
சென்னைப் பல்கலைக்கழக அரங்கம் நிரம்பி வழிந்தது. மேடையில் டாக்டர் சிவநேசன் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
மனோகரிக்கு பிரமிப்பாக இருந்தது. இனியா சொன்னது சரிதான். இவருக்கு ஒரு மந்திரக்குரல் வாய்த்திருக்கிறது. ஆங்கில உச்சரிப்பு கேட்பவர்களை கட்டிப்போடுகிறது.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த லீலாவதியும் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். அவள்தான் வற்புறுத்தி மனோகரியை அழைத்து வந்திருந்தாள்.
இருவருமாக பிரின்ஸிபாலிடம் அனுமதி வாங்கிக்கொண்டு புறப்பட்ட போது கருத்தரங்கம் இன்னும் துவங்கியிருக்கவில்லை.
லீலாவதிக்கு பி.எச்.டி செக் ஷனில் ஏதோ வேலை இருந்தது. அதை முடித்துக்கொண்டு ஹாலுக்கு வந்தபோது கூட்டம் தொடங்கியிருந்தது. ஆங்கில இலக்கியத்தின் புதிய போக்குகள் குறித்த கருத்தரங்கம் அது.
சிறிய இடைவேளையில் காபி கோப்பையை ஏந்தியபடி சிவநேசன் வராந்தாவில் நின்று கொண்டிருந்தார். நிறையபேர் அவரை சூழ்ந்து கொண்டிருந்ததால் மனோகரியால் அவரிடம் பேசமுடியவில்லை.
தூரத்தில் இவளைப் பார்த்துவிட்டு கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவராகவே அருகில் வந்தார்.
"அற்புதமான உரை. நீங்கள் பேசிய விஷயங்கள் நவீன தமிழ் இலக்கியத்துக்கும் பொருந்தக்கூடியதாக இருந்தது" என்றாள் மனோகரி.
"தமிழில் நிறைய வாசிப்பீர்களா?"
"ஆமாம்"
"நானும் வாசிப்பதுண்டு. ஆனால் நிறைய வாசித்ததில்லை"
யாரோ பிஸ்கெட் ட்ரேயை கொண்டு வந்தார்கள்.
"எடுத்துக் கொள்ளுங்கள்" என்று மனோகரியைப் பார்த்து சொன்னார் சிவநேசன்.
பிஸ்கெட்டை எடுத்துக்கொண்டு அவள் சட்டென்று திரும்பிப் பார்த்தபோது அவர் இவளையே ஏற இறங்க தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தாள்.
ஒருவித சங்கட உணர்வு ஆட்கொள்ள அங்கிருந்து நகர்ந்துவிட வேண்டும்போல் இருந்தது.
லீலாவதி எங்கே போனாள் என்று கண்களால் தேடினாள். அவளுக்கு இங்கே நிறைய பேரைத் தெரிந்திருந்தது. எதிர் வராந்தாவில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள்.
இடைவேளை முடிந்து அடுத்த உரை தொடங்கியது.
"எனக்கு லேசாக தலைவலிப்பது போல் இருக்கிறது லீலா. நான் வீட்டுக்குப் போகிறேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் மனோகரி.
படிகளில் இறங்கி போர்டிகோவை அடைந்தபோது அங்கே சிவநேசன் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.
அவசரமாக அவரைக் கடந்து கார் பார்க்குக்குப் போக முனைந்தாள் மனோகரி.
"ஒரு நிமிஷம்" என்று இவளைப் பார்த்து குரல் கொடுத்துக்கொண்டே நெருங்கி வந்தார் சிவநேசன்.
"கிளம்பிட்டீங்களா தேவா?" என்று கேட்டுக் கொண்டே கார் வரை அவளுடன் சேர்ந்து நடந்தார்.
இதுதான் சமயம். கேட்டுவிட வேண்டியதுதான்.
