0,00 INR

No products in the cart.

தேவ மனோகரி -17

தொடர்கதை                                                                 ஓவியம் : தமிழ்

கே.பாரதி

 

லை கனத்தது. பின்மண்டையில் லேசான வலி. மெல்ல கண்விழித்தபோது இரவா பகலா என்று எதுவும் தெரியவில்லை. உடல் முழுக்க அசதியை உணரமுடிந்தது. மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள் மனோகரி.

தூக்கமா விழிப்பா என்று புரியாத நிலையில் இடுப்பைச் சுற்றி வளைத்து அணைத்துக் கொண்டிருந்த கரம் ஒன்று புலனாயிற்று. ராஜனா? ராஜன்தான் இப்படி தூங்கும்போது கூட இவளை சிறைப்படுத்துவான்.

திடுக்கிட்ட உணர்வில் கண்விழித்தாள் மனோகரி. உடல் முழுக்க வியர்த்திருந்தது. படுக்கையறைக் கதவு மூடியிருந்தது. வெளியே யாரோ பேசிக்கொண்டிருக்கும் குரல் சன்னமாகக் கேட்டது. எழுந்திருந்து கதவைத் திறக்கலாமா என்று யோசித்தாள்.  உடம்பு எழ மறுத்தது.

மரத்துப்போன உடலில் மறந்துபோன உணர்வுகள் ஏன் இப்படிக் கிளர்ந்து எழுகின்றன? எனக்குள் நேர்ந்த பதிவுகளை அவ்வளவு சுலபத்தில் அழித்துவிட முடியாது என்கிறதோ இந்த உடம்பு!

அவ்வப்போது அலைஅலையாக எழும்பி வரும் நினைவுகளை உதறிக்கொண்டு  வேலையில் கவனம் செலுத்துவதை இயல்பாக ஆக்கிக் கொண்டிருக்கிறாள். வேலை எதுவும் இல்லாமல் படுத்துக்கொண்டே இருந்தால் ஓலைக் கூடைக்குள் சுருண்டு கிடக்கும் கருநாகம் போல் பழைய அனுபவங்கள் கிளர்ந்தெழுகின்றன. உடம்பின் ரசவாதங்களுக்கு முன்னால் எல்லா தத்துவங்களும் நீர்த்துப் போய்விடுகிறது.

மெல்ல கதவைத் திறந்து கொண்டு இவள் அருகில் வந்தாள் திவ்யா.

“இப்ப எப்படி இருக்கு ஆன்ட்டி? இரண்டு நாளா நீங்க கண்ணையே திறக்கவில்லை. கடுமையான காய்ச்சல் இருந்தது.”

“அப்படியா? இரண்டுநாளாகவா?”

“ஆமாம் ஆன்ட்டி. சரத்துக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் வந்து பார்த்தாரு. மருந்தெல்லாம் எழுதிக் கொடுத்திருக்காரு. இப்ப நீங்க கண் விழிச்சது எனக்கு நிம்மதியா இருக்கு.”

“குழந்தை எப்படி இருக்கான் திவ்யா? சின்னக் குழந்தையை விட்டுட்டு நீ எதுக்கு இங்கே வந்தே? அதுவும் எனக்கு காய்ச்சலா இருக்கும் சமயத்துல.”

“நான் இப்பதான் வந்தேன் ஆன்ட்டி. பத்து நிமிஷமாகுது. உங்க ஸ்டூடன்ட் இனியாதான் இரண்டு நாளா கூட இருந்து உங்களைப் பார்த்துகிட்டா.”

கதவருகில் தயங்கியபடி எட்டிப் பார்த்தாள் இனியா.

“முதல்ல நீ புறப்படு திவ்யா. குழந்தைய கவனி. என்னை நான் சமாளிச்சுக்குவேன்.”

“அம்மாவும் அப்பாவும் பழனிக்குப் போயிருக்காங்க ஆன்ட்டி. அதனாலதான் நான் நேற்று சரத்தை அனுப்பினேன்.”

தயாராக வைத்திருந்த கஞ்சியை சாப்பிடக் கொடுத்தாள் இனியா.

