0,00 INR

No products in the cart.

   குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம் 

 

வம்பர் 1990

கொட்டும் மழையில் ஆட்டோ பிடித்து மைதிலி பேருந்து நிலையத்தில் நுழைந்தபோது பேருந்து ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. தன் சேலையைப் பற்றிக் கொண்டிருந்த மூன்று வயது மகள் மாயாவை முதலில் ஏற்றிவிட்டு, ஒரு வயது மகன் ரிஷியை  இடுப்பிலும், வலக்கையில்  பெட்டியுடனும், வலது தோளில் மாட்டியிருந்த பெரிய டிராவல் பேகுடனும் அவசரமாக மைதிலி பேருந்தில் ஏறிக்கொண்டாள்.

இரவு நேரப் பேருந்து என்பதாலும் , கொட்டும் மழை என்பதாலும் பேருந்தில் கூட்டம் அதிகமில்லை. குழந்தைகளோடு உட்கார சௌகர்யமான இடம் கிடைத்தது. பெட்டியை மேலே வைத்துவிட்டு பையைக் காலின் கீழே  வைத்துக்கொண்டு அமர்ந்தாள்.

நடத்துனர் டிக்கெட் கொடுக்க அருகில் வந்தார்.

இந்த பஸ் எங்க போகுது?

இப்படிக் கேட்டவளை சற்றே வியப்போடு உற்றுப் பார்த்தார், விரைவில் ஓய்வு பெறும் வயதில் தெரிந்த கண்டக்டர்.

திருச்சிக்கு என்றார்.

“ரெண்டு டிக்கெட் கொடுங்க” என்று பணத்தை நீட்டினாள்.  அவர் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு அடுத்த இருக்கை நோக்கி நகர்ந்தார்.

மழைச்சாரல் உள்ளே வராதிருக்க ஜன்னல் திரைகளை நன்கு இறக்கிவிட்டாள். காலின் கீழே வைத்திருந்த ஒரு பையிலிருந்து இரண்டு சால்வைகளை எடுத்து தன்னிருபுறமும் அமர்ந்திருந்த குழந்தைகளுக்குப் போர்த்தி, தன் மடிமீது தலை சாய்த்து படுக்க வைத்து மெல்ல தட்டிக்கொடுத்தாள்.

எங்கம்மா போறோம்? பெண் கேட்டது.

“திருச்சிக்கு”

“யார் வீட்டுக்கு?”

“அங்க போனதும் சொல்றேன்”

“அப்பா வரலயா”

“அவருக்கு வேலையிருக்கு. அதான்”

“நா ஸ்கூல் போக வேணாமா?”

“உன்னை புது ஸ்கூல்ல சேர்க்கப்போறேன்”

“ஏம்மா?”

“இதைவிட அது இன்னும் நல்ல ஸ்கூல், அதான். நீ கண்ணை மூடிக்கிட்டு தூங்கு செல்லம் சரியா?

சற்றுநேரத்தில் பெண் தூங்கிப்போயிற்று. கண்ணைமூடி தானும் தூங்க முயன்றாள். மெல்லிய நீல நிற ஒளி மட்டும் பரவியிருக்க, பேருந்தில் எல்லோரும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.

