
சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி விஜயத்தின் போது திடீரென்று பூவன் பழம் நினைவு வந்து அதைத் தேடிச் சென்றேன். எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. "அடுத்த கடையில் கேட்டுப் பாருங்கள்" என்று அடுத்தடுத்த கடையாக குணசீலம் தாண்டிச் சென்று வாங்கி சாப்பிட்டேன். கடைசியாக நீங்கள் பூவன் பழத்தை எப்போது சாப்பிட்டீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். (பேச்சு வழக்கில் பூவம் பழம்)
பூவன் வாழை இலைதான் சாப்பாட்டுக்கு உகந்த இலை. கிட்டத்தட்ட ஓர் அடி அகலம். சந்தேகமாக இருந்தால் படத்தைப் பார்க்கவும். (படம் உதவி: பூவன் வாழை இலை உற்பத்தியாளர்) என் தாத்தா, பாட்டி தினமும் வழை இலையில்தான் சாப்பிடுவார்கள், வாழை மட்டையைத் தைத்து அதில் சாப்பிடுவதைக் கூடப் பார்த்திருக்கிறேன். வாழை இலை மீது பலகை வைத்து வாழைச் சருகு செய்து இலை கிடைக்காத சமயங்களில் அதில் சாப்பிடுவார்கள். இன்று வாழை இலையில் சாப்பிடுவதையும் மெதுவாக மறந்துகொண்டு வருகிறோம்.
இருபது வருடம் முன் பல 'ரோடு கடைகளில்' தட்டின் மீது வாழை ஏட்டை வைத்துக் கொடுத்தார்கள், வடக்கிலிருந்து வழுவழுப்பாக தமிழுக்கு வரும் கதாநாயகிகள் போல இன்று இலையின் இடத்தை 'பட்டர் பேப்பர்' என்ற பிளாஸ்டிக் வஸ்து அபகரித்துவிட்டது.
'கருவூர் கந்தப் பிள்ளைச் சாத்தனார்' என்ற புலவர் 'பிட்டங் கொற்றன்' என்ற அசினைப் புகழ்ந்து பாடிய புறநானூறு பாடலில் 'செங்கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்' என்ற கரடுமுரடான சங்கத் தமிழைப் புரிந்துகொள்ள வசதியாக சுஜாதா எளிய தமிழில் எழுதியதைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
(இப் பாடல் : )
அருவி ஒலிக்க மூங்கில் தழைக்க
மிளகு கொடி நடுவில் காந்தள் மலர
அதன் கிழங்கைப் பன்றிகள் கிளற
புழுதி கிளப்ப
குறவர்கள் உழாமல் விதைத்த
தினை முற்ற அதன் புதுசை
உண்பார்கள்
காட்டெருமைப் பாலில்
மான் இறைச்சி மணக்கும்
பானையைக் கழுவாமல்
சந்தன விறகு எரித்துச்
சமைத்து, வாழை இலையில் இட்டு
மல்லிகை மணக்கும் முற்றத்தில்
பலரோடு சாப்பிடும்
வளமான குதிரை மலைத் தலைவனே
வேங்கை மலர் அணிந்த
வில் வீரர்கள் தலைவனே!
தமிழக எல்லைவரை கேட்க
புலவர்கள் உன்னைப் பாடுவார்கள்
கொடுக்காத மன்னர்கள் வெட்கப்பட
உன் புகழ் பரவியது
திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் பாசுரத்தில் 'இருக்க இடம், உண்ண உணவு வேண்டும்' என்று பெருமாளிடம் வேண்டி நின்றார். அவரது வேண்டுகோளின்படி அக்காலத்தில் திருவிடந்தையில் 'காளிச்சிங்கன்' என்ற பெயரில் (ஆழ்வாரின் மற்றொரு பெயர்) ஒரு மடம் இருந்துள்ளது. இது குறித்து முதலாம் குலோத்துங்க சோழனின் ( கி.பி. 1070-1112) 43வது ஆட்சி ஆண்டில் எழுதிய கல்வெட்டு திருவெழுந்தூரில் இருக்கிறது. இக்கல்வெட்டில் உணவிற்குத் தேவையான நெல், காய்கறி, உப்பு, மிளகு, நெய், தயிர் போன்றவற்றுடன் வாழை இலையும் இருக்கிறது!
என் சொந்தங்கள் சிலர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்கள் இந்தியாவிற்கு வரும்போது அவர்கள் செய்யும் அராஜகம் வாழை இலையில் ஸ்பூன் வைத்துக்கொண்டு சாப்பிடுவது. ரசம் பரிமாறும் போது அவர்கள் ரத்த அழுத்தம் ஏறிவிடும். கல்யாண ரசம் என்றால் கேட்கவே வேண்டாம், ஆடிப் பெருக்கு காவிரி போல இலையில் ஓட "மம்மி" என்று இரண்டு கையையும் தூக்கிவிடுவார்கள்.
சென்ற ஞாயிறு அன்று ஸ்ரீரங்கப்பட்டினா சமீபம் ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கே எல்லோருக்கும் இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டது. என் எதிரில் இருப்பவர் ரசத்தை எப்படிக் கையாளப் போகிறார் என்று பதற்றம் பற்றிக்கொண்டது. 'ரசம்' என்ற குரல் கேட்டு அவர் இலையில் இருக்கும் சாதத்தில் ஒரு சின்ன குழி மாதிரி செய்துகொண்டார். ரசம் வந்தது. பெரிய கரண்டி ரசம் இலையில் அருவி போல விழுந்து எல்லாத் திக்கும் ஓடத் தொடங்கியது. பதற்றப் படாமல், முரட்டு யானையை அங்குசம் கொண்டு கட்டுப்படுத்துவது போல ரசத்தைக் கட்டுப்படுத்திக் கையாண்டார் அந்தக் கண் பார்வையற்றவர்!