒற்றை மனுஷியாக பிள்ளை வளர்த்த அனுபவம் மனோகரிக்கும் இருந்தது. ஆனால் இவள் சுத்தியலையும் தூக்கவில்லை,  ஆணியும் அடிக்கவில்லை. அதற்கெல்லாம் அவசியமும் இருக்கவில்லை.

சூரியமூர்த்தி இவளிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது சடாரென்று தூக்கியெறிந்தது இவளைப் பொறுத்தவரை இயல்பானதுதான். அதில் மனோகரிக்கு வருத்தம் எதுவுமில்லை.

இரண்டு வருஷத்துக்கு முன்பு நீண்ட விடுப்பில் சென்றிருந்தார் சூரியமூர்த்தி. என்னவாக இருக்கும்? மெல்ல விசாரித்தாள் மனோகரி.

புற்றுநோய் தாக்கியிருக்கிறதாம். சிகிச்சையில் இருப்பதாகத் தகவல் வந்தது. மனோகரிக்கு மனசு அதிர்ந்தது.

“பாவம்,  அவர் ஏனோ கல்யாணம் செஞ்சுக்கலை. அவங்க அக்காதான் கவனிச்சுக்கிறாங்களாம்” என்று அனுதாபக் குரல்கள் இவள் காதுகளை எட்டியது.

டிபார்ட்மெண்ட்டில் எல்லோருடனும் சேர்ந்து இவளும் ஒருநாள் மருத்துவமனையில் சென்று பார்த்தாள். பொத்தாம்பொதுவில் நலன் விசாரித்தாள்.

சிகிச்சை முடிந்து கல்லூரிக்குத் திரும்பியபோது பத்து வயது கூடியவரைப்போல் ஆகிவிட்டிருந்தது அவர் தோற்றம். தோற்றம்தான் அப்படி ஆகிவிட்டிருந்ததே தவிர சுறுசுறுப்பு குறையவில்லை.

வரிசையாக செமினாரும், கண்காட்சிகளும் நடத்திக் கொண்டிருக்கிறார். போனவாரம் வராந்தாவில் எதிர்ப்பட்ட அவரிடம்  டேவிட் கேட்டுக் கொண்டிருந்தார்.

“ஏன் சார் இப்படி ஓவரா உழைக்கிறீங்க?”

“இது எனக்கு போனஸ் வாழ்க்கை டேவிட். இப்பதான் ஒவ்வொருநாளும் அருமையா தெரியுது. இதை நான் வீணாக்க விரும்பலை.”

காதில் விழுந்த அவர் வார்த்தைகளை தானும் அங்கீகரிப்பதுபோல் ஒரு புன்னகை செய்துவிட்டு அவர்களைக் கடந்துபோனாள் மனோகரி.

******

றுநாள் வகுப்பிலிருந்து அவள் வெளியில் வந்தபோது எதிர்ப்பட்டார் சூரியமூர்த்தி. அவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொண்டு ஒருகணம் நின்றாள் மனோகரி.

“நல்லவேளையாக நீங்க மறுத்துட்டீங்க. அதற்கு நான் நன்றி சொல்லணும். இல்லாட்டி உங்க வாழ்க்கையில நானும் ஒரு துயரப்புள்ளி ஆகியிருப்பேன்.” தயங்கித் தயங்கி வெளிப்பட்டன வார்த்தைகள்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று ஒருகணம் புரியாமல் திகைத்தாள் மனோகரி. மென்மையாக அவரைப் பார்த்துவிட்டு மெல்ல நகர்ந்தாள்.

“நானும் ஒரு துயரப்புள்ளியாக………”

‘புள்ளிகளாக இருப்பதெல்லாம் துயரங்களும் இன்பங்களும்தான். அவற்றிலிருந்து ஒரு கோடு போல விலகி நிற்கும் மனசு முக்கியம். சுற்றிவளைத்து சமாளித்தால் வாழ்க்கை ஒரு அழகான கோலமாக இருக்கும். அந்தப் பக்குவம் இல்லையென்றால் அலங்கோலம்தான்.’

