தேவி பிரசாத் இசையமைத்து, சமந்தா ஆடும் ஒரு பாடல் காட்சி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது

தேவி பிரசாத் இசையமைத்து, சமந்தா ஆடும் ஒரு பாடல் காட்சி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது
Published on

புஷ்பா தி ரைஸ்

லதானந்த்

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் செம்மரக் கடத்தலுக்குப் பயன்படும் லாரியின் ஓட்டுநராகக் கூலிக்கு வேலைசெய்யும் அல்லு அர்ஜுன் கடத்தல் தொழிலில் கடினமாக உழைத்து முன்னேறி, 4% பங்குதாரராக மாறுகிறார். பின்னர் மேலும் உழைத்து, சிண்டிகேட் எனப்படும்  செம்மரக் கடத்தல் கூட்டத்துக்கே தலைமைப் பொறுப்பையும் ஏற்கிறார். இந்த முன்னேற்றத்தில் பல ஆவேசச் சண்டைகளும், சில கொலைகளையும் அனாயசியமாகச் செய்து முடிக்கிறார். தற்காலத் திரைப்பட மரபுப்படி சமூக விரோதியான அவரை ஒரு பெண் விரும்பிக் கல்யாணமும் செய்துகொள்கிறார். இப்படி லேசில் சொல்லிவிட்டாலும் 3 மணி நேரம் இழு இழுவென்று இழுப்பதோடு, இது முதல் பாகம்தான் எனவும் அடுத்த பாகம் இனியும் வரும் என்றும் கிலேசப்படுத்திப் படத்தை முடித்துப் பார்த்தவர்களை வழியனுப்பி வைக்கிறார்கள்.

 தேவி பிரசாத் இசையமைத்து, சமந்தா ஆடும் ஒரு பாடல் காட்சி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. "ஊ அண்டவா மாவா" என்னும் அக்கட தேச 'வைர வரி'களுக்கு, "ஊ சொல்றியா மாமா" என்ற மொழிபெயர்ப்புப் பாடல்தான் அது! இதில் என்ன பஞ்சாயத்து என்கிறீர்களா? 'ஆண்கள் அனைவருமே சபல புத்தியுடன்தான் பெண்களைப் பார்க்கிறார்கள்' என்பது மாதிரி வாக்கியங்கள் பாடலில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு ஆண்கள் பாதுகாப்புச் சங்கங்கள் பலவும் எதிர்ப்புத் தெரிவித்துப் பரபரப்பைக்கொளுத்திப்போட்டிருக்கின்றன.

250 கோடி பட்ஜட் என்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது. காடுகளின் பின்னணியைப் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். செம்மரக் கூலிகளின் நிலையையும் ஆங்காங்கே படம் தொட்டுச் செல்கிறது.

சண்டைக் காட்சிகள் படு பயங்கர வேகம்! பல சமயங்களில் நமக்கே கும்மாங் குத்துகள் விழுவதைப் போல இருக்கின்றன. அல்லுவின் கண்கள் கட்டப்பட்ட நிலையில், அவர் பயங்கர ஆயுதங்களோடு எதிர்க்கும் அடியாட்களை துவம்சம் செய்வது ஆகச் சிறந்த காமெடி!

அவ்வளவு செலவு செய்து படமெடுத்திருப்பவர்கள், பல காட்சிகளில் பின்புலத்தில் தெரியும் தெலுங்கு எழுத்துக்களை அந்தந்த மொழிகளுக்குத் தக்கபடி மாற்றி அமைத்திருக்கலாம். பல பாத்திரங்களின் முகங்களிலும் அப்பட்டமான தெலுங்கு சாயல் தென்படுகிறது.

வில்லன்களின் கொடூரங்கள் குலைநடுங்க வைக்கின்றன. அக்கட தேசத்துக்கே உரிய 'ஜிலு ஜிலு' உடைகளோடு, காதைப் பிளக்கும் ஓசையுடன் பாடல் காட்சிகள் அவ்வப்போது வந்து செல்கின்றன.

பல இடங்களில் கூர்மையான எடிட்டிங் பாராட்ட வைத்தாலும், இடைவேளைக்குப் பிறகு ரொம்பவே ஜவ்வடிக்கிறது. குறிப்பாக அல்லுவும் படம் முடிவதற்குக் கொஞ்ச நேரம் முன்னரே என்ட்ரி கொடுக்கும் ஃபகத் ஃபாஸிலும் உரையாடும் காட்சிகள் சீரியல் தன்மையுடன் இருப்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

படம் முழுக்க தாடியுடன் ரவுடி கெட்டப்பிலேயே அல்லு வலம் வந்தாலும், இளமை அவரிடம் துள்ளுகிறது; இளசுகளின் மனங்களை அள்ளுகிறது. அல்லுவுக்குப் பின்னணி கொடுத்திருக்கும் குமார் என்பவரது குரல் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.

படத்தில் ஆந்திர காவல்துறை செம்மரக் கடத்தலைத் தடுக்கத் தொடர்ந்து போராடுவதாகவும், தமிழகக் காவல்துறை அதிகாரிகள் கடத்தலுக்கு உடந்தையாகி லஞ்சம் வாங்குவதாகவும் காண்பித்திருப்பது சற்றே நெருடல்தான்!

மொத்தத்தில் தெலுங்கு ரசிகர்களுக்கு 'புஷ்'; தமிழ் ரசிகர்களுக்கு 'புஸ்'!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com