இம்மாதிரிக் கனவுகளோடு போன யாரும் திரும்பவில்லை

இம்மாதிரிக் கனவுகளோடு போன யாரும் திரும்பவில்லை
Published on

உலகக் குடிமகன் – 13

– நா.கண்ணன்

மூலக்கூற்றுவியலில் இரண்டு ரீடர்கள் இருந்தனர். ஒன்று கே.ஜே மற்றது ஆர்.ஜே! முழுப்பெயர் ஆர்.ஜெயராமன். இந்த ஆசான்களை இப்படிக் குறைத்து இனிஷியல் வைத்துக் கூப்பிடுவது வழக்கம். அவர்கள் கோபித்துக் கொள்வதில்லை. ஆர்.ஜே அமெரிக்க பாஸ்டனில் முதுமுனைவர் பட்ட ஆய்வு செய்தவர். இவர்கள் எல்லாம் தத்தம் துறையில் பெயர்போன அமெரிக்க ஆய்வாளர்களிடம் பயின்றவர்கள். குறிப்பாக ஆர்.ஜே எவ்வித கனரக இயந்திரங்களும் இல்லாமல் வெறும் பெட்ரி டிஷ் வைத்தே ஆய்வு செய்து கொண்டிருந்தார். கே.ஜேயின் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என்றாலும் கேட்க மாட்டார். கௌரவம். உயிரியல் துறையில் அவரவர் மெஷின்கள் அவரவர்க்கு எனும் போக்கு இருந்தது. இது ஆய்வு வேகத்தைக் குறைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். எந்த மாணவர்களும் பயன்பெரும் பொது இயந்திர சாலை என்பதில்லை.

சீனாவிலும், கொரியாவிலும் இத்தகைய பொதுப்பயன்பாடு இருக்கும் வண்ணம் பல்கலைக் கழகமே பல்வேறு இயந்திரங்களை வாங்கி பொது இடத்தில் வைத்து மாணவர்கள் பதிவு செய்து பயன்படுத்த வசதி செய்திருந்தது. ஆனால், உயிரியல் பள்ளியில் துறைக்குத்துறை கடும் போட்டி இருந்தது, ஒருவர் பொருளை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது எனும் எழுதாத விதி இருந்தது.

மூலக்கூற்றுவியல் ஒரே துறை என்றாலும் ஆர்.ஜெ. ஏழை, கே.ஜே. பணக்காரர் எனும் வர்க்க வேறுபாடு மறைமுகமாக இருந்தது. ஆர்.ஜெ. என்னிடம் மிக அன்பாகப் பழகுவார். மனம் விட்டுப் பேசுவார். சில நேரம் அங்கு நிலவும் போட்டி பற்றி வருத்தம் தெரிவிப்பார். நான் மெல்ல, மெல்ல உயர்ந்து எனக்கென்று ஒரு ஆய்வகம் உருவாக்கிய போது ஆர்.ஜெ. வந்து என்னைக் கலாய்ப்பார். "ஓய், நீர் இன்னும் மாணவர்தான். ஆனால் உனக்கென்று ஒரு ஆய்வகம் இருக்கிறது, சாதனங்கள் இருக்கின்றன. உம்மை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது" என்பார். எனக்குப் பெருமிதமாகவும், கூச்சமாகவும் இருக்கும். எப்போதும் ஆங்கிலேயர் போல் (உம். ஷெர்லாக் ஹோம்) கையில் ஒரு பைப் வைத்திருப்பார். அதோடுதான் ஆய்வகத்தில் உலாவுவார். என்னைப் பார்த்தால் ஜோக் அடிப்பார். "கண்ணன் இன்று வாகனப் பிராப்தி. வீட்டிலிருந்து ஆய்வகத்திற்கு இலவச கார் பயணம்" என்பார். அவர் வீட்டிலிருந்து ஆய்வகம் இரண்டு கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். தினம் நடந்துதான் வருவார். அமெரிக்காவில் வாழ்ந்து கார் வைத்துக் கொள்ளாத ஒரே இந்தியர் இவராகத்தான் இருப்பார். அமெரிக்கக் கனவுகளில் போனவுடன் கார் வாங்க வேண்டும், பின் ஒரு வீடு வாங்க வேண்டும், நன்றாக சம்பாதிக்க வேண்டும். இந்தியாவிலும் ஒரு வீடு வாங்க வேண்டுமென பல கனவுகள் இருக்கும். எனது சகா, சிவா சொல்லுவான், "கண்ணன்! நாம் அமெரிக்கா போய் கட்டு செட்டா இருந்து ஒரு ஐந்து லட்சம் ரூபாய் சேர்த்துவிட்டு இந்தியா வந்துவிட வேண்டும் என்பான்". அப்போது ஐந்து லட்சம் பெரிய காசு. ஆனால், இம்மாதிரிக் கனவுகளோடு போன யாரும் திரும்பவில்லை. அங்கேயே கிரீன் கார்டு, வீடு வாசல் என்று நிலைத்து விட்டனர்.

