இறந்தும் இடம் மாறும் அதிபர்

இறந்தும் இடம் மாறும் அதிபர்
Published on

– முனைவர் சோமலெ சோமசுந்தரம்

படைக்கு முந்து!

தன்னார்வத் தொண்டிற்கு அமெரிக்கர்களும், அமெரிக்காவும் கொடுக்கின்ற முக்கியத்துவமே என்னுடைய முப்பத்தேழு ஆண்டு கால அமெரிக்க வாழ்வில் என்னை மிகவும் கவர்ந்த அமெரிக்கப் பண்பாகும். 65 சதவிகித அமெரிக்கர்கள் ஆண்டுதோறும் தன்னார்வச் சேவையில் ஈடுபட்டு மகிழ்கின்றனர். "தன்னார்வத் தொண்டில் (ஒருவர்) கொடுப்பதைவிட (அவருக்குக்) கிடைப்பதே அதிகம்" என்பதை உணர்ந்த நாடு அமெரிக்கா. மருத்துவ அறிவியல் ஆய்வுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. "ஊருக்கு உழைத்தல் யோகம்" என மகாகவி பாரதியார் பாடியிருந்தாலும், தன்னார்வத் தொண்டில் ஈடுபடுபவர்களை சம்பாதிக்கத் தெரியாதவர்கள் என்ற தவறான நோக்கில் பார்க்கும் மனப்பான்மை நம் சமுதாயத்தில் இன்றும் நிலவுகிறது.

டென்னசி மாநிலத்தின் புனை பெயரே "தன்னார்வலர் மாநிலம்" (Volunteer State).  "பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து" என்ற பழமொழியைக் கேளாத மக்கள் இம்மாநிலத்தவர். 1812இல் நடைபெற்ற நியூ ஆர்லீன்ஸ் போரில் டென்னசி மாநிலத்திலிருந்து 20,000 மக்கள் படைக்கு முந்திக்கொண்டு தன்னார்வலர்களாக (பிற்காலத்தில் அமெரிக்க அதிபராகிய) தளபதி ஆன்ட்ரீவ் ஜாக்சன் தலைமையில் மிகத் துணிவோடு போராடியதால் கிட்டிய சிறப்புப் புனைபெயர் அது. 1846இல் நடைபெற்ற அமெரிக்க – மெக்சிகோ போரிலும் டென்னசி மாநிலத்திலிருந்து 30,000 தன்னார்வலர்கள் பங்கு பெற்றனர்.

இறந்தும் இடம் மாறும் அதிபர்!

1845 முதல் 1849 வரை அமெரிக்க அதிபராக இருந்து, மெக்சிகோ நாட்டோடு போரிட்டுத் தற்போதைய டெக்சஸ், ஆரிகன் போன்ற தெற்கு மற்றும் மேற்கத்திய மாநிலங்களை அமெரிக்காவுடன் இணைத்தவர் அமெரிக்காவின் பதினோராவது அதிபராக இருந்த ஜேம்ஸ் போக் (James Polk).  காலரா தொற்றால் இறந்ததால், அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் போக் புதைக்கப்பட்டார். ஒரு வருடம் கழித்து, அவர் உயிலில் எழுதியபடி நாஷ்வில் நகரில் உள்ள அவருடைய சொந்த வீட்டு வளாகத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் புதைக்கப்பட்டார்.

அவர் வாரிசுகள் அந்த வீட்டை விற்றதால், இருக்க இடம் இன்றித் தவித்தது அதிபரின் உடல். அதைக் கண்ட டென்னசி மாநில அரசு, அதிபரின் மூன்றாவது இறுதி உறைவிடமாக டென்னசி மாநிலத்தின் தலைமைச் செயலக வளாகத்தில் ஒரு பகுதியை ஒதுக்கியது. அவருடைய உடலை கொலம்பியா நகரில் உள்ள அருவடைய பூர்வீக வீட்டு வளாகத்திற்கு மாற்ற வேண்டுமென டென்னசி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். இறந்த 170 வருடங்களுக்குப் பிறகும் மீளாத் தூக்கமின்றித் தவிக்கின்றார் இந்த அமெரிக்க அதிபர்.

