0,00 INR

No products in the cart.

இது அன்பாலும் கருணையாலும் எழுந்த  அரண்மனை

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடர்களான சுவாமி ராமகிருஷ்ணானந்தர், சுவாமி பிரம்மானந்தர் ஆகியோரின் மகத்தான ஆசிகளாலும், ஸ்ரீ ராமசுவாமி ஐயங்கார், ஸ்ரீ ராமானுஜாச்சாரியார், ஏனைய துறவியர் மற்றும் பிறரின் அயராத முயற்சியாலும், ஒரு சிறு விதை துளிர்விட்டு வளர்ந்து பெரிய ஆலமரமாக. “ஏழைகளுக்கான அரண்மனை”, இன்று வளர்ந்துள்ள ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், மயிலாப்பூர், சென்னை.  அன்பாலும்  கருணையாலும்  எழுந்த இந்த அரண்மனையில்  வளர்ந்தவர்கள் பலர். கல்வி மட்டுமில்லாமல் நல்வாழ்க்கைக்கு அடித்தளம் பெற்றவர்கள் பலர் இந்த ஆண்டோடு  இந்த அரண்மனையின்  முதன்மை கட்டிடம் எழுந்து  நூறு ஆண்டுகளாகிறது,  இந்த இனிய தருணத்தில் இந்த அரண்மையில் வளர்ந்த இரண்டுமுன்னாள் மாணவர்கள் அதன் வரலாற்றைத் திரும்பிப்பார்கிறார்கள்

சுவாமி விவேகானந்தரின் வீரச் சிந்தனை மற்றும் எழுச்சிமிகு உரைகளால் ஈர்க்கப்பட்ட சென்னை இளைஞர்களில் ஒருவர் ராமு என்கிற ராமசாமி ஐயங்கார். 1905ஆம் ஆண்டு மயிலாப்பூர் குளக்கரையில் பசி, தாகத்தால் சோர்ந்து வழி அறியாமல் இருந்த நான்கு சிறுவர்களைக் கண்டு மனம் நெகிழ்ந்து சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் ஆசிகளுடன் ராமகிருஷ்ண மாணவரில்லத்தைத் தொடங்கினார்.

குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மற்றும் அவரது நேரடிச் சீடரான
ஸ்ரீ ராமகிருஷ்ணானந்தர் அவர்களின் அளப்பரிய கருணையினால் 17.2.1905 அன்று மூட்டப்பட்ட அடுப்பு இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருகிறது. ஏழு குழந்தைகளுடன் ஆரம்பித்த இல்லம் இன்று ஏறத்தாழ 650 மாணவர்களுக்கு “இல்லமாக உள்ளது.

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஆன்மீக மகனான சுவாமி பிரம்மானந்தஜி மஹராஜ் 1908 இல் சென்னைக்கு விஜயம் செய்தார். அவர் மாணவரில்ல விவகாரங்களைப் பற்றி விவரமாக அறிந்து கொண்டார். ஒரு நிரந்தர வசிப்பிடத்தின் தேவை விவாதிக்கப்பட்டபோது, சுவாமி பிரம்மானந்தர் அரண்மனைக்கு குறைவான எந்த தங்குமிடத்திற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. சுவாமி பிரம்மானந்தர் தொட்டதெல்லாம் தூய்மையானது மட்டுமின்றி, தூய்மைப்படுத்தும் சக்தியும் பெற்றதாக சசி மகராஜ் கூறுவார். ஆட்களும் பணமும் தானாக வரும் என்றும், அத்தகைய உன்னத முயற்சிகளுக்கு இறைவனுடைய அருள் மிகுதியாகக் கிடைக்கும் என்றும் ராமுவையும் மற்றவர்களையும் தனது அசாத்திய நம்பிக்கையால் தூண்டினார். புதிய கட்டிடம் கல்விக் கோவிலாகக் கருதப்பட்டது. மாணவரில்லம் என்பது வெறும் ஏழைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கான இடமாக மட்டுமல்லாமல், ஞானத்தின் தேவியான  அன்னை சரஸ்வதியை பிரதிஷ்டை செய்வதற்கும், அன்பான வழிபாட்டின் உணர்வில் அவர்களுக்கு சேவை செய்வதற்கும் ஒரு இடமாக கருதப்பட்டது.

