0,00 INR

No products in the cart.

என் குற்றவுணர்வையும் வேதனையையும் மறைக்க முடியவில்லை

ஒரு கலைஞனின் வாழ்க்கையில் – 9

மம்முட்டி

தமிழில் கே.வி.ஷைலஜா

 கர்வம்

 

ப்போது படப்பிடிப்பிற்குச் சென்றாலும் விதவிதமான முகங்களைப் பார்க்கமுடியும். அருகில் வருபவர், தூரத்திலிருந்தே பிரியத்துடன் பார்ப்பவர், உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்பவர், இதிலெல்லாம் ஆர்வம் இல்லை என்று இருப்பவர்கள்…… இப்படி பலரும். நடிகர்களுக்கு முத்தம் கொடுப்பேன் என்று நண்பர்களிடம் பந்தயம் கட்டிவிட்டு பக்கத்தில் குதித்து விழும் வாலிபர்கள். நினைத்துப் பார்க்கவே முடியாத விசித்திரக் குணாம்சங்களோடு வருபவர்கள். ’எப்படியான ஆட்கள் இவர்கள்’ என்று பிரித்துணர முடியாததால் நான் எப்போதும் அவர்களிடமிருந்து இடைவெளியைத் தக்கவைத்தபடியே இருப்பேன். அது என் திமிராய்ப் பலரால் புரிந்துக் கொள்ளப்படுவதும் உண்டு. எதனாலோ அதை நானாகத் திருத்திக்கொள்ளவும் முயன்றதில்லை. ஆனால், வார்த்தைகளும் நம் செயல்பாடுகளும் தெளிவாகவும் அளந்துமே பிரயோகிக்கப்பட வேண்டியது என்பதை லொகேஷனில் ஒரு இளைஞன் எனக்குப் புரியவைத்தான்.

அன்று ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. சுற்றிலும் மக்கள் கூட்டம். வீட்டு உரிமையாளர் ஒரு பக்கத்தில் வசித்துக்கொண்டு மீதிப் பகுதியைப் படப்பிடிப்பிற்கு வாடகைக்குக் கொடுத்திருந்தார். படப்பிடிப்புக் குழுவிற்கு மிகவும் ஒத்துழைப்புக் கொடுக்கும் இந்த வீட்டின் உரிமையாளர் எதனாலோ என் மனதைக் கவர்ந்துவிட்டார். அதனால், நானும்  அவரை சுதந்திரத்தோடு என்னிடம் நெருங்க அனுமதித்திருந்தேன்.

ஐந்தாம்நாள் காலை. நான் படப்பிடிப்பிற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது இருபது வயதுள்ள வாலிபன் அறைக்குள் நுழைந்தான். அறிமுகப்படுத்திக்கொள்ள பேரைச் சொன்னபோது சிரித்தபடி அவனோடு கைகுலுக்கினேன். பிறகு நான் அவனைக் கவனிக்கவில்லை. ஆனால் அறைக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்தான்.

“என்ன?” – நான் கேட்டேன்.

“ஒண்ணுமில்ல”

“சரி. அப்படீன்னா பிறகு பார்க்கலாம்”

இப்படிச் சொன்னபிறகும் அவன் போகவில்லை. கொஞ்சநேரம் அமைதியாய் இருந்தேன்.

“எனக்கு மேக்கப் போடணும். கொஞ்சம் போறீங்களா?”

“நான் தொந்தரவு செய்யாம இங்க நின்னுக்கறேன் சார்” மிகவும் பவ்யத்தோடு அவன் சொன்னான்.

“அது சரிப்படாது. நீங்க கொஞ்சம் வெளியே இருங்க” என் குரல் உயர்ந்தது.

“நான் கொஞ்சம் பாத்துக்கறேனே. எந்தப் பிரச்னையும் பண்ணமாட்டேன்”

அவன் மிகவும் பவ்யத்துடனும் முகத்தில் லேசான சிரிப்புடனும் சொன்னான். எனக்குள், ஈகோ மம்முட்டி சட்டெனக் குதித்தெழுந்து வெளியே வந்தான்.

“வெளியேப் போகச் சொன்னது கேக்கலியா. போ மொதல்ல.”

அவன் பதில் சொல்வதற்கு முன்பே அவனைப் பிடித்திழுத்து வெளியில் தள்ளிக் கதவைத் தாளிட்டேன். கதவுக்குப் பின்னால் காத்திருந்த ஜனக்கூட்டம் இதைக் கவனித்திருக்கும்.

மாலையில் படப்பிடிப்பு முடிந்து அறைக்கு வந்தபோது வீட்டின் உரிமையாளர் வந்தார். அப்போதும் அந்தப் பையன் கதவருகில் பதுங்கி நின்றிருந்தான். வீட்டுச் சொந்தக்காரர் அவனை என்னிடம் அறிமுகப்படுத்தினார்.

“இவன் என்னோட மகன். திருவனந்தபுரத்தில் படிக்கிறான். உங்க படம்னா அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். உண்மையா அவன் சொல்லித்தான் இந்த வீட்டையே உங்க யூனிட்டுக்கு வாடகைக்குக் கொடுத்தேன். ஸ்கூலுக்குப் போகச் சொன்னா போகமாட்டேங்கிறான். உங்கப் பட ஷீட்டிங் முடியறவரை பாத்திட்டுத்தான் போவேன்னு சொல்றான்.”

