0,00 INR

No products in the cart.

அப்படியான நல்ல பெயரெடுப்பதில்தான் எப்போதுமே நான் மகிழ்ச்சியடைகிறேன்.                                         

ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  – 17

 

மம்முட்டி

தமிழில் கே.வி.ஷைலஜா

“காகம் விருந்தினர்களைக் கூப்பிடுகிறது” என்றொரு பழமொழி உண்டு. விருந்தினர்கள் காகத்திடம் சொல்லிவிட்டு வருவதில்லை என்றாலும் காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை.

“கதளி வாழையிலமர்ந்து காகம் விருந்துண்ண அழைக்கிறது.

விருந்தினரே, விருந்தினரே விருந்துண்ண வாருங்கள்.”

என்ற பாடலை கேட்டிருக்கிறீர்களா? காகத்தின் கரைச்சல் விருந்தின் முன்னறிவிப்பாக இருந்தது. தொலைபேசி வசதி இல்லாத நாட்களில் காகத்தை நம்புவதல்லாமல் நமக்கு வேறு வழியில்லை. காகம் கரைந்தாலும் இல்லையென்றாலும் அதிதிகள் வரும்பொழுது உணவு தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் பெரியவர்களின் விருப்பம். ‘அதிதி தேவோ பவ’  என்றுதானே சொல்வார்கள். ஸ்காட்லாந்தில் வெள்ளைக்காரத் தம்பதிகளுக்கு விருந்தினர்களாகப் போயிருந்த இரவில்தான் நான் காகங்களை நினைத்துப் பார்த்தேன்.

இங்கிலாந்தில் உள்ள நண்பர் டாக்டர் ஜோஷி ஜானுடன் நானும் என் குடும்பமும் ஸ்காட்லாந்திற்குப் போனோம். புகழ்பெற்ற பேராசிரியர் உல்லஹன்னான் மாப்பிள்ளையின்  மகன்தான் இவர். அடூர் கோபாலகிருஷ்ணன்தான் ஜோஷியை எனக்கு அறிமுகப்படுத்தினார். நான்கு நாட்களுக்கு முன்பே ஜோஷி நாங்கள் எத்தனை பேர் வருகிறோமென்றும், என்ன சாப்பாடு வேண்டுமென்றும் கூப்பிட்டு சொல்லியிருந்தார். வாழ்வில் இப்படியும் விருந்தினர்களை உபசரிக்க முடியுமா என்பது சந்தேகமே.

ஸ்காட்லாந்தின் கிராமத்திலிருந்தது அந்த வீடு. கண்ணுக்கு எட்டாத தூரம் வரை அறுவடை முடிந்தும்  முடியாததுமான நில வெளிக்காட்சிகள். வழி நெடுக முந்திரித் தோட்டங்கள். வீடுகளைக் காணவேண்டுமென்றால் நிறைய தூரம் போகவேண்டியிருந்தது. நீண்ட தூரப் பயணத்திற்குப் பிறகு நாங்கள் அந்த வீட்டு வாசலை அடைந்தோம். வீட்டு முற்றத்தில் இல்லாத மரங்களுமில்லை, விரியாத பூக்களுமில்லை. வீட்டில் உள்ளவர்களின் மனநிலையையும் சந்தோஷத்தையும் முற்றத்திலேயே நம்மால் தரிசித்து விட முடியும்.

மரத்தினால் முழுமையாக்கப்பட்ட இந்த வீட்டில் நம்மை வசீகரிக்கும் புராதனப் பொருட்களின் சேகரிப்பு பத்திரப்படுத்தப்பட்டிருந்தன. சுவரில் அழகான ஓவியங்கள் கண்களுக்கு உறுத்தாமல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ‘சுத்தம்’ என்ற வார்த்தையின் மொத்தக் கூடாரமாக அந்த வீடு குழந்தையின் கண்கள் போல ஒளிர்ந்தது. எழுபது வயதிலிருக்கும் ஒரு முஸ்லிம் பெரியவரும், அறுபதில் இருக்கும் அவர் மனைவியும்தான் அங்கே வாழ்கிறார்கள். அந்த அம்மாவும் ஜோஷி அண்ணனும் ஒன்றாய் வேலை பார்த்தவர்கள். இங்கிலாந்தின் நெருக்கடி மிகுந்த வாழ்விலிருந்து தப்பித்துக்கொள்ள ஜோஷி அண்ணன் எப்போதும் இங்கே வருவாராம். அப்படி ஒரு பயணத்தில்தான் எங்களையும் உடன் அழைத்து வந்திருந்தார். அங்கே வசிப்பவர்கள் எல்லோரும் தங்கள் அந்திம வாழ்க்கையை இனிமையாகக் கழிக்க, ஜனசந்தடியிலிருந்தும், வாழ்வின் நெரிசல்களிலிருந்தும் தங்களைத் துண்டித்துக் கொண்டவர்களாக இருந்தார்கள்.