ஜூலை 1915 இல், பண்ருட்டி மாவட்ட முன்சிஃப் ஸ்ரீ எஸ்.ஜி. ஸ்ரீநிவாசாச்சாரியார் மயிலாப்பூரில் மதிப்புமிக்க 15 கிரௌண்ட் வீட்டுமனையை இல்லத்திற்குக் கொடையாக அளித்தார். மேலும் 11 கிரௌண்ட் மனை ஸ்ரீ கே.வி.அடிகாவிடம் இருந்து பெறப்பட்டது. அப்போதைய மெட்ராஸ் அரசாங்கத்தில் பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் திவான் பகதூர் ஏ.வி.ராமலிங்க ஐயர், 36 அறைகள் இருக்க வேண்டும் என்று திட்டங்களை வகுத்தார். தரை தளத்தில் ஒரு மைய மண்டபமும் முதல் தளத்தில் ஒரு பிரார்த்தனை மண்டபமும் திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு அறையிலும் 3 சிறுவர்கள் தங்கும் வகையில், கட்டிடத்தில் 100 சிறுவர்கள் மற்றும் அவர்களின் காப்பாளர்கள் இருக்க வேண்டும். அப்போது இல்லத்து மாணவர் எண்ணிக்கை 30 கூட இருக்கவில்லை என்றாலும், மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்ட திட்டமிடப்பட்டது

மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 1,07,000/- (ரூபாய் ஒரு லட்சத்து ஏழாயிரம்). முதல் உலகப் போர் ஆரம்பித்திருந்தது. முதல் உலகப் போர் காரணமாக கட்டுமானச் செலவு அதிகரித்தது. இருப்பினும், அரசாங்கத்தின் உதவி உட்பட அனைத்து வகையான ஆதரவும் திட்டத்திற்கு உதவியது. இரண்டு அறைகள் தவிர, பொப்பிலி மகாராஜா தனது மகனின் நினைவாக “பொப்பிலி மருத்துவ வார்டுக்கு” ​​நிதியுதவி செய்தார். “பெத்தாச்சி பிரார்த்தனை கூடம்” என்பது பெத்தாச்சி செட்டியாரின் உன்னதத்தை நினைவூட்டுகிறது.

இது மற்ற விடுதிகளைவிட மாறுபட்டது.  இங்கு சுவாமி விவேகானந்தரின் அறிவுரைப்படி  மாணவர்கள் இறைவனாகவே கருதப்படுகிறார்கள். ஆகவே, இந்த இறைவனின் அம்சங்களுக்கு ஒருகோயில் அவசியமாயிற்று. அப்படி எழுந்ததுதான் ஏழைகளுக்கான  இந்த அரண்மனை. குருதேவர் அருளாலும் பல நல்ல உள்ளங்களின் கொடையாலும் ராமு மற்றும் பலரின் அளப்பரிய விடாமுயற்சியினாலும் முக்கியமாக ஸ்ரீ பிரம்மானந்தரின் அருளாசியாலும், கண்ணைக் கவரும்  அரண்மனை எழுந்தது.

1921ம் வருட அக்ஷயதிரிதியை (10.05.1921) அன்று, தொட்டதெல்லாம் தூய்மைப்படுத்தும் சக்தி வாய்ந்த சுவாமி பிரம்மானந்தர் ஆரம்பித்து வைத்த இந்த ஏழை மாணவர்களின் அரண்மனை நூறாண்டு கடந்து பீடுநடை போடுகிறது.

அன்னதானம், வித்யாதானம் மற்றும் ஞானதானத்தை மாணவர்களுக்கு வழங்குவதே இல்லத்தின்  நோக்கம். நம் நாட்டின் பண்டைய ஆன்மீக மற்றும் தார்மீக விழுமியங்களை நவீன கல்வி  முறையுடன் சேர்த்து பாரதீய பாரம்பர்ய குருகுல முறைப்படி வழங்கப்படுகிறது.

