0,00 INR

No products in the cart.

ஜப்பானியர்தான் புதிய உலகின் ஏகலைவன்.

உலகக் குடிமகன் –  22

– நா.கண்ணன்

.என்.எஸ். மிக உற்சாகமாக என்னைக் கடை கண்ணிகளுக்கு அழைத்துப் போனார். ஆனால் எல்லாக்கடைக்குள் நுழையும் போது, “சுமிமாசேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். இது அலிபாபாவும் நாற்பது திருடர்களில் வரும் கடவுச் சொல் என்று நினைத்தேன். பின்னர்தான் அவர் விளக்கினார், ஜப்பானியர்கள் மிகுந்த பண்பாடு உடையவர்கள். யாருக்கும் தன்னால் சிறு தொந்தரவு கூட வந்துவிடக் கூடாது என்று கவனமாக இருப்பர். எனவே, தவறு செய்வதற்கு முன்னமே “மன்னித்து விடுங்கள்” என முன்மொழிந்து வீட்டிற்குள்ளோ, கடைகளுக்குள்ளோ நுழைவர். அதுதான் அந்தக் கடவுச் சொல் “சுமிமாசேன்”. நாம்தான் எந்த தவறும் செய்யவில்லை, பிறகு மன்னிப்பு எதற்கு என்றால், இறைவனிடம் “நான் வாக்காலோ, மனதாலோ, செய்கையாலோ தவறு செய்திருந்தால் மன்னிப்பாயாக!” என வேண்டுவது போல் இதுவும் என்றார். அட! எவ்வளவு நெகிழ்ச்சியான பண்பாடு. இப்படி மன்னிப்புக் கேட்பதோடு “முதுகையும் குனிந்து வணங்க வேண்டும்” என்கிறார்களே. நம் முன் நிற்பவர் வணங்கத்தக்கவர் என்றால் நன்றாகக் குனிந்து வணங்க வேண்டும்! அவரும், மரியாதைக்கு வணங்குவார். பணிவின் நிமித்தமும், ஆர்வக்கோளாறாலும் வெளிநாட்டினர் வணங்கிக் கொண்டே இருப்பர். யார் நிறுத்துவது என்று யார் தீர்மானிப்பது?

ஜப்பானிய வாழ்வின் மிக முக்கிய கடவுச் சொல்லை நான் கற்றுக் கொண்டேன். அடுத்து உணவு. நானொரு சாகபட்சிணி. காய்கறி மட்டும் உண்பவன். ஆனால் ஜப்பானியரோ நகர்வன, பறப்பன, திரிவன என எதைக் கண்டாலும் உண்டு விடுவர். இங்கே சாகபட்சிணி எப்படி வாழும்?

பார்த்தசாரதி வேறொரு துறையில் மேற்படிப்பு படிக்க வந்து சேர்ந்தான். அவனும் சாகபட்சிணி. நிரம்ப ஆசாரம் அனுஷ்டிக்கும் குடும்பம். எல்லோரும் பல்கலைக்கழக கேண்டீனில் சாப்பிட அமர்ந்தோம். அங்குதான் மாணவர்களால் காசு கொடுத்து சாப்பிட முடியும். பிற இடங்களில் விலை அதிகம். முதலில் மிசு சூப். அது சோயா பட்டாணியிலிருந்துதான் தயாரிக்கப் படுகிறது. ஆயினும் அதன் வாசனை நமக்குத் தெரியாதது. சாப்பாடு என்பதில் வாசனை முக்கியம். ”பசி கொண்ட நேரத்தில் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்” என்று எழுதுவார் வைரமுத்து. தாளிப்பு வாசனை போதும் நம் பசியைத் தூண்ட. ஆனால், மீசு சூப்பின் வாசனை பசியை அடக்கிவிடும். ஆனால், அதுவொரு தேசிய உணவு. எங்கு போனாலும் தப்பிக்க முடியாது. எனவே நாம் பழகிக்கொள்ள வேண்டும்!

