0,00 INR

No products in the cart.

‘புடின் போர் குற்றவாளி’

 

‘புடின் போர் குற்றவாளி’ என அமெரிக்கா அறிவித்தது பயன்படுமா?
-மதுரை குழந்தைவேலு, சென்னை.

! அப்படியெல்லாம்  ஒரு நாடு மற்றொரு நாட்டுத் தலைவரை அறிவித்துவிட  முடியாது. இதைத் தீர்மானிக்க  வழக்குத் தொடர வேண்டிய இடம் உலக நீதி மன்றம். பல்வேறு நடைமுறைகளுக்குப்பின் அங்கு வழக்கு
விசாரிக்கப்பட்டப் பின்னர் தீர்ப்பு வழங்கப்படும். இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு அந்நாட்டு அதிபர் ராஜ் பக்ஷே மீது இத்தகைய குற்றம் சாட்டப்பட்டு நடந்த வழக்கு நினைவிருக்கிறதா?

நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்படிருக்கிறாரே?
– ராசாத்தி, புதுக்கோட்டை

! பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து மதுரையில் நடந்த  கூட்டத்தில் பேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின்  நிர்வாகி ரஹ்மத்துல்லா நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். நீதிபதிகளுக்கு விபத்து ஏதாவது நடந்தால், அல்லது கொலையுண்டால் அதற்கு தான் பொறுப்பல்ல என்றும் சொல்லி இருக்கிறார்.இதற்காக அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். கொலை மிரட்டல் விடுப்பது அதுவும் நீதிபதிகளுக்கே விடுப்பது என்பது அபாயகரமான விஷயம். நேரடியாக வன்முறையை தூண்டுவது கண்டிக்கத்தக்க விஷயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால். இதையே கடந்த ஆண்டு  ஹரித்வாரில் நிகழ்ந்த தர்ம சபைக் கூட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்:

ஒரு இந்து சாமியார்கள் கூட்டமே அங்கே குழுமி இன ஒழிப்புக்கான கூக்குரலை விடுத்தது. எவ்வளவு முஸ்லிம்களை போட்டுத் தள்ள வேண்டும், அதற்கு எந்த மாதிரியான ஆயுதங்கள் தேவைப்படும், அந்த ஆயுதங்களை எங்கெல்லாம் சேகரித்து வைக்க வேண்டும், எத்தனை ஆட்கள் தேவைப்படும் என்றெல்லாம் பேசினார்கள். இதுவரை சுதந்திர இந்தியாவில் இன ஒழிப்புக்கான நேரடியான கூக்குரல் இந்த அளவுக்கு வெளிப்படையாக விடுக்கப்படவில்லை.

ஆனால் அந்தக்கூட்டத்தின் முக்கிய முகமான யதி நரசிங்காநந்தாவின் மேல் ஒரு எஃப்.ஐ.ஆர். கூட பதிவிட முடியவில்லை.

ஒரே ஒரு கோபப் பேச்சுக்கே ஒரு முஸ்லிம் தலைவர் கைதாகி விடுகிறார். மாபெரும் இன ஒழிப்புக்கு அழைப்பு விடுத்து, அதற்கான திட்டத்தையும் வகுத்துக் கொடுத்த இந்துத் தலைவர்கள் ஜாலியாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

? பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியால்  எப்படி இத்தகைய வெற்றியைப் பெற முடிந்தது?
-மனோன்மணி,  சிங்கப்பூர்

!பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் உக்கிரமாக நடந்த மால்வா பிரதேசத்திலிருக்கும் 69 இடங்களில் 66 ஐ வென்றிருக்கிறது.

ஜாதி, மதம், வயது, பாலினம், கல்வியறிவு ஆகிய கோடுகளைத் தாண்டி அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் ஆதரவளித்திருக்கின்றனர்.

அக்கட்சியின் முக்கிய வாக்குறுதிகள் மூன்றுதான். கல்வி, பொது மருத்துவம், மின் வசதி.

போராட்டங்களினால் அமைப்பு ரீதியான மாற்றம் வரும் என்கிற நம்பிக்கை இல்லாத சூழலில், அன்றாட வாழ்வே போரட்டம் என்றாகிவிட்ட சூழலில் அவர்கள் எதிர்பார்ப்பது இவற்றைத்தான். அதனால்தான்  ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் .

? விமானத்தில் சீக்கியர்கள்  கத்தி  எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களே ?
– உஷா வரதராஜன்,  கும்பகோணம்.