ஒரு கலாசார விழாவில் பேசிய சூரியமூர்த்தியின் குரல் காதில் ஒலித்தது. ஒரு நுண்ணியல்வாதியின் தத்துவத்தை ரசித்துக் கைதட்டியது சபை.

புள்ளிகள் பந்தங்களாகவும் இருக்கலாம் என்று மனோகரிக்குத் தோன்றியது. பந்தங்களிலிருந்தும் விலகி நிற்க வேண்டியிருக்கிறதே!

இதையெல்லாம் நவீனிடம் பகிர்ந்துகொள்ளவே முடியாது.

“எப்போதும் தத்துவம் பேசாதீங்கம்மா, போரடிக்குது” என்பான்.

உண்மைதான். எது நம்மை அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறதோ, அதிலிருந்து சற்று விலகியும் வாழ்க்கையைப் பார்க்கவேண்டும். எல்லாம் ஒரு முயற்சிதான்!

******

மறுநாள் நவீன் போன் செய்தபோது இனியாவைப் பற்றி சொல்ல வாயெடுத்தாள் மனோகரி.

அதற்குள் அவன் “அம்மா, திவ்யா அக்கா எப்படி இருக்காங்க? டெலிவரி ஆயிடுச்சா?”

“போனமாசம் பார்த்ததுதான். டெலிவரிக்கு இன்னும் ஒருவாரம் இருக்கு. மீனாட்சிகிட்ட பேசிகிட்டுதான் இருக்கேன்.”

மனோகரி சொல்லிமுடிக்கக் காத்திருந்தவன்போல் தொடர்பைத் துண்டித்தான் நவீன்.

பழகிய ஒருவரையும் மறக்கவில்லை இந்தப் பிள்ளை. அதை நினைத்தபோது மனோகரிக்கு பெருமிதம் புன்னகையாய் மலர்ந்தது.

மீனாட்சிக்கு மறுநாள் ஃபோன் செய்து விசாரித்தாள் மனோகரி.

“இன்னும் மூணுநாள் பார்க்கலாம். அதற்குள் லேபர் பெயின் வரலைன்னா சிசேரியன் செய்யலாம்னு டாக்டர் சொல்றாங்க மனோகரி.”

“எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காம எனக்கு சொல்லு மீனாட்சி.”

******

னோகரியின் வாழ்வில் அது ஒரு பசுமையான காலம். நிறைய ஓடி களைத்தபிறகு உடல் சோர்ந்த நிலையில் உட்கார ஒரு திண்ணையும், குடிக்க குளிர்ச்சியான தண்ணீரும் கிடைத்ததற்கு ஒப்பான ஒரு அனுபவம்!

மீனாட்சியின் குடும்பத்தில்தான் மனோகரிக்கு அந்த ஆறுதலான அனுபவம் காத்திருந்தது.

நான்கு வயதுப் பிள்ளையுடன் தனித்து நிறுத்தப்பட்ட வாழக்கையில் அவளுக்கு ஒரு மாற்றம் வேண்டியிருந்தது. வீடுமாறினால் சில கசப்பான நினைவுகளும் தடயங்களும் மாறுமோ?

“ஓரளவு மாறும். நீ வேற எங்கேயும் வீடு தேடவேண்டாம். என் எதிர் ஃப்ளாட் வாடகைக்குத் தயாரா இருக்கு. அடுத்த மாசமே ஷிப்ட் பண்ணிடு மனோகரி” என்றாள் மீனாட்சி.

இருவரும் பள்ளிக்கூடத்தில் பல வருஷங்கள் ஒன்றாகப் படித்ததில் சிநேகம்  வேரூன்றியிருந்தது.

“நீ எப்பவும் ஒரு ஸீரியஸ் டைப்” என்று இவளைக் குற்றம் சாட்டுவாள் மீனாட்சி.

“ஆமாம்மா. ஆனால் மீனாட்சி ஆன்ட்டி உங்களை மாதிரி இல்லை. நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆனது அதிசயம்தான்” என்றான் நவீன்.

