அறம் உணர்ந்த அந்தணன் கதை

அறம் உணர்ந்த அந்தணன் கதை
Published on

உத்தவ கீதை – 17

டி.வி. ராதாகிருஷ்ணன்

"கண்ணா…இந்தப் பிரபஞ்சத்தின் மூலகாரணமானவனே! தீயவர்கள் கூறிய இந்நிகழ்ச்சியைச் சமமனதுடன் ஏற்றுக் கொள்வது என்பது மிகக் கடினமானது. உன் பாதங்களை சரணடைந்தவர்கள்தான் அந்த மன நிலையை அடையமுடியும்" என உத்தவர் கூற கிருஷ்ணன் சொல்லலானார்.

உத்தவரே! இந்த உலகில் கடுஞ்சொற்களை பொறுத்துக் கொள்ளும் திறன் படைத்தவர்கள் மிகக் குறைவு.

ஒருவர் கூறும் கடுமையான சொற்கள் அம்பினால் உடலில் ஏற்பட்ட புண்ணைவிடக் கொடுமையானது.'அவந்தி' நகரில் வாழ்ந்த அந்தணன் ஒருவனின் கதையைக் கூறுகிறேன்…கேளுங்கள்…

அந்த அந்தணன் மிகுந்த செல்வந்தன். ஆனால் மிகக் கஞ்சன். பேராசை பிடித்தவன். விவசாயத்தையும், வியாபாரத்தையும் தொழிலாகச் செய்து வந்தான். யாரையும் வாயால்கூட வாழ்த்தி சொல்லமாட்டான். தனக்கு எந்த சுகத்தையும் தேடிக் கொள்ளவில்லை. பணத்தை சேர்ப்பதைத் தவிர, வேறு எதிலும் இன்பம் பெறவில்லை. வேறு எந்தவித நல்ல குணங்களையும் பெற்றிருக்கவில்லை. ஒரு குடும்பஸ்தன் கடவுளுக்கு, முனிவர்களுக்கு, மூதாதையர்களுக்கு, மனிதர்களுக்கு என்று தினமும் செய்ய வேண்டிய தர்மங்களையும், கடமைகளையும் சரிவர செய்யவில்லை.

தர்மங்கள் செய்யாததால் அவனுடைய செல்வங்கள் அழிந்து போயின. உறவினர்களாலும், திருடர்களாலும், விபத்துகளாலும், அரசனாலும் அவனுடைய செல்வம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

செல்வம் இழந்த நிலையில், அவன் அவனுடைய மக்களால் அவமதிக்கப்பட்டான். எதிர்காலத்தைப் பற்றிய பயமும், மனதில் வருத்தமும், உலகைப் பற்றிய வெறுப்பும் அவன் மனதில் உண்டாயின.

"நான் பொருளாசையால் என் உடலை வருத்திக் கொண்டேன்.புண்ணிய காரியங்கள் எதுவும் செய்யவில்லை. எனது ஆசைகளையும் தீர்த்துக் கொள்ளவில்லை"என வருந்தினான்.

செல்வம் மட்டும் மனத்துக்கு இன்பமளிப்பதில்லை.செல்வம் சேர்க்க விரும்புகிறவர்கள் இப்பிறவியில் பணம் சேர்க்க கஷ்டப்படுகிறார்கள். தர்மம் செய்யாததால் இறந்தபின் நரகத்தில் வீழ்கிறார்கள்.

செல்வம் சேர்ந்த பிறகு அதைக் காப்பாற்றுவது, செல்வத்தைப் பெருக்குவது, களவு போகாமல் காப்பது என்ற பயமும், மனதில் கவலையும் தோன்றுகின்றன.

திருட்டு, பொய், மற்றவர்களுக்குத் துன்பம் கொடுத்தல், காமம், கோபம், அகங்காரம் மற்றவர்களை துச்சமாக மதித்தல், மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ,எதிரிகள், மற்றவர்களைச் சந்தேகிப்பது, போட்டி, காமங்கள், சூதாட்டம் போன்ற தீய செயல்கள் பொருள் சேர்ப்பதால் உண்டாகும் தீயவைகளாகும்.

ஆகையால், நன்மையைத் தேடுபவர்கள் பெரும் பொருள் சேர்ப்பதில் அதிக நாட்டம் காட்டக்கூடாது.

பொருளாசையால் உடன்பிறப்புகள், மனைவி, பெற்றோர்கள், நண்பர்கள் ஆகிய யாவரும் வேண்டப்படாதவர்களும், எதிரிகளாகவும் மாறிவிடுவார்கள். மிகச் சிறிய பணத் தகராறும் கோபத்தை உண்டுபண்ணி, உறவைப் பிரித்துவிடும்.

கடவுள் கிருபையால் கிடைத்த மனிதப் பிறவியை வீணடிப்பார்கள். தன்னுடைய பிறவிப் பயனாகிய முக்தியை இழப்பார்கள்.

தர்மத்துக்குப் பொருளை செலவிடாதவனும், அடைந்த செல்வத்தால் செய்ய வேண்டிய கடன்களைச் செய்யாதவனும் கீழ்நிலையை அடைவார்கள்.