சாரதி கஷ்டப்பட்டு உறிஞ்சிக் கொண்டிருந்தான். நான் அவனது முகக்கோணல்களை ரசித்துக் கொண்டிருந்தேன். அடுத்து அரிசிச்சோறு. ஆசியா முழுவதும் அரிசிதான் பிரதான உணவு. ஆனால் நமக்கோ அரிசிச் சோறில் அணை கட்டி, சாம்பாரை அதில் விட்டு வளைஞ்சு அடிக்க வேண்டும். ஆனால், அங்கோ, சின்னக் கப்பில் சோறு வரும். அதைக் கையைப் போட்டு பிசைந்து சாப்பிட முடியாது. சாப் ஸ்டிக் எனும் குச்சிவைத்துத்தான் சாப்பிட வேண்டும். குச்சியால் சோறை எப்படி உண்பது என்பதோர் கலை. ஜப்பான் வாழ்வில் கற்றே தீர வேண்டிய கலை. மலேசியாவில் கூட ஃபோர்க் கேட்டால் கொடுத்து விடுவர். ஆனால் ஜப்பானில் கிடைக்கவே கிடைக்காது. சாரதி, எப்படியோ குத்திக் கிளரி சோறை வாயில் வைத்தான். வெறும் சோறைத் தின்பது நம் வழக்கமில்லை. அப்படித்தின்றால், “ஏண்டா பக்கி போல் பறக்கிறாய். சாம்பாரில் நனைத்துச் சாப்பிடு” என்று சொல்லித் தருவார்கள். ஆனால் வெறும் வாயில் சாதத்தை உள்ளே தள்ள வேண்டும். அது உள்ளே போகாமல் வெளியே வரத் துடிக்கிறது. ஐயோ! ரசாபாசம் ஆகிவிடப்போகிறதே என்று எனக்குக் கவலை.

“எனக்கு வெறும் சோறு வேண்டாம். ஃபிரைடு ரைஸ் சாப்பிடறேன்” என்றான் சாரதி. “டேய், அதிலே சிக்கன் துண்டுகள் இருக்கும். உனக்கு ஆகாதே” என்றேன். சின்னச் சின்ன துண்டுகள்தானே என்றான். ஆம், ஆனால் போர்க் (பன்றியின் தசை) துண்டுகளும் கலந்து இருக்குமே. நீ என்று போர்க் சாப்பிட்டு இருக்கிறாய்? என்றேன். “வெறும் சோறுக்கு இது எவ்வளவோ தேவலை. பீன்ஸ், காரெட்டெல்லாம் இருக்கு” என்றான். சரி, உன் தலையெழுத்து என்று விட்டு விட்டேன்.

இரண்டு நாள் கழித்து லோகநாதன் போன் பண்ணினான். “கண்ணன் அவசரமா வாங்க! நம்ம சாரதிக்கு கைகால் எல்லாம் மரத்துவிட்டது. எழுந்திருக்க மாட்டேன் என்கிறான். பாத்ரூமுக்கு அழைத்துப் போக உதவி வேண்டும் என்றான்”. இது என்னடா, புதுப்பிரச்னை என எண்ணிக் கொண்டு, அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். நல்ல வேளையாக கொஞ்சம் ஆங்கிலம் பேசும் டாக்டர். ஜப்பானில் யாரும் ஆங்கிலம் பேசுவதில்லை. ‘நிஹோங்கோ’ எனும் ஜப்பானிய மொழிப் பரிட்சயம் இல்லாமல் அங்கு பயணப்பட முடியாது! டாக்டர் சோதித்துவிட்டு, உடலில் எப்பிரச்னையும் இல்லை. மனதில்தான் பிரச்சனை. இவர் மனது இவர் உடலை முடக்குகிறது என்றார். விளங்கிவிட்டது. இவனோ ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவன். முன்ன பின்னே அசைவம் சாப்பிட்டு இருக்க மாட்டான். முதல் முறையாக சாப்பிடும் போது மனது மிரண்டு விட்டது! எப்படியோ சமாளித்து அவனை ஹாஸ்டலுக்குக் கொண்டு வந்தோம்.

