0,00 INR

No products in the cart.

தேவ மனோகரி – 9

தொடர்கதை                                            ஓவியம் : தெய்வா

-கே.பாரதி

 ன்று இரவு தூக்கத்தின் நடுவில் ‘தேவா’ என்று யாரோ அழைப்பது போல் தோன்றியது.  சட்டென்று விழித்துக்கொண்டாள் மனோகரி. கரண்ட் கட்டாகியிருந்தது. ஃபேன் நின்று போய் லேசாக வியர்த்திருந்தாள். தூக்கம் முழுதாகக் கலைந்து விட்டது. படுக்கையை விட்டு எழுந்து ஹாலில் வந்து அமர்ந்தாள். அன்றைய நிகழ்ச்சிகளை அசைபோட்டது மனசு.

மயக்க நிலையில் டாக்டர் சிவநேசன் இருந்தபோதே வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டாள் மனோகரி.

”சிவநேசன் சாருக்கு காம்ப்ளிகேஷன்ஸ் எதுவுமில்லை மனோகரி. லேசான அதிர்ச்சிதான். அடிபட்ட இடத்தில் கொஞ்சம் வீக்கமும் வலியும் இருக்கிறது. இப்போதே ஊருக்குக் கிளம்புகிறேன் என்று பிடிவாதம் செய்கிறார். அவருக்குத் துணையாக காரில் மணிகண்டனும் போயிருக்கிறான்” என்று தகவல் சொன்னாள் லீலாவதி.

கல்லூரிக்கு வந்து காலெடுத்து வைத்தவுடன் இப்படியொரு எதிர்பாராத தாக்குதல் அவருக்கு நேர்ந்ததும்,  அவர் சரிந்து விழுந்ததும் மனோகரிக்குள் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியது.

என்ன நினைப்பார் நம் கல்லூரியைப் பற்றி என்று நினைத்தபோது அவமானமாக இருந்தது.

தேவா!

இவள் குடும்பத்தில் எல்லோருக்குமே இவள் தேவாதான். இவள் குடும்பம் குடியிருந்த மாலையம்மன் தெருவில் இவளைத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் தேவா என்றுதான் கூப்பிடுவார்கள். மனோகரி என்று எவரும் கூப்பிடுவதில்லை.

”எனக்கு ஏன் தேவமனோகரி என்று பெயர் வைத்தீர்கள்?” என்று அப்பாவிடம் ஒருநாள் கேட்டாள்.

”அது ஒரு அழகான ராகத்தோட பேரும்மா.”

  ”உங்களுக்கு கர்நாடகச் சங்கீதமே தெரியாது. அப்புறம் எதற்கு எனக்கு ராகத்தோட பேரையெல்லாம் வெச்சீங்க?”

”எனக்குத் தெரியாதுதான். ஆனா உங்க அம்மாவுக்குத் தெரியும். இந்தப் பேரை வைக்கணும்னு அவதான் ஆசைப்பட்டா ”

அம்மா என்று சொன்னதும் மனசுக்குள் ஒரு நெகிழ்ச்சி. அம்மா வைத்த பெயர் என்பதாலேயே அந்தப் பெயர் அவளுக்குப் பிடித்துப்போனது.

டாக்டர் சிவநேசன் மாலையம்மன் கோவிலில் வசித்த தொடர்பாக இருக்கக்கூடுமோ? யார் வீடு?

அப்போதுதான் வளர்ந்துகொண்டிருந்த புறநகர்ப் பகுதி அது. ஆங்காங்கே சில வீடுகள்தான் முளைத்திருந்தது. அதனால் அந்தப் பகுதியில் வசித்த எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும்.

எதையெல்லாம் மறக்க அவள் முயற்சி செய்து கொண்டிருக்கிறாளோ,  அதை நினைவூட்டும் வகையில் இப்போது எதிரில் வந்து நிற்கிறார். நின்ற வரையிலும் போதும். இனி அவரை அவள் சந்திக்க விரும்பவில்லை. யார் என்று தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை.

அவளுக்கு இப்போது ஆழ்ந்த தூக்கம் தேவைப்பட்டது. பாட்டிலைத் திறந்து ஆயுர்வேத மாத்திரை ஒன்றைப் போட்டுக் கொண்டாள். ஜக்கிலிருந்த தண்ணீரை தம்ளரில் ஊற்றிக் குடித்தாள்.

இந்த ஜக்கை கல்யாணமானப் புதிதில் அப்பாதான் கொண்டு வந்து வைத்தார். இதனுடன் வேறு சில பாத்திரங்களும் வீட்டு உபயோகப் பொருட்களும் கொண்டு வந்து இறக்கினார். கூடவே அண்ணனும் வந்திருந்தார்.

இவள் கணவன் ராஜனுக்குக் கடும் கோபம் வந்துவிட்டது.

”இதையெல்லாம் யார் கேட்டார்கள்? எனக்கு வாங்கிப் போடத் தெரியாதா? உங்கப்பா எதற்காக வாங்கி வர வேண்டும்?”

”எல்லாம் முறைப்படி செய்ய வேண்டியதுதானே மாப்பிள்ளை? நாங்கள் ஒன்றும் அதிகப்படியாகச் செய்யலையே?” என்றார் அப்பா.

