உயரும் விலைவாசி திணறும் மக்கள்

உயரும் விலைவாசி திணறும் மக்கள்
Published on

தலையங்கம்

ன்று இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளில் மிக முக்கியமானது தொடர்ந்து உயரும் விலைவாசி.  அரை நூற்றாண்டுக்கு பின்னர் உலகின் பல நாடுகளில் எழுந்திருக்கும் பிரச்னை இது. பணவீக்கத்தை மிகத் திறம்பட கட்டுக்குள் வைத்திருக்கும்  அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளும் கூட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அமெரிக்காவில் உயர்ந்திருக்கும் விலைவாசி 6.83 %, இது கடந்த 33 ஆண்டுகளில் நிகழாத விஷயம். இந்தியாவில் கடந்த நவம்பரில் காணப்பட்ட 14.3* % உயர்வு  கடந்த 12 ஆண்டுகளின் உச்ச அளவு.

ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் பொருட்களின் விலை உயர்வதும் அதற்கேற்ப மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பதும் இயல்பான விஷயம். ஆனால் இன்று வாங்கும் சக்தி குறைந்த நிலையில் பொருட்கள் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  இந்த  நிலைக்கு கொரோனா கொடுந்தொற்றும் அதன் விளைவுகளும் காரணமாக சொல்லப்படுகிறது.

மற்ற நாடுகளைப்போல் இல்லாமல்  இந்தியாவில்  ஒரே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மளிகைப் பொருட்கள் விலை உயர்வு , கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, காய்கறிகள்,  பழங்கள் விலை உயர்வு  என அனைத்துப் பொருட்களின் விலையும் இரண்டு மடங்கு,  மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. மீண்டும் கட்டுமான பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன.  கடந்த ஆண்டு இருந்த பொருட்களின் விலையையும் இன்றைய விலையையும்  ஒப்பிட்டுப் பார்த்தால்,   உயர்வு எவ்வளவு  என்பது  தெளிவாகத் தெரியவரும். இதன்மூலம் மக்கள் தாங்க முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ப பொருட்களை உற்பத்தி செய்வது, இயற்கைச் சீற்றங்களிலிருந்து இன்றியமையாப்  பொருட்களைக் காப்பது, போன்ற விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மாநில மற்றும்  ஒன்றிய அரசுகள் செய்யத் தவறிக் கொண்டிருக்கின்றன.

ஒன்றிய அரசிலிருக்கும் பா.ஜ.க. எதிர்வரும் ஐந்து மாநில தேர்தல்களில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டு, அந்த மாநிலங்களில் பல ஆயிரங்கோடி திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. மாநில அரசில் தி.மு.க.  தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை வெற்றிகரமாக  நிறைவேற்றிவிட்ட விபரங்களை அறிவிப்பதில் மட்டுமே  முனைப்புக் காட்டிக்கொண்டிருக்கிறது.

அரசியல் கட்சிகளுக்குத் தேர்தலும், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் முக்கியம்தான். ஆனால் அவற்றைவிட மிக முக்கியமானது  விலைவாசியைக் கட்டுக்குள் வைப்பது.

இந்தியாவில் விலைவாசி உயர்வு பொருளாதார விஷயம் மட்டுமில்லை, அரசியலுடன் நேரடித் தொடர்பு  கொண்டது.  விலைவாசி உயர்வினால்  ஆட்சியிலிருந்த கட்சிகள் தோல்விகளைச் சந்தித்திருப்பது வரலாறு.

ஒன்றிய, மாநில அரசுகளின்  இப்போதைய தலையாய பணி அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்து மக்களைக் காப்பாற்ற வேண்டியது மட்டுமே.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com