"என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"சின்ன வயசிலேயே தெரியும். அப்போ நான் ஸ்கூல் ஃபைனல் படிச்சிக்கிட்டிருந்தேன். உங்க அப்பாதான் கணக்கு சொல்லிக்கொடுத்தார்."
மனோகரி ஊகித்தபடி மாலையம்மன் தெரு தொடர்புதான் இவர்.
"உங்க பிரதர் இப்ப எங்கே இருக்காரு?"
"நாக்பூரில் இருக்காரு"
"அவருகிட்ட சிவான்னு சொன்னா ஞாபகத்துக்கு வரும். நான் விசாரிச்சேன்னு சொல்லுங்க"
காரை நெருங்கியதால் அவரிடம் தொடர்ந்து பேசமுடியவில்லை. ஆனால் பேசிய வரையிலும் போதும் என்று ஆகிவிட்டது மனோகரிக்கு. ஏதோ ஒரு பாரம் மனசுக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டது.
தலையசைத்து விடைபெற்றுக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தாள்.
சிவா!
மனோகரிக்கு புகைமூட்டமாக ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது.
அந்த சிவாவா இந்த சிவநேசன்?
மனோகரியின் அப்பா மாலை நேரங்களில் தெருவிலிருக்கும் சில பையன்களுக்கு கணக்கு டியூஷன் எடுப்பார். வெளிவராந்தாவில் அதற்கென்றே ஒரு போர்டு இருக்கும். வாரத்திற்கு ஒரு பெட்டி சாக்குக் கட்டிகள் கரைந்துபோகும்.
சாக்கு தீர்ந்து போனால் 'தேவா' என்று குரல் கொடுப்பார்.
உள்ளே அலமாரியிலிருந்து ஒரு பெட்டியை உடைத்து அவர் கையில் கொடுப்பாள் மனோகரி.
மெல்லிய கொலுசு சத்தம் ஒலிக்க அவள் மின்னலைப் போல் வந்துபோனாலும் டியூஷன் பையன்கள் அத்தனைப் பேர் கண்களும் தன் மீதுதான் நிலைக்கிறது என்பதை அவள் உணர்ந்திருந்தாள். அவர்கள் யாரையுமே அவளுக்கு குறிப்பாக தெரியாது.
ஆனால் இந்த சிவாவைப் பற்றிய பேச்சு இவள் காதில் அவ்வப்போது விழும். அதற்குக் காரணம் சிவா இல்லை, அவனுடைய அம்மா.
டியூஷன் முடிந்து சிவா கிளம்புவதற்கு ஐந்து நிமிஷம் தாமதமானால் கூட தெரு வாசலுக்கு வந்துவிடுவார் அந்த அம்மா.
"அடேங்கப்பா!… இப்படி பிள்ளைய பொத்திப்பொத்தி வளர்க்கிறாங்களே!" என்று ஆச்சரியப்படுவார் அப்பா.
"அம்மான்னா அப்படிதான் இருப்பாங்க போலிருக்கு" என்று நியாயப்படுத்துவார் அண்ணன்.
சிவாவின் அம்மாவுக்கு நிறைய சொத்துகள் இருந்ததால் காலேஜ் படிப்பு முடித்தவுடனேயே சிவாவுக்கு கல்யாணம் நடந்துவிட்டது. அந்த கல்யாணத்துக்கு அப்பாவும் அண்ணனும் போய்வந்தது கூட மனோகரிக்கு நினைவில் இருந்தது.
மணப்பெண்ணின் தாய்மாமன் அப்பாவுக்கு சிநேகிதராம். அதனால் அந்தக் குடும்பத்தோடு இன்னும் நெருங்கிவிட்டதாக அப்பா சொன்னார். ஆனால் அந்த நெருக்கமே அவருக்கு பல சங்கடங்களைக் கொண்டுவந்தது.
சிநேகிதர் அடிக்கடி அப்பாவை தேடிக்கொண்டு வந்து முறையிட்டார்.