“பள்ளிக்கூடத்து நட்பில் மட்டும்தான் இதெல்லாம் சாத்தியம் நவீன்.  அந்த வயசில் பரஸ்பரம் ஏற்படும் அன்பு மட்டும்தான் அஸ்திவாரம். இண்டிவிஜுவாலிட்டி எல்லாம் பின்னால் வருகிற விஷயம்.”

மீனாட்சிக்கு வங்கியில் வேலை. அவள் கணவர் சுயதொழில் செய்துவந்தார். கலகலப்பான மனிதர். மகள் திவ்யா நவீனை விட மூன்று வயது பெரியவள்.

தம்பதிகள் இருவருக்கும் நிறைய ஒற்றுமை. மாதநாவல் என்ற பெயரில் வரும் பாக்கெட் நாவல்களை வாங்கி போட்டிப்போட்டுக் கொண்டு படிப்பார்கள். டி.வி.யில் சினிமா காமெடி,  ஸீரியல் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். சின்னச்சின்னதாக ஒருவரையொருவர் சீண்டிக் கொள்வார்கள். முகத்தில் எப்போதும் சிரிப்பு தவழும்.

மனோகரிக்கு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். மனசு நிறைந்துபோகும்.

குழுந்தைகள் இருவரும் மாலைநேரங்களில் மொட்டைமாடிக்குப் போய் விளையாடுவார்கள்.

நவீன் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை திவ்யா அக்காவை நச்சரித்துக் கொண்டிருப்பான்.

திவ்யா அக்கா என்று கூப்பிடுவதாக நினைத்துக்கொண்டு அவனுக்கே உரிய மழலையைில் ‘தியாக்கா’ என்று அழைப்பான்.

சில சமயம் அவனுக்கு திவ்யா மீது கோபம் வரும்.

“அம்மா,  தியாக்கா என் குதிரைப் பொம்மையை எடுத்துக்கிச்சு.” என்று முறையிடுவான்.

“நான் இதை வாங்கும்போதே உங்க இரண்டு பேருக்கும் சேர்த்துதான் வாங்கினேன். திவ்யாவும் அதை எடுத்து விளையாடுவா நவீன்.”

புரிந்துகொள்வான் நவீன்.

மீனாட்சியும் அவள் கணவரும் வெளியில் போவதானால் திவ்யாவை இவளிடம் விட்டுவிட்டுப் போவார்கள். அதேபோல் மனோகரிக்கு உடம்பு சரியில்லை என்றால் நவீனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

“சிஸ்டர்,  இந்தக் கஞ்சியை உங்ககிட்ட மீனா கொடுக்கச் சொல்லிச்சு.” என்று ஹாலில் இருக்கும் டீப்பாயில் கஞ்சிப் பாத்திரத்தை வைத்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் போவார் மீனாட்சியின் கணவர்.

“ஆனாலும் உன் பையனை நீ ரொம்ப ஸ்டிரிக்ட்டா வளர்க்கறே மனோகரி! நம் வீடுங்கள்ளயெல்லாம் துடைப்பத்தை ஆண்பிள்ளை தொடவே கூடாதுன்னு சொல்லுவாங்க. தெரியுமில்ல?”

“நம்ம தேசப்பிதாவே துடைப்பத்தைக் கையில் எடுத்தவர்தான் மீனாட்சி. இந்த வேலையெல்லாம் செய்யறதுலே ஒரு தப்பும் இல்லை.”

அதற்கு மேல் நின்று விவாதிக்கமாட்டாள் மீனாட்சி. ஸீரியசான எந்த விளக்கத்தையும் அவள் காதுகொடுத்து கேட்க விரும்புவதில்லை. அது மனோகரிக்கும் தெரியும்.

அடுத்த ஐந்து வருஷத்தில் திருவான்மியூரில் சொந்த வீட்டுக்குக் குடிபுகுந்தாள் மனோகரி.

