0,00 INR

No products in the cart.

ஒரு கலைஞனின் வாழ்க்கையில் – 4

மம்முட்டி 

தமிழில் கே.வி.ஷைலஜா

 ரதீஷ்

டப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தபோது தொலைபேசியில் டயானா பேசியதாக மனைவி சொன்னாள். கொச்சிக்கு வேறு ஏதோ வேலை காரணமாக வந்திருந்த டயானா திரும்புவதற்கு முன்பு  எங்களைச் சந்திப்பதாகவும் சொல்லியிருக்கிறாள். மனைவி ‘சுலு’ விடம் நிறைய நேரம் தொலைபேசியில் பேசியிருக்கிறாள். என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை, ஆனால் அவள் வருகிறாள் என்று அறிருந்ததும் என் மனதில் தேவையில்லாத கனம் ஏறியிருந்தது. முதல்முதலாக ரதீஷ் உடனில்லாத டயானவைப் பார்க்கப் போகிறேன். இப்படியொரு மன நிலையில் நான் அவளை எதிர்பார்க்கவில்லை. டயானா ஹோட்டல் அறைக்கு வந்து சுலுவிடம் நிறைய நேரம் பேசினாள். பேசிவிட்டுப் புறப்படுவதற்கு முன்பு நான் சொன்னேன்.

“டயானா, என்னால அங்க வர……..”

வாக்கியத்தை முடிக்கும் முன் அவளே பேசினாள். எனக்குத் தகவல் கிடைத்தும் போகாதிருந்தபோது டயானாவின் மகள் பார்வதி, அம்மாவை சமாதானப்படுத்தியிருக்கிறாள்.

“அம்மா அங்கிளால இந்த வேதனையைத் தாங்க முடியாது. அப்பாவும் அவரும் எவ்வளவு நெருக்கம்னு நமக்குத் தெரியாதா? அதனால மம்முட்டி அங்கிள் வரமாட்டார், அப்பாவை இந்தக் கோலத்தில் பாக்க அவரால முடியாதும்மா”

டயானாவின் குரலில் இழப்பின் வேதனை தெரிந்தது. பிறகு ஏதேதோ பேசினாள். அழுதாள். தீர்க்கமாய் யோசித்தாள். சுலுவிடம் தனியாகப் பேசினாள். சிறிது நேரத்தில் கிளம்பிப் போகவும் செய்தாள்.

ரதீஷின் மகள் என் அகம் உணர்ந்திருக்கிறாள் என்பது எனக்கு வேதனையையும் நிம்மதி கலந்த உணர்வையும் தந்தது. வெளியில் சொல்லிவிட முடியாத ரணத்தைப் பாதுகாத்திருந்தவனுக்கு அதில் லேசாய் காற்றுபட்டது போல….. பார்வதியால் டயானாவைச் சமாதானப்படுத்த முடிந்திருக்கிறதே.

“ரதீஷ் இறந்துவிட்டான்” என்பதை என்னால் பலநேரங்களில் இப்போதும் நம்ப முடிவதில்லை. எங்கேயாவது அவன் என்னுடன் நடிப்பதற்காக ‘டேய் மச்சான்’ என்று கூப்பிட்டபடி வருவான் என்றே நம்புகிறேன். மரணச் செய்தி வந்த பத்திரிகைகளை நான் பார்க்கவில்லை. அன்றைக்கு டி.வி. பார்க்கவில்லை. ரதீஷ் இறந்து கிடக்கும் படம் என் மனதில் உயர்ந்தெழுவதை என்னால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. சக நடிகன் என்பதைக் கடந்து அனுபவங்களால் ஒன்றிணைக்கப்பட்ட சக இதயத் துடிப்பாயிருந்தான் அவன். “இழந்துவிட்டேன்” என்ற போதுதான் அது எத்தனை ஆழமாயிருந்தது என்று உணரமுடிந்தது. அதனால்தான் அவனை நான் இழக்கவில்லை என்றும் நினைக்க வைத்தது.