"கொஞ்சம் நீங்களாவது சொல்லக்கூடாதா அந்த அம்மாவுக்கு? எங்க வீட்டுப் பொண்ணு சிவாவைக் கட்டிக்கிட்டு ரொம்பக் கஷ்டப்படுது"
"அப்படி என்னதான் பண்றாங்க?" என்று கேட்டார் அப்பா.
"எல்லாம் அவங்க ஆதிக்கம்தான். அந்தப் பையன் பெண்டாட்டி எதைக் கேட்டாலும் அம்மா முகத்தைப் பார்த்துதான் பதில் சொல்றானாம். அப்படிப் பழக்கி வெச்சிருக்காங்க"
இதிலெல்லாம் தான் எப்படி தலையிட முடியும் என்று தயங்கினார் அப்பா.
மனோகரிக்குக் கல்யாணமான பிறகு அவள் வாழ்க்கையே நாலு சுவற்றுக்குள் முடங்கிப்போனது. அதன் பிறகு சிவா வீட்டுச் செய்திகள் எதுவும் அவள் காதில் விழவில்லை.
வீட்டுக்கு வந்து வெகுநேரம் சிவநேசனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள் மனோகரி.
அவர் கொடுத்த புத்தகத்தை வாசித்தோமே, அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்று உறுத்தியது.
அடுத்த முறை எங்காவது சந்தித்தால் அவசியம் அதைப்பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
பல சிந்தனைகளுக்கு நடுவில் இனியாவையும் தீர்க்கமாக கவனித்தாள்.
இந்தப் பெண் ஏன் இப்படி ஆகிவிட்டாள்? பழைய கலகலப்பு குறைந்துவிட்டதே? சூரியமூர்த்தியின் மரணம் இந்த அளவுக்கா அவளை பாதித்திருக்கும்?
இரவு நவீன் ஃபோன் செய்தபோது தான் சிவநேசனை சந்தித்ததைப் பற்றி அவனிடம் சொல்ல நினைத்தாள் மனோகரி. ஆனால் நீண்ட நேரம் பேசும் அளவுக்கு அவளுக்கு இன்று பொறுமையில்லை. தூக்கம் வேறு கண்களை சுழற்றியது.
"அம்மா, நான் சொன்னதைப் பற்றி கொஞ்சம் யோசிங்கம்மா" என்ற நவீனின் வார்த்தைகள் சடாரென்று கோபத்தைத் தூண்டியது.
"வாட் நான்சென்ஸ் ஆர் யூ டாக்கிங் நவீன்?" என்று படபடத்தாள். தொடர்பை துண்டித்தாள்.
அவளுக்கு லேசாக மூச்சிரைப்பது போல் இருந்தது. என்ன பிள்ளை இவன்? என்று ஆயாசமாக இருந்தது.
எரிச்சலும் கோபமும் மூண்டதில் கண்கள் துளிர்த்துக் கொண்டது. இனி எப்படித் தூங்கமுடியும்? வழக்கம்போல மாத்திரையை விழுங்கினாள் மனோகரி.
மறுநாள் கல்லூரி வராந்தாவில் ஹால் டிக்கெட் வாங்க மாணவர்கள் குழுமியிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் சுந்தரும் நின்றுகொண்டிருந்தான்.
வகுப்புத் தோழர்களுடன் பழையபடி அவன் கலகலப்பாக அரட்டை அடித்தபடி இருந்ததைப் பார்த்து மனோகரிக்கு மனசு நிறைந்தது.
பரீட்சைக்குப் பணம் கட்டமுடியாத ஓரிரு மாணவர்கள் இவளிடம் உதவி கேட்டு நின்றார்கள்.
வீட்டிலிருக்கும் இனியாவுக்குப் ஃபோன் செய்தாள். தன் அலமாரியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு வரும்படி சொன்னாள்.
மனோகரி சந்தேகித்தபடி இனியா சற்று குழம்பிதான் இருந்தாள். நவீன் அன்று பேசிய பிறகே இந்த குழப்பம்தான்.