அந்தப் பையனின் முகத்தில் அப்போதும் சிரிப்பு பாக்கியிருந்தது. எனக்குதான் அதை வலிய வரவழைக்க வேண்டியிருந்தது. பதில் சொல்ல வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தேன். ‘தெரியாம நடந்திடுச்சு’ என்று ஏதோ சொன்னேன். நான் பேசுவதற்கு முன்பே பையன் எல்லாவற்றையும் மன்னித்திருந்தான். ஆனால் என் குற்றவுணர்வையும் வேதனையையும் மறைக்க முடியவில்லை. வீட்டின் சொந்தக்காரனை நான் பலர் முன்னால் வெளியே துரத்தியிருக்கிறேன். அந்தப் பையனின் மனவேதனையை என்ன சொல்லி நான் தீர்க்க முடியும்? நடிகன் என்பதால் மட்டுமே அவனுடைய அப்பா அதைப் பொறுத்துக் கொண்டிருக்கிறார். சிறியதொரு அவமானப்படுத்தலைக்கூடத் தாங்காத நான், பூமியளவு பெரிதாய் அவமானப்படுத்தியிருக்கிறேன். எந்த வார்த்தைகளாலும் செய்த தவறை உறிஞ்சிவிட முடியாது. அவன் மன்னித்தாலும் என் உள் மனம் என்னை மன்னிக்காது.

‘நம்மிடமிருந்து போய்விட்ட செயலும், சொல்லும் திருப்பி எடுக்க முடியாதவை’ என்று அன்று எனக்குப் புரிந்தது. ஒரு நிமிட நேரம்
பொறுமையோடு இருந்திருந்தால் என்னால் அவரிடம் குற்றவுணர்வற்று உரையாட முடிந்திருக்கும்.

ஒவ்வொரு நிமிடமும் நம் கையிலிருந்து கடந்துபோய் கொண்டேயிருக்கிறது. அடுத்த விநாடியைச் சரியாகச் செய்வதென்பது மட்டுமே நம்மால் தீர்மானிக்கக்கூடியது. எதிர்காலத்தையோ, இறந்த காலத்தையோ கொஞ்சமும் நம்மால் கட்டுப்படுத்தமுடியாது. கையிலிருக்கும் நிமிடத்தை நன்றாகப் பிரயோகிக்க நம்மால் முடியவில்லை.

கலவரத்தில் நெருப்பூட்டுபவர் அந்த ஒரு நிமிடம் நிதானித்தால் கலவரமும், இழப்பும் ஏற்படுமா? இல்லையென்றே தோன்றுகிறது. நெருப்பு மூட்டிய பின் யோசித்து என்ன பயன்? நெருப்புமூட்டத் தீர்மானித்த ஒரு நிமிடம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.

செய்துவிட்ட காரியங்களைத் திருப்பி எடுக்கவோ, வேறொரு செயல்மூலம் அதை மாற்றிவிடவோ முடியாது. வார்த்தைகள் கையிலிருந்து தவறவிட்ட கல் தானென்று பெரியவர்கள் சொல்வார்கள். திருத்திக் கொள்ள வேண்டிய தவறைச் செய்யாமலிருப்பது என்பதுதான் சரியாய் வாழ்வதற்கான வழி.

எப்போதுமே நம் கைப்பிடியில் இருக்கும் அடுத்த விநாடியைச் செலவிடுவதில் சமநிலை பிழறாத யோசனையை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தற்கொலைக்கு முயற்சிப்பவர் தன்னுடைய அடுத்த விநாடியை என்ன செய்ய வேண்டுமென்று கொஞ்சம் யோசித்தால் காப்பாற்றப்படுவது ஒரு மனித வாழ்வு மட்டுமல்ல பல மனித வாழ்வுகள்.

நாம் தவறு செய்கிறோம், இனியும் செய்வோம். ஆனாலும் நம் வசமிருக்கும் அடுத்த நொடியை மனதின் ஈரம் படிந்த அமைதியின் உள் அறையில் பத்திரப்படுத்தி வைக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். வாழ்வின் அடுத்த நிமிடத்தை விரல் நுனியிலேயே வைத்திருக்க வேண்டும்.

(தொடரும்)

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

“அட! பேராண்டி! அவரோட மாப்பிள்ளையா நீ?

0
  ஒரு நிருபரின் டைரி - 20 - எஸ். சந்திரமெளலி   ஏ. நடராஜன்   என்னும்  அனுபவப் பொக்கிஷம்  திருச்சி வானொலி நிலையத்தில் திரு. ஏ. நடராஜன் (நண்பர்கள் வட்டாரத்தில் ஏ.என். சார் அல்லது தூர்தர்ஷன்  நடராஜன்)  பணிபுரிந்துகொண்டிருந்த...

தேவ மனோகரி – 20

0
தொடர்கதை                                               ...

அம்மாக்களின் எதிர்பார்ப்புகளைக் காப்பாற்ற வேண்டாமா?

0
  ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 20 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா கம்ப்யூட்டர்   படப்பிடிப்பிற்கு நடுவில் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது இயக்குநர் சத்யன்அந்திக்காடின் இரட்டைக் குழந்தைகளுக்கும் கம்ப்யூட்டரில் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொண்டேன். சத்யன் இதுவரை அவர்களுக்கு...