நான் சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே ரதீஷ் பெரிய நடிகனாகி இருந்தான். திருவனந்தபுரத்தில் நடந்த படப்பிடிப்பிற்கு ரதீஷ் வராமல் போனபோது முழு யூனிட்டும் இரண்டு நாட்களாகக் காத்திருந்தது. நானும் அதிலிருந்தேன். நான் உட்பட எல்லோருக்கும் தங்குவதற்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள். ரதீஷுக்கு மட்டும் ஹோட்டலில் அறை  தயாராக இருந்தது. காத்திருத்தலின் மூன்றாம்நாள் வந்த ரதீஷ் இயல்பாய்ப் பேசத்துவங்கியதும் இந்த நாட்களின் இடைவெளிகளை மனதில் ஏற்றிக் கொள்ளாதது போலிருந்தது. அதற்குப் பிறகு தான் அவனுடன் மிகவும் நெருங்கினேன். ஹோட்டலை விட்டுவிட்டு அவனும் எங்களுடன் வாடகை வீட்டிற்கு வந்துவிட்டான். மன சௌகரியத்திற்கு அப்பாற்பட்ட சுகம் அவனுக்கு எப்போதும் தேவையாயிருந்ததில்லை.

படப்பிடிப்பின் இடைவேளையில் ரதீஷ் ஒருமுறை சொன்னான். “நீ இந்தத்துறையில் எல்லாவற்றையம் கட்டுப்படுத்தி மேலேறி நிற்க வந்தவன். நான் வெறும் வியாபாரி. சினிமா என் தொழில் அல்ல. வியாபாரத்தில்தான் எனக்கு  ஆர்வமிருக்கிறது.  அதில் கூடிய சீக்கிரமே நான் பெரிய ஆளாவேன். அப்புறம் படம் தயாரிப்பேன். அது எல்லாத்திலேயும் நீதான்டா நடிக்கணும்.”

ரதீஷுக்கு ஒரு நாளும் சினிமாவைப்பற்றி பெரிய கனவுகளெல்லாம் இருந்ததில்லை. ஆனால் வியாபாரத்தில் தான் எழுப்ப வேண்டிய பெரிய கோட்டைகளையும் ஆள வேண்டிய சாம்ராஜ்யங்களையும் பற்றிய கனவு இருந்தது.

யதார்த்தத்தோடு ஒத்துப்போகாத விவசாயத்துக்கு ரதீஷ் போகும் போதெல்லாம் பலரும் என்னிடம் அவனை நேர்படுத்தச் சொன்னார்கள். தவறு செய்கிறானோ என்ற தவிப்புடன் பேசும் போதெல்லாம், “ஊர்ல இருக்கவங்க அப்படி எல்லாம் சொல்லுவாங்க. ஒண்ணும் பிரச்னை ஆகாது. எல்லாமே நான் நினைச்சது போலக் கூடி வருது. பொறுமையா இருந்து பாரேன்,” என்பான். ஆனால் நம்பிச் செய்த காரியங்கள் கூடி வரவில்லை. கனவுகள் தகர்ந்துபோக தொடங்கியிருந்தன. அவனுக்கு ஏதேனும் சொல்ல நினைத்து சேகரித்த வார்த்தைகளையெல்லாம் அவனுடைய பார்வையாளும், சிரிப்பாலும் எழுதி அழித்த பலகையாக்கினான்.

உடல்நிலை சரியில்லாமல், மனம் உடைந்து போன நிலையில் ரதீஷ் விவசாயத்திற்கும் வியாபாரத்திற்கும் போனான். மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். எத்தனை காலம் விலகி இருந்தாலும் திரும்பி வந்தபோது பிடித்து நிறுத்தி ஏறி உட்கார்ந்து ஆணையிடுவதற்கான நாற்காலி அவனுக்கிருந்தது. இரண்டிற்குமான இந்த நாட்களில் சினிமாவில் இருக்கும் எல்லோரிடமும் நெருக்கத்தின் கதகதப்பு குறையாமல் காப்பாற்றியிருந்தான் ரதீஷ். திரும்பி வந்து சினிமாவில் சகஜமானபோது மீண்டும் நெருக்கமானோம். அப்போதும் அவன் புதியமுறை விவசாயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.

‘இப்படியே இருந்தால் எப்படி? நமக்கு ஏதாவது ஆயிட்டா நம்ம குடும்பத்தை யார் பாத்துப்பாங்க?’ என்று ஒரு முறை கேட்டபோது, ‘என் பிள்ளைகளை நீ பாத்துக்கமாட்டியாடா’ என்றான். நானும் அவனும் இரண்டல்ல என்ற அவனின் உள்வெளிப்பாட்டினை என்னால் அன்று தரிசிக்க முடிந்தது. ரதீஷின் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளவும், பராமரிக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள். அப்படியான மனபாரமான வேலைகளை எனக்காக அவன் விட்டு வைக்கவில்லை.

