0,00 INR

No products in the cart.

அந்த சின்ன ஊரிலும் உலகின் திறவுகோல் இருந்தது ஆச்சர்யம்.

உலகக் குடிமகன் –  4

– நா.கண்ணன்

 

ன் வாழ்வு மாற்றம் கொண்டு வரும் ஒரு புதிய அலையின் மீது எப்போதுமே  பயணித்தாகவே எனக்கொரு எண்ணமுண்டு. எப்படியென விளக்குகிறேன். முதலில் பள்ளிக் காலங்களில், ஆங்கிலம் ’அறிந்து கொள்ள வேண்டிய ஓர் மொழி’ என உணர்த்தும் வண்ணம் மதிய உணவுத் திட்டம் போல் சிற்றுண்டித் திட்டம் உருவாக்கி எங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தந்தது! திருப்பூவணம் ‘உச்சிக் குடுமி ஐயர்’ கடை என்பது இவ்வகை சிற்றுண்டிப் பலகாரம் செய்வதில் நேர்த்தியான கடை. அங்கிருந்துதான் எங்களுக்கு சிற்றுண்டி வரும்! இப்படி நான் ஆங்கிலம் பயிலவில்லை எனில் பல்வேறு நாடுகளில் நான் வாழ்ந்து ஆய்வு செய்திருக்க முடியாது. ஆச்சர்யம் என்னவெனில், இரண்டாம் உலகப் போருக்கு முன் ஜெர்மன் மொழியே அறிவியல் மொழியாக இருந்தது. ஆயின் ஆங்கிலேயர் முன்னெடுத்த விடுதலைக் கூட்டணி போரில் வென்ற பின் ஆங்கிலமே உலக மொழியாகிவிட்டது. இந்தியா ஆங்கிலக் காலனியாக அமைந்தது கூட ஓர் அனுகூலம்தான். ஏனெனில் ஆங்கிலமே உலகப் பயணத்தின் திறவுகோல். ஆனால், திருப்பூவணம் இதை ஐம்பது, அறுபதுகளில் அறிந்து இருந்ததா? என்பதோர் பெரிய கேள்வி. ஆனால் அச்சிறு ஊரிலும் உலகின் திறவுகோல் இருந்தது ஆச்சர்யம்.

அடுத்தது பள்ளியில் எலெக்டிவ் எனும் புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்தியது! சிறப்புப் பாடம் என்பது பொது நீரோட்டத்திலிருந்து பிரித்து சில மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பது. அது என்னுள் ஒரு தனித்துவத்தை விதைத்து அதை வளர்த்துக் கொள்ள வழி வகுத்தது. வேதியியல் (இரசாயனம்) ஆய்வுகள் உலகின் போக்கையே மாற்றப் போகின்றன என அறிவியல் ஆரூடம் சொன்ன பாலசுப்ரமணியன் ஆசிரியருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் இளங்கலை வேதியியல் முடித்து ஆசிரியராக வந்திருந்தார். அவருக்கு தன் பாடத்தின் மீது அபார ஆர்வம், அதாவது தொற்றிக் கொள்ளத்தக்க ஆர்வம் இருந்தது என்பது உண்மை. ஆயினும், தான் கண்ட ஓர் எதிர்காலத்தை தம் மாணவர்களுக்கு வழங்க அவர் முயன்றது பாராட்டுதற்குரியது. இப்படி மாற்றமுறும் காலத்தில் நான் இருந்தது என் அதிர்ஷ்டம்தானே!

