– ஜெயராமன் ரகுநாதன் 
ஒரு காலத்தில் “லைஃப்பாய் சோப் இல்லாத வீடே இல்லை” என்னும் நிலை இருந்தது! வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக கடைகளில் வந்து அடித்தட்டு மக்கள் “லால்வாலி சாபூன்” (லால் என்றால் ஹிந்தியில் சிவப்பு) என்று கேட்டு வாங்கிப்போவது வழக்கம். ஆற்றங்கரையில் லைஃப்பாய் சோப் போட்டுக் குளித்துவிட்டு அதே சோப்பில் துணிமணிகளைத் துவைத்துக்கொண்டு போவார்கள். நல்ல தடிமனாக இருக்கும். ஒரு தரம் வாங்கினால் இரண்டு மூன்று மாதங்களுக்கு வரும் சல்லீசான சோப்பும் கூட!
இன்று ‘ஹிந்துஸ்தான் யூனிலீவர்’ என்றும், நான் பணிபுரிந்த எண்பதுகளில் ‘ஹிந்துஸ்தான் லீவர்’ என்றும், அதற்கு முன்பாக என் தாத்தா பணிபுரிந்த ஐம்பதுகளில் ‘லீவர் பிரதர்ஸ்’ என்றும் பெயர் கொண்ட கம்பெனியால் முதலில் இங்கிலாந்தில் 1895ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது இந்த லைஃப்பாய் சோப். முதலில் ‘கார்பாலிக் சோப்’ என்று வழங்கப்பட்ட இந்த சோப்பில் எண்ணெய் அல்லது கரி எண்ணெயிலிருந்து எடுக்கப்பட்ட கார்பாலிக் அமிலம் கலந்திருந்தது. இந்த லைஃப்பாய் சோப்பில் முதலில் ஃபெனாயில் வாசம் வரும்படி செய்திருந்தார்கள். ஏனென்றால் ஃபெனாயில் வாசம் அக்காலக்கட்டத்தில் சுத்தத்தின் அடையாளமாகக் கருதப்பட்டதாம்!
அமெரிக்காவில் இந்த சோப்பை விளம்பரப்படுத்த ஃபிலடெல்ஃபியா பேஸ்பால் டீமின் அடையாளமாக வைத்து பேக்கர் பவுல் என்னும் அவர்கள் விளையாடும் ஸ்டேடியத்தில் பெரிய பேனரில் “ஃபிலடெல்ப்ஃபியா டீம் வீரர்கள் லைஃப்பாய் சோப் உபயோகிப்பவர்கள்” என்று விளம்பரம் செய்தார்களாம். அதைக் கிண்டல் செய்ய ஒரு குறும்புக்காரன் “அதான் அவர்களின் உடல் நாத்தம் தாங்கவில்லை” என்று எழுதிவைத்துவிட, ரகளை!
உடல் துர்நாற்றம் குறித்த “body odor” என்னும் வார்த்தை முதன் முதலில் லைஃப்பாய் விளம்பரத்தில்தான் பயன்படுத்தினார்கள். லைஃப்பாயின் மிகப்பெரிய வெற்றிக்குப்பின்னும் பல கிண்டல்களும் கேலிகளும் இருந்தன. ஒரு டி.வி. நிகழ்ச்சியில், ’கெட்ட வார்த்தை சொல்லுகிறான்’ என்று அவன் அம்மா அவன் வாயை லைஃப்பாய் சோப் போட்டுக் கழுவி விட, அந்தப் பையன் அன்றிரவு கனவு காண்கிறான். அதில் உடல் துர்நாற்றம் ஏற்பட்டு அவன் வீட்டை விட்டு வெளியேறி எல்லாம் இழந்து பிச்சை எடுத்து தெருவில் அலையும்போது அவனைச் சந்திக்கும் அப்பா கட்டிக்கொண்டு அழுதவாறே “மகனே! லைஃப்பாய் சோப் உபயோகிக்காதே என்று எத்தனை முறை சொன்னேன்” என்பாராம்!