“விடிந்ததும் வீடு முழுக்க தேடுவான் ஆனந்தன். வீட்டில் அவளும் குழந்தைகளும் இல்லையென்று தெரிந்ததும் அடுத்து என்ன செய்வானோ”  என்று கவலைப்பட்டாள். வேறென்ன செய்வான். அவள் அப்பாவுக்கு போன் செய்வான். இங்கே வரலையே மாப்ள என்று அப்பா பதறிப்போவார். அவருக்கென்ன தெரியும் பாவம்? அம்மா அழுவாள். சகோதரிகளுக்கு போன் பண்ணுவார்கள். அவர்களும் பதறுவார்கள். கவலைப்படுவார்கள். நாலாபுறமும் தேடிப்போவார்கள். தெரிந்தவர்களிடம் விசாரிப்பார்கள். ஆனால்,  நிச்சயம் போலிஸிடம் புகார் கொடுக்கப்  போகமாட்டார்கள். பெரியக்கா சாவித்திரிக்கு அவள் நேற்றே எழுதி தபாலில் சேர்த்திருக்கும் கடிதம் நாளைக் காலையில் கிடைத்துவிடும். அக்கா நிலைமையைப் புரிந்து கொள்வாள். பதற்றமின்றி பிரச்னையைக் கையாளுவாள். ஆனந்தனும் புகார் கொடுக்கத் துணிய மாட்டான். அப்படிக் கொடுத்தால் அவனுக்குதான் பிரச்னை வருமென்பது அவனுக்குத் தெரியும்.

இனி அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும். பஸ் எங்கே போகிறதோ அங்கே போவதென்று முடிவு செய்தாயிற்று. திருச்சியில் யாரையும் தெரியாது. எங்கே தங்கப்போகிறோம்… அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று எதுவும் தெரியாது. தெய்வம் கண்டிப்பாக ஒரு வழிகாட்டும் என்று அவள் நம்பினாள். விழியோரம் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அழக்கூடாது. அழுவது கோழைத்தனம். அதுவும் மிகவும் தைரியமாக ஒரு முடிவெடுத்து கிளம்பிய பிறகு அழுவது பலவீனப்படுத்தும்.

வெளியே மழையின் சப்தம் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. வடகிழக்கு பருவமழை தீவீரமடைந்திருந்தது.

“ம்மா..” மடியில் படுத்திருந்த பிள்ளை சிணுங்கிற்று.

“பிஸ்கட் சாப்பிடறயா?”

ம்… என்றபடி எழுந்து உட்கார்ந்தது. குனிந்து காலடியில் இருந்த பையின் ஜிப்பைத் திறந்து தண்ணீர் பாட்டிலும், பிஸ்கட் வைத்திருந்த டப்பாவும் எடுத்தபின் கையேடு ஜிப்பை மூடினாள். பையில் அவளது நகைகளும், நாற்பதாயிரம் பணமும் இருந்தது.

எண்பது சவரன் நகை போட்டு, நகரின் மையத்திலிருந்த மிகப்பிரபலமான திருமண மண்டபத்தில் வைத்து ஊரே வியக்கும் அளவுக்குதான் அவளது கல்யாணத்தை நடத்தினார் அப்பா. அவர் போட்ட எண்பது சவரனில் இப்போது மிஞ்சியிருப்பது நாற்பது சவரன்கள்தான். அதுகூட ஆனந்தனின் கண்ணில் படாமல் அவள் ஒளித்து வைத்து காப்பாற்றியது. நாற்பதாயிரம் ரூபாய் பணமும் ஆனந்தனின் பீரோவிலிருந்தது. எங்கிருந்து கொண்டு வந்து வைத்தானோ தெரியாது. கிளம்பும்போது கண்ணில்பட, அதையும் எடுத்து ஒரு துணிப்பையில் சுற்றி, பெரிய பையின் அடிப்பக்கமாக மறைத்து வைத்து எடுத்துக்கொண்டாள். பையில் பணமும் நகையும் இருப்பது அவளது பாதுகாப்புக்குப் பிரச்னைதான். அதனால் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டுமென்று நினைத்தாள். யாரையும் சட்டென நம்பிவிடக் கூடாது. ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைக்கவேண்டும்.

காலின் கீழிருந்த ரெக்சின் பேகை கால்களால் அழுத்திப் பிடித்தபடி தலையை சீட்டில் சாய்த்துக் கொண்டு கண்மூடினாள். பேருந்திலிருந்த பயணிகள் உறங்கிப்போயிருந்தார்கள். ஒருசிலரிடமிருந்து குறட்டை சப்தம்கூடக் கேட்டது. விளக்குகள் அணைக்கப்பட்டு நீலநிற விடிவிளக்கு மங்கலாக ஒளி சிந்திக்கொண்டிருந்தது. கண்டக்டர் டிரைவரோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். வெளியில் மழை சப்தம் தாலாட்டு பாட, உறக்கம் தழுவியது.