நான் மருத்துவர் ஆக வேண்டுமென விலங்கியல் படித்ததும் ஓர் அதிர்ஷ்டம்தான். ஏனெனில் வளரும் அறிவியல், விலங்கியல் எனும் துறையையே மாற்றிக் கொண்டிருந்தது. சாதாரணமாக விலங்கியல் என்பது விலங்குகளின் பரிணாமம், விலங்குகளின் உடலமைப்பு, அவைகளின் வைய விரிவுப் பரவல், அவைகளின் பகுப்பு முறை என்றே இருந்தது. ஆனால் நான் கால் வைத்த நேரம், துறை சார் எல்லைகள் மறைந்து பல்துறை கலப்பு நிகழத் தொடங்கியது. விலங்கியல், தாவரவியல் என படித்த முறை போய் ‘உயிரியல்’ எனும் பொதுத்துறை உருவாகியது. அது கூர்தலறமாகட்டும், செல் எனும் அடிப்படை  உயிரியல் அலகாகட்டும் அவை பொது விதிகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. மேலை உலகில் தோன்றிய தொழில்துறை முன்னேற்றம் உயிர்களின் மூலமான டி என் ஏ எனும் மூலக்கூறைக் கண்டு சொன்ன பின், உயிரியல் படிப்பு என்பதே தடம் மாறிவிட்டது. உயிர் வளர்ச்சி, பரிணாமம், அதன் தோற்றம், செயற்பாடு, எதிர்கால மாற்றங்கள் என எல்லாவற்றையும் தீர்மானிக்கும் திறன் மரபணு எனப்படும் டிஎன்ஏ.க்கு  உண்டு என்பது அறியப்பட்ட பின் (அதுவொரு நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பு!) அனைத்து கவனமும் இப்போது ஜீனோமிக்ஸ் என அறியப்படும் மரபணு ஆய்வை நோக்கி நகரத் தொடங்கியது. விலங்கின் பெருந்தோற்ற ஆய்விலிருந்து கவனம் செல்லுக்குள் ஒளிந்திருக்கும் மிகச்சிறிய டிஎன்ஏ. மூலக்கூறுவிற்கு மாறத்தொடங்கியது. இது ஆய்வியலில் ஓர் புதிய அலை. எனவே, பல்துறை கலப்பான சூழலியல், செல்லியல், கருவியல், மரபணுவியல், உயிர்வேதியியல், உயிர்பூதவியல் என பல புதிய துறைகள் வேகமாக வளரத் தொடங்கின. ஒருமையை நோக்கிய ஒரு பெரும் பயணம் நிகழத் தொடங்கியது.

இந்த அலையின் ஓர் பரிணாமம்தான் சூழலியல் என்பது. சூழல் ஞானம் என்பது காலத்தின் தேவை என அறிவியல் சொன்னது. பசுமைப் புரட்சி உருவாகி உலகின் உணவுத் தேவையை சரிகட்ட செயற்கை உரம், செயற்கை பூச்சி கொல்லிகள், செயற்கை கலப்பு நெல் வகைகள் என எல்லாமே செயற்கையாக அமையப் போய் அவை சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பு பற்றிய புதிய விழிப்புணர்வு தோன்றியது. ‘மௌனிக்கப்பட்ட இளவேனில்’ எனும் நூல் வழியாக எவ்வாறு பூச்சி கொல்லிகள் பூச்சிகளை மட்டும் கொல்லாமல் மண்ணில் வாழும் புழு, பூச்சிகளைக் கொல்ல, அதை உண்ணும் பறவைகளைக் கொல்ல, மெல்ல, மெல்லச் சூழலே நச்சுத்தன்மை கொண்டு உயிர் இயக்கத்தின் தொண்டையைக் கௌவிவிட்டது என்பது அந்த நூல் வெளியிட்ட அதிர்ச்சியான தகவல். திருப்பூவணம் எனும் சிவத்தலத்தில் பிறந்த எனக்கு திடீரென அப்பரின் ஓர் பாடல் இதை விளக்கியது:

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

இப்பாடலின் ஆரம்பமே மாசு இல்லாத நல்ல இசை என ஆரம்பிக்கிறது. மாசு என்பது மனத்திற்கான கேடு மட்டுமல்ல, சூழலுக்கான கேடு என்பதையும் இப்பாடல் விளக்குகிறது. தென்றல் என்பது பொதிகையில் உலாவி ஆரோக்கியமான காற்றாக வந்து நம்மை பரிபாலிக்க வேண்டும். மாசு நிரம்பிய காற்று நஞ்சு. இளவேனில் என்பது பனிக்காலம் முடிந்து உயிர்கள் தளிர்ப்பிக்கும் காலம். பல்வகை உயிர்களும் தம் பிறவிப் பயனை அனுபவிக்கும் காலம். இக்காலத்தில் உயிர்கள் மடிந்தால் அது சோகம். மிகச்சரியாக மௌனிக்கப்பட்ட இளவேனில் என ரேச்சல் கார்சன் எனும் அமெரிக்க அறிவியல் ஆர்வலர் இதை முக்கியப்படுத்தி அறுபதுகளில் எழுதிய நூல் சூழலியலுக்கான பைபிள் (விவிலியம்) எனச் சொல்லலாம். வெறும் பொய்கை, இளநீர் எனச் சொல்லாமல் மூசு வண்டறை எனச் சொல்லும் போதே அப்பரின் விரிந்த பார்வை புலப்படுகிறது. உலகின் அனைத்து உயிர்களும் சமம், உலகு நம்மைப் போலவே அவைகளுக்கும் சொந்தம், அவைகளை நஞ்சு வைத்துக் கொன்றால் அது சூழலை பாதிக்கும். சூழல் பாதிப்புற்றால் மனித வாழ்வு பாதிக்கப்படும். எனவே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பது நம்மைச் சுற்றி வாழும் தாவர, விலங்கின உயிரியலை அனுசரித்து வாழ்வது என்றே பொருளாகிறது. இப்படியான சமச்சீர் உலகமே இறைவனின் தாள் என்பது எவ்வளவு பெரிய சூழல் ஞானம். எனக்கு இந்தப் பாடம் பிடித்துப் போனது. இன்று சூழலியல் என்பது விரிந்து பரந்துப்பட்ட ஒரு பெருந்துறையாகிப் போனாலும் அன்று அது வளராத ஓர் துறை. அதில் என் ஈடுபாடு குத்தி நின்றது. எவ்வளவு தூரமெனில், படிக்க வேண்டிய வகுப்புகளைத் தவிர்த்து இதுவே காதல் எனும் அளவிற்கு சூழலியல் என்னை ஈர்த்தது. வளரும் பயிர் முளையிலேயே தெரியுமென்பார்கள். அதுபோல் நான் சூழலியல் துறையில் கவனிக்கப்பட வேண்டிய ஓர் விஞ்ஞானி எனும் நிலைக்கு வரும் முன்னர் காலம் காட்டிய ஓர் அறிகுறி அக்கால என் ஆர்வம்.