அமெரிக்காவில் பெரும்பாலனோர் இறந்த பிறகு புதைக்கப்படும் நிலை மாறி, உடல்களைத் தகனம் செய்கின்ற பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம் பொருளாதாரமே. உலகின் மிகப் பணக்கார நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் இறந்தும் நிறையப் பணம் வேண்டும். அந்த இறுதி இடத்தைச் சென்றடைய, பொதுக் கல்லறைகளில் இரண்டாயிரம் டாலர்கள் (ஒன்றரை இலட்சம் ரூபாய்) வரையும், தனியார் கல்லறைகளில் ஐயாயிரம் டாலர்கள் வரையும் இறுதிச் செலவுகளுக்குப் பணம் கட்டியபிறகே அந்த ஆறு அடி இறுதி உறைவிடம் உறுதி.

கல்லறைகளை விரும்புபவர்கள், தாம் வாழும்போதே இறுதி இடத்தை விலைக்கு வாங்கி பணத்தை மிச்சப்படுத்துகின்றனர். கல்லறைச் செலவைச் சரிக்கட்ட காப்பீட்டு திட்டங்களை வாங்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. கல்லறைகளுக்கான இடப் பற்றாக்குறை, கல்லறை இடங்களின் விலையுயர்வு ஆகியவற்றால், தகனம் செய்து சிறு குடத்தில் அந்த சாம்பலை புதைக்கின்ற 'கலசத் தோட்டங்கள்' (Urn Gardens) அமெரிக்கக் கல்லறைகளில் அதிகரித்து வருகின்றன.

தங்கத்தில் கை கழுவும் தொட்டி

மெரிக்க 'Rock And Roll' இசையின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் எல்விஸ் ப்ரீஸ்லி. மெம்பிஸ் நகரில் உள்ள அவருடைய "கிரேஸ்லேண்ட்" இல்லம் அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்குப் பிறகு அதிகமாகப் பார்வையிடப்படுகின்ற இல்லமாகும். அருங்காட்சியகமாக விளங்குகின்ற அந்த மாளிகை வளாகத்தில் எல்விஸ் பயன்படுத்திய தனி விமானத்தின் உள்ளே சென்று 24 – காரட் தங்கம் பூசப்பட்ட கை கழுவும் தொட்டி, தங்க முலாம் பூசப்பட்ட இருக்கைக் கவசங்கள் (Seat Belts) ஆகியவற்றைப் பார்க்கலாம்.

உறங்காத விமான நிலையம்

சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் இரவிலும் மக்கள் மயமாக காட்சியளிப்பது வழக்கமாகிவிட்டது. மிகப் பெரும்பாலான அமெரிக்க விமான நிலையங்கள் இரவு பத்து மணி முதல் காலை ஐந்து மணி வரை ஓய்வெடுத்துக் கொள்கின்றன. இவற்றில் மெம்பிஸ் நகர விமான நிலையம் விதிவிலக்காக உள்ளது. இங்கு பெரும்பாலான விமானங்கள் இரவு பத்து மணியளவில் தரையிறங்கி அதிகாலை 4 மணிக்குள் மீண்டும் பறக்கின்றன. ஒவ்வொரு இரவும் அவற்றில் பயணம் செய்வதோ 15 லட்சம் பொட்டலங்களும் கட்டுக்களும்.

இந்திய அரசின் அஞ்சலகத் துறை தன் உயரிய நிலையை தனியார் கூரியர் வணிகத்திடம் இழந்த கதை பல்லாண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் ஏற்பட்டது. அமெரிக்க அஞ்சல் துறையின் மெத்தனத்தில் உருவாகிய FEDEX நிறுவனத்தின் தலைநகர் மெம்பிஸ் நகரம். அமெரிக்காவில் கூரியரின் மறுபெயர் FEDEX. Fax தொழில்நுட்பம் வந்ததும் இந்த நிறுவனத்தின் மூலமாக அனுப்பப்பட்ட விரைவுக் கடிதங்கள் 50 சதவிகிதமாகக் குறைந்தன. தன் வேகத்திற்கேற்ப FEDEX நிறுவனம் விரைவாகப் பொட்டலங்களை அனுப்பும் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. அதனுடைய 700 விமானங்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் செல்கின்றன. மெம்பிஸ் நகரம் தூங்கச் சென்றதும், 8,000 பணியாளர்கள் ஒவ்வொரு இரவும் 15 இலட்சம் பொட்டலங்களை, 150 விமானங்களிலிருந்து இறக்கி அவை போய்ச் சேர வேண்டிய ஊர்களுக்கான விமானங்களில் ஏற்றுகின்றனர். மெம்பிஸ் நகரில் தினமும் இரவில் பொட்டல வெள்ளம்தான். ஆனால், அதிகாலையில் அந்த வெள்ளம் ஓய்ந்துவிடுகிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com