மாத்திரைகளை விழுங்கிவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டாள் மனோகரி.

திவ்யாவை வாசல் வரை வழியனுப்பினாள் இனியா.

“நவீன் ஃபோன் செய்தால் நீ கவனமாக பேசணும் இனியா. அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னா ரொம்ப கவலைப்படுவான்” என்றாள் திவ்யா.

“புரியுதுங்கக்கா. நான் பார்த்துக்கறேன்.”

திவ்யா ஏற்கெனவே இனியாவைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாள். நவீன் சொல்லியிருக்கிறான். ஆனால் இன்றுதான் நேரில் சந்திக்கிறாள்.

இவள் இங்கே தங்கியிருப்பது எவ்வளவு பெரிய உதவி! தகவல் தெரிந்ததும் ஹாஸ்டலுக்குப் போய் தன் துணிமணிகளை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாள். யாரும் கேட்காமலே உதவிக்கு வந்து நிற்பது எவ்வளவு பெரிய குணம்!

நவீன் தன் அம்மாவின் எதிர்காலம் பற்றி திவ்யாவிடமும் நிறைய பேசியிருக்கிறான். அவன் பேசும்போது புரியாத யதார்த்தம் இந்த இரண்டு நாளில் திவ்யாவுக்குப் புரிந்தது.

மனோகரி ஆன்ட்டியின் உலகம் மிகச்சிறியது. ஒரு பெரிய கல்லூரியில் வேலை பார்த்தாலும் கூட எவரும் தன்னை அணுகிவிட முடியாதபடி ஒரு வளையத்தை அவர் போட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கான காரணமும் தெரிந்ததுதான்.

ஒற்றையாக வாழும் பெண்களுக்கே உரிய கூடுதல் எச்சரிக்கை.

ஆனால் இப்படி உடம்புக்கு வந்து படுத்துக் கொண்டுவிட்டால் கஞ்சியோ மருந்தோ எடுத்துக்கொடுக்க யாரும் அருகில் இல்லை என்பதுதானே யதார்த்தம்.

••• ••• •••

ன்றைக்கு ரெஸ்டாரென்டில் நடந்தவற்றை அசைபோட்டுக் கொண்டிருந்தாள் மனோகரி.

தனசேகரன் கல்லூரியைப் பற்றி  பேசப்பேச தன் முகத்தில் தெரிந்த மாற்றத்தை சிவநேசன் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும். சட்டென்று வேறு விஷயம் பேசி இவள் கவனத்தை அவர் கலைக்க முயன்றதும் நினைவுக்கு வந்தது.

“உங்களுக்கு இந்த சாண்ட்விச் பிடிக்கலையா? தட்டுல அப்படியே இருக்குதே?”

மனோகரி பதில் சொல்லாமல் சாண்ட்விச்சை கையில் எடுத்தாள்.

‘சாண்ட்விச் மட்டுமில்லை,  உங்கள் பேச்சும் பிடிக்கவில்லை’ என்று இவள் நினைப்பது சிவநேசனுக்குப் புரிந்திருக்குமோ?

“உங்கள் ப்ரமோஷன் பிரச்னைக்கு எனக்குத் தெரிந்த தீர்வைச் சொல்லட்டுமா?”

மனோகரி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

“ப்ரமோஷன் வேணாம்னு நீங்க எழுதிக் கொடுத்திடுங்க. டிபார்ட்மென்டுல உங்களுக்கு அடுத்தது யார்?”

“புரொபஸர் டேவிட்.”

“நீங்க விட்டுக்கொடுத்தா அவருக்கு தான் அந்த  வாய்ப்பு போய்ச்சேரும். அதனால உங்களுக்கு ஒண்ணும் ஈகோ பிரச்னை இருக்காதுன்னு நினைக்கிறேன்.”

இல்லை என்று தலையசைத்தாள்.

“பிறகென்ன? நீங்க இரண்டாவது நிலையில் இருப்பீங்க. உங்க ஸீனியாரிட்டிக்கு உரிய மரியாதையும் கிடைக்கும். முக்கிய விஷயங்களில் உங்க கருத்தைக் கேட்காம டேவிட் செயல்பட மாட்டாரு.”