! சீக்கியர்களுக்கு விமானப் பயணத்தின் பொழுது கிர்பான் எனப்படும் கத்தியை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது சர்ச்சைக்குரியதாக ஆகிவிட்டிருக்கிறது. சீக்கியர்களாக இருப்பவர்களுக்கும் சீக்கிய மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் ஐந்து கடமைகளில் ஒன்று இந்தக் கத்தி. இதனை எப்போதும் தங்களுடனேயே வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பதினைந்தாம் நூற்றாண்டில் சீக்கிய மதம் தோன்றி வளர்ந்த போது முகலாய அடக்குமுறைகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டி இந்தக் கத்தியை கையில் வைத்துக் கொள்வது அவர்களுக்கு அறிவுரைக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சிதான் இன்றைக்கு சடங்கு ரீதியாக மாறி விட்டிருக்கிறது.

ஆனால் விமானத்திற்குள் கத்தியை எடுத்து செல்வதில்   அபாயம் பல மடங்கு இருக்கிறது. சீக்கியர்கள் எல்லாருமே நல்லவர்கள் என்று சொல்லி விட முடியாது. காலிஸ்தான் தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்திய வரலாறு எல்லாம் இருக்கிறது. மேலும் கத்தி எடுத்து செல்வது சீக்கியர்தானா என்று எப்படி உறுதி செய்வது? அவரிடம் இன்டர்வியூ நடத்தியா விமானத்தின்  உள்ளே விட முடியும்?

? தமிழக பட்ஜெட்டில்  அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு  உதவித்தொகை மாதம் 1000 ரூபாய் என அறிவித்திருக்கிறார்கள். ஆனால் தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன  பெண்களுக்கான உரிமைத்தொகைப் பற்றிய அறிவிப்பு இல்லையே ?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர் 

! நிதி பற்றாக்குறை காரணம் காட்டி  தேர்தல் வாக்குறுதியை தள்ளிப் போடுவது தவறு. ஆனால் இலவசங்கள் அளிப்பதை தள்ளிப்போட்டிருக்கும் அரசு    8-12 வரை அரசுப் பள்ளிகளில் பயின்று, கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1000/- வழங்கும் திட்டம்  என்ற -சிறந்த திட்டத்தை அறிவித்திருப்பதற்காக பாராட்டவேண்டும்.

ஒரு பெண்ணுக்கு கல்வி அளிப்பது ஒரு குடும்பத்திற்கே கல்வி அளிப்பதற்கு நிகரானது என்றார் காந்தி. இந்த திட்டத்தால்  கிராமப்புறங்களில் பெண் கல்வி உயரும். அரசுப் பள்ளிகளில் சேர்க்கை அதிகமாகும். உதவித் தொகை கிடைப்பதால், கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கையும் உயரும்! தேசீய அளவில்  4 வது  இடத்திலிருக்கும் தமிழகத்தில்   91.7% மாணவிகளைப் பள்ளிகளுக்கு செல்லுகிறார்கள் (குஜராத்துக்கு 21 வது இடம்)  இதை 100% ஆக்கும்  முதல்வரின் கனவாக எழுந்திருக்கிறது  இந்த திட்டம்.  ஒரு நாட்டின் மிக முக்கிய வளம் மனிதவளம் , அதற்கு செலவு செய்யப்படும் எதுவுமே பல மடங்காக நாட்டுக்கு திரும்பி வரும்.

ஹிஜாப் தடை, பகவத்கீதை பாடத்திட்டம் என்ன முரண்பாடு இது தராசாரே..?
– மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

! உங்களுக்கு முரண்பாடாகத் தோன்றும் இந்த விஷயம் ஆட்சியிலிருப்போருக்கு  ஒழுங்கு முறையாகத் தெரிகிறது.

யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாத ‘ஹிஜாப்’ போன்ற விஷயங்களை தடை செய்கிறார்கள். இந்து மதத்தின்  பகவத் கீதையை  எல்லோருக்கும்மான பாட திட்டத்தில் சேர்க்கலாம் என்கிறார்கள். ‘நம்மால் இந்த மக்கள் மீது எதையும் திணித்துவிடமுடியும்’ என்ற ஆணவப்போக்கு கொண்டவர்களாக  ஆட்சியாளர்கள் இருப்பதின் விளைவு இது

? ஒருவழியாக நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறதே?
– தமிழ் சினிமாநேசன் சேலம்

! மூன்றாண்டு சட்டப் போராட்டத்துக்கு பின்  ‘நீதிக்கு கிடைத்த  வெற்றி’ என்கிறார் பொருளாளர் கார்த்தி.  எங்கள் பதவிக் காலத்துக்குள் நடிகர் சங்க கட்டிடம் எழுந்துவிடும் என்கிறார். ‘அரசிடம் பேச வேண்டியது நிறைய இருக்கிறது’ என்கிறார் தலைவர் நாசர். பொறுத்திருந்து பார்ப்போம்.

