0,00 INR

No products in the cart.

நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி கதி கலங்க வைத்த நகரம்

 உலகக் குடிமகன் –  25

 

– நா.கண்ணன்

ப்பான் குறைந்த காலத்தில் மிக உயர்ந்த நாடாக மாறியதற்குக் காரணங்கள் உள்ளன. முதலில் அவர்கள் ஐரோப்பிய வாழ்வியலைக் கடைப்பிடித்தனர். ஐரோப்பிய தரம் வாழ்வில் இருக்க வேண்டும் எனப்பாடுபட்டனர். இரண்டாவது, அசைக்க முடியாத தன்னம்பிக்கை. உலகில் நம்பர் 1 ஜப்பான் என்று அவர்கள் நம்புகிறார்கள். மூன்றாவது, கடின உழைப்பு. எதற்கு உழைக்கிறோம் என்று கூட யோசிக்காமல் உழைத்துக் கொண்டிருப்பர். நான் போன காலத்திலேயே ஜப்பான் முதலாம் உலக நாடாகக் கோலோட்சிக் கொண்டிருந்தது. ஆயினும் நாங்களெல்லாம் மாடாய் உழைத்துக் கொண்டிருந்தோம். ஒரு வாரத்தில் 5 நாட்கள் வழக்கமான வேலை (அதில் வியாழன் இரவு செமினார் உண்டு), சனியன்று தத்துசுகவா சென்செய் கீழிருக்கும் பல்துறை செமினார் நடக்கும். முழு நாள் நடக்கும். சீனாவின் காஞ்சி எனும் கோட்டோவிய முறையில் ஓர் சிக்கல். அறிவியல் வளர வளர. புதிய, புதிய காஞ்சி உருவாகிக்கொண்டிருக்கும். எனவே, மாணவர்கள் நிரந்தக் குழந்தைகள் போல் படித்துக் கொண்டிருப்பர்.

ஜப்பான் வரும் வெளிநாட்டினர் பத்திரிக்கை வாசிக்குமளவு கல்வி பெற வேண்டுமெனில் 5000 காஞ்சிகளாவது கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு ஊடே புகும் ஹிரகானா, கதகானா எனும் எழுத்துக்கள் வேறு. எனவே, மாணவர்களுக்கு கூடுதல் படிப்பு. அதனால் சதா படித்துக்கொண்டே இருப்பர். இரவில் ஆய்வகத்திலேயே படுத்துறங்கும் மாணவர்களுமுண்டு. திங்கள் முதல் சனி வரை வேலை. ஞாயிறு அன்று சென்செய் வந்துவிடுவார். எனவே, மரியாதைக்கு நாங்கள் காலைப் பொழுதாவது ஆய்வகத்தில் கழிப்பதுண்டு. இச்சூழலில் விடுமுறை என்றேதும் எங்களுக்குக் கிடையாது.

இப்பின்னணியில் நான் ஒரு இஸ்ரேலியத் தம்பதியினரோடு இரண்டு வாரங்கள் ஜப்பானைச் சுற்றிப்பார்க்கச் செல்கிறேன் என்றால் எப்படி இருந்திருக்கும்? யாருக்கும் பிடிக்கவில்லை. ஆனால், வாழ்வில் ஒருமுறை வரும் வாய்ப்பு. ஒரு காரை எடுத்துக் கொண்டு நாங்கள் நால்வர் பயணப்பட்டோம். தெற்கிலிருந்து வடக்கு என்று முழு ஜப்பானைச் சுற்றினோம். இதுவோர் அரிய வாய்ப்பு. தெற்கிலிருக்கும் ஒகினவா மக்கள் கொஞ்சம் கருப்பாக பிலிப்பினோ போல் இருப்பர். ஆனால், வடக்கே ஹொக்கைடோவிலிருக்கும் ஐனூ எனும் இனம் அப்படியே ரஷ்யர்கள் போல் இருப்பர். எனவே, ஜப்பானியர் எல்லாம் ஒரே மாதிரி இருப்பர் என்பது கற்பிதம். பல இனங்களின் கூட்டு அந்நாடு. ஏன், தமிழ் ரத்தம் கூட அங்கு இருக்கிறது. சங்காலத்து ஆய்குல மக்கள் அங்கு சென்றிருக்கிறார்கள். இவர்களை ‘யாயோயி’ என்று ஜப்பானியர் அழைக்கின்றனர். யாழ் பல்கலைக் கழகப் பேராசிரியை மனோன்மணி சண்முகதாஸ் ‘மான்யோசு’ எனும் பழங்காலக் கவிதைகளை சந்தம் மாறாமல் தமிழ்ப் படுத்தியுள்ளார். சங்கம் இலக்கியப் பரிட்சியம் இல்லாமல் மான்யோசு கவிதைகளைப் புரிந்துக்கொள்ள முடியாது என்பார் அவர்.