மனோகரிக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. எப்படியோ நிர்வாகப் பொறுப்பிலிருந்து தான் விலகி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் அழுத்தமாக இருந்தது.

சற்றுமுன் சிவநேசன் மீது எழுந்த எரிச்சல் சட்டென்று கரைந்து போனதாக அவள் உணர்ந்தாள்.

“பரவாயில்லை. சாண்ட்விச் பிடிக்கலைன்னா சாப்பிட வேணாம். மனசுக்குப் பிடிக்காத எதையுமே செய்ய வேணாம் தேவா.”

மனோகரியின் முகத்தில் மெல்லிய புன்னகை .

பில்லைக் கொடுத்துவிட்டு இருவருமாகக் கிளம்பி வெளியில் வந்தார்கள்.

எதிரில் வந்த இளைஞன் ஒருவன் இவளைப் பார்த்து புன்னகையுடன் தலையசைத்தான். நீலநிற யூனிபார்ம் அணிந்திருந்தான்.

“வணக்கம் மேடம். நல்லாயிருக்கீங்களா? நான் புகழேந்தி. உங்களுடைய பழைய மாணவன்.” என்று அறிமுகம் செய்து கொண்டான்.

மனோகரிக்கு அவன் முகம் நினைவுக்கு வந்தது.

“இங்கே வேலை செய்யறியாப்பா?”

“எதிர்ல இருக்கிற கம்பெனியில செக்யூரிட்டியா இருக்கேன் மேடம். உங்களைப் பார்த்ததும் ஓடிவந்தேன். ”

புகழேந்தியின் முகம் இவளைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் மின்னியது. கல்லூரிகால நினைவுகளை அவனுக்குள் மீட்டெடுத்த இந்த கணத்தின் மகிழ்ச்சி அது.

அவன் திரும்பிப் போகும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள் மனோகரி.

“தனசேகரன் கல்லூரியைப் பற்றி என் கருத்தை மாத்திக்கணும் போலிருக்கே! எங்கே போனாலும் உங்க ஸ்டூடன்ட்ஸ்தான் இருக்காங்க.”

சொல்லிவிட்டு சிரித்தவாறு தன் காரை நோக்கி நடந்தார் சிவநேசன்.

••• ••• •••

மூன்றாம் நாளிலிருந்து காய்ச்சல் குறைந்து மெல்ல எழுந்து நடமாடினாள் மனோகரி.

“நீ எழுதியிருக்கும் அத்தியாயங்களை கொண்டு வா இனியா. நான் படித்து திருத்திக் கொடுக்கிறேன். நேரத்தை வீணாக்க வேண்டாம்.”

“இன்னிக்குதான் கொஞ்சம் உடம்பு தேறியிருக்கு. ரெஸ்ட் எடுங்க மேடம். பிறகு பார்த்துக்கலாம்” என்றாள் இனியா.

“வேலைதான் எனக்கு டானிக். வேலை செய்ய ஆரம்பிச்சா உடம்பு தன்னால சரியாயிடும்.”

மேலும் இரண்டு நாளில் மனோகரி பழைய நிலைமைக்கு வந்தாள். ஹாஸ்டலுக்கு திரும்பிப் போனாள் இனியா.

சிவநேசனிடமிருந்து ஃபோன் வந்தது. “என்ன குரல் ஒரு மாதிரியா இருக்கே?”

“இரண்டு நாளாக காய்ச்சல், கவலைப்பட ஒண்ணுமில்லை. இப்ப நல்லாயிடுச்சு” என்றாள் மனோகரி.

“ஏதாவது இன்ஃபெக்ஷன் ஆகியிருக்கும். ஒருவேளை அன்னிக்கு அரைகுறையா சாப்பிட்ட சாண்ட்விச் உங்களுக்கு ஒத்துக்கலையோ?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. சாண்ட்விச் சரியில்லைன்னா உங்களுக்கும்தானே காய்ச்சல் வந்திருக்கணும்?”