ஹாஸ்டலுக்கு திரும்பிப் போகலாம் என்றால் மேடத்துக்கு என்ன விளக்கம் சொல்வது? நவீன் பேசியதையும் சொல்லமுடியாது. வேறு ஏதாவது சாக்கு சொல்லிவிட்டு கிளம்பிவிட வேண்டியதுதான்.
கல்லூரியிலிருந்து வந்த பிறகு பால்கனியிலிருந்த மூங்கில் நாற்காலியில் உட்கார்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தாள் மனோகரி.
"இங்கே பார்த்தாயா இனியா, இந்த அடுக்குமல்லி எப்படி பூத்திருக்கு பார்!"
இனியா அருகில் வந்து ஒற்றையாகப் பூத்திருந்த அடுக்குமல்லியை ரசித்தாள். மேடம் நல்ல மனநிலையில் இருப்பதுபோல் தெரிகிறது. இதுதான் சரியான சமயம். பேசிவிட வேண்டியதுதான்.
"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் மேடம். என் ஹாஸ்டல் பிரெண்ட்ஸ் எல்லாம் எப்ப திரும்பி வரப்போறேன்னு கேட்டாங்க."
மனோகரி அவளைக் கூர்ந்து கவனித்தாள்.
"நிறைய பேருக்கு பரீட்சை நடக்கிறதால ஹாஸ்டல்ல முன்னைப் போல இப்ப லைட்டை அணைக்கறதில்லையாம்."
"அதனால என்ன? நீ இங்கிருந்து கிளம்பணும்னு நினைக்கறியா? நேரடியாவே சொல்லு இனியா. நான் தப்பா நினைக்கமாட்டேன்"
இனியா தலைகுனிந்தாள். மேடத்தின் கண்களை நேருக்கு நேர் பார்க்க அவளுக்குத் தயக்கமாக இருந்தது.
அவள் கண்கள் லேசாக கலங்குவதை கவனித்து விட்டாள் மனோகரி.
ஏதோ நடந்திருக்கிறது. என்னவாக இருக்கும்?
"உண்மையைச் சொல்லு இனியா. இங்கே சமையல் வேலை பார்க்கும் பொன்னம்மா உன்னை ஏதாவது இன்ஸல்ட் செய்துவிட்டாளா?"
பதற்றத்துடன் தலையசைத்தாள் இனியா.
"இல்லீங்க மேடம். அவங்க ஒண்ணும் சொல்லலை."
"பிறகு யார்?"
"யாரும் எதுவும் சொல்லலை மேடம். நானாதான் ஹாஸ்டலுக்குப் போணும்னு நினைக்கிறேன்."
"நீ போவதைப் பற்றி எனக்கு அப்ஜக் ஷன் இல்லை. ஆனா காரணம் தெரியணும்."
வகையாக மாட்டிக் கொண்டாள் இனியா. மேடத்திடமிருந்து தப்பிக்க முடியாது என்று தோன்றியது.
"உங்க மகன் ஒருநாள் ஃபோன் செய்தார் மேடம். லேண்ட் லைனில். நான் தான் எடுத்துப் பேசினேன். என்னை இங்கே தங்கக்கூடாதுன்னு சொன்னாரு. ஆனா மறுநாளே என்னைக் கூப்பிட்டு ஸாரி சொன்னாரு."
மனோகரிக்கு அதிர்ச்சியில் விழிகள் விரிந்தது. ஒருநாள் நவீன் பேச்சுவாக்கில் இனியாவின் ஃபோன் நம்பரைக் கேட்டு வாங்கியது இப்போது நினைவுக்கு வந்தது.
அவன் இனியாவிடம் என்ன சொல்லியிருப்பான் என்று கூட இவளால் ஊகிக்க முடிந்தது. அந்த அளவுக்கு துணிந்துவிட்டிருக்கிறான். விவஸ்தை கெட்டுப்போய்விட்டது. மனோகரியின் மனம் பொருமியது.
(தொடரும்)