அவர்கள் எங்களை மிகவும் சந்தோஷமாக வரவேற்றார்கள். கேட்டறிந்த பழக்கம் மட்டுமே இருக்கும் எங்களை அணைத்து, கன்னத்தில் தட்டி தங்கள் அன்பைப் பகிர்ந்துகொண்டார்கள். பெட்டிகளை எடுத்துச்செல்ல  உதவினார்கள். நாங்கள் வந்து விட்டதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒவ்வொருவராய் எங்களைப் பார்க்க வந்தார்கள். எங்களைப் பற்றிய தகவல்களைப் பக்கத்து வீடுகளுக்கும் ஏற்கெனவே அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இரவில் எங்களுக்காக நடத்திய விருந்தின்போதுதான் நான் ஒரு நடிகனென்று அவர்களுக்குத் தெரிந்தது. அதற்குப் பிறகு அவர்களின் அன்பு இன்னும் அதிகரித்தது. அவர்களுக்கு என்னுடன் இருப்பது எத்தனையாவது மனைவி என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமானது. முதல் மனைவி என்றால் அவர்கள் நம்ப தயாராகவேயில்லை. அங்கே நடிகர்களின் மனைவிகள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். நான் மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே மனைவியுடன் வாழ்வதில் அவர்களுக்குப் பெரிய நிராசை ஏற்பட்டுவிட்டது. என் பிள்ளைகளைப் பிரியத்துடன் பக்கத்து வீட்டு நண்பர்கள் கூட்டிக்கொண்டு போனார்கள். என் மகள் அங்கேயே தூங்கி விட்டாள். விருந்தினர்கள் வருகிறார்கள் என்பதால் அவர்களை உபசரிக்க தங்கள் வேலை சுழற்சியைக் கூட மாற்றி வைத்திருந்தார்கள். எங்களுக்கான இரவு உணவுக்காகப் பலரும் விதவிதமான உணவு வகைகளைக் தயாரித்துக் கொண்டு வந்திருந்தார்கள். வருபவர்கள் யாரென்று தெரியாதபோதிலும் அவர்களை வரவேற்கவும் உபசரிக்கவும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் அவர்களின் அக்கறை என்னை மிகவும் கவர்ந்தது.

இங்கிலாந்திலுள்ள ஒரு தமிழரின் அல்லது தெலுங்கரின் வீட்டில் தங்குவதென்பது எப்படியிருக்குமென நாம் யூகித்து விடலாம். ஆனால் அயல்நாட்டினரின் வீட்டில் தங்குவதென்பதை என்னால் யோசிக்கவே முடியவில்லை. ஏனென்றால் அவர்களுடைய வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், கலாசாரமெல்லாம் நமக்குப் புதியது. அவர்களுடைய வீடுகளைப் பற்றியும், வாழ்க்கை முறை பற்றியும் நமக்கு அயல் சினிமா மட்டுமே சொல்லிக் கொடுத்திருக்கிறது. ஆங்கிலம் பேசுவதென்பதையும், சௌகரியமாக இருக்கிறார்கள் என்பதையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவர்கள் மலையாளிகளாகவே எனக்குத் தெரிகிறார்கள். அவர்களுடைய உபசரிப்பு என்னால் மறக்க முடியாதது. மிகவும் நெருங்கின நண்பர்களை வரவேற்பது போல, திருவிழா கொண்டாடுவதுபோல அவர்கள் விருந்தினர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள்.

