0,00 INR

No products in the cart.

வருமுன் காக்க

தலையங்கம்

 

வருமுன்னர்க் காதாவான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

அரசன் மக்களை நாட்டிற்கு வரும் கேடுகளிலிருந்து  அவை வரும்முன் காக்க வேண்டும். அதுவே சிறந்த ஆட்சி என்கிறான் தெய்வப்புலவன். அப்படிக் காத்துக்கொள்ள வேண்டிய ஒரு நிலை  ஒன்றிய அரசுக்கு  இப்போது எழுந்திருக்கிறது.

கடந்த சில நாட்களில் நாட்டின்  உச்ச நீதிமன்றம் சில அதிரடியான, ஆனால் அவசியமான தீர்ப்புகளையும், கருத்துக்களையும் வழங்கிக் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக, மக்களின் எதிர்பார்ப்புக்களுக் கிணங்க  ஆட்சியிலிருந்தவர்கள் செய்யத் தவறிய விஷயங்களைச்  செய்ய ஆரம்பித்திருக்கிறது.

“பிரிட்டிஷ் காலத்தில் காலனிய ஆட்சியாளர்கள் போட்டு வைத்துப் போன பல்வேறு சட்டங்கள் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் காலாவதியாக்க வேண்டும்” என்ற குரல்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்து கொண்டிருந்தபோது, சுதந்திரத்திற்காக போராடியவர்களை அடக்கி ஒடுக்க கொண்டுவரப்பட்டதுதான் ‘தேசத் துரோக சட்டம்’. Sedition எனப்படும் தேச துரோக குற்றம். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக காலனிய அரசு கொண்டு வந்த  சட்டம் இது. காந்தி, நேரு என்று பல்வேறு தலைவர்கள் இதன்கீழ் சிறையில் இருந்திருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்கள் தங்கள் வசதிக்காக கொண்டுவந்த, அதுவும் 162 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட தேசத் துரோக சட்டத்தின் பிரிவுகள், இந்த சட்டம் இன்றுவரை வழக்கில் இருக்கிறது.  ஆளும் கட்சியினர் தங்களுக்கு  எரிச்சலூட்டும் நபர்கள் மேலெல்லாம் இந்த சட்டத்தை பிரயோகித்து தொல்லை கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இந்த வழக்குகளில் பெரும்பான்மையானவற்றுக்கு முகாந்திரமே கிடையாது. மோடியின் முதல் ஆட்சிக் காலத்தில் 326 தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டு இருந்திருக்கின்றன. தேசத்துரோக வழக்குகளை மாநில அரசுகள்தான் பதிகின்றன. ஆனால் மேற்கண்ட எண்ணிக்கைகளில் முக்கால்வாசி நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. ஆண்ட காலங்களில் பதிவானவை.

பதிந்த இத்தனை வழக்குகளில் இவற்றில் ஆறில்தான் குற்றம் நிரூபணமாகி தண்டனை கிடைத்திருக்கிறது. அதாவது நிரூபண விகிதம் 1.8%தான். ஆனால், தேசத்துரோக பிரிவின் கீழ் ஜாமீன் கொடுக்க முடியாது என்பதால் நிரூபணமோ இல்லையோ, தீர்ப்பு வரும் வரை கைதானவர்கள் பல்லாண்டு காலம் சிறையில் வாட வேண்டியதுதான்..

ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியும்  சமூக மாற்றங்களை விரும்பும் ஊடகங்கள், சமூக ஆதரவாளர்கள் எல்லோரும் எழுதியும் பேசியும்தான் வருவார்கள் அப்படி இயங்குவதுதான்  ஜனநாயகம்.  இப்படி இயங்குபவர்கள் வன்முறையை கையில் எடுக்காதவரை அதில் குற்றம் காண இடம் கிடையாது. யாராவது வன்முறையை கையில் எடுத்தால் அவர்களை தண்டிக்க பல்வேறு குற்றப்பிரிவுகள் ஏற்கெனவே உள்ளன. எனவே, இந்த தேசத் துரோக சட்டம்  ஜனநாயகத்தை மதிக்கும் நாட்டிற்கு  தேவையில்லாத ஒரு சட்டம்.

இதன் காரணமாகவே உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் மத்திய அரசை நெருக்கி வருகிறது. ‘தேசத் துரோக சட்டத்தை என்ன செய்யப் போகிறீர்கள்’ என்று கேட்டிருக்கிறது.  ‘மத்திய அரசு இது குறித்து ஆராய்ந்து வருகிறது,’ என்ற வழக்கமான பதிலை ஏற்காமல்  நாங்கள் முடிவே இல்லாமல் காத்திருக்க முடியாது. இதற்கு தெளிவாக ஒரு காலக்கெடு கொடுக்க வேண்டும்,’ என்று பெஞ்சு கண்டிப்பு காட்டி இருக்கிறது.

இதற்கு ஒன்றிய அரசின் சட்ட அமைச்சர் “லஷ்மண ரேகையை எவரும் கடக்கக் கூடாது” என்று பேசியிருக்கிறார் . அண்மையில் சில வழக்குகளில் “சட்டப் பிரிவுகளை நாடாளுமன்றம்தான் நீக்க வேண்டும்” என்று நீதிமன்றம் அறிவித்துவிட்ட பின்னரும் அரசிடம் இருந்து எந்த முன்னேற்றமும் வராமல் தானே நீக்கியிருக்கிறது. அதுபோல், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த சட்டம்  நீக்கப்படாவிட்டால் நீதிமன்றமே தலையிட்டு அவற்றை நீக்கிவிடும் நிலை எழுந்திருக்கிறது. யார் லஷ்மண் ரேகையை கடந்து விட்டார்கள் என்பதை அது  காட்டிவிடும்.

அப்படிச் செய்தால் அது நாடாளுமன்ற உரிமையில் நீதிமன்றம் தலையிடுவதாக, நீதிமன்ற வரம்புமீறாலாகி விடும் ஆபத்தும் இருக்கிறது.  அப்படி எதுவும் நடக்காமல் மத்திய அரசே சட்ட நீக்கத்திற்கான  முனைப்புகளை  உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

1
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...