சாப்பிடாமல் பட்டினி கிடக்க முடியாது. சாரதி மீண்டும் ஃபிரைடு ரைஸ் சாப்பிட ஆரம்பித்தான். கொஞ்ச நாள் கழித்து மீண்டும் லோகாவின் போன். “கண்ணன், இப்போ சாரதி பேச மாட்டேன் என்கிறான். வாய் இழுத்துக் கொண்டது” என்பது சேதி. அதே டாக்டர், அதே பதில். இவர் மனது இவரை தண்டிக்கிறது, நான் என்ன செய்ய முடியும்? என்றார்.

சாரதி, என்ன பிரச்னை என்று கேட்டேன், அதாவது அவன் மீண்டும் பேசத் தொடங்கியபோது. அவர்கள் வீட்டிலே ஓர் பெண் தெய்வம் உண்டாம். அவள் வீட்டைக் காப்பது மட்டுமல்ல, தவறு செய்தால் தண்டிப்பாளாம்! சரிதான். குலதெய்வம் ஊரில்தானே இருக்கிறது. கடல் தாண்டி வந்து இவனை தண்டிக்கவா போகிறது? என்று எண்ணிவிடக்கூடாது!

டாக்டர் சொன்னார். இவருக்குக் கல்யாணமாகியிருந்தால் மனைவியை வரச் சொல்லுங்கள். வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டால்தான் இவர் பிழைப்பார் என்று சொல்லிவிட்டார். அடுத்த பிளைட்டில் நந்திதா வந்துவிட்டாள். ஆனால், அவர்கள் அங்கு அதிக நாள் தங்கவில்லை. கனடா போய்விட்டனர். எங்கள் எல்லோருக்குமே அதுவொரு பாடமாக இருந்தது. காசு சேமிக்கிறோம் என்று தனியாக அல்லல்பட வேண்டாமென்று தெரிந்தது. எல்லோர் மனைவிக்கும் ஜப்பான் வரும் வாய்ப்பை ஏற்படுத்தியவன் சாரதி!

மனைவி வந்தால் கூட வரும்போது ஒரு மாதத்திற்கு ஏதாவது கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய் என்று கொண்டுவர முடியும், அதன் பிறகு? மட்சுயாமாவில் எந்த இந்திய பலசரக்குக் கடையும் கிடையாது. அதற்கு கடல் தாண்டி கோபே போக வேண்டும். போனோம். கோபே தொன்றுதொட்டு ஒரு வணிகத் துறைமுகமாக இருந்திருக்கிறது. எனவே, அங்கு இந்திய வணிகர்கள் முன்னமே வந்து செட்டிலாகி இருந்திருக்கிறார்கள். அதில் பெரும்பாலும் குஜராத்திகள். அதில் பலர் ஜைனர்கள். உலகிலேயே உயிர்கொலை தவிர்த்த உணவுமுறையை வழிபடும் நோன்பாகக் கொண்டது சமணம். எனவே, கோபேயில் இந்திய உணவுப்பொருட்கள் கிடைக்கும். அதிகாலையில் மட்சுயாமிலிருந்து கப்பலில் ஏறிவிட வேண்டும். ஷிகோகூவிலிருந்து ஹோன்ஷு செல்ல வேண்டும். குறைந்தது இரண்டு மணி நேரமாகலாம். கப்பலுள் அமரும் நாற்காலிகள் இருக்காது. எல்லோரும் பாயை விரித்துப் படுத்துவிடுவர். இல்லை சப்ளாம் கொட்டி அமர்ந்திருப்பர். கிராமத்தில் வாழ்ந்த போது வீட்டில் சேர் இருக்காது. எல்லோரும் தரையில் அமர்ந்துதான் பேசுவர். நிச்சயதார்த்தம், கல்யாணம் என்று எல்லாமே தரையில்தான். திருப்பூவணம் செட்டியார் விடுதியில் அக்கா கல்யாணத்தின் போது தரையில்தான் விருந்து. இப்படிப் பாயில் உட்கார்ந்து பேசுவது ஜப்பானிலும் கொரியாவிலும் இன்றளவும் புழக்கத்தில் உள்ளது. என்ன, ஜப்பானியர் கோரைப் பாயைப் பின்னி தத்தாமி எனும் மெத்தையாக மாற்றிவிடுகின்றனர். வீட்டிலும் அதுதான், கப்பலில் போனாலும் அதுதான். அதிலே சுகமாகப் படுக்கலாம். தலைக்கு கல்லு போல இருக்கும் ஒரு தலையாணி. கேட்டால் அது கழுத்திற்கு நல்லது என்பார்கள். “நாம் தான் வெகுவாக மாறிவிட்டோம்” என்று தோன்றுகிறது. உண்மையானா ஆசிய வாழ்வு இந்திய எல்லை தாண்டி கிழக்கேதான் இருக்கிறது.

