0,00 INR

No products in the cart.

நல்ல கார்ட்டூனிஸ்ட் இடம் தமிழ்நாட்டில் இன்று காலியாகவே இருக்கிறது.

கார்ட்டூன்கள் பலவிதம் !

 

சுஜாதா தேசிகன்                                               

 

புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்டின் ஆ.கே.லக்ஷ்மண் அவர்களின் நூற்றாண்டு நினைவாக “இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கார்ட்டூனிஸ்ட்’’ (அப்படி ஒரு அமைப்பு இருக்கிறது !) கண்காட்சி ஒன்றைச் சென்ற மாதம் பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கார்ட்டூன் என்பதற்குத் தமிழில் கேலிச் சித்திரம் என்று சொல் எப்போது வந்தது என்று தெரியாது. அந்த ஆராய்ச்சியை விட்டுவிட்டு ’கார்ட்டூன்’ பற்றி கொஞ்சம் ஆராயலாம்.

ஆங்கில அகராதி கார்ட்டூனை “a simple drawing showing the features of its subjects in a humorously exaggerated way, especially a satirical one in a newspaper or magazine”  என்கிறது, அதாவது ”பத்திரிக்கை, செய்தித்தாள்களில் நகைச்சுவைக்காக மிகைப்படுத்தப்பட்ட எளிமை நையாண்டி படங்கள்”

இதில் ’எளிமை’ என்ற வார்த்தை மிக முக்கியம். பத்துக் கோடுகளுக்கு மேல் கேலிச்சித்திரம் வரைந்தால் அது  ரவி வர்மா ஓவியமாகிவிடும்! பார்த்த இரண்டாவது நொடி கேலிச்சித்திரம் புரிந்துவிட வேண்டும். அடுத்த இருபது நொடியில் சின்னப் புன்னகை வந்தால் மட்டுமே அது கார்ட்டூன். கார்ட்டூனையே உற்றுப் பார்த்தால்  3டி படம்.

நான் சிறுவனாக இருந்தபோது ஆர்.கே.லக்ஷ்மண் கேலிச்சித்திரம் ஒன்றைப் பார்த்திருக்கிறேன். கண் மருத்துவர் பெரிய உபகரணம் கொண்டு பேஷண்டை சோதித்துக்கொண்டு இருப்பார்… பேஷண்ட் “டாக்டர் உள்ளே இருப்பது ஃபாரின் பார்ட்டிகல் என்று சொல்லுகிறீர்கள். அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே!” என்பார். இன்னொரு கேலிச்சித்திரம் ஒரு கண்ணாடிக் கடையில் கடைக்காரர் “இதைவிடப் பெரிய கண்ணாடி வேண்டும் என்றால் இதுதான் இருக்கிறது என்று  கடைக்கு வெளியே மாட்டியிருக்கும் கண்ணாடியைக் காட்டுவார்.

நாமும் கார்ட்டூன் போடலாம் என்று ஸ்கூல் படிக்கும்போது கேலிச்சித்திரம் போட்டிருக்கிறேன். ஆனால் அதை மற்றவரிடம் காண்பிக்கும்போது “பிரமாதம்’  என்று கூடவே  ‘இடம் சுட்டி பொருள் விளக்கம்’ கேட்க, வரையத் தெரிந்தால் மட்டும் போதாது, புத்திசாலித்தனமும் வேண்டும் என்று புரிந்துகொண்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிட்டேன்.

ஊசி இருக்கும் சோபாவில்  உட்கார்ந்தால் ‘அந்த’ இடத்தில் சுருக்கென்று குத்துவது போல கார்ட்டூனில் நையாண்டி செய்யலாம். அதே சோபாவில் ஆணி வைத்தால் ’நீ ஓர் ஆணியையும் பிடுங்க வேண்டாம்’ என்று வீட்டுக்கு ஆட்டோ வரும் (அ) ’கோர்ட் கேஸ்’ என்று சுற்றுலா செல்ல வேண்டும்.

இன்று செய்தித்தாளில் வரும் பல கார்ட்டூன்கள் கீழே நெருக்கி நெருக்கி அந்தக் கால தாத்தாக்கள் இன்லாண்டு கடிதத்தில் மொத்தக் கதையும் எழுதுவது போல எழுதுகிறார்கள். இது பெரிய பாவம். இந்த ’சித்திர’வதைக்கு என்ன சித்திரவதை என்று கருட புராணத்தின் பின் இணைப்பில் சேர்க்கச் சொல்லிச் சித்திரகுப்தனுக்கு அஞ்சல் அனுப்பியிருக்கிறேன்.