இவ்வளவு உழைப்பு போட்டதால் என் ஆய்வு உலகப் பிரசித்தி ஆனது. அமெரிக்காவே கனவாக இருந்த நான் அமெரிக்க சூழலியல் ஏஜென்சிக்கு மனுப்போட்டேன். உடனே வேலை கிடைத்துவிட்டது. உலகப் பிரசித்தி பெற்ற லாஸ்வேகஸ் எனுமிடத்தில் வேலை. இப்பதிலை எடுத்துக் கொண்டு சென்செய்யின் அனுமதி பெறச் சென்றேன். அவர் “இவ்வேலை வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். காரணம் “உலகின் உயர்ரக ஆய்வு ஜப்பானில் மட்டுமே சாத்தியம், உனக்கு நான் இங்கே வேலை வாங்கித் தருகிறேன்” என்று சொல்லிவிட்டார். குருபக்தியால் கெட்டுப்போன ஒருவன் உண்டு என்றால் அது நானொருவனாக மட்டுமே இருக்க முடியும். முதலில் அமெரிக்கன் கல்லூரியில் ஜே.சி.பி பேச்சைக் கேட்டு லோல் பட்டது. அடுத்து மதுரைப் பல்கலைக் கழகத்தில் ஜே.ஜே பேச்சைக்கேட்டு வெளியேறவே முடியாத முடிச்சில் மாட்டிக் கொண்டது. இப்பவாவது புத்தி வந்ததா என்றால் இல்லை. நான் அமெரிக்கா போய் செட்டிலாக வேண்டுமென நினைத்த பெரும் கனவு கடைசியில் பாழாய் போனது.

ஜப்பானில் வேலை பார்ப்பதைப் பற்றி பின்னால் யோசித்துப் பார்த்தேன். விடுமுறை இல்லாத உழைப்பு. கேள்வி ஏதும் கேட்கக்கூடாத பணிதல். அது சென்செய்யாக இருந்தாலும், கம்பெனி மேனேஜராக இருந்தாலும் ஒன்றுதான். அடுத்து நமது தனித்தன்மையை முழுமையாய் இழந்து கம்பெனி சொத்தாக மாறிப்போவது. குடும்பம் இரண்டாம் பட்சம் என்ற நிலை. இது என் மனநிலைக்கு சரிப்படாது என்று தோன்றியது. எனவே, அக்காலத்தில் என் துறையில் புகழ்பெற்று இருந்த ‘யான் டன்கர்’ எனும் விஞ்ஞானிக்கு வேலை கேட்டு எழுதினேன். அவர் உடனே புறப்பட்டு வா! என்று சொல்லிவிட்டார். சென்செய்க்கு என் செய்கை பிடிக்கவில்லை. நான் ஜப்பானிலேயே இருக்க வேண்டுமென்று விரும்பினார். நான் தான் வித்தியாசமான ஆளாச்சே! என்னைத் தடுக்க முடியவில்லை. கான்வகேசன் கூட முடியவில்லை, நான் கிளம்பிவிட்டேன். பின்னால் நான் டொரொண்டோவில் சென்செய் அவர்களைக் கண்டபோது என் டிகிரியை ஹாட்டல் ரூமில் கொடுத்தார். இத்தனை பட்டங்கள் பெற்றிருந்தாலும் என் வாழ்வில் நான் எந்த கான்வகேசனனிலும் கலந்து கொண்டதே கிடையாது. அப்படியொரு அதிர்ஷ்டம்!