‘டானி’ என்ற படத்தைப் பற்றி யோசிக்கும்போது எனக்கு ரதீஷின் ஞாபகமே வந்தது. இயக்குநர் டி.வி.சந்திரனிடம் கேட்டு நான் ரதீஷை அந்தப் படத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்தேன். அவனுடைய வருகையிலோ, நடிப்பிலோ எந்த மாற்றமும் இல்லை. வாழ்க்கை வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டதென்றும் மீதம் உள்ள வாழ்க்கை புதியதொரு இலக்கை நோக்கி பிரகாசமாக செல்லும் என்றும்  அவன் உறுதியாகச் சொன்னான். ஆனால் சட்டென ஒருநாள் ’ரதீஷ் இறந்துவிட்டான்’ என்ற செய்தி  என்னை இருளடையச் செய்தது. இருபத்தியிரண்டு வயதில் அவன்மேல் ஏற்பட்டிருந்த ப்ரியம் நாங்கள் வளர்ந்து நின்றப் பிறகும் நித்ய யௌவனத்தோடு எங்களோடு வளர்ந்திருந்தது. வேறு யாருடனும்  இவ்வளவு ஈடுபாட்டோடு என்னால் நெருங்க முடிந்ததில்லை. வாழ்வின் அதி அற்புதமான பகுதியைத் தொடங்க ஆரம்பித்த அவனை ஏன் கடவுள் அழைத்துக் கொண்டார்? தவறுகளுக்குப் பிராயச்சித்தம் கேட்க ஒரு வாய்ப்பினைக்கூடத் தராமல் மரணம் ஏன் எங்கேயோ தாகத்துடன் காத்திருந்தது?

எனக்கொரு தகுந்த அன்பளிப்பை வாங்கமுடியாமல் போனதுதான் என் சென்னை வீட்டிற்கு அவன் வராமல் போனதற்கான காரணமாய்ச் சொன்னான். வாங்காமல் போன அந்த அன்பளிப்பிற்கு, கிடைத்த பல அன்பளிப்புகளை விடவும் அதீத பளபளப்பும் நேர்த்தியும் வசீகரமும் இருப்பதாக எனக்கு எப்போதும் தோன்றும்.

அவனை முழுமையாக நான் புரிந்து கொண்டிருக்கிறேனா என்று தெரியவில்லை. அவனுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிட்டேனா என்றும் தெரியவில்லை. அவன் என்னிடம் எதுவும் கேட்டதுமில்லை.

என்னைவிடப் பெரிய நடிகனாக என் முன்னால் நிற்கும் அதே கம்பீரத்தோடுதான், நான் சினிமாவில் முக்கிய இடத்தை அடைந்த போதும் அவனிருந்தான். ரதீஷின் மனைவி டயானா மற்றும் பிள்ளைகளின் முன்னால் நிற்கும்போது எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அகன்றிருந்தபோதும், நெருக்கத்திலிருக்கும்போதும் குலையாமல் பாதுகாத்த  நட்பு எங்களுக்கிருந்தது.  எந்த இடத்திலும் “என்னடா” என்று கேட்கும் குரலில் உள்ள ஈர்ப்பு சினிமா என்ற வியாபாரத்திலிருந்து மிகவும் அகன்றிருந்தது.

ரதீஷின் மகள் சொன்னது சரிதான். இறுதி யாத்திரைக்கு முன் அமைதியாய் ரதீஷ் படுத்திருப்பதைப் பார்க்கும் மனதைரியம் எனக்குக் கிடையாது. அப்படி ஒரு உருவத்தை என் நியாபகங்களின்  கடைசிப் படிமமாகக்கூட நான் பாதுகாக்க விரும்பவில்லை.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

குருடர்களின் யானை

0
ஒரு நிருபரின் டைரி - 21 - எஸ். சந்திரமெளலி லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம், “லுக் அவுட்” என்ற லயோலா கல்லூரியின் மாணவர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். நாங்கள் அதன் தமிழ்ப்...

தேவ மனோகரி – 21

1
தொடர்கதை                                               ...

இது கடவுளின் ருசியுள்ள நாடு

0
ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 21 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா   கொச்சியிலிருந்து அதிரப்பள்ளிக்குப் போகும் வழியில்தான் அந்த டீக்கடை இருக்கிறது. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகுமாரன் தம்பியின் ‘விளிச்சு விளி கேட்டு’ (அழைத்தாய் கேட்டேன்) என்ற...