திவ்யாவுக்கும் சரத்துக்கும் கல்யாணம் ஆனபோது லண்டனிலிருந்து புறப்பட்டு வந்து கலந்துகொண்டான் நவீன்.

******

ரண்டுநாள் கழித்து மனோகரி ஆஸ்பத்திரிக்குப் போனபோது திவ்யாவுக்குக் குழந்தை பிறந்து ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டிருந்தது.

“ஸிசேரியன் செய்ய தயார் பண்ணிகிட்டுத்தான் இருந்தாங்க. அதுக்குள்ள நார்மலாவே குழந்தை பிறந்துட்டுது.”

ஆண் குழந்தை. மீனாட்சிக்கும் அவள் கணவருக்கும் சந்தோஷம் முகத்தில் குதிபோட்டுக் கொண்டிருந்தது.

துணிச்சுருளுக்குள் பொதிந்திருந்த ரோஜா மொட்டு போல் இருந்தது குழந்தை.

ஒவ்வொரு ஜனனமும் மனிதர்களை கிளர்த்தத்தான் செய்கிறது. மனோகரிக்குள் ஒரு பரவச உணர்வு.

“உனக்கு என்ன உதவி தேவைப்படுது மீனாட்சி? நான் வீட்டிலிருந்து சாப்பாடு அனுப்பட்டுமா?”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மனோகரி. திவ்யாவுடைய அத்தை ஊரிலிருந்து வந்திருக்காங்க. கொஞ்சநாள் தங்கியிருக்கேன்னு சொல்றாங்க. நல்ல அனுபவசாலி.”

“ஓ! நல்லதாயிற்று. சரத் எங்கே?”

“இங்கேதான் இருந்தாரு. இப்பதான் வர்றவங்களுக்குக் கொடுக்க சாக்லேட் வாங்கிட்டு வர்றேன்னு போயிருக்காரு.”

திவ்யாவின் பக்கத்தில் போய் நின்றாள் மனோகரி. அவள் நெற்றியை மெல்ல வருடிக்கொடுத்தாள்.

“தேங்க்யூ ஆன்ட்டி பார் யுவர் பிரஸென்ஸ். நவீன் எப்படி இருக்கான்?”

“நேற்றுகூட ஃபோனில் உன்னை விசாரித்தான்”

“மீனாட்சி, உன் சம்மந்தி அம்மாவுக்கு விஷயத்தை சொல்லிட்டியா? அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க.”

“இன்னும் இல்லை. ஒருவேளை சரத் சொல்லியிருக்கலாம்.”

இவளுக்கு பதில் சொன்னபோதே மீனாட்சியின் முகத்திலிருந்த சந்தோஷம் சட்டென்று வடிந்தது.

பிரசவக் களைப்பில் இருந்த திவ்யா கழுத்தைத் திருப்பி தன் தலைமாட்டில் நின்று கொண்டிருந்த மனோகரியை விழித்துப் பார்த்தாள். அந்தப் பார்வையில் நிறைய அர்த்தங்கள்!

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

இறைவனுக்கு உகந்த செயல்கள்

உத்தவ கீதை - 22 - டி.வி. ராதாகிருஷ்ணன் கண்ணா...இந்த யோகம் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாத சாதாரணமானவர்களுக்கு மிகவும் கடினமானது என எண்ணுகிறேன். மிகப்பெரிய யோகிகள் மனத்தை அடக்கும் முயற்சியில் தோல்வியை அடைகிறார்கள். ஆகையால், முக்தி...

தேவமனோகரி – 22

0
தொடர்கதை                                               ...

அந்த பையன் இதோ என் முன்னால் விஸ்வரூபமெடுத்து நிற்கிறான்.

0
ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 22 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா நோன்பின் நினைவு படப்பிடிப்பிற்காகத்தான் அந்த ஃபாக்டரிக்குப் போயிருந்தேன். ஷெட்டில் இரண்டு புதிய கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. என் மனதில் லேசான பொறாமை பொங்கி எழுந்தது. “எவன்டா இங்க...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...