0,00 INR

No products in the cart.

வாழ்க்கை என்கிறது என்ன?

அருள்வாக்கு

– காஞ்சி மகா ஸ்வாமிகள்

 

எல்லா இடையூறும் நீங்க…

வாழ்க்கை என்கிறது என்ன? பல தினுசான சலனங்கள்தான்; இப்போது இருப்பது நாளைக்கு இல்லை என்று மனசாலேயும், வாக்காலேயும்,
சரீரத்தாலேயும், புத்தியாலேயும், பணத்தாலேயும் பல தினுசு காரியங்களைப் பண்ணி மாறிக்கொண்டே இருப்பதுதான். ஆலோசித்துப் பார்த்தால் தெரியும், life என்பது movement-கள்தான் என்று. இதிலே சரீரத்தால் பண்ணும் ‘மூவ்மென்டுகள்தான் பளிச்சென்று தெரிவது. அதிலேயும் சரீரம் முழுவதை யும், ஒரு இடத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிப் பிரயாணம் பண்ணு கிறோமே, அதுதான் முக்கியமான ‘மூவ்மென்டாகத் தெரிகிறது. அதைத்தான் ‘ப்ரவேசே நிர்கமே தாதா’ என்று சொல்லியிருக்கிறது. ‘ப்ரவேசம்’ ஒரு இடத்துக்குள்ளே போவது. ‘நிர்கமம்’ ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு வெளியில் போவது. இப்படியே எந்தவிதமான மூவ்மென்டாலும் ஏதோ ஒரு விஷயத்திற்குள் பிரவேசிக்கிறோம்; ஏதோ ஒன்றை விட்டுவிட்டுப் புறப்படவும் செய்கிறோம்.

இவையெல்லாவற்றிலும் ஒருத்தனுக்கு இடைஞ்சல் வராது. வாழ்க்கையைச் சலனம் என்று சொன்னேன். இன்னொரு ‘டெஃபனிஷ’னும் [இலக்கணமும்] சொல்கிறதுண்டு. பத்திரிகைகளில் அந்த ‘டெஃபனிஷன்’தான் ரொம்பவும் அடிபடுகிறது. ‘வாழ்க்கைப் போராட்டம்’, ‘வாழ்க்கைப் போராட்டம்’ என்றே நிறைய கேட்கிறோம். டார்வின் தியரி, ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் தியரி எல்லாமே போராடிப் போராடித்தான் ஜீவகுலம் உருவாயிருக்கிறது என்றே சொல்கின்றன.

யோசனை பண்ணிப் பார்த்தால் சலனமும் போராட்டமும் ஒன்றுக்கொன்று கனெக்ஷன் உள்ளவை என்று தெரியும். யாரோ ஒரு ஜீவனுக்கு மட்டும் சலனம், மற்றதெல்லாம் சலனமில்லாமல் இருக்கிறது என்றால்தான் இந்த ஒருத்தன் தன் இஷ்டப்படி சுகமாகச் சஞ்சாரம் பண்ணமுடியும். (எல்லா தினுசு சஞ்சாரங்களையுந்தான் சொல்கிறேன்.) ஆனால் வாஸ்தவத்தில் அப்படியா இருக்கிறது? அத்தனை ஜீவராசிகளுக்கும்தான் ஓயாத சலனமாக இருக்கிறது. அசேதன வஸ்துக்களிலுங்கூட ஒரே சலனம்! ஒரு அணுவுக்குள்ளேகூட எலெக்ட்ரிஸிடியின் வேகத்தோடு சதா சஞ்சாரம் நடந்துகொண்டே இருக்கிறது. இப்படிப் பல உயிர்களும், ஜடவஸ்துக்களும் ஒரே சமயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தால் அவற்றுக்கிடையே மோதல்களும் உண்டானபடிதானே இருக்கும்? போராட்டம் என்பது மோதல்தானே?

இன்னும் அடிப்படைக்குப் போனால் ஒரு ஜீவனோ, ஜடமோ சலனம்
அடைகிறதென்பதே போராடுவதுதான். சாந்தம் வந்துவிட்டால் நிச்சலனமாக அடங்கிப் போய்விடுவோம் என்று நன்றாகத் தெரிகிறதோல்லியோ? ஆகையால் சலனம் இருந்தால் சாந்தி இல்லை என்று ஆகிறது. சாந்தி இல்லாமலிருப்பதுதான் போராட்டம். War and Peace என்று எதிர்ப்பதங்களாகச் சொல்கிறோமல்லவா?

வாழ்க்கையே போராட்டம் என்றாலும், குறிப்பாக அப்படித் தெரிவது ஒருத்த ரோடொருத்தர் போட்டுக் கொள்ளும் சண்டைதான். அதைத்தான் “ஸங்க்ராமே” என்று சொல்லியிருக்கிறது. “ஸங்க்ராமம்” என்றால் யுத்தம்.

யுத்தத்தில் ஒருத்தனுக்கு இடையூறு வராது. அவன் ஜயசாலியாக விளங்குவான்.