சரி, ஆர்.ஜெ. ஏன் கார் வாங்கவில்லை? தஞ்சாவூர்காரரான அவர் முதலில் சோம்பேறி. எதுக்கு கார் வாங்கி கஷ்டப்படனும் என்று நினைப்பவர். இரண்டாவது இவர் வாழ்ந்த பாஸ்டனில் பொதுப் போக்குவரத்து வசதி இருந்தது. ஆனால், பெரும்பாலான அமெரிக்க நகரங்களில் நம்ம ஊர் மாதிரி ரயில், பஸ், ஆட்டோ வசதிகள் கிடையாது. வீட்டிற்கு நாலு கார் நிற்கும். கணவன், மனைவி, பிள்ளை என அவரவர் தமது வாகனத்தில் பயணிப்பர். இந்தியா போன்ற விரிவான ரயில் வலை அங்கு கிடையாது. அங்குள்ள அம்டிராக் ரயில் சில தடங்களில் மட்டுமே பயணிக்கும். அதில் கூட தண்டவாளம் ஒரு கம்பெனிக்கும், ஓடும் ரயில் ஒரு கம்பெனிக்குமென்று இருக்கும். அமெரிக்கர்கள் இப்படிக் கார் ஓட்டுவதால்தான் அவர்கள் தேவைக்கென்று பெட்ரோல் வரவழைக்க வேண்டாத உலக அரசியல் செய்கின்றனர். அப்போது சொல்வார்கள் ஒரு குழந்தை பிறக்கிறது என வைத்துக் கொண்டால் அதற்கு இந்தியாவில் ஆகும் செலவைப் போல் 40 மடங்கு அங்கு அதிகம் என்று. 'வசதி' என்ற பெயரில் அவர்கள் கொண்ட தான்தோன்றித்தனமான வாழ்வியல் இன்று உலகசூழலை வெகுவாகப் பாதிக்கிறது. அவர்கள் நுகர்வைக் கவனித்தால் ஒரு உலகம் அவர்களுக்குப் போதாது, ஐந்து பூமி வேண்டுமென சூழலியலர் கணிக்கின்றனர். இப்படியானதொரு வாழ்வியலைக் கடைப்பிடிக்காமல் ஆர்.ஜெ. காந்தி போல் அங்கு வாழ்ந்திருக்கிறார். இந்தியாவிலும் அப்படியே வாழ்ந்தார்.

ஆய்வகம் செயல்படுவதைக் கவனிப்பது சுவாரசியமான ஒன்று. இந்தியாவை விட்டு வெளிநாடு போனால் அங்கு மிகக்கடுமையாக உழைப்பவர்கள் இந்தியர்களும், சீனர்களும்தான். அப்படி உழைத்து விட்டு இந்தியா வந்தவுடன் அக்கடா என்று ஒரு பேராசிரியர் ஆகிவிட்டு மாணவர்களை உழைக்க விட்டு அந்த ஆய்வின் பலனை முழுமையாக அனுபவித்து வாழ்பவர்கள்தான் பெரும்பாலோர். இதில் மாணவர்களுக்கு வரும் வாய்ப்பைக்கூட தம் சுயநலத்திற்குப் பயன்படுத்தும் பேராசிரியர்களுமுண்டு. இவர்களுக்கிடையில் மாணவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு தினம் ஆய்வகம் வந்து பரிசோதனை செய்து ஆய்வேட்டில் தன் பெயரில் மட்டும் வெளியிடும் தனித்துவமான விஞ்ஞானி ஆர்.ஜே. இவரது மாணவர்களும் இவருக்குப் போட்டியாக வேலை செய்பவர்கள்.