‘காஷ்மீர் பைல்ஸ்’  படம் குறித்து?
-சொக்கலிங்க ஆதித்தன் ரோஸ்மியபுரம்

! சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் காஷ்மீரத்திலிருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது ஒரு கருப்பு பக்கம்.  அதை ஆவணமாகப் பதிவு செய்யதிருக்கும் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருப்பதில் கொஞ்சம் கூட உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், கொஞ்சம் உண்மையும், பெருமளவு ஒரு மதத்துக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி எற்படும் வகையில் பிரசாரப் படமாக்கப்பட்டிருக்கிறது.  பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்த படத்துக்கு பி.ஆர்.ஓ. போல பிரசாரம் செய்வதும்,  பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் வரி விலக்கு அளித்திருப்பதும் இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது.

சாகும் வரை ஆயுள் தண்டனை என்பது சரியா?
– சம்பத்குமாரி, சென்னை

! இந்திய தண்டனைச் சட்டங்களில் ஆயுள் தண்டனைக்கான காலம் என்பது. வரையறுக்கப்படவில்லை.  ராஜீவ் காந்தி வழக்கில் சுப்ரமணிய ஸ்வாமி ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுவதும்தான்  என வாதிடுகிறார். ஆனால், பல நூற்றுக்கணக்கான வழக்குகளில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த கைதிகளை விடுதலை செய்து விட்டிருக்கிறார்கள்.  இதனால் நீதியரசர்கள்  குற்றத்தின் கடுமையைப் பொருத்து இரட்டை ஆயுள் தண்டனை,  இறக்கும் வரை ஆயுள் தண்டனை என வழங்குகிறார்கள். சட்டப்பிரிவு திருத்தப்படும்வரை இதைத் தவிர்க்க முடியாது.

? குத்துச் சண்டை விளையாடும் அளவுக்கு வலிமையாக இருக்கிறேன் என்கிறாரே தலாய் லாமா?
– நெல்லை குரலோன் , நெல்லை

! புத்த மதத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன.  அவற்றில் பல பிரிவுகளில் அதன் புத்தபிக்குக்கள் கடுமையான பலவித மாந்தீரிக, தாந்தீரிக, அறிவாற்றல், ஆன்மிக பயற்சிகளுடன்  மல்யுத்தம், தற்காப்புகலை போன்ற  பயிற்சிகளையும்  பெற்றவர்கள்.  இதைப் பல நிலைகளில் பெற்று தேர்ந்தவர்கள்தான் அந்தப் பிரிவின்  மடாதிபதியாக முடியும் . அதனால் தலாய் லாமா இப்படிச்  சொன்னதில் வியப்பில்லை.

இறப்பு என்பது கொடுமையா? விடுதலையா?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

! எந்த இறப்பும் வருத்தத்துக்குரிய ஒன்றுதான்.  ஆனால் அது கொடுமையானதா விடுதலையா என்பது அது நிகழ்ந்த சூழலையும் காலத்தையும்   அணுகும் பார்வையையும் பொறுத்தது.  கொடிய குற்றவாளி என்கவுண்ட்டரில்  கொல்லப்பட்டால் அது மனித உரிமை ஆர்வலர் பார்வையில்  கொடுமை. ஆனால்  அந்த குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில் அது சமுகத்துக்கு கிடைத்த விடுதலை.

? உலக கவிதைத் தினத்தை கொண்டாடும் இந்தத் தருணத்தில் உலகின் மிகச் சிறந்த கவிதைகளை எழுதிய கவிஞர் பற்றிச் சொல்லுங்களேன்?
– குமார், நெய்வேலி

! நம் மனத்தின் மொழியில் எழுதப்பட்டிருக்கும்  அவனது கவிதைகள். எவருக்கும் எளிதில் புரியக்கூடியது. தன் கவிதைகளை நேசித்தாலும், மோசமாக வாசித்தாலும் சலனமுறாமல் தன் படைப்புகளைத் தொடர்பவன்.

இந்த அழகான உலகைப்படைத்த இறைவன் தான் அந்தக் கவிஞன்.

? ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் வாக்காளர்களுக்கு  என்ன பயன்கள் கிடைக்கும்?
– ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர்

ஒரு நாள் தேசிய விடுமுறை.

