
கண்முன்னால் நேர்ந்த நிகழ்வில் நெகிழ்ந்து எழுதுகிறேன். நிறைகளைச் சத்தமாய்ச் சொல்ல வேண்டும் தானே ?
எங்கள் ஸ்டாஃப் ப்ரீத்தி (Woman Health volunteer )சமீபத்தில்தான் 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்'கீழ் பணி அமர்த்தப்பட்டிருக்கிறார். எங்களது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் இன்னொரு ஸ்டாஃப் இல்லத் திருமண நிகழ்விற்குக் கிளம்பிய ப்ரீத்தி புதன் மாலை அவரது ஊரில் பஸ் ஸ்டாப்பில் இரண்டு வயது குழந்தையுடன் நின்றிருக்கிறார். குழந்தையின் கழுத்திலிருந்த தங்கச் செயின் காணாமல் போனதைக் கொஞ்சநேரம் கழித்துதான் தெரிந்தது. அப்போது நின்ற இடத்தில், வந்த பாதையில் அழுதுகொண்டே தேடிவிட்டு நிகழ்விற்கும் போய் வந்தாயிற்று. செயின் கிடைக்காத நிலையில் அம்மாவிடம் சொல்லி அழுதுவிட்டு மீண்டும் தேடியிருக்கிறார்கள். அப்பாவிடம் மட்டும் சொல்லவில்லை.. பயத்தில்தான்!
அடுத்த நாள் காலை வழக்கம்போல் ட்யூட்டிக்கு வந்தபோது என்னிடமும் விஷயத்தைச் சொன்னாள். நம்பிக்கையில்லா விட்டாலும்கூட "எங்கே போய்விடப் போகிறது ப்ரீத்தி? நேர்மையாகச் சேர்த்தது நிச்சயம் நம்மை வந்தடையும். கவலைப்படாதே. வேலைகளைக் கவனி " எனத் தைரியம் சொல்லிவிட்டு நானும் என் பணிகளைத் தொடர்ந்தேன்.
சும்மா தான் சொன்னேன்… எனக்குமே நம்பிக்கையில்லை மூன்று நாட்கள் முன்னர் தொலைத்தது எப்படி கிடைக்குமென்றுதான் நானும் நினைத்தேன்.
ஒரு அரைமணி நேரம் கழித்து ஒரு பெண் துப்புரவுப் பணியாளரிடத்திலிருந்து என் தோழி ப்ரீத்திக்கு போன் வந்தது, மேடம், "ஒரு தங்கச் செயின் கிடைச்சிருக்கு… இது உங்களுடையதான்னு வந்து பாரும்மா" என்று. அவர்கள் எங்கள் நிலையத்திற்கே வந்து ப்ரீத்தியிடம் நகையை ஒப்படைத்து விட்டும் சென்றார்கள் … என் கண் முன்னால்தான் !
நானும் அவர்களோடு பேசினேன். ஏற்கெனவே அந்தக் கிராமங்களுக்குப் போனபோது சிலமுறை அவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் பெயர்கள் நினைவில்லை. அவர்களாகவே ஓமனா & டொம்னிக் சகாயராணி என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நடந்ததை விவரித்தார்கள்.
தெருக்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளித்துக் கொண்டிருந்தபோது இந்த செயின் கண்ணில் பட்டதாகவும் முதலில் நூறு ரூபாய் செயின் என்றுதான் நினைத்ததாகவும் (தாண்டிப்போன ஒருசில டூவீலர்களில் நசுங்கி இழுபட்டிருக்கக்கூடும் எனப் பார்த்தபோது தெரிந்தது) உற்றுப்பார்த்து தங்க நகை என ஊர்ஜிதம் செய்ததாகவும் சொன்னார்கள்.
முதலில் கையிலெடுத்தது சகாயராணி தானாம் ; ஓமனா தான் "அது ப்ரீத்தியின் குழந்தையுடையதாக இருக்கலாம்" என்ற சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறார். இருவரின் மொபைலிலும் போன் செய்யக்கூட பேலன்ஸ் இல்லை. ப்ரீத்தியின் நம்பரை யார்யாரிடமோ கேட்டுப்பெற்று அருகிலிருந்தவரின் மொபைல் வாங்கி போன் செய்து தகவலைச் சொல்லி இருக்கிறார்கள். இந்த இரண்டு மூன்று நாட்களில் அந்தக் கிராமத்து பஸ் நிறுத்தத்தில் வேறு யார் கண்ணிலேனும் அந்தச் செயின் பட்டிருக்கலாம். அது ப்ரீத்தியின் கைகளுக்கு வராமலேகூட போயிருக்கலாம்.
ஆனால் பாருங்க .. அது இரண்டு நல்ல உள்ளங்களின் உள்ளங்கைகளில் விளையாடி பின் மறுபடி குழந்தையின் கழுத்தை அலங்கரிக்க வேண்டும் என்றிருக்கிறது போல …
ஓமனா, ராணி இருவரின் முன்னால் நான் என்னை அபூர்வ சகோதர்கள் அப்புவின் உயரத்தில் நிற்பதாய்த் தான் உணர்ந்தேன்.
ஓமனாவின் இடுப்பிலும் ராணியின் தோளிலுமாய் ஏறி அமர்ந்து கைகாட்டியபடி சென்ற என் மனசை அழைத்துவரத்தான் பெரும்பாடாகிப் போனது.
அவர்களுக்கான எனது அன்பளிப்பை நேரில் இடம் தேடிச்சென்று தருவதாய் வாக்களித்திருக்கிறேன்.
Revathi R முகநூல் பக்கத்திலிருந்து…