இப்படித்தான் இவரது மாணவர் ஜபார் இராக்கோழி போல் வேலை செய்துவிட்டு பகலில் ஆய்வகம் வராமல் இருந்தார். ஆர்.ஜெ. என்னிடம் வந்து, "கண்ணன்! இந்த ஜபார் பையனைப் பார்ப்பீரா? நான் அவரைப் பார்த்து இரண்டு வாரமாகிறது. அவரது ஆய்வு எங்கு செல்கிறது எனக் கண்காணிக்கவாவது நான் அவரைச் சந்திக்க வேண்டும். என்னை வந்து பார்க்கச் சொல்வீரா?" என்று என்னிடம் ஒரு சிட்டுக் கொடுத்தார். உயிரியல் பள்ளி இதுபோல் பல அதிசயங்கள் கொண்டது!

முனைவர் பட்ட ஆய்வு என்பது சில நிலைகள் கொண்டது. முதலில் தகுந்த கைடு அல்லது ஆய்வு ஆசானைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து, அவரோடு கலந்தாலோசித்து நல்லதொரு ஆய்வுத்தலைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் மாணவரை வழிகாட்டும் வல்லமையும், துறை அறிவும் ஆசானுக்கு இருக்க வேண்டும். பின் ஆய்வுத்தலைப்பை பல்கலைக் கழகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் குறைந்தது ஒரு வருடம் இந்த ஆய்வை எவ்வாறு எடுத்துச் செல்லப்போகிறோம் எனும் அணுகுமுறையை இதற்கு முன்னுள்ள உசாத்துணையுடன் நிருவ வேண்டும். அடுத்து அதை சோதித்துப் பார்க்க வேண்டும். அணுகுமுறை சரி எனில் ஆய்வைத் தொடர வேண்டும். ஆய்வின் முடிவை தேர்ந்த சஞ்சிகைகளில் வெளியிட வேண்டும். சில பல்கலைக் கழகங்களில் ஆய்வை முடிக்காமல் வெளியிடக் கூடாது என்ற சட்டமுண்டு. ஆனால், ஆய்வை நுண்மான் நுழை புலமுள்ள ஆய்வாளர்கள் அலசி தேர்ந்தெடுத்து சஞ்சிகையில் வெளியிட ஒப்புக் கொண்டால் அதுவே சான்றிதழ் ஆகிவிடுகிறது. எனவே அதை இணைத்து பட்டப்படிப்பு ஏட்டை வெளியிடும் போது பரிசோதிக்கும் பேராசிரியருக்கு வேலை எளிதாகி விடுகிறது.

நாங்கள் படித்த காலத்தில் எது சரி எனத் தீர்மானமாக முடிவாகாத நிலை. மானுடவியலில் தனித்தனி வெளியீடு என்றில்லாமல் முனைவர் ஆய்வை ஒரு நூலாக வெளியிடும் பழக்கம் இருந்தது. ஆனால், அறிவியலில் பரிசோதனைகள் செய்யும் போதே சுவாரசியமான விஷயங்கள் கிடைத்தால் அதை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். இதில் இரு நன்மைகளுண்டு. ஒன்று மாணவருக்கு ஒரு வெளியீடு என்பது தன்னம்பிக்கையை ஊட்டும். இரண்டாவது, படிக்கும் போதே வெளியீடுகள் வைத்திருந்தால் பட்டப்படிப்பு முடிந்த கையோடு அயலக ஆய்வகங்களுக்கு முதுமுனைவர் வாய்ப்புக்கோரலாம். எந்த ஆசான், வெளியீடுகளை ஊக்கப்படுத்துகிறாரோ அவரிடம் மாணவர்களுக்கு ஓர் ஈர்ப்பு வரும். அது ஆசானின் புகழை உயர்த்தும். எனவே, டி.ஜே.பாண்டியன் எனும் ஆசான், தனது மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு உடன் வெளியீடுகளை இணைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இதில் செனட் என்ன சொல்கிறதோ அதுவே வேத வாக்கென்று இருக்கும் நிர்வாகம் கொஞ்சம் குழம்பிப் போயிருந்தது. அறிவியல் முனைவர் பட்டவியல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்குப் புதிது. நான் சேர்ந்த போது அது இன்னும் பத்தாண்டுகளைத் தாண்டவில்லை.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com