0,00 INR

No products in the cart.

ஒரு தீர்ப்பும் இரண்டு கருத்துக்களும்

 பார்வை

– ரமணன்

 

ண்மையில் உச்ச நீதிமன்றம்  ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும்  பேரறிவளானை விடுதலை செய்திருக்கிறது. இதில் சிலர் மகிழ்ச்சியடைகிறார்கள், சிலர்  வெறுப்படைகிறார்கள்.
மகிழ்ச்சியடைகிறவர்கள் “தாமதமாகவேனும் நீதி வென்றது”  என்ற கருத்தையும், வெறுப்புற்றவர்கள்  “முன்னாள் பிரதமரை கொன்றவரை விடுதலை செய்து வெளியில் விடலாமா? தீர்ப்பு தவறு”  என்ற கருத்தையும் முன் வைக்கிறார்கள். இதை ஒரு விவாதப்பொருளாக்கி ஊடகங்கள்  தங்கள் கருத்துகளையும் பரப்பிக்கொண்டிருக்கின்றன.

எல்லோருக்கும் கருத்து சொல்லும் உரிமை இருக்கிறது; சுதந்திரம் இருக்கிறது. ஆனால், சமூகத்தில் ஒரு கருத்தினை உருவாக்குமளவுக்கு  வலிமையுள்ள, சில ஊடகங்களும்,  சமூக ஆர்வலர்களும்  இந்த விஷயத்தில் எடுத்திருக்கும் நிலைதான் கவலைகொள்ளச் செய்கிறது.

“தண்டனைக் காலம் முடிந்துவிட்டது” என்று நீதிமன்றம் கருதி ஒரு குற்றவாளியை விடுதலை செய்கிறது. குற்றம் முறையாக விசாரிக்கப்பட்டு, பல்வேறு கட்டங்கள் தாண்டி, “முப்பது ஆண்டுகள் அவர் சிறையிலிருந்தது போதும்” என்று தேசத்தின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பு இது. சட்டத்தின் ஆட்சியையும், நீதிமன்றங்களையும் மதிக்கும்  நாம்  அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால், விடுதலையான குற்றவாளியை ஒரு ஹீரோவாக சித்தரிப்பதும்,  அவர் விடுதலைக்காக  எல்லா அரசியல்வாதிகளிடம்  விடாமல் மனுகொடுத்த ஒரே காரணத்துக்காக  அவர் தாயை ஒரு தியாகத் தாயாக போற்றுவதும்  வரும் தலைமுறைக்கு அதுவும் ராஜீவ் காந்தியின் கொலைப் பின்னணியை அறியாமலேயே வளர்ந்திருக்கும்  இளைய சமுதாயத்துக்கு தவறான செய்தியைத்தான் கொண்டு சேர்க்கும். பயங்கரவாதச் செயலில் பங்குகொண்ட ஒருவரை ஹீரோ ஆக்குவது நல்லதல்ல.  தமிழ் நாட்டுக்கு மட்டுமில்லை,  பேரறிவாளனுக்குமே அது நல்லதல்ல.

பலருக்கு (இந்தப் பலரில் சில ஊடகவியலாளர்களும் அடக்கம்)
ராஜீவ் காந்தி கொலையின் பின்னணி, புலனாய்வு, விசாரணை இந்த வழக்கின் பல்வேறு நீதிமன்ற தீர்ப்பு , ஜெயின் கமிஷன்  அறிக்கைகள் குறித்து  எதுவும் தெரியவில்லை.  இந்திய அரசியலை புரட்டிப்போட்ட இந்தக் கொலை குறித்து இந்த வழக்கு குறித்து எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள்,  எதையும் படித்ததாகவும் தெரியவில்லை. இந்த வழக்கை அந்தக் கொடுமையான நிகழ்வு நடந்த  நாளிலிருந்து தொடர்ந்து கவனித்தும், படித்தும் எழுதியும் வரும் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில்  என் பார்வை.  ‘கருணை அடிப்படையில் மட்டுமே  செய்யப்பட்ட ஒரு குற்றவாளியின் விடுதலையை அரசியலாக்கி, தமிழக அரசியல் கட்சிகள் அதில் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார்கள்.

அவர் “நிரபராதி” என்று சொல்லி நீதிமன்றம் வெளியே விடவில்லை. “தண்டனை போதும்” என்று சொல்லி வெளியே விட்டிருக்கின்றது. அதுதான் வழக்கின் தீர்ப்பு.

விடுதலைப்புலிகள் ராஜீவ் காந்தியை மட்டுமே கொல்லவில்லை.
சிரி சபா ரத்தினத்தை கொன்றார்கள். பத்மநாபாவை, அமிர்தலிங்கத்தை, பிரேமதாசாவை கொன்றார்கள். அதுலத் முதலி, திஸ்ஸ நாயகெ, விஜேரத்னே, லக்ஷ்மன் கதிர்காமர், குணரத்னே, தங்கதுரை, சண்முகநாதன், நீலன் திருச்செல்வம், யோகசங்கரி, யோகேஸ்வரன், சாம் தம்பி முத்து, என்ற இந்த அரசியல் வாதிகளின் பட்டியலைத்தாண்டி,  புலிகள் யாழ்ப்பாணத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அங்கே சர்வாதிகார ஆட்சி நடத்திய வருடங்களில் தங்களை எதிர்த்து நின்றவர்களை கொன்று குவித்தவர்களின் பட்டியலில் ஊடகவியலாளர்கள், போலீஸ், ராணுவ அதிகாரிகள், மதகுருமார்கள், தன்னார்வலர்கள் அடக்கம்.  இவர்கள் கொலை செய்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும்.