ஆம்! உலகில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளை எந்த அலகு கொண்டு எடை போடுவது? அவர்களை எப்படி உலகுத்தரமா? இல்லையா? எனக் கணிப்பது. ஐ எஸ் ஐ எனும் அறிவியல் தகவல் நிறுவனம் ஒரு வழி கண்டு சொன்னது. அதுவே இன்று ஆய்வியல் மானியாக மாறிவிட்டது. இதற்குப் பெயர் “எச் இண்டக்ஸ்” (h-index) என்பது. இது எப்படி கணக்கிடப்படுகிறது எனில் ஒரு விஞ்ஞானி செய்யும் ஆய்வு எத்தனை சக விஞ்ஞானிகளால் அணுகப்படுகிறது, எத்தனை முறை, எத்தனை பேரால் மேற்கோள் காட்டப்படுகிறது என்பதைக் கணக்கிட்டு இந்த எச் அலகு உருவாக்கப்படுகிறது. இதை உருவாக்கிய ஹிர்ஷ் ரெக்கன்ஸ் என்பவரின் கணக்கின் படி 84% நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் ’எச் அலகு’ 30 என்பது. எனது நாற்பதாண்டு ஆய்வு எனக்குத் தந்திருக்கும் எச் அலகு இன்றைய கணக்குப்படி 37 (இது வளர்ந்து கொண்டே வரும் அலகு). அதாவது நான் சராசரியாக ஒரு நோபல் விஞ்ஞானியின் தரத்தில் இருக்கிறேன். என் துறை எனப் பார்த்தால் உலகின் ஆகச்சிறந்த முதல் பத்து பேராசிரியர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறேன். தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த ஒருவனுக்குக் கிடைக்கும் பெரும் சிறப்புத்தானே அது! விளையும் பயிர் முளையிலேயே தெரிந்திருக்கிறது. ஆனால் அதை எடுத்துச் சொல்லும் திறம் அப்போது யாருக்குமில்லை.

(தொடரும்)

1 COMMENT

  1. ‘ சமச்சீர் உலகமே இறைவனின் தாள் என்பது எவ்வளவு பெரிய சூழல் ஞானம் ‘ என்ற வரியை மீண்டும் மீண்டும் வாசித்து புத்துணர்வு பெற்றேன்.
    ‘H index’ பற்றிய செய்தி இதுவரை அறிந்திராதது ,
    சன்னல் திறந்த தென்றல் சந்தோஷம் ..

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

இறைவனுக்கு உகந்த செயல்கள்

உத்தவ கீதை - 22 - டி.வி. ராதாகிருஷ்ணன் கண்ணா...இந்த யோகம் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாத சாதாரணமானவர்களுக்கு மிகவும் கடினமானது என எண்ணுகிறேன். மிகப்பெரிய யோகிகள் மனத்தை அடக்கும் முயற்சியில் தோல்வியை அடைகிறார்கள். ஆகையால், முக்தி...

தேவமனோகரி – 22

0
தொடர்கதை                                               ...

அந்த பையன் இதோ என் முன்னால் விஸ்வரூபமெடுத்து நிற்கிறான்.

0
ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 22 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா நோன்பின் நினைவு படப்பிடிப்பிற்காகத்தான் அந்த ஃபாக்டரிக்குப் போயிருந்தேன். ஷெட்டில் இரண்டு புதிய கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. என் மனதில் லேசான பொறாமை பொங்கி எழுந்தது. “எவன்டா இங்க...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...