விடியற்காலையில் திருச்சி பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்க, கண்டக்டர் அடித்த விசில் சப்தத்தில் உறக்கம் கலைந்தது. வெளியில் மழை கொட்டிக் கொண்டிருந்தது. குழந்தைகள் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார்கள். பெண்ணை எழுப்பிவிட்டாள். பிள்ளையைத் தூக்கித் தோளில் சாய்த்துக் கொண்டாள். மேலிருந்து சூட்கேசை எடுக்க முயன்றாள். பிள்ளையைச் சுமந்துகொண்டு அதை இறக்குவது கடினமாக இருந்தது. “நா எடுத்துத் தரேன் தள்ளிக்கோம்மா…” பெரியவர் ஒருவர் உதவிக்கு வந்தார். “ரெம்ப நன்றி அய்யா…” என்றபடி பெட்டியை வாங்க கை நீட்ட, “நீ நடம்மா….நானே கொண்டுவரேன். ரெண்டு பிள்ளைய வெச்சுக்கிட்டு ஒண்டியா உன்னால முடியாது”

அவரே கீழே இறக்கி வைத்தார். நகையும் பணமும் இருந்த பையை மட்டும் பத்திரமாகத் தோளில் மாட்டிக் கொண்டு ஒரு கையால் பெண்ணைப் பிடித்தபடி பேருந்திலிருந்து இறங்கினாள்.

“இந்த மழைல எப்டிமா போவ? யாராவது வருவாங்களா கூட்டிட்டு போக? இல்ல ஆட்டோ ஏதானம் கூப்டணுமா? எந்த பக்கமா போகணும்?

அவள் பதில் சொல்லாமல் கொட்டும் மழையை வெறித்துப் பார்த்தாள். “நீங்க போங்கய்யா. மழை விடட்டும். நானே போய்க்கறேன்”

என்னைக் கூட்டிட்டு போக என் பிள்ளை வரேன்னு சொல்லியிருக்கான். நாங்க திருவானைக்கா பக்கம்தான் போகணும். அந்தப் பக்கம்தான் நீயும்  போகணும்னா நாங்களே விட்டுட்டு போவோம். பிள்ளைங்களோட உன்னைத் தனியா விட்டுட்டுப் போக மனசு வரலை. பார்க்க என் பெண்ணாட்டம் இருக்க.”

அவர் கேட்டதும் என்ன சொல்வதென்று புரியாமல் ஒருவினாடி யோசித்தாள். திருச்சியில் யாரையும் தெரியாது. பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வந்துவிட்டேன் என்று முன்பின் தெரியாதவரிடம் சொல்வது சரியாகுமா?

பெரியவரின் கண்களில் ஒரு தகப்பனின் வாஞ்சை மட்டுமே தெரிய, அவரிடம் நம்பி பேசலாம் என்று தோன்றியது.

“உண்மையைச் சொல்லணும்னா திருச்சில எனக்கு யாரையும் தெரியாது. கிடைச்ச பஸ்ல குழந்தைகளோட ஏறிட்டேன். அது எங்களை இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கு. இங்கேர்ந்து என் வாழ்வை மீண்டும் துவக்க நினைக்கறேன். இப்போதைக்கு என்னால இவ்ளோதான் சொல்லமுடியும். என் மேல உங்களுக்கு நம்பிக்கையிருந்தா, நாங்க பாதுகாப்பா தங்குவதற்கு ஒரு இடம் மட்டும் பார்த்துக் கொடுத்தீங்கன்னா நன்றியோட இருப்பேன்.

“இடம்னா வாடகைக்கு வீடு வேணுமா?”