அந்தக் காலத்திலேயே “லைஃப்பாய் சோப் உடல் நலம் பேணுவதை ஒரு வழக்கமாக்கிவிடும்” என்று ஒரு எம்.டி. படித்த டாக்டரே சிபாரிசு செய்வது போன்ற விளம்பரங்கள் வரும் (பார்க்க படம்)
கிட்டத்தட்ட உயிர் காக்கும் அளவுக்கு
’உடல் நலம் பேணும் சோப்’ என்ற வகையில்; லைஃப்பாய் சோப்பை விளம்பரப் படுத்தினார்களாம். படத்தைப் பாருங்கள், கப்பலில் நடுக்கடலில் போகும்போது தத்தளிப்பவர்களைக் காப்பாற்றும் ரப்பர் வளையத்துக்கு லைஃப்பாய் சோப்பை உதாரணமாக காட்டிய விளம்பரம்!
சைப்ரஸ் மற்றும் டிரினிடாட் டொபாகொ நாடுகளில் மட்டுமே இப்போதும் லைஃப்பாய் சோப் கார்போலிக் ஆசிட் கலந்து தயாரிக்கப்படுகிறது.
எது எப்படியோ இந்தியாவைப் பொறுத்தவரையில் லைஃப்பாய் மற்றும் சன்லைட் சோப்புகள் பெற்ற விற்பனை வெற்றியும் சாதனையும் உன்னதமானவை. ஹிந்துஸ்தான் யூனிலீவரின் தயாரிப்பில் ஒரு காலத்தில் இவை இரண்டும் கோலோச்சிய பிராண்டுகள். நான் ஹிந்துஸ்தான் லீவரில் பணிபுரிந்த காலத்தில் கீழ்க்கண்ட உரையாடல் வாராவாரம் நடக்கும்.
“என்ன செல்வராஜ்! இந்த வார டார்கெட் முடிச்சியா?”
“இன்னும் இல்ல சார்!”
“அப்ப ஏன் மசமசன்னு நிக்கறே? ரெண்டு டஜன் கேஸ் லைஃப்பாய் சோப்ப கொண்டு போ. ஈஸியா வித்துடலாம். உன் டார்கெட்டும் பூர்த்தியாவும்!”
குறைந்த லாபம் ஆனால் அதிக எண்ணிகை என்னும் அளவில் இந்த லைஃப்பாய் சோப் கம்பெனியின் லாபத்திற்கு உறுதுணையாக இருந்தது.
தொள்ளாயிரத்து அறுபது எழுபதாம் ஆண்டுகளில் நீங்கள் வடஇந்திய கிராமங்களில் பயணம் செய்தால் வயல் வெளிகளினூடே தென்படும் முக்கால் வாசிச்சுவர்களில் லைஃப்பாய் சோப் விளம்பரம் பார்க்காமல் பயணம் செய்ய முடியாது. அந்த அளவுக்கு இந்திய கிராம மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த இந்த தடிமனான லைஃப்பாய் சோப் மற்ற பல விஷயங்களைப் போலவே கால மாற்றங்களினால் மறக்கப்பட்டு இப்போது என் போன்ற வயதான ஆசாமிகளின் பழைய ஆனால் இனிய நினைவாய் ஆகிப்போய்விட்டது!
இன்று இந்தியாவில் அந்த கார்பாலிக் ஆசிட் அடங்கிய லைஃப்பாய் சோப் இல்லைதான். ஆனாலும் சாதாரண மக்களின் தினசரி வாழ்க்கையில் அந்த சோப் மக்களின் சுகாதாரத்தையும் தாண்டி மனதில் இடம் பிடித்த சோப் என்றால்…..
வேறென்ன, மிகையாகாதுதான்!
Hundred percent true
.KALKI should facilitate toggle between english and tamil feature to submit comments in destop pc