“கடவுளே ஒரு குறையை வச்சாலும், தாய் நினைச்சா அதைச் சரி செஞ்சிடுவா”

“கடவுளே ஒரு குறையை வச்சாலும், தாய் நினைச்சா அதைச் சரி செஞ்சிடுவா”
Published on

 O2 சினிமா விமர்சனம்

– லதானந்த்

க்ஸிஜன் வாயுவின் மாலிக்யுலர் ஃபார்முலாவான O2 என்பதைத் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். (O2 அல்ல…. O2). கதையில் முக்கியப் பங்கு வகிப்பதும் ஆக்ஸிஜன்தான். மண் சரிவில் முற்றாகப் புதையுண்ட பேருந்து ஒன்றில் அகப்பட்டுக்கொண்டவர்கள் சுவாசிக்க ஆக்ஸிஜனுக்காக அல்லாடுவதும், ஒருவழியாக அவர்கள் மீட்கப்படுவதும்தான் கதை. டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

2010ஆம் ஆண்டில் ரொட்ரிகோ கார்டெஸ் என்பவரால் இயக்கப்பட்டு, வெளியான பரீட் (Buried) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ரையான் ரெனோல்ட்ஸ், உயிருடன் ஒரு சவப் பெட்டிக்குள் வைத்துப் புதைக்கப்பட்டுவிடுவார். அவரும் ஆக்ஸிஜனுக்காகப் போராடித் தப்பிக்கும் அந்தப் படம் O2 வுக்கு உந்துசக்தியாக இருந்திருக்கக் கூடும். தமிழில்கூட, 'நாய்கள் ஜாக்கிரதை' திரைப்படத்தில் கதாநாயகியை உயிரோடு பெட்டியில் வைத்துப் புதைக்கும் காட்சி உண்டு.

ஆரம்பத்திலேயே ஒரு பறவை கூடுகட்டப்படும் பாட்டைக் கார்ட்டூன் வடிவில் காண்பித்து, ஆக்ஸிஜனின் முக்கியத்துவத்தைச் சொல்கிறார்கள்.

இதுதவிர, நயன்தாராவும் அவரது மகனும் பயணம் மேற்கொள்ளவிருக்கும் காட்சியில், மின்விசிறியில் துணி சுற்றிக்கொண்டு நிற்பது போன்ற 'பாலசந்தர்' காலத்து டைரக்டோரியல் டச்களும் உண்டு.

இந்தப் படத்தில் சவப் பெட்டிக்குப் பதிலாக சொகுசு ஆம்னிப் பேருந்து ஒன்று நிலச் சரிவில் முற்றிலுமாகப் புதைவதாக காண்பித்திருக்கிறார்கள். அதைக் கண்டுபிடிக்க மீட்புக்குழுவினர் திண்டாடுவதாகக் கதைவிட்டிருக்கிறார்கள். நெடுஞ்சாலை ஒன்றில் பெரிய ரகப் பேருந்து மண் மூடிப்போனால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுமா என்ன?

அதை விடுங்கள்… ஏற்கெனவே சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் (cystic fibrosis) என்ற சுவாசப் பிரச்னை இருக்கும் சிறுவனின் தாயாக நடித்திருக்கும் நயன்தாரா நடிப்பில் பின்னிவிட்டார். செவ்வரியோடிய விழிகளுடன் அவர் அன்பையும் படபடப்பையும் வெளிப்படுத்துவது அபாரம்!

படத்துக்கு இடையிடையே சுவாசிக்கும் காற்றானது குறிப்பிட்ட நபர்களுக்கு எவ்வளவு மணி நேரத்துக்கு வரும், கார்பன்– டை-ஆக்ஸைடு ரத்தத்தில் கலந்தால் என்னவாகும், ஆப்பிரிக்க மான்களிடமிருந்து மரங்கள் எப்படி இலைகளில் விஷம் சேர்த்துத் தப்பித்தன என்பன போன்ற அறிவியல் செய்திகளையும் ஊடாகத் தெளித்திருக்கிறார்கள்.

வீனஸ் ஃப்ளை ட்ராப் (Dionaea muscipula)  என்னும் பூச்சியுண்ணும் தாவரம், இரையைப் பிடிக்கும் காட்சியைப் போகிறபோக்கில் காட்டியிருக்கும் புத்திசாலித்தனத்துக்கு ஒரு ஷொட்டு!

"கடவுளே ஒரு குறையை வச்சாலும், தாய் நினைச்சா அதைச் சரி செஞ்சிடுவா" என்பது போலக் கவனிக்கத் தகுந்த வசனங்கள் மலிந்திருக்கின்றன.

மின்சாரம் துண்டித்த பேருந்தில், நோய்வாய்ப்பட்ட சிறுவன் சிறிய இடைவெளியில் துணிந்து புகுந்து ஃப்யூஸ் போடும் காட்சி திக் திக் ரகம்.

பெரும்பாலான காட்சிகள் பேருந்துக்குள்ளேயே படமாக்கப்பட்டிருக்கின்றன. பல விதக் கோணங்களில் மாற்றி மாற்றி கேமிராவை வைத்து எடுத்திருப்பதால் ஒரே லொக்கேஷன் என்ற சோர்வு ஏற்படுவதில்லை.

ஒரு கட்டத்தில் மீட்புக் குழு காப்பாற்ற இயலாமல் பின்வாங்கும்போது நமக்கு ஏகத்துக்கும்  திகில் உணர்வு எகிறிவிடுகிறது.

வில்லன் சொல்லும் குட்டிக் கதைகள் பொருத்தமாக இருப்பதையும் சொல்லியாகவேண்டும்.

அச்சமூட்டும் பின்னணி இசைக்கு ஒரு ஜே!

அம்மா பையன் செண்டிமென்ட் காட்சிகளின் நீளத்தைத் தரித்திருக்கலாம். பாடல்களும் படத்தின் இழு விசையைக் குறைக்கவே செய்கின்றன.

எது எப்படியோ, டமால் டுமீல், அந்தர் பல்டி சண்டைகள், ஆபாச நடனங்கள், அபத்த நகைச்சுவை இல்லாமல் வித்தியாசமாக யோசித்துக் கதை செய்திருக்கும் ஜி.எஸ்.விக்னேஷுக்குப் பாராட்டுகள்.

மொத்தத்தில் O2 = ரைட்டூ!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com