"எனது செல்வம்… எனது வாழ்க்கை" எனது உடலின் வலிமை ஆகியவை என்னை விட்டுப் போய்விட்டன. இறக்கும் தருவாயில் மனிதனுக்கு செல்வத்தால் என்ன பயன்?

இந்த கஷ்டம் ஏற்படுத்தியதற்கு இறைவனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அதனால்தான் நான் நல்லறிவு பெற்றேன்.

என்னுடைய எஞ்சிய வாழ்நாளை தவம் செய்வதாலும், ஆன்மாவைக் காணும் முயற்சியிலும், நல்வாழ்வு வாழ்வதிலும் செலவு செய்வேன்.

மூன்று உலகங்களிலும் உள்ள கடவுள்கள் எனக்கு அருள் புரியட்டும்.

'கட்வாங்கன்' என்ற அரசனுக்கு கடவுளின் ஆசியால் ஒரு முகூர்த்த நேரத்தில் வைகுண்ட பதவி கிட்டியது.

இப்படி மனதில் திடமான எண்ணம் கொண்டு அந்த அந்தணன் சந்நியாசம் கொண்டான்.

இந்திரியங்கள், மனது, உடல் மூன்றையும் தன் வயப்படுத்தி, பூமி முழுவதும் அந்த சந்நியாசி வலம் வந்தார். சாப்பாட்டுக்கு மட்டும் நகரங்களிலும், கிராமங்களிலும் நுழைந்தார்.

அவருடைய கோலத்தையும், ஆடையுங்கண்டு தீயவர்கள் அவரை பலவிதங்களில் அவமானம் செய்தார்கள். அவர் கையில் இருந்த தண்டத்தையும், பிட்சை பாத்திரத்தையும், உத்திராட்ச மாலையையும் பிடுங்கிக் கொண்டனர்.

பிச்சை எடுத்த உணவையும் அபகரித்துச் சென்றார்கள். அவரைக் "கள்வன்" என்று ஏசினார்கள். செல்வத்தை இழந்த 'ஆண்டி'… இந்தக் கோலத்தை ஏற்றுள்ளான் என்று கேலி செய்தார்கள்.

மற்றவர்களாலும், மிருகங்களாலும், இயற்கையாலும் ஏற்பட்ட துன்பங்களால் மன உறுதி பெற்றுக் கொண்டான்.

"இந்த உடம்போ அல்லது ஆன்மாவோ, கடவுளோ, நவக்கிரகங்களோ, காலமோ என் துன்பங்களுக்குக் காரணமில்லை.

"எனது மனமே எல்லாத் துன்பங்களுக்கும் காரணமானது. அதுவே சத்துவ குணம்,ரஜோ குணம், தமோ குணம் என்று உற்பத்தி செய்து செயல்பட வைக்கிறது. இதனால்தான் பல பிறவிகள் தொடர்கின்றன. மனம் செயல்படும் போது ஆன்மா சாட்சியாக மட்டும் கவனித்திருக்கிறது…இவ்வாறு அவன் உணர்ந்தான்.

தர்மம் செய்தல், தன் கடமைகளைச் செய்தல், தவம் செய்தல், புராணக் கதைகளைக் கேட்டல் ஆகியவைகள் மனதைக் கட்டுப்படுத்த உதவும். மனதைக் கட்டுப்படுத்துவதே யோகத்தின் முடிவு.

இதையறியாமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு தம் வாழ்நாளை வீணடிக்கிறார்கள்.

நம் உடம்பிலுள்ள 'ஆன்மா', 'புருடன்' பிரகிருதியினின்று (உடல் மற்றும் முக்குணங்கள்) வேறுபட்டது.

இந்திரியங்கள், மனம், புத்தியினின்று வேறுபட்டது.

'அறியாமை நீங்கிய ஞானம் பெற்றவனாவேன். இனி நான் உலக வாழ்வைப் பற்றி கவலைப்பட மாட்டேன்.

ஆகையால்… ஆன்மா'வை வணங்கி, அதற்கு மூலமான பரம்பொருளான இறைவனின் பாதங்களைச் சரணடைவேன். அறியாமை எனும் கடலைக் கடப்பேன்…"என்று தன்னை உணர்ந்து கொண்டான்.

கிருஷ்ணன் மேலும் கூறினார்…

மேலே குறிப்பிட்டவை யாவும் எல்லாப் பொருளையும் இழந்து, உலகில் அவமானப்பட்டு, உலகை வெறுத்து, வாழ்க்கையின் உண்மை புரிந்து, மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு தன் வழியினின்று நழுவாத அந்தணன் கூறியதாகும்.

நண்பர்கள், எதிரிகள், பொதுவானவர்கள் சேர்க்கையால் கிடைக்கும் இன்பமும், துன்பமும் மனத்தில் ஏற்படும் கற்பனைகளே!

நமது அறியாமையால் அவைகளை "உண்மை" என்று எண்ணுகிறோம்.

ஆகையால் என்மீது பக்தி கொண்டு அறிவாற்றலால் மனத்தை அடக்குவாயாக!

இதுதான் யோகத்தின் முடிவு

(இதைப் படித்து இதனை புரிந்து கொண்டவர்கள் இன்பம், துன்பம்
இரு மயக்கங்களில் இருந்தும் விடுபடுவார்கள்)

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com