? கனவு காண்பது போல்  நிஜத்தில்  நடப்பது  சாத்தியமா?
– து.சேரன், ஆலங்குளம்

இது குறித்து உலகின் பல நாடுகளில் ஆய்வுகள் நடந்து கொன்டிருக்கின்றன.

நிகழ்ந்தவைகள், அடி மனத்திலிருக்கும் புதைந்திருக்கும் எண்ணங்கள் கனவாக வரும் வாய்ப்புகள் உண்டு. நிகழப் போவதை கனவாகப் பார்க்க முடியாது என்கிறார்கள் வல்லுனர்கள்.  இஎஸ்பி என்ற சக்திப் பெற்ற வெகு சிலரால் மட்டுமே  நிகழப்போவதைச் சொல்ல முடியும்.

ஆனால், அது கனவினால் அல்ல என்றும் சொல்லுகிறார்கள்.  சினிமாவில் காதலர்கள் கனவில் சுவிஸ்ஸர்லாந்து சென்று நடனமாடமுடியும், நிஜத்தில் அப்படி ஒரு கனவு கண்டால்கூட மறுநாள் பஸ்சில்தான் ஆபிஸ் போக வேண்டும்.

உலகில் மிக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து என்கிறார்களே?
– பரமசிவம், மானாமதுரை

! ஐ.நா., ஆதரவுடன் வெளியாகும் உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் அட்டவணையில் 2021ம் ஆண்டிலும் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 3 இடங்கள் முன்னேறி 136வது இடத்தில் உள்ளது.

தரவுகளின் சராசரியை அடிப்படையில் மகிழ்ச்சிக்கு 0 முதல் 10 வரையில் மதிப்பு வழங்குகிறது. மேலும் மகிழ்ச்சியைப் பற்றிய மக்களின் சொந்த மதிப்பீடு, ஜி.டி.பி., தனிப்பட்ட நல்வாழ்வு, தனிநபர் சுதந்திரம், ஊழல் மற்றும் சமூகத் தரவுகளின் அடிப்படையிலும் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆச்சர்யமாக கடன் தொல்லையில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு 121வது இடமும், விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் இலங்கைக்கு 127வது இடமும் தரப்பட்டிருப்பதுதான் இடிக்கிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கலைஞர் நினைவிடத்தில் கோபுரச்சின்னம்

0
  கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம் போன்ற அலங்காரம் வைத்து மரியாதை செலுத்திய இந்துசமய அறநிலையத்துறையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? - இரா. அமிர்தவர்ஷினி,  புதுச்சேரி - 605001 ! இந்து மத எண்டோன்மெட்...

என் புகழ் பாட அனுமதியில்லை

1
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்   ? “சட்டமன்றத்தில் என் புகழ் பாட அனுமதியில்லை. அப்படி யாராவது செய்தால் கண்டிக்கப்படுவர்” என்று முதல்வர்  ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே? - வெற்றி செல்வி திருமாறன், திருச்சி ! சட்டமன்றத்தின் முதல்...

விலங்குகளுக்கு தனி மொழி இருக்கிறதா?

2
? விளையாட்டு நகரம் உருவாகப் போவதாக அறிவித்திருக்கிறார்களே ? - சண்முக சுந்தரம், ஈரோடு ! ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் வெற்றிவாகை சூடுவதற்காக உலகத்தரத்திலான கட்டமைப்புகளுடன் சென்னை அருகே பிரமாண்டமான...

நமக்கும் இளையராஜாவுக்கும் இடையிலான உறவு அவரது இசை மட்டும்தான்.

2
? இளையராஜா,  அம்பேத்கரை பிரதமர் மோடியுடன் ஒப்பிடுகிறாரே ? - ஜெயராமன், தூத்துக்குடி ! மோடி புகழ் பாடும் ஒரு புத்தகத்துக்கு இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். அதில் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடும் பகுதிகள்...

‘கல்விக்கு’ என வழங்குவது அதைவிட நல்ல திட்டம்

1
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்   ? தி.மு.க. அரசால் “தாலிக்கு தங்கம்” திட்டம் கைவிடப்பட்டுவிட்டதா? - மகாலட்சுமி, திண்டுக்கல் ! ஏழைப்பெண்களின் திருமணங்களுக்கு உதவ கலைஞரால்  அறிவிக்கப்பட்ட மூதலூர் ராமலிங்க அம்மையார் திட்டம்தான் காலப்போக்கில் தாலிக்கு...