நான் பெரிதும் மதிக்கும் கார்ட்டூனிஸ்ட் சிலரைப் பற்றிச் சில வார்த்தைகள். (கார்ட்டூனிஸ்டுகளுக்கு அதிக வார்த்தை பிடிக்காது!)

ஆர்.கே.லக்ஷ்மண் ‘காமன் மேன்’ எல்லோரும் அறிந்ததே. அவருடைய புத்தகங்களைத் தேடி வாங்கியிருக்கிறேன்.
(பார்க்கப் படம்)  அவருடைய கேலிச் சித்திரங்கள் பல  ‘நச்’ வகை.

தமிழ்நாட்டில் மாலி கோடு போட மற்றவர்கள் ரோடே போட்டார்கள். மாலியின் சாயல் பலருடைய காட்டூன்களில்  இன்றும் பார்க்கலாம்.

ஸ்ரீதர் ஹாஸ்யம் மிக அருமை. கிட்டதட்ட 30 வருடங்களுக்கு மேலாகத் தன் நகைச்சுவையை நமக்கு அளித்தவர்.

கோபுலுவின் ஓவியங்களுக்கு ஆக்சிஜன் கொடுத்தால் பேசிவிடும். முகபாவம் நேர்த்தியாக இருக்கும். இவருடைய ஸ்டிரிப் காமிக்ஸ் வகை நகைச்சுவைகளின் ரசிகன் நான்.

தாணு ஜோக்ஸ் இன்னொரு ரகம். அவரே வரைந்து நகைச்சுவையும் எழுதுவது என்பது மிகக் கஷ்டம்.  ராஜு கார்ட்டூன்ஸ், ஜோக் படிக்க ஒரு கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன்.  யாரையும் புண்படுத்தாமல் சிரிக்க வைப்பது என்பது மிகக் கஷ்டம். மதன் அதைச் சாதித்தார். ( இரட்டை வால் ரங்குடு நினைவிருக்கா ?) ’தமிழ்நாட்டின் லக்ஷ்மண்’ என்று அழைக்கப்பட்ட மதனுக்குப் பிறகு நல்ல காட்டூனிஸ்ட் இடம் தமிழ்நாட்டில் இன்று காலியாகவே இருக்கிறது.

மேலே கூறியவர்களின் புத்தகங்களில் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் முகம் சுளிக்காமல், ரசிக்க முடியும்.

இன்றைய காலகட்டத்தில் நல்ல கார்ட்டூன்களை வீட்டில் தொலைந்த மோதிரம் போலத் தேட வேண்டியிருக்கிறது. மற்றபடி  ‘வாஸ்கோடகாமா இன்னிக்கு இந்தியா வந்தா அவர்கிட்ட என்ன சொல்வாங்க? மாஸ்கோட வாமா ’ போன்ற நகைச்சுவை வாட்ஸாப்பில் வந்துகொண்டு இருக்கிறது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

தேடாதே !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   தேடாதே ! தேடினால் காணாமல் போவாய் ! வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன... சுஜாதாவின் ‘தேடாதே’ என்ற நாவலின் ஆரம்பிக்கும் வரிகள் இவை. மிளகு போன்ற சின்ன வஸ்துவைத் தேடிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்தவர்களால் நாம்...

1968ல் வந்த கல்கி தீபாவளி மலர் மூவாயிரம் ரூபாய் !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சில மாதங்கள் முன் பழைய புத்தகம் ஒன்றைத் தேடிய போது ஒருவர் ‘பழைய புத்தகங்களுக்கு என்றே ஒரு வாட்ஸ் ஆப்’ குழு இருக்கிறது, அதில் முயற்சி செய்யுங்களேன்” என்றார்....

பத்து விஷயம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் என் பள்ளி நண்பர்கள் சிலர் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து தினமும் சினிமா, நகைச்சுவை என்று சிறுவயதில் பேசிக்கொள்வது போலப் பேசிக்கொண்டு இருப்போம். சென்ற வாரம் ராக்கெட்டரி படமும், ராக்கெட்...

ராக்கெட்ரி சமாசாரம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ’ராக்கெட்ரி’ படத்தைப் பார்க்க நானும் என் பையனும் சென்றோம். எப்படிப்பட்ட படம் என்பதைப் பலர் விமர்சனம் செய்துவிட்டார்கள். கல்யாணச் சத்திரத்திலிருந்து தாம்பூலப் பையுடன்...