வீடுன்னா ஆயிரம் கேள்வி கேப்பாங்க. தவிர இப்போதைக்கு எனக்கு வருமானத்திற்கு வழியேதுமில்லை. கைல கொஞ்சம் பணம் மட்டும்தான் இருக்கு. ஏதானம் ஒரு ஹோம்ல எங்களுக்கு தற்காலிகமா தங்க இடம் கொடுத்தாங்கன்னா கூட போதும். அங்க தங்குவதற்கு நான் பணமும் கொடுத்துவிடுகிறேன். சீக்கிரமே நா ஏதாவதொரு வேலை தேடிக்கொண்ட பிறகு அங்கிருந்து கிளம்பிவிடுகிறேன். அதுவரை உதவினால் போதும். .

ஹோம்ல சேரணும்னாலும் அவங்களும் உன்னைப்பத்தி கேட்பார்களே. என்ன சொல்லுவ?

அவள் அமைதியாக இருந்தாள்.

“கவலைப்படாதே. எனக்கு தெரிஞ்ச ஹோம் ஒண்ணு இருக்கு. அவங்க என்னை நம்பி உனக்கு தங்க இடமும் பாதுகாப்பும் தருவாங்க.

“இல்ல சார். என்னால உங்களுக்கு எந்த தர்மசங்கடமும் வேண்டாம். அவர்கள் ஏதேனும் கேட்டால் நான் என்னைப்பற்றி சொல்கிறேன்.”

“சரி. என் பிள்ளையோட கார் வந்துடுச்சு. முதல்ல என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். முகம் கழுவி சூடா காப்பி குடிச்சுட்டு பசங்களுக்கும் ஏதாவது சாப்பிடக் கொடு. ஒன்பது மணிக்கு நானே உன்னை அந்த ஹோம்க்கு கூட்டிட்டு போறேன். எங்க வீட்டுலேர்ந்து நடந்து போகும் தூரம்தான்.” அவர் அவளது சூட்கேசை எடுத்துக்கொண்டார். காரை நோக்கி நடந்தார்.  பிள்ளைக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தார்.   பிள்ளை வணக்கம் சொல்லியபடி கார் கதவைத் திறந்துவிட்டான்.

மழைக்காலம் என்பதால் காவேரியில் நல்ல நீரோட்டமிருந்தது. காவேரிப் பாலத்திலிருந்து தெரிந்த மலைக்கோட்டையையும், திருவரங்க கோபுரத்தையும்  கண்டதும் நெஞ்சில் கரம் வைத்து பிரார்த்தித்தாள். எவ்வித திட்டமிடலுமின்றி நதியின் போக்கில் செல்லும் மலர் போல விதியின் போக்கில் நானும் உங்கள் காலடியைச் சேர்ந்திருக்கிறேன். இனி நீங்களே என் துணை. மனம் இறைமையிடம் பிரார்த்தித்தது.

அதேநேரம், “தான் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறோமா” என்ற குழப்பமும் ஒருபக்கம் இருக்கவே செய்தது. கையிலிருக்கும் ரொக்கம் எத்தனை நாள் உதவுமோ  தெரியாது. வேலை கிடைக்குமா என்பதும் தெரியாது. கஷ்டங்களைக் கடந்து வாழ்வில் வென்று தலைநிமிர்ந்து நான் வாழ்வேனா? என்ற கேள்வியோடு அமர்ந்திருந்தாள் அவள். வழியேதும் புலப்படாத, இருளடர்ந்த ஒரு நீண்ட குகைப்பாதையில் இறங்கிய உணர்வு ஏற்பட்டது.

(தொடரும்)

 

 

2 COMMENTS

  1. தனியாக தன் குழந்தைகளுடன் திருச்சி வந்து சேர்ந்த மைதிலி யின் நெஞ்சுரம் கண்டு வியப்பு
    ஏற்படுகிறது. இனி அவள் எதிர்காலம் எப்படியிருக்
    குமோ என்கிற கவலை ….

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

0
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...