ஏன் இந்த அவசரம் ?

ஏன் இந்த அவசரம் ?
Published on

தலையங்கம்

தேர்தல் சீர்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. வழக்கம்போல் ஒரே நாளில் நீண்ட, பெரிய விவாதங்கள் இல்லாமல் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

தேர்தல்களில் ஒரு வாக்காளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களிப்பது போன்ற முறைகேடுகள் தடுக்க வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வழிவகைச் செய்யும் சட்டத்துக்கான மசோதா இது.

தேர்தலில் எந்தவிதமான முறைகேடுகளும் நடக்காமல் தடுப்பதற்கான வழிகளை மக்கள் வரவேற்பார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் "ஏன் ஆதார் எண்? ஏன் இந்த அவசரம்" என்ற கேள்வி எழுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் தேர்தல் ஆணைய விதிகளின்படி வாக்காளர் அட்டை புகைப்படத்துடன் கணினியில் பதிவு செய்யப்பட்டபின்தான் வழங்கப்படுகிறது. புதிய வாக்காளர் சேர்ப்பு விலாசம், வார்டு மாறுவது போன்றவற்றுக்கு விதிமுறைகள் விண்ணப்பங்கள் உருவாக்கப்பட்டு ஓரளவு சீராக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அடையாள அட்டைகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றுவதின் மூலம் மிக எளிதாக முறைகேடுகளைத் தவிர்க்க முடியும். அதை விடுத்து ஆதாருடன் இணைப்பதில் பல சங்கடங்கள் பிரச்னைகள் உருவாகும்.

இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் வலுவாக எதிர்க்கின்றன.  முக்கியமான காரணம் ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்ததால் அந்த மாநிலங்களில் 55 லட்சம் பேர் வாக்குரிமை பறிபோய்விட்டது. அதற்கு காரணம் "இரண்டு அட்டைகளிலும் ஒரே மாதிரி பெயர்கள் இல்லாததுதான்" என்று சொல்லப்பட்டது. அதாவது, ஆதார் அட்டை வழங்கப்பட்ட ஒரு குடிமகன், தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. மேலும் ஆதார் விவரங்கள்  "சமூகநல திட்டங்களைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது" என்ற உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் "மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பி விவாதித்து அதன்பின் சட்டமாக்க வேண்டும்" என்ற கோரிக்கை குரல் அங்கு எடுபடவில்லை. "நீதிமன்ற உத்தரவு, பாராளுமன்ற நடைமுறைகள், பொது மக்களின் எண்ணம்" என்று எதையும் இந்த அரசு மதிப்பதில்லை என்பதற்கு இந்த அவசரக் கோலம் மேலும் ஓர் உதாரணம்.

"தேர்தல்களில் எந்தவித தவறு நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது" என்று ஆளும்கட்சி தரப்புக் கூறுகிறது. ஆனால் இதையெல்லாம் விரிவாக விவாதித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளித்துக் குறைகள் இருந்தால் மசோதாவைத் திருத்தி அதை ஒருமனதாக நிறைவேற்றி இருந்தால் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய வலுசேர்த்து இருக்கும்.

ஆனால் இந்த அரசில் அப்படி ஒரு சூழல் இல்லை. உருவாகவும் வாய்ப்பில்லை என்பதுதான் வேதனை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com