0,00 INR

No products in the cart.

பெயிண்டர் துரை

மனதில் நின்ற மனிதர்கள் – 1

மகேஷ் குமார்

 

ல்ல நெடு நெடுவென ஒடிசலான தேகம். சுமார் 40 வயது இருக்கலாம். சுருள் சுருளாக தலைமுடி. ஏதேதோ பெயிண்ட் துளிகள் தெளித்து, சரியாக சுத்தம் செய்யாமல் கலர் கலராக இருக்கும். அதைப் பற்றி துரைக்கு கவலையே கிடையாது. அரைக்கைச் சட்டை, மடித்துக் கட்டிய கட்டம் போட்ட லுங்கி. தலையே கலர் கலராக இருக்கும்போது சட்டை, லுங்கி பற்றியெல்லாம் நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம். சட்டைப் பையில் ஒரு தீப்பெட்டி, கணேஷ் பீடிக்கட்டுடன் ஒரு ரெனால்ட் பேனாவும், புழுக்கைப் பென்சிலும். ஆனால், துரை அவற்றைக்கொண்டு எழுதியதைப் பார்த்தவர்கள் யாரும் கிடையாது.

அவன் உயரத்துக்கு பாதம் பரந்து விரிந்து இருக்கும். ‘பேட்டா’ கடையில் அவன் சைசுக்கெல்லாம் செருப்பு கிடையாது என்றபடியால், பூளவாடிக்குப் போய் கால் அளவு கொடுத்து ஸ்பெஷலாகத் தைத்த டயர் செருப்பு. டர்ரக் டர்ரக் என்று செருப்பு சத்தம் வரும் முன்னே; துரை வருவார் பின்னே.

ஊரைச் சுற்றிப் பெருகிவரும் புதிய குடியிருப்புகளே துரையின் பணியிடம். எங்கேயாவது வீட்டுக்குக் கடைக்கால் போடுகிறார்கள் என்று சேதி கிடைத்தால் அங்கே ஆஜர் ஆகிவிடுவான். ஊரிலுள்ள அத்தனை இஞ்ஜினீயர், மேஸ்திரி, கொத்தனார்கள் முதல் மண் சலிக்கும் கூலியாள், தண்ணீர் வண்டிக்காரன் வரை எல்லாருக்கும் அவன் பரிச்சயம்.

“மரம் வைக்க மண்ணை நோண்டினாக்கூட வந்து நின்னுருவானே” என்று அலுத்துக்கொள்வார்கள். ஆனால், கடைக்கால் பூசை முடிந்ததும் அவர்களே வீட்டுக்காரரிடம் “நம்ம பெயிண்டருங்க. சுண்ணாம்பு, டிஸ்டெம்பர், பெயிண்டு எல்லாம்… நல்ல சுத்தமான வேலை. பாருங்க… நம்ம வீட்டுக்குக்கூட துரையையே சொல்லலாம்… என்னங்கறீங்க?” என்பார்கள். வீட்டுக்காரர்களும் “இப்பதானப்பா அரசமரம் சுத்தியிருக்கோம்” என்று சொல்லி பிறகு பார்க்கலாம் என்று அனுப்பிவிடுவார்கள். துரையும் பத்து நாளைக்கு ஒருதரம் வந்து “அப்புறங்.. மேஸ்மட்டம் ஆயிடுச்சாட்ட இருக்கு. லிண்டல் வந்துருச்சாட்ட இருக்கு. நெலவு வெச்சாச்சாட்ட இருக்கு” என்று ப்ராக்ரஸ் ரிபோர்ட் படித்துக்கொண்டே இருப்பான்.

மரம் தைக்க ஆசாரி மட்டும் கண்ணில் பட்டுவிடட்டும். துரை அந்தண்டை இந்தண்டை நகரமாட்டான். வேற வழியே இல்லாமல் “சரிப்பா… நீயே பெயிண்ட் பண்ணிக்குடு”ன்னு சொன்னப்பறந்தான் நமக்கும் அவனுக்கும் மூச்சு நேராகும். ஆனால், மறுநாளிலிருந்து வேறுவிதமான தொந்தரவு ஆரம்பிக்கும். டிஸ்டெம்பரா, செலாக்கா, சுண்ணாம்பா, பெயிண்டா என்று வ(அ)றுத்து எடுத்துவிடுவான். “சுண்ணாம்பும் வேண்டாம்; வெத்தலையும் வேண்டாம்; வெறும் காரைக்கட்டிடத்திலேயே இருந்துக்கிறோம்” என்று நம்மை ஒரு அலுப்பில் தள்ளிவிடுவான். பிறகு “சரிங்க… அய்யா எப்பிடிச் சொல்றீகளோ அப்பிடிப் பண்ணிப்போடலாமுங்க” என்று அடங்குவான்.