“நான் அதை விரும்பி சாப்பிட்டதால என்னை விட்டுடுச்சி போலிருக்கு. நீங்க வேண்டா வெறுப்பா சாப்பிட்டதால ஒத்துக்காம போயிடுச்சு. ”

எதைஎதையோ பேசி இந்த மனிதர் வார்த்தைகளை வளர்க்கிறார் என்று மனோகரிக்குத் தோன்றியது.

“எனக்குக் கொஞ்சம்வேலை இருக்கு. நான் பிறகு பேசட்டுமா?” என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தாள்.

••• ••• •••

ன்று துறையில் ஒருவரும் இல்லை. டேவிட்டை அழைத்துப் பேச இதுதான் சரியான சந்தர்ப்பம்.

“ஹெச்.ஓ.டி. போஸ்ட் எனக்கு வேணாம்னு எழுதிக் கொடுக்க தீர்மானிச்சிருக்கேன் டேவிட்.” என்று சொல்லிவிட்டு தன் தரப்புக் காரணங்களை விளக்கினாள் மனோகரி.

டேவிட் இதை எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது. ஐந்து வருஷம் காத்திருந்து கிடைக்க வேண்டிய பதவி இப்போதே கிடைக்கப்போவதில் ஏற்பட்ட ஆச்சரியம்.

“மேடம், ஆர் யூ ஸீரியஸ்? நிஜமாதான் சொல்றீங்களா?”  என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

மனோகரி தலையசைத்தாள்.

“உங்க முடிவை மாத்திக்கங்க மேடம். உங்களுக்கு எல்லா வேலையும் நான் கிட்டேயிருந்து செஞ்சு கொடுக்கிறேன்.

மனோகரி தன் முடிவில் பிடிவாதமாய் இருந்தாள்.

மறுநாளே கல்லூரி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினாள்.

விஷயம் தெரிந்து பதறினாள் இனியா.

“ஏன் மேடம் இப்படி செஞ்சீங்க? பெண்கள் எந்த பொறுப்பையும் ஏத்துக்க தயங்கக்கூடாதுன்னு நீங்கதானே எங்களுக்கு சொல்லித் தந்தீங்க? இப்ப நீங்களே பொறுப்பை தட்டிக் கழிக்கலாமா?”

மனோகரிக்கு அவள் அப்படிக் கேட்டது சிரிப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பெண் நன்றாக வாதாட கற்றுக் கொண்டிருக்கிறாள்.

“லுக் இனியா, நம் எல்லோருக்குமே சில விருப்பு வெறுப்புகள் இருக்கும். எனக்கு டீச்சிங்லேயும் ரிசர்ச்லேயும் இருக்கிற ஆர்வம் நிர்வாகம் செய்யறதுல இல்லை.”

“ஆனா மேடம், நீங்க அந்தப் பதவிக்கு வந்தா ஸ்டூடன்ட்ஸுக்கு எத்தனையோ நல்லது செய்யமுடியும்.”

“அதெல்லாம் அந்தப் பதவியில் இல்லாமலே செய்யமுடியும்.”

“எப்படி மேடம்? இதுநாள் வரைக்கும் உங்களை அப்படி செய்ய விட்டாங்களா? பேப்பர் வெயிட் மாதிரி மேல உட்கார்ந்து அசைய விடாம செஞ்சிட்டாங்கதானே?”

“அந்த ஸீனியர்ஸ் எல்லோருமே ரிடையர் ஆகியாச்சு. இனிமே என்ன பிரச்னை?”

“குடும்பத்துல பெண்கள் ஆண்களுக்கு விட்டுதருகிற மாதிரிதானே இதுவும்? ஐ டோண்ட் லைக் இட்.”

தனது பெண்ணிய சிந்தனையால் மடக்க முயற்சி செய்தாள் இனியா.

குழந்தைத்தனமான அவள் வாதத்தைக் கேட்டு மனோகரிக்குச் சிரிப்பு வந்தது.

“ஆர்வம் யாருக்கு இருக்குதோ அவங்களுக்கு அந்த வாய்ப்பு போய்ச்சேரணும். இதுல ஆண் பெண்ணுன்னு குழப்பிக்க எதுவும் இல்லை.”

மனோகரியின் குரல் தெளிவாக ஒலித்தது.

(தொடரும்)

 

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...