இந்த இல்லம், சுவாமிஜியின் சகோதர சீடர்கள், குருகுலக்கல்வி பற்றிய அவரது கருத்தை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட ஆரம்ப முயற்சிகளுக்கு ஒரு புகழ் பெற்ற உதாரணம். சென்னை மாணவர் இல்லம் என்பது சுவாமிஜியின் ஏராளமான கல்விக் கருத்துக்களை உணர முற்படும் ஒரு தனித்துவமான நிறுவனமாகும். இங்கு பயிலும் மாணவர்களை நல்ல குடிமகனாக மாற்ற எல்லா வகையிலும் முயற்சிக்கப்படுகிறது. தெய்வத் திருமூவரின், அதாவது ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ சாரதாதேவியார்,
ஸ்ரீ விவேகானந்தர் – ஆகியோரின் உபதேசங்களைத் தவிர, பகவான் புத்தர், சங்கரர், ராமனுஜர் ஏசுநாதர் போன்ற மகான்களைப் பற்றியும் எடுத்து சொல்லப்படுகின்றன. ஸ்ரீ ராமகிருஷ்ணர் தன் வாழ்க்கையில் நிரூபித்த  எல்லா உயிர்களிலும் உறையும் ஒரே இறைவனின் தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் எல்லாவற்றையும் கடந்து, எல்லாவற்றிலும் உள்ளிருக்கும் கடவுளை அறிவதே என்பதும் போதிக்கப்படுகின்றன. அன்னையாரின் அன்பு மொழிகளும், சுவாமி விவேகானந்தரின் புத்துயிர் தரும் ஆன்மீக ஆற்றலை உயர்த்தும் செய்திகளும், நமக்குள்ளே பொதிந்துள்ள தெய்வத் தன்மை, நலிந்தவர்களுக்குத் தொண்டு, தன்னம்பிக்கை, செய்யும் பணியே வழிபாடு போன்ற உயர்ந்த லட்சியங்களில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

விடிகாலையில் அமைதியான பிரார்த்தனை, யோகா, தியானம், வேத மற்றும் பிற பஜனைப்  பாடல்களைப் பாடுவதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்தக் கற்பிக்கப்படுகிறார்கள். சுகாதாரம் மற்றும் வளாகத்தை சுத்தம்செய்தல் முதல் வழிபாடு வரை இல்லத்தின் அனைத்து வேலைகளையும் தாங்களாகவே செய்ய மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப் படுகிறது. நிவாரணப் பணிகள், ஏழைச் சிறுவர்களுக்கு இலவசப் பயிற்சி போன்றவற்றில் அவர்களைப் பங்கெடுக்கச் செய்வதன் மூலம், கல்வி மனித நலனுக்காக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் இளம் மனங்களில் விதைக்கப்படுகிறது.

ராமு அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மை கொண்டவர். 1905 முதல் அவரது இறுதி மூச்சு வரை இல்லத்தின் முதல் செயலாளராக இருந்தார். மாணவர் இல்லத் திட்டத்தை வடிவமைத்து அதைச் செயல்படுத்திய மறக்க முடியாத மற்றொரு துணையாக இருந்தவர் ராமுவின் உறவினர் சி. ராமானுஜாச்சாரியார் (சுருக்கமாக ராமானுஜு). 1932 இல் ராமு காலமானபோது செயலாளராக பதவியேற்றார் ராமானுஜு.   மாணவர்கள் இல்லத்திற்குச் சேவையில்  தங்கள் உடல், பொருள், ஆவியையும்   முழுமையாக அர்ப்பணித்து சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் ஆசிகளை வெகுவாகப் பெறும் பாக்கியம் பெற்ற இரட்டை ஆன்மாக்கள் ராமு-ராமானுஜு. சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் ஆசிகள், ராமுவிற்கு திட வைராக்கியத்தை அளிக்கும் ஒரு ‘தூண்டுதல் சக்தியாக’ இருந்தது.

ராமகிருஷ்ண மிஷனுடன் இல்லம் முறையாக இணைக்கப்பட்ட பிறகு 1918 இல் “ராமகிருஷ்ண மாணவர் இல்லம் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லமாக மாறியது”.