இந்தப் புலிகளின் களப்பணியாளரான சிவராசனின் நெட் ஒர்க்கில் பேரறிவாளன் இருந்ததும், அவருக்கு உதவியதும் வழக்கில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவரைத்தான் இன்று உச்ச நீதிமன்றம்,  அரசியலமைப்பு சட்டம் அதற்கு  அளித்திருக்கும் தனி உரிமையைப் பயன்படுத்தி விடுதலை செய்திருக்கிறது.  இதைத் தெளிவாக ஊடகங்கள் பேச வேண்டும்.  “எந்த அரசியல் கட்சியும்  இந்த விடுதலைக்கான முயற்சிகளை  நாங்கள்தான் செய்தோம்.  இல்லையில்லை  ஆதியில் நாங்கள்தான் செய்தோம்” என்று உரிமை கொண்டாடிக்கொள்ள முடியாது. ஒரு தண்டனைக் கைதி தன் முயற்சியால்  நீதிமன்றங்களின் கதவைத் தட்டி பெற்ற வெற்றி. இதற்கு யாரேனும் உரிமை கொண்டாடிக்கொள்ள முடியும் என்றால் அது
உச்ச நீதிமன்றம் மட்டுமே.

கம்பீரமான உருவமும்,  அழகான முகமுடைய  ராஜீவ் காந்தியை  சக்தி வாய்ந்த மனித வெடிகுண்டால் தாக்கப்பட்டு உடல் சிதறி கிடக்கும் அந்தப் படங்களை இன்று பார்த்தாலும் எவருக்கும்  மனம் பதறும்.

அந்த   குண்டு வெடிப்பில்  அவருடன் தர்மன், காவலர் சந்தானி பேகம், மகளிர் காங்கிரஸ் தலைவர், ராஜகுரு, காவல் ஆய்வாளர், சந்திரா, மகளிர் காவலர், எட்வர்ட் ஜோசப், காவல் ஆய்வாளர், கே.எஸ்.முகமது இக்பால், காவல்துறைக் கண்காணிப்பாளர், லதா கண்ணன், மகளிர் காங்கிரஸ் உறுப்பினர் கோகில வாணி, லதா கண்ணனின் பத்து வயது மகள், டேனியல் பீட்டர், பார்வையாளர், லீக் முனுசாமி, காங்கிரஸ் பிரமுகர் சரோஜா தேவி,
17 வயது கல்லூரி மாணவி, பிரதீப் கே.குப்தா, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பாளர், எத்திராஜூமுருகன், காவலர் ரவிச்சந்திரன், கமாண்டோ வீரர் ஆகியோரும் இறந்தனர்.  இவர்களும் தமிழர்கள்தான், இவர்களுக்கும்  அற்புதமான தாய் இருக்கிறார்கள், அவர்களில் பலரும் இறந்தவர்களின்  வாரிசுகளுக்கு வாழ்வாதாரம் கேட்டு மனுக்கள் கொடுத்து அலைந்து  திரிந்து தோற்றிருக்கிறார்கள்.  ஊடக வெளிச்சங்கள் அவர்கள் மீது பாய்ந்து தியாகத் தாய்களாக காட்டியதில்லை.  அரசியல் கட்சிகள் அவர்களுக்காக போராட்டங்கள் நடத்தியதில்லை.

இன்று அரசியல் கட்சி தலைவர்கள் பேரறிவாளனுக்கு வாழ்த்துச் சொல்லுகிறார்கள். அது அவர்கள் உரிமை. ஆனால், முன்னாள் பிரதமர் படுகொலையில் குற்றம் உறுதியாகி சிறையில் இருந்த ஒருவர்  கருணையின் அடிப்படையில்  விடுதலையானதற்கு அனைத்து தமிழக மக்களுக்குமான  முதல்வர்  ஆரத்தழுவி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்திருப்பது  பெரும் அதிர்ச்சியைத்தரும் எதிர்மறையான செயல்.  மனதை நெருடும் இந்த செயல், ராஜீவின் மரணத்தைப்போல மக்களின் மனதில் அகலாதிருக்கப்போகும் ஒரு  வடு.

ராஜீவின் கொலை என்பது இந்த நாட்டின் மீது தொடுக்கப்பட்ட ஒரு போர் அறைகூவல். அது தமிழகத்தில் நடந்தது ஒரு  சாபம். அவருக்கு  தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் விட்டது பெரும் தவறு. அதற்கு சற்றும் குறைவில்லாதது அந்த கொலைச் சதிக்காக  தண்டிக்கபட்டவரை  இன்று தமிழக  அரசியல்வாதிகள்   போற்றிப் பாராட்டுவது.

1 COMMENT

  1. பேரறிவாளனை கட்டித்தழுவும் படத்தின் பக்கத்திலேயே ராஜீவ் காந்தியின் சிதைந்து போன படத்தைப் போட்டிருந்தால் .சரியான சவுக்கடியாக இருந்திருக்கும் ..

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ஸ்ரீரங்கம் கதைகள், ஓவியங்கள், சன்மானம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதா ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம். அவ்வப்போது சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன் ஒரு பத்து, பன்னிரண்டு கதை தேறும்...

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.

2
யார் வேண்டுமானாலும் யூடியூப் சானல் துவங்கலாம் என்ற நிலையில் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் யூடியூபில் பதிவு செய்யப்படுவது பல பிரச்னைகள், மோதல்களை உருவாக்கும். யூடியூபில் பதிவு செய்யப்படுகின்ற ஆபாச வீடியோக்கள்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...