”இந்த முறையெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. எப்போது உங்கள் வீட்டுப் பெண்ணை எனக்குக் கட்டிக் கொடுத்தீர்களோ, அதற்குப் பிறகு எல்லாம் என் பொறுப்பு. நீங்கள் போகலாம்”

விக்கித்து நின்றாள் மனோகரி.

அண்ணனுக்கு அவமானத்தில் முகம் சிவந்து விட்டது.

”நீங்க வாங்கப்பா போகலாம்” என்று அப்பாவை நகர்த்திக் கொண்டு வெளியேறினார்.

இரண்டு நாள் கழித்து சாதாரணமாகக் கேட்டாள் மனோகரி.

”பெண் வீட்டாரிடமிருந்து எதுவும் வாங்கக்கூடாது என்பது உங்கள் கொள்கையா என்ன?”

”ஓ,  அப்படிக்கூட ஒரு கொள்கை இருக்கிறதா? நான் அதையெல்லாம் யோசிக்கவில்லை. இந்த வாழ்க்கையில் எனக்கு நீ உனக்கு நான். அவ்வளவுதான் இருக்க வேண்டும். மீதிப் பேருக்கு நான் இடம் கொடுக்க மாட்டேன். வேண்டுமானால் இது என் கொள்கை என்று வைத்துக்கொள்.”

அப்படியானால் குழந்தைகளுக்குக்கூட இடமில்லையோ என்று கேட்க நினைத்து வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள் மனோகரி.

ராஜனின் சில சுபாவங்கள் அவளுக்கு விசித்திரமாகத்தான் இருந்தது.

மிகச் சிறிய வட்டம் அவனுடையது. நண்பர்கள் கூடக் கிடையாது. உறவினர்களையும் தூர நிறுத்தியிருந்தான். மனோகரி பிறந்த வீட்டுக்குப் போவதையோ, அங்கே தங்குவதையோ அவன் விரும்பவில்லை.

கல்யாணம் செய்து கொள்வது,  சம்பாதித்துச் சொத்து சேர்ப்பது என்ற அளவில் வாழ்க்கையைப் புரிந்துவைத்திருந்தான்.

சின்ன வயசிலேயே பெற்றோரை இழந்தவன். உறவினர்கள் சொத்துக்காக இவனைப் பந்தாடியிருக்கிறார்கள்.  சிறு வயது அனுபவத்தின் கசப்புகளை இன்னமும் சுமந்து கொண்டிருப்பவன்.

”அவன் வளர்ந்த சூழ்நிலை அப்படியம்மா. எங்கோ ஹாஸ்டலில் வளர்ந்திருக்கிறான். மனிதர்களை அனுசரிக்கத் தெரியவில்லை. மற்றபடி வேறு குறை எதுவும் சொல்ல முடியாதில்லையா?” என்று சமாதானம் சொன்னார் அப்பா.

இவள் உணர்வுகளை அவன் புரிந்துகொள்ளாதது ஒரு குறையாக அப்பாவுக்குத் தெரியவில்லையோ? தெரிந்திருக்கும். ஆனால் இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம் என்று அவரளவில் மனதைத் தேற்றிக் கொண்டுவிட்டார் போலிருக்கிறது.

அப்பா எடுத்துக் கொண்டது போல் அண்ணனால் அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. எங்காவது பொது இடங்களில் சந்திக்க நேர்ந்தால் ராஜனுடன் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

குடும்பத்துக்குள் கணவனுக்கும் உடன்பிறந்தவனுக்கும் நடுவில் ஏற்பட்டு விட்ட ஈகோ மோதலை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் மனோகரி.

அவளை எங்கே பார்த்தாலும் ‘தேவாக்கா’ என்று அழைத்தபடி ஓடிவரும் கோபாலுக்குதான் சூழ்நிலை புரியவில்லை. தன் இயல்பு போல் இவளிடம் வந்து இடித்துக் கொண்டு உட்காருவான். பள்ளிக்கூடக் கதைகளையெல்லாம் சொல்வான்.

ராஜனின் பார்வை இவளைச் சுட்டெரிக்கும். மனதைக் கல்லாக்கிக் கொண்டு விலகி நிற்பாள் மனோகரி.

வெறுப்பை உமிழும் அவன் பார்வைக்கு இப்படி அஞ்ச வேண்டியிருக்கிறதே என்று அவளுடைய தன்மான உணர்வு அவ்வப்போது இடித்துக் காட்டும்.

அண்ணனுக்குப் பிறந்த ஒரே பெண் குழந்தை தரணியைப் பார்த்த பிறகும்கூட ராஜனுக்கு மனம் இளகவில்லை. எல்லா குழந்தைகளையும் போல தரணி இருக்கவில்லை.

தட்டையான முன் நெற்றியும், பிதுங்கி நிற்கும் விழிகளுமாக வித்தியாசமாகத் தெரிந்தாள். அவள் வளர வளர ஒவ்வொரு செயலிலும் வித்தியாசம் தெரிந்தது. மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தை என்பது உறுதியாயிற்று.