ஆனால், தகவல் சொல்லாமல், சர்ப்பிரைஸாகப் போவதுதான் நம்முடைய பழக்கமாக இருக்கிறது. வரவேற்பவர்களை அதிர வைப்பதுதான் நம் பழக்கமும் நோக்கமும். விருந்தினர்களை வரவேற்பதைவிட, இவர்களுக்கு என்ன கொடுப்பது என்பதும் , இவர்கள் எப்போது போவார்கள் என்பதும்தான் நம்முடைய பிரச்னையே. ஏதாவது பயணத்திற்கு வீட்டிலிருப்பவர்கள் தயாராக இருக்கும்போது திடீரென வரும் விருந்தினர்கள் அந்தப் பயணத்தையே தகர்த்தெறிந்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள் இருக்கலாம். ஏதோ ஒரு சிக்கலில் இருக்கும்போது நாம் போய் நின்றால் மனச்சங்கடத்தோடுதான் நம்மை வரவேற்பார்கள். நல்ல தலைவலியில் சாதமும் தயிரும் போதுமென்று முடிவு செய்து ஓய்வெடுக்கப் போகும் நேரத்தில் திடீரென நான்குபேர் போய் நின்றால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான நேரங்களில் விருந்தினர்கள் தொல்லையாகவும் மாறிவிடுகிறார்கள். வீட்டில் இருப்பவர்களின் பிரச்னைகளையும் வேலை பளுவையும் அவர்கள் கணக்கிலெடுத்துக் கொள்வதேயில்லை. இவர்களைப்போல நாலு பேர் வந்தா, அந்த வாரக் கடைசி அவ்ளோதான் என்று வீட்டிலிருப்பவர்கள் மனதளவிலாவது நொந்து கொள்வார்கள். அந்த ஒரு பயணத்திலேயே அவர்களுக்கு நம்மீது வெறுப்பும் ஏற்படலாம்.

அயல்நாடுகளில் பிள்ளைகள் பெற்றோரைப் பார்க்க வருவதற்குக்கூட முன்கூட்டியே நேரம் கேட்கிறார்கள். அந்த எல்லைவரைகூட நாம் போக வேண்டாம். ஆனால் சில ஒழுங்குகள் வேண்டாமா? திடீரென ஏதாவது உதவி கேட்டு வருபவர்களைப் பற்றியல்ல, வரவேற்று உபசரித்து மகிழ்வாய் வைத்திருக்க வேண்டிய விருந்தினர்களைப் பற்றித்தான் நான் சொல்கிறேன்.

வீட்டிலிருப்பவர்களுக்கு இனிமையான நினைவுகளாக மாற விருந்தினர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ லட்டு கொண்டு போனால் மட்டுமே இனிமையான நினைவுகளோடு இருக்க முடியாதில்லையா? சொல்லாமல் போய், மேலே விழுந்து, அந்த வீட்டைத் தலைகீழாய் கவிழ்த்து மாற்றும்போது நாம் இழப்பது நம்முடைய மேன்மையையே என்பதை உணர வேண்டும். நல்ல விருந்தினர்களுக்குத்தான் நன்றாக விருந்தினர்களை வரவேற்கவும் தெரியும். எவ்வளவு நெருக்கமிருந்தாலும் சூழல் தெரியாமல் போவது சில நேரங்களிலாவது சங்கடத்தை ஏற்படுத்தும்.

நானும் என் குடும்பமும் நல்ல விருந்தினர்களாகவோ, உபசரிப்பவர்களாகவோ இருக்கிறோமா என்பது எனக்குத் தெரியாது. சில நேரங்களில் மம்முட்டி என்பதனால் சகித்துக் கொள்பவர்களாக இருக்கலாம். என்ன ஆனாலும் ஸ்காட்லாந்து பயணத்திற்குப் பிறகு, தகவல் கொடுத்த பிறகே நாங்கள் வெளியே போகிறோம். மம்முட்டியையும்  அவர் குடும்பத்தினரையும் போலொரு விருந்தினர்கள் வரட்டும் என்று நான்குபேர் சொல்வது நல்ல காரியம்தானே? அப்படியான நல்ல பெயரெடுப்பதில்தான் எப்போதுமே நான் மகிழ்ச்சியடைகிறேன்.

(தொடரும்)

 

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...