கலர் எல்லாம் செலக்ட் பண்ணிக்கொடுத்து அவனும் வேலையை ஆரம்பித்தபின் ஆட்டம் சொல்லி மாளாது. 3 பேசன் 4 பக்கிட்டு 5 கோப்பை என்று லிஸ்டில் சேர்த்துக்கொண்டே போவான். “வேஷ்டியைவிட மேல்துண்டு பெருசா இருக்கே” என்று நமக்கு அயர்ந்து வரும். பிறகு கொஞ்சம் வேப்பிலை அடித்தபிறகு ஆத்தா மலையேறும். பெயிண்டிங் வேலை முடிவதற்குள் ஒரு வேப்பமரம் கிட்டத்தட்ட மொட்டையாகிவிடும்.

மேஸ்திரி எங்கே கலவை நன்றாகப் போட்டிருக்கிறார், எங்கே ‘கை வைத்து’ விட்டார் என்று துரை ஒரு ரவுண்டு நமக்கு நம் வீட்டைச் சுற்றிக்காட்டுவான். மேஸ்திரி ‘கை வைத்த’ இடங்களில் ‘ரொட்டி ரொட்டியாக’ பெயர்ந்துவரும் என்பான். மேஸ்திரியும் இல்லாத மூன்றாவது கண்ணால் அவனை எரித்து விட்டு “கண்ட கழிசடைகளும் நம்ம வேலையைக் குறை சொல்றாங்க” என்று நம்மிடம் எரிந்து விழுவார். ஆனால், துரை சொன்ன மாதிரியே அங்கெல்லாம் வெறும் பிரஷால் தடவினாலே பெயர்ந்துவரும். மேஸ்திரியோ கொத்தனாரையும் தண்ணீர் ஊற்றியவனையும் திட்டித் தீர்ப்பார். கொத்தனார் உப்புத்தண்ணி கொண்டு வந்துவிட்டான் என்று வண்டிக்காரனை வைது கட்டுவார். வண்டிக்காரன் தோப்புக்காரனைச் சொல்வான். நாமோ இதற்கு ரெண்டு சர்க்காரியா கமிஷன் வெச்சாலும் போதாது என்று மேஸ்திரியிடம் சமரசம் செய்துகொள்வோம்.

ஒரு வழியாக பெய்ண்ட் வேலை முடிந்ததும் காம்பவுண்ட் சுவருக்கு சுண்ணாம்பு அடிக்கும் வைபவம் தொடங்கும். காளவாய்க்கு நம்மையும் அழைத்துப் போய் “பாரு. அய்யா வீட்டுக்கு. நல்ல கல்லா வேணும். சரியா? சும்மா மருதாணி கணக்கா பத்தணும். இல்லைன்னா உந்தலைலயே கொண்டு வந்து கொட்டுவேன்” என்று மிரட்டுவான். மறுநாள் தானே போய் மூட்டைக்கல்லையும் கைவண்டியில் கொண்டுவருவான். ஒரு வாளியில் தண்ணீர்விட்டு ரெண்டு கல்லைப் போடுவான். அது சளபுளவெனக் கொதிக்கும். “பாருங்க… நாம்போய் பாத்து பாத்து எடுத்தாந்தேன். இல்லன்னா இப்பிடிக் கொதிக்குமா?” என்பான். நாமும் இமயவரம்பிலிருந்து கல் கொண்டுவந்த சேரனுக்குப் பிறகு துரைதான் என்று சிலாகிப்போம். ராபின் புளூ நீலப் பாக்கெட்டுகளும் சேர்ந்து கரைய, நமது காம்பவுண்ட் சுவரும் வெளிர்நீலத்தில் பளிச்சிடும்.

“இனிமேப்பட்டு எதுன்னாலும் என்னியைக் கூப்புடுங்க. சாமி வந்தான் பெருமாள் வந்தான்னு எவன்ற கையிலயாவது பிரசைக் குடுத்தராதீங்க” என்று “அன்பாக” சொல்லிவிட்டு தலையைச் சொறிந்தபடி ஒரு கூலித்தொகையை “அய்யாவுக்காக நானே கொறச்சுதான் சொல்லியிருக்கனுங்” என்ற டிஸ்க்ளைமருடன் சேர்த்துச் சொல்வான்.

துரைக்கு செட்டில் பண்ணி அனுப்பி பளபள காம்பவுண்ட் சுவரை நாம் இரண்டு நாட்கள் கண்கொள்ளாமல் அனுபவித்தபின்னர் தேர்தல் அறிவிப்பு வரும்.

 

ஓவியர் ராஜன்

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

1
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...