மாலையம்மன் கோவில் தெருவிலிருந்து நான்கு தெரு தள்ளிதான் மனோகரியும் ராஜனும் குடியிருந்தார்கள். குழந்தையைத் தூக்கிக் கொண்டு அடிக்கடி கோவிலுக்கு வருவாள் அண்ணி. மனோகரியும் தவறாமல் அங்கே போவாள். மண்டபத்தில் உட்கார்ந்து தரணியை ஆசைதீரக் கொஞ்சுவாள்.

”இந்த ஆம்பளைங்க கிடக்கறாங்க தேவா. நாம பொம்பளைங்க ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்துக்கக்கூடாது” என்று ஆறுதலாகப் பேசுவாள் அண்ணி.

”உன் எம் ஃபில் படிப்புக்குத் தடைபோடக்கூடாதுன்னு நான் கேட்டுக்கிட்டதுக்கு மதிப்பு கொடுத்து உன்னைக் காலேஜுக்கு அனுப்பிக்கிட்டு இருக்கான். அதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா. கொஞ்சம் அனுசரிச்சுப் போம்மா.” என்று அறிவுரை சொன்னார் அப்பா.

விட்டு விலகிவிடலாமா என்று எல்லை வரை போன தருணங்கள் உண்டு. ஆனால் வயிற்றில் உருவாகிக் கொண்டிருந்த வாரிசு அவளைத் தயங்க வைத்தது.

பிறக்கப் போகும் குழந்தை ஒருவேளை அவன் மனோபாவத்தை மாற்றுமோ என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.

குழந்தைக்கு இரண்டு வயதான போது அவளுக்கு தனசேகரன் கல்லூரியில் வேலை கிடைத்தது.

”ஏதோ படிக்க ஆசைப்பட்டாய். படித்தாய். அதற்கென்று வேலைக்கெல்லாம் போக வேண்டுமா என்ன? எனக்கு இஷ்டமில்லை” என்றான் ராஜன்.

வேலை விஷயத்தில் விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக நின்றாள் மனோகரி. அவளைப் பொறுத்தவரை இது வெறும் வேலையில்லை. மூச்சுத்திணறும் இந்தக் கூண்டுக்கிளி வாழ்க்கையில் ஒரு கதவு திறப்பு. இந்தக் கதவைத் திறந்தே ஆக வேண்டும். அவளுக்காக மட்டுமில்லை. அவளுடைய குழந்தைக்காகவும் இது அவசியம்.

ஆரம்பத்தில் இவளுடைய பிடிவாதத்தைப் பார்த்து எரிச்சலடைந்தான் ராஜன். நாள் கணக்கில் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு விலகியது போல் இவள் நடந்து கொண்டதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஒரு மாதம் வரை சமாளித்துப் பார்த்தான். வேறு வழியில்லாமல் அவள் வேலைக்குப் போகச் சம்மதித்தான். அப்போதுதான் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டாள் மனோகரி.

தான் அவனைச் சார்ந்திருக்கவில்லை. அவன்தான் தன்னைச் சார்ந்திருக்கிறான்.சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகளைக் கூட அடக்கிவிடும் பயிற்சியாளர்கள் உண்டு. அந்தப் பயிற்சியாளர்களுக்குச் சில நுட்பங்கள் தெரிந்திருக்கும்.மனிதர்களைப் புரிந்து கொள்ளவும், அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும் அதேபோன்ற நுட்பம் தேவைப்படுகிறது. ஆனால், அதைக் கண்டுபிடிப்பதுதான் சுலபமாக இல்லை. இத்தனை வருஷங்களுக்குப் பிறகு அந்த நுட்பம் ஓரளவு தனக்குப் பிடிபட்டு விட்டதாக மனோகரி நினைத்தாள்.

ஜெயித்துவிடலாம் இந்த வாழ்க்கையை என்று அவள் தன்னம்பிக்கைக் கொண்டபோதுதான்  அந்த விபத்து நேர்ந்தது. அப்போது நவீனுக்கு நான்கு வயது. தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனான் ராஜன்.

(தொடரும்)

1 COMMENT

  1. தேவமனோகரி தொடர் விறுவிறுப்பாக செல்கிற அதே நேரத்தில் ஒரு செய்தியை உணர்த்துகிறது.பெண்களின் உறுதியின் உருகாத ஆணிலல்லை! உண்மைதானே!
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

குருடர்களின் யானை

1
ஒரு நிருபரின் டைரி - 21 - எஸ். சந்திரமெளலி லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம், “லுக் அவுட்” என்ற லயோலா கல்லூரியின் மாணவர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். நாங்கள் அதன் தமிழ்ப்...

தேவ மனோகரி – 21

1
தொடர்கதை                                               ...

இது கடவுளின் ருசியுள்ள நாடு

0
ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 21 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா   கொச்சியிலிருந்து அதிரப்பள்ளிக்குப் போகும் வழியில்தான் அந்த டீக்கடை இருக்கிறது. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகுமாரன் தம்பியின் ‘விளிச்சு விளி கேட்டு’ (அழைத்தாய் கேட்டேன்) என்ற...