இல்லத்தின் அன்றாட செயல்பாடுகள்:

  1. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழங்கும் நவீன கல்வியை சிறுவர்கள் பெற வேண்டும்.
  2. அவர்களுக்கு இந்தியாவின் பண்டைய பாரம்பரியம் பற்றிய அறிவும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் வேதங்கள், பகவத் கீதை மற்றும் வைணவ மற்றும் சைவ மரபுகளின் பக்தி பாடல்களைப் பாடுவதில் பயிற்சி பெற வேண்டும்.
  3. சமையல் தவிர, இல்லத்தின் அனைத்து வேலைகளையும் அவர்களே கவனிக்க வேண்டும்.
  4. வளாகத்தை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டும் – சிறுவர்களுக்கு உழைப்பின் கண்ணியத்தை புரிய வைக்க வேண்டும். இல்லப் பராமரிப்புடன் தொடர்புடைய அனைத்து துப்புரவு பணிகளையும் மாணவர்களே மேற்கொள்ள வேண்டும்.
  5. வருமானம் மற்றும் செலவு ஆகிய இரண்டிற்கும் கணக்குகள் கவனமாக பராமரிக்கப்பட வேண்டும்.

குருகுல இலட்சியத்தை முழுமையாக உணரவும், சேவை மற்றும் தியாகக் கொள்கைகளைப் புகுத்தவும், ஒரு உறைவிடப் பள்ளி தேவையாக இருந்தது. 1922ல் தனிக் கட்டடம் எழுப்பப்பட்டு ‘நாட்டுக்கோட்டை நகரத்தார் வித்யாசாலா’ என்று பெயரிடப்பட்டது.

ஆனால், 1946-ம் ஆண்டு கல்லூரி தொடங்குவதற்காக ஒப்படைக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில், விவேகானந்தா கல்லூரி 04.02.1947 அன்று ராமகிருஷ்ண மிஷனின் கட்டுப்பாட்டில் வந்தது.

1936 ஆம் ஆண்டில், ராமகிருஷ்ண நூற்றாண்டு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டு, இல்லத்திற்கு எதிரே உள்ள பணியாளர் குடியிருப்பில் அமைக்கப்பட்டது. இது உள்ளூர் ஏழைக் குழந்தைகளுக்குச் சேவை செய்கிறது.

1932 இல், தி.நகரில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியின் நிர்வாகத்தை இல்லம் எடுத்துக் கொண்டது. 1938 இல் சகோதரி சுப்புலட்சுமி அம்மாளால் தொடங்கப்பட்ட ஸ்ரீ சாரதா வித்யாலயா ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இந்த நிறுவனங்கள் தனி மையங்களாக மாறின.

இரண்டாம் உலகப் போரின் போது, ​​1942ல் உத்திரமேரூர் பகுதிக்கும், 1948ல் ஆத்தூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது. ராமகிருஷ்ண மிஷன் டெக்னிகல் இன்ஸ்டிடியூட், இப்போது ராமகிருஷ்ண மிஷன் பாலிடெக்னிக் கல்லூரியாக மாறி மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் மற்றும் கணினி பாடங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இவையும் உறைவிடப் படிப்புகள் இதற்காக தனி விடுதி கட்டப்பட்டது. பாலிடெக்னிக் கல்லூரியில் நவீன பணிமனை மற்றும் இதர வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் உள்ளது. இல்லத்தில் பின்பற்றப்படும் ஆசிரியரும் மாணவர்களும் ஒன்றாக வாழும் குருகுல முறை, மாணவர்களை வடிவமைப்பதில் சிறப்பான பலனைத் தந்துள்ளது.

இல்லத்தின் வளர்ச்சியில் Vivekananda-BPCL Skill Development Center ன் நிர்மாணம் ஒரு பெரிய மைல்கல். 2019- ஆம் ஆண்டு ரூ.15 கோடி செலவில்,35,600 Sq.Ft-ல் Bharat Petroleum Corporation Ltd.,- ன் CSR உதவியுடன் ஒரு Skill Development Centre நிறுவப்பட்டது. தொழிற் கல்வியில் இல்லம் ஒரு முன்னோடி. ஆரம்ப காலங்களிலேயே இதன் முக்கியத்துவத்தைப் அறிந்த ஸ்ரீ ராமு, இதற்கான விதைகளை விதைத்தார். 1925-ல் ஆரம்பிக்கப்பட்ட Industrial School படிப்படியாக முன்னேறி, இன்று DME, DAE, DCE வகுப்புகளில் ஏழை மாணவர்கள் பயன் பெருகின்றனர். மேலும் இவர்கள் skill training பெற்று அதிக திறமையோடு வேலைக்குத் தயார் ஆகின்றார்கள். இல்லத்து அனைத்து மாணவர்களுக்கும் நல்ல placement கிடைக்கின்றது.