கோபேயில் சாமான்கள் வாங்கிவிட்டு, மதியச் சாப்பாடு சாப்பிட ஓர் இந்திய உணவகம் சென்றோம். பெயர் தில்லி. வட நாட்டு உணவுதான். மிக நன்றாக இருந்தது. எனக்குள் ஓர் ஆர்வம். இப்படியானதொரு இந்தியச் சாப்பாட்டை செய்தவர் யார்? அவரைக் காண வேண்டுமென்று. எங்கேயாவது குஜராத்திலிருந்து வந்திருப்பார் என எண்ணிக் கேட்டேன். உணவு பரிமாறும் ஜப்பானியர் மிகவும் கூச்சத்தோடு நீங்கள் சமையற்காரரையெல்லாம் பார்க்க முடியாது. இங்கு வழக்கமில்லை என்று சொல்லிப் பார்த்தார்கள். நான் விடுவதாயில்லை. கடைசியில் குள்ளமாய் ஓர் ஜப்பானிய இளைஞன் வந்தான். இவரா? இவரா இந்த ஒரிஜினல் இந்திய உணவைச் செய்தது? என்று கேட்டேன். கூச்சத்தோடு ஆம் என்றார். தாம் தில்லி போய் கற்றுக் கொண்டு வந்ததால் உணவகத்தின் பெயர் தில்லி என்றார். ஒன்று புரிந்தது. ஜப்பானியர் மனது வைத்து ஒரு காரியம் செய்ய வேண்டுமென நினைத்தால் ஒரிஜினலையும் விட உசத்தியாய் செய்து காட்டுவார் என்பது.

போர்டு கார்தான் அமெரிக்கப் புரட்சிக்கு வித்து. ஆனால் சில பத்தாண்டுகளில் ஹோந்தா அமெரிக்காவின் சந்தை முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டது. அதுதான் ஜப்பான்தனம். துரோணரிடம் பயில முயன்ற ஏகலைவன் போல். ஏகலைவன் குருவை மிஞ்சிய சிஷ்யன். ஜப்பானியர்தான் புதிய உலகின் ஏகலைவன். எதையும் விஞ்சும் ஆற்றல் பெற்றவர்கள்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

0
‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். பகுதி - 7 ரஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லக்...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி... பகுதி -10 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல்... 1964 ஆம் ஆண்டு வந்த தேவர் பிலிம்ஸின் "வேட்டைக்காரன் "படத்தில் கேவி மகாதேவன் இசையில் கவியரசு...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

 பாகம் - 4   -சுசீலா மாணிக்கம்   திருக்குறளின் நான்காம் அதிகாரம் 'அறன் வலியுறுத்தல்' "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது  பொன்றுங்கால் பொன்றாத் துணை" பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப்...

இனியில்லை கடன்!

4
சென்ற வார தொடர்ச்சி... சிறுகதை: நாமக்கல் எம்.வேலு ஓவியம்: தமிழ் அதற்கப்புறம் ராமசாமியிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை.  எப்போது பணம் கொடுப்பாய் என்று எப்போவும் போல சோமசுந்தரமும் போன் போட்டு கேட்கவுமில்லை.  ஆபரேசன் நல்லபடியாய் நடந்ததா,...

குரு அருள் திரு அருள்!

பகுதி -2 -நளினி சம்பத்குமார் ஓவியம்; வேதா அனைத்தையும் அருளிடும் குருவின் பார்வை சமஸ்க்ருதத்தில் சுபாஷிதம் அதாவது நல்ல அர்த்தங்கள் பொருந்திய வாக்கியம் ஒன்று உண்டு. குருவின் பார்வை என்பது 1011 பார்வைக்குக் கூட ஈடாகாது, அதற்கும்...