நாங்கள் ஜெர்மனி போகிறோம் எனும் சேதி நண்பர்களுக்கெல்லாம் இனிப்பான சேதியாக அமைந்தது. ஏனெனில் இந்தச் சாக்கில் அவர்கள் ஜெர்மனியைக் காணலாமே! உண்மையில் நான் ஜெர்மனி போன பின் வரிசையாக ஒருவர் மாற்றி ஒருவர் வந்து என்னைக் கண்டு, ஜெர்மன் சுற்றுலா செய்விக்கச் சொன்னார்கள். இந்த டூர் கைடு வேலை என்பது எனக்கு மதுரைப் பல்கலைக் கழகத்திலிருந்து சைட் டுடீ ஆகிப்போனது! ஜப்பானியர் எவ்வளவு சுத்தம் என்று தெரியும், அவர்கள் பயப்படக் கூடிய ஒரே சுத்தமானவர் ஜெர்மானியர் மட்டுமே! ஆம்! நான் ஜெர்மனி போகிறேன் எனச் சொன்னவுடன் அவர்களின் ரியாக்‌ஷன்! ஐயோ! அங்கே கண்ணாடி ஜன்னலைத் துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டுமே! என்பதுதான். அது எவ்வளவு தூரம் உண்மை என்று அங்கு போன போதுதான் தெரிந்தது!

1989 இளவேனிலில் நான் ஜெர்மனியில் கால் பதித்தேன். யான் டன்கர் தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் என்னை கீல் நகரின் புறநகர்புறத்திற்கு அழைத்துப் போனார். கடுகு மலர்கள் பூத்து நிலத்திற்கு மஞ்சள் பாவாடை கட்டியிருந்தது. இதுதான் ராப்ஸ் மலர்கள். இதன் மகரந்த நெடி இங்கு அலையும் மான்களை உன்மத்தமாக்கும் தன்மையது என்றார் யான். எவ்வளவு பெரிய வித்தியாசம் ஜப்பானில் பேராசிரியரை பெயர் சொல்லி அழைப்பதில்லை. சென்செய் என்றால் குரு என்று பொருள். அவரை குருவே என்றே அழைக்க வேண்டும். பேராசிரியர் முனைவர் யான் டன்கரை முதற்பெயர் கொண்டு அழைக்க வேண்டும். அதுபோல் என்னையும் முதற்பெயர் கொண்டே எல்லோரும் அழைப்பர். ஆனால் இதிலொரு சிக்கல் இருக்கிறது. இந்தியாவில் குடும்பப்பெயர் என்பது ஜாதீயப் பெயராக இருப்பதால் நாம் நம் குடும்பப்பெயரைப் போட்டுக் கொள்வதில்லை (அதாவது சர்மா, ஐயர், கோனார், செட்டியார், பறையன்). எனவே நான் நாராயணன் கண்ணன் ஆனேன். கண்ணன் என்பது இங்கு குடும்பப்பெயரானது. நாராயணன் என்பதே என் பெயர் என்று பலர் அப்படி அழைப்பர். நான் விளக்க முயல்வேன். ஜான்சன் என்றால் ஜானின் பிள்ளை என்று பொருள். சாக்சன் என்றால் ஜாக்கின் சன், அதாவது பிள்ளை என்று பொருள். அதுபோல் நாராயணன் கண்ணன் என்றால் நாராயணனின் பிள்ளை கண்ணன் என்று பொருள் என்பேன். ஆனால், நான் அங்கு அப்பாவானேன்.

பலருக்கு நான் கீல் போகிறேன் என்றவுடன் ஓ ரஷ்யாவிலிருக்கும் கீவ் நகரமா என்பர். இல்லை இது ஹாம்பர்க் அருகிலிருக்கும் கீல் என்பேன். ஒன்று ஸ்பெல்லிங், இரண்டாவது அதன் உச்சரிப்பு. ஜெர்மன் மொழியில் ரோமானிய லிபிக்கான உச்சரிப்புகள் மாறும். என்னைப் பார்க்க வந்த அக்கா பையன் முரளி பிரான்சில் உள்ள கேல் நகருக்குப் போய் விட்டான். உண்மையில், இரண்டாம் உலகப் போரில் உலகை உலுக்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி கதி கலங்க வைத்த நகரம் கீல். நமக்கு சூயஸ் கால்வாய் தெரியும், ஆனால் அதைவிட பிசியான கீல் கால்வாய் பற்றித் தெரியாது. இது பால்டிக் கடலையும், வடகடலையும் இணைப்பது. ஆனால், தற்போது கீல் நகரம் அமைதியான பல்கலைக் கழக நகரமாக இருக்கிறது. இங்குள்ள பொருளாதார இயக்கம் (இன்ஸ்டிடூட்) உலகப் பிரசித்தி. அதே போல் நான் வேலைக்குச் சேர்ந்த கியோமார் எனும் கடல்சார் ஆய்வகம் மிகப்பிரபலம்.

(தொடரும்)

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

1
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...