1905 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, சுமார் 9000 ஏழை மாணவர்களை வளர்த்து, அவர்களை வெற்றிகரமான பொறியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்முனைவோர் போன்றவர்களாக மாற்றும் பாக்கியத்தை இல்லம் பெற்றுள்ளது. நம் மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு துறைகளில் தனித்துவம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இளமை பருவத்தில் இல்லத்தில் பயிற்சி பெற்றதால், தம்தம் சொந்த வழிகளில் சமூகத்திற்கு சேவை செய்கிறார்கள். உதாரணமாக, எங்கள் பழைய மாணவர்களில் பலர் ஏழைகளுக்கு இலவச கல்வி வகுப்புகளை நடத்துகிறார்கள். துன்பத்தில் இருப்பவர்களுக்கு நிதி உதவி செய்கிறார்கள், தன்னார்வ சேவையில் ஈடுபடுகிறார்கள். ஒரு மனிதனின் லாபம் மற்றொரு மனிதனுக்கு இழப்பு என்று கூறப்படுகிறது. ஆனால் தன்னலமற்ற சேவை என்பது ஒளிரும் மெழுகுவர்த்தி போன்றது. ஒரு விளக்கால், பல மெழுகுவர்த்திகளை ஏற்றி, உங்கள் பிரகாசத்தை இழக்காமல் ஒளியைப் பரப்பலாம். மற்றவர்களின் வெற்றியில் மகிழ்ச்சி அடைவதைவிட பேறு ஏதும் இல்லை.

இல்லத்திற்கு பல பெரியோர்கள் வருகை தந்து வாழ்த்தி இருக்கின்றனர். இதில்  அன்னி பெசந்த் 1914; மஹாத்மா காந்தி 1915; சரோஜினி நாயுடு1917; ராஜாஜி 1917; லார்ட் மற்றும் லேடி வில்லிங்கடன் 1922; டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் 1930; ஸர். ஜார்ஜ் ஃப்ரெடெரிக் ஸ்டான்லி-ஆளுனர் 1930; ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி மஹா சுவாமிகள், காஞ்சிபுரம் 1932; ஜவஹர்லால் நேரு 1936; ஏபிஜே அப்துல் கலாம் 2005 முதலியவர்கள் அடங்குவர்.

இல்லத்து மாணவர்களில் பலர் நாட்டிற்கு சிறந்த சேவை செய்திருக்கிறார்கள். அவற்றுள் சில:-

சுவாமி சர்வஞானானந்தர் மூத்த துறவி, ராமகிருஷ்ண மடம்
சுவாமி வந்தனானந்தர் மூத்த துறவி, ராமகிருஷ்ண மடம்
Prof. டி.ஆர்.சேஷாத்ரி விஞ்ஞானி – பத்ம பூஷன் 1963
ஏ.ஸ்ரீனிவாசன் NLC யின் சிறந்த பொறியாளர்
டி.எம்.பி.மஹாதேவன் பத்மபூஷன் 1967; முனைவர் – அத்வைதம்
Commander வி.எஸ்.பி.முதலியார் Royal Air Force; (U.K.) Indian Air Force;

சிறந்த பொறியாளர்,போர் வீரர்

Maj.Gen. எஸ்.பி.மஹாதேவன் போர் வீரர் –
சீதாராமன் தலைவர், தோஹா வங்கி, கத்தர்

 

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடர்களான சுவாமி ராமகிருஷ்ணானந்தர், சுவாமி பிரம்மானந்தர் ஆகியோரின் மகத்தான ஆசிகளாலும், ஸ்ரீராமசுவாமி ஐயங்கார், ஸ்ரீ ராமானுஜாச்சாரியார், ஏனைய துறவியர் மற்றும் பிறரின் அயராத முயற்சியாலும், ஒரு சிறு விதை துளிர்விட்டு வளர்ந்து பெரிய ஆலமரமாக “ஏழைகளுக்கான அரண்மனை”, இன்று வளர்ந்துள்ளது.

இந்த வலிமைமிக்க நிறுவனத்திற்கு பங்களித்த அனைவருக்கும் இல்லத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள், ஊழியர்கள், நிர்வாகத்தினர் அனைவரும், இந்தத் தருணத்தில்  தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றார்கள்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

1
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...