நீட்டி அர்த்தம் பண்ணிக்கொண்டால், வாழ்க்கையின் அநேக ப்ரவேச – நிர்கமங்களான போக்குவரத்துக்களிலேயும், சகலவிதமான போராட்டங்களிலேயும் அவன் இடையூறு எதுவுமில்லாமல் வெற்றியோடு விளங்குவான்.

அர்த்தத்தை இன்னமும் கொஞ்சம் நீட்டி, ஒரு சலனமும் போராட்டமும் இல்லாத பூர்ண ஸ்திதியான ஆத்ம சமாதி நிலையை அடைவான் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ‘வித்யாரம்ப’த்தால் பிரம்மசரியத்தையும், ‘விவாக’த்தால் க்ருஹஸ்தாச்ரமத்தையும் சொன்ன மாதிரி, அப்புறம் சமாதி நிலையில் கொண்டு சேர்க்கும் சந்நியாஸாச்ரமத்தைக் குறிப்பிடுகிற மாதிரியும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

இதிலே – அதிலே, இந்த ஆச்ரமத்திலே – அந்த ஆச்ரமத்திலே என்று
எதற்காகப் பலது (பலவற்றைச்) சொல்லணும்? சுருக்கமாக அத்தனையையும் அடக்கி, ‘எல்லாக் காரியத்திலேயும்’ – “சர்வ கார்யேஷு” – அவனுக்கு இடைஞ்சல் இல்லை, அதாவது வெற்றிதான் என்று [ச்லோகத்தை] முடித்திருக்கிறது.

ஸர்வ கார்யேஷு விக்நஸ்தஸ்ய ந ஜாயதே

“தஸ்ய” — அவனுக்கு; ‘ஸர்வ கார்யேஷு’ — சகல காரியங்களிலேயும்; “விக்ன:” — இடைஞ்சல்; “ந ஜாயதே” உண்டாவதில்லை.

1 COMMENT

 1. காஞ்சி மஹாசுவாமிகள் வாரம் தோறும் மிக்க கருணையுடன் அளித்து வரும் ‘ அருள் வாக்கு ‘
  நெஞ்சை அள்ளுகிறது.நெஞ்சம் குளிர்கிறது. அற்புத ஆனந்த பரவசத்துக்கு வழி வகுத்து கொடுக்கும் கல்கிக்கு காலம் முழுவதும் நன்றி சொன்னாலும் காணாது என்பது தான் உண்மை. ‘ வாழ்க்கை பல தினுசான சலனங்கள் தான்…’ _ இந்த சிங்கிள் வரியில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்…
  அடடா…பிரபஞ்ச ஒளியின் மொத்தமும் உள்ளத்தில்
  பாய்ந்த வெளிச்சப் பிரவாகம்…பெரிதினும் பெரிதான இந்த மகத்தான அனுபவத்தை பெரியவாவால் மட்டுமே அளிக்க..இல்லை ..அருள முடியும். ஜய ஜய சங்கரா…ஹர ஹர சங்கரா!

  நெல்லை குரலோன்
  பொட்டல்புதூர்

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

நாய் ஜென்மமா? மனித ஜென்மமா?

4
அருள்வாக்கு ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரியார்   எந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டாலும் முதலாவது வயிற்றுப்பசியைப் போக்கிக் கொண்டால்தான் முடியும். பசியை நீக்க முடியவில்லை என்றால் சந்தியாவந்தனம் செய்யத் தோன்றாது. ஆகவே, பசியையும் போக்கிக்கொள்ள வேண்டும், பக்தியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்....

சரீர தாத்பரியம்

1
  அருளுரை காஞ்சி மகாபெரியவர்   ’தண்டம்’ என்றால் ‘ஒன்றுக்கும் உதவாதது’ என்ற அர்த்தத்தில் சொல்கிறோம். தாய் மரத்திலிருந்து பிரிந்து தனியாக வந்த பாகந்தானே தண்டம்? மரத்தில் அது பாகமாக இருக்கும்போதுதான் அதற்கு உயிர் இருந்தது. அப்போதுதான் அது...

இறைவனிடம் கொள்ளும் அன்பே நித்தியமானது

2
அருள்வாக்கு சுவாமி ராமதாஸர்   மகிழ்ச்சி என்பது நம்முடைய அனுபவத்தினாலேயே வருகிறது. ஒரே பொருள் நமக்கு ஒரு சமயம் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இன்னொரு சமயம், அளவு கடந்த வேதனையைக் கொடுக்கிறது. ஒரு பெண் ஒரு வாலிபனை மிகவும்...

தன்னை இழந்து சரணாகதி அடைந்து விடுகிறான்.

3
அருள்வாக்கு - சுவாமி சின்மயானந்தர்   ஓர் உதாரணமாக “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை எடுத்துக்கொள்வோம். ‘நமோ’ என்று சொல்லுவது ‘காலில் விழுந்து வணங்குகிறேன்’ என்பதைக் குறிப்பதாகும். காலில் விழுந்து வணங்குவது என்பது இரண்டு தத்துவங்களைக்...

அகமும் புறமும்

3
அருளுரை காஞ்சி மகாப்பெரியவர்   மனுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்துவிட